Tamil Bayan Points

01) அடகு வைத்தல்

நூல்கள்: நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

Last Updated on March 5, 2022 by

அடைமானம் வைப்பதும், வாங்குவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று தான். இதில் சந்தேகம் எதுவுமில்லை. ஒருவருக்குக் கடன் கொடுக்கும் போது நம்மை அவர் ஏமாற்றி விடாமலிருக்க நம்பிக்கைக்காக ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளலாம்.

கொடுத்த கடனுக்கு உத்திரவாதமாகத் தான் அடைமானம். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரிடம் ஒரு நகையை அடைமானமாகப் பெற்றுக் கொண்டு கடன் கொடுத்தால், அந்த நகையை நாம் பயன்படுத்தாமல் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். வீட்டை அடைமானமாகப் பெற்றாலும் இது தான் நிலை.

வீட்டை அடைமானமாகப் பெற்றுக் கொண்டு கடன் கொடுத்து விட்டு அந்த வீட்டில் நாம் குடியிருந்தால் – அதாவது வாடகை கொடுக்காமல் குடியிருந்தால் – கொடுத்த கடனுக்கு வட்டியாகவே அது கருதப்படும்.

வீட்டை அடமானமாகப் பெற்ற பிறகு அதில் நாம் குடியிருக்கக் கூடாது. குடியிருந்தால் அதற்கான வாடகையைக் கொடுத்து விட வேண்டும்.

கால்நடைகளை அடமானமாகப் பெற்றால் அதற்கு தீனி போட்டு வளர்ப்பதால் அதில் சவாரி செய்யலாம். பால் கறந்து எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரங்கள் உள்ளன. (புகாரி 2511, 2512)

இந்த விதிமுறையை மீறாமல் அடைமானம் வைக்கலாம்; வாங்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவசத்தை யூதரிடம் அடைமானம் வைத்து, அதை மீட்காமலேயே மரணம் அடைந்தார்கள்.

புகாரி 2916, 4467