Tamil Bayan Points

அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிப்போம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on October 1, 2023 by

அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிப்போம்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

இஸ்லாம் என்பது பிறர் நலம் நாடும் மார்க்கம். இதில், ஏக இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகள் பற்றி மட்டுமின்றி, சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் குறித்தும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றை அறிந்து முஸ்லிம்கள் சுயநலமாக இல்லாமல், பொதுநல சிந்தனையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

தம்மைச் சுற்றியிருக்கும் மக்கள் துன்பத்திலும், சிரமத்திலும் தவிக்கும் போது கண்டும் காணாமல் இருந்துவிடக் கூடாது. குறிப்பாக, சமூகத்தில் எவரேனும் அநீதிக்கு ஆளாகும் போது அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவும், வரம்பு மீறுபவருக்கு எதிராகக் குரல் எழுப்பவும் துணிவுடன் முன்வர வேண்டும். ஆனால், இவ்விஷயத்தில் பல மக்கள் கவனக்குறைவாக இருக்கிறார்கள். ஆகையால், இது தொடர்பாக மார்க்கம் கூறும் சில போதனைகளை இந்த உரையில் தெரிந்து கொள்வோம்.

மூஸா நபியின் சமூகப் பணி

இவ்வுலகில் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்வதற்கு எண்ணற்ற நபிமார்கள் வந்து சென்றுள்ளார்கள். அவர்களுக்கு அப்பணியுடன் சேர்த்து பல்வேறு விதமான சமூகப் பணிகளையும் அல்லாஹ் வழங்கி இருந்தான். அவ்வகையில் மூஸா நபிக்குத் தரப்பட்டிருந்த சமூகப் பொறுப்பினை குர்ஆன் குறிப்பிடுகிறது.

فَاْتِيٰهُ فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلَا رَبِّكَ فَاَرْسِلْ مَعَنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ ۙ وَلَا تُعَذِّبْهُمْ‌ ؕ قَدْ جِئْنٰكَ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكَ‌ ؕ وَالسَّلٰمُ عَلٰى مَنِ اتَّبَعَ الْهُدٰى
اِنَّا قَدْ اُوْحِىَ اِلَـيْنَاۤ اَنَّ الْعَذَابَ عَلٰى مَنْ كَذَّبَ وَتَوَلّٰى‏

இருவரும் அவனிடம் சென்று ‘‘நாங்கள் உனது இறைவனின் தூதர்கள். எனவே இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பிவிடு! அவர்களைத் துன்புறுத்தாதே! உனது இறைவனிடமிருந்து உன்னிடம் சான்றைக் கொண்டு வந்துள்ளோம். நேர்வழியைப் பின்பற்றியோர் மீது நிம்மதி உண்டாகட்டும். பொய்யெனக் கருதிப் புறக்கணித்தவருக்கு வேதனை உண்டு என எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது’’ என்று கூறுங்கள்!

(அல்குர்ஆன்: 20:47,48)

கொடுங்கோல் மன்னன் பிர்அவ்ன், பனூ இஸ்ராயீல் மக்களுக்குப் பெரும் கொடுமைகளைக் கொடுத்து வந்தான். அந்த மக்கள் சொல்லெனாத் துன்பங்களைச் சந்தித்து வந்தார்கள். அவர்களை மீட்டெடுக்கும் பணி மூஸா நபிக்கும், ஹாரூண் நபிக்கும் வழங்கப்பட்டது. இதன் மூலம் அடக்குமுறையைச் சந்திக்கும் அப்பாவி மக்களுக்கு ஆதரவாகக் களம் காண்பதின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

துன்பத்தைத் துடைத்த துல்கர்னைன்

துல்கர்னைன் எனும் நல்லடியாரின் வரலாறு வழியாகவும் அல்லாஹ் நமக்குப் பாடம் கற்பிக்கிறான். அவருக்கு அல்லாஹ் அளப்பரிய ஆற்றலை, பெரும் வலிமையைக் கொடுத்திருந்தான். அவர் பூமியில் பல்வேறு பகுதிகளுக்கு மிகவும் எளிதாகப் பயணம் சென்றார். அப்போது ஓரிடத்தில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தால் பாதிக்கப்படும் சமூகத்தைச் சந்தித்தார். அல்லாஹ்வின் அருளால் அந்த மக்களைப் பாதுகாக்கும் வகையில் மகத்தான உதவி செய்து கொடுத்தார்.

ثُمَّ اَتْبَعَ سَبَبًا‏
حَتّٰٓى اِذَا بَلَغَ بَيْنَ السَّدَّيْنِ وَجَدَ مِنْ دُوْنِهِمَا قَوْمًا ۙ لَّا يَكَادُوْنَ يَفْقَهُوْنَ قَوْلًا‏
قَالُوْا يٰذَا الْقَرْنَيْنِ اِنَّ يَاْجُوْجَ وَمَاْجُوْجَ مُفْسِدُوْنَ فِى الْاَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلٰٓى اَنْ تَجْعَلَ بَيْنَـنَا وَبَيْنَهُمْ سَدًّا‏

قَالَ مَا مَكَّنِّىْ فِيْهِ رَبِّىْ خَيْرٌ فَاَعِيْنُوْنِىْ بِقُوَّةٍ اَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا ۙ‏

 اٰتُوْنِىْ زُبَرَ الْحَدِيْدِ‌ ؕ حَتّٰٓى اِذَا سَاوٰى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انْـفُخُوْا‌ ؕ حَتّٰٓى اِذَا جَعَلَهٗ نَارًا ۙ قَالَ اٰتُوْنِىْۤ اُفْرِغْ عَلَيْهِ قِطْرًا ؕ‏ , فَمَا اسْطَاعُوْۤا اَنْ يَّظْهَرُوْهُ وَمَا اسْتَطَاعُوْا لَهٗ نَـقْبًا‏

قَالَ هٰذَا رَحْمَةٌ مِّنْ رَّبِّىْ‌ ۚ فَاِذَا جَآءَ وَعْدُ رَبِّىْ جَعَلَهٗ دَكَّآءَ‌ ۚ وَكَانَ وَعْدُ رَبِّىْ حَقًّا ؕ‏

பின்னர் (துல்கர்னைன்) ஒரு வழியில் தொடர்ந்து சென்றார். முடிவில் இரண்டு மலைகளுக்கு இடையேயுள்ள பகுதியை அவர் அடைந்த போது, அதற்கப்பால் எந்தப் பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைக் கண்டார். “துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?’’ என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர். “என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. வலிமையால் எனக்கு உதவுங்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் இடையே தடுப்பை அமைக்கிறேன்’’ என்றார்.

(தனது பணியாளர்களிடம்) “என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்!’’ என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமான போது “ஊதுங்கள்!’’ என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். “என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது (உருக்கி) ஊற்றுவேன்’’ என்றார். அதில் மேலேறுவதற்கும், அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது. இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது என்றார்.

(அல்குர்ஆன்: 18:92-98)

நல்லடியார் துல்கர்னைன் அவர்கள் இரு மலைகளுக்கு இடையே மிகப்பெரும் தடுப்பை ஏற்படுத்தி மக்களைக் காப்பாற்றினார். இவ்வாறு நாமும் முடிந்தளவு துன்புறும் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதரின் அழகிய கட்டளை

முன்சென்ற வசனங்களில் கண்டதைப் போன்று, பிறரால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுமாறு நபிகளாரும் நமக்குக் கட்டளை இட்டுள்ளார்கள். எனவே, முஸ்லிம்கள் காஃபிர்கள் என்று எவ்வித பேதமும் பாராமல் பாதிக்கப்படும் மக்கள் யாராக இருப்பினும் அவர்களுக்காக நம்மல் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்.

أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ، وَنَهَانَا عَنْ سَبْعٍ: أَمَرَنَا بِاتِّبَاعِ الجَنَائِزِ، وَعِيَادَةِ المَرِيضِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَنَصْرِ المَظْلُومِ، وَإِبْرَارِ القَسَمِ، وَرَدِّ السَّلاَمِ، وَتَشْمِيتِ العَاطِسِ، وَنَهَانَا عَنْ: آنِيَةِ الفِضَّةِ، وَخَاتَمِ الذَّهَبِ، وَالحَرِيرِ، وَالدِّيبَاجِ، وَالقَسِّيِّ، وَالإِسْتَبْرَقِ

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை (செய்யும்படி) கட்டளையிட்டு, ஏழு விஷயங்களைத் தடை செய்தார்கள். ஜனாசாவை (இறந்தவரின் உடலைப்) பின் தொடரும்படியும், நோயாளியை நலம் விசாரிக்கும்படியும், விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவும் படியும், சலாமுக்குப் பதில் கூறும்படியும், தும்மியவ(ர்  அல்ஹம்துலில்லாஹ்- எல்லாப் புகழும் இறைவனுக்கே! எனக் கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ்-இறைவன் உங்களுக்கு கருணை புரிவானாக! என) மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள்.

வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், ஆண்கள் தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் (கலப்படமில்லாத) பட்டு, அலங்காரப் பட்டு, கஸ் எனும் பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, தடித்த பட்டு ஆகியவற்றை அணிவதிலிருந்தும் எங்களை தடைசெய்தார்கள்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)
நூல்: புகாரி-1239 , 5175

சகோதரனை கைவிடாதவனே முஸ்லிம்!

முஸ்லிம்கள் அநியாயமான காரியங்களை ஒருபோதும் செய்யக் கூடாது. அதுபோல, அடுத்தவர் நசுக்கப்படும் போது ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கவும் கூடாது. மாறாக, துன்பத்தில் சிக்கித் தவிக்கும் மக்களைக் காப்பாற்ற முனைய வேண்டும். இப்பணிக்குச் சிறந்த பரிசுகளை அல்லாஹ் மறுமையில் தருவான்.

المُسْلِمُ أَخُو المُسْلِمِ لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً، فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ القِيَامَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான்.

எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி-2442 , 6951

அநீதியைத் துடைத்தெறிய போர்

குடும்பம், வியாபாரம், சொத்துக்கள் என்று அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு அல்லாஹ்வின் பாதையில் போருக்குச் செல்வது சாதாரணமான ஒன்றல்ல. மிகச் சிறந்த அறச்செயல். இது தொடர்பாக நிறைய நெறிமுறைகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டு உள்ளன. அவற்றுள் ஒன்று, இஸ்லாமிய அரசு பலவீனமான மக்களைக் காப்பதற்காகப் போர் தொடுக்கலாம் என்பதாகும்.

 وَمَا لَـكُمْ لَا تُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالْمُسْتَضْعَفِيْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ الَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْ هٰذِهِ الْـقَرْيَةِ الظَّالِمِ اَهْلُهَا‌ ۚ وَاجْعَلْ لَّـنَا مِنْ لَّدُنْكَ وَلِيًّا ۙۚ وَّاجْعَلْ لَّـنَا مِنْ لَّدُنْكَ نَصِيْرًا ؕ‏
اَلَّذِيْنَ اٰمَنُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌‌ ۚ وَالَّذِيْنَ كَفَرُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ الطَّاغُوْتِ فَقَاتِلُوْۤا اَوْلِيَآءَ الشَّيْطٰنِ‌ۚ اِنَّ كَيْدَ الشَّيْطٰنِ كَانَ ضَعِيْفًا‏

“எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!’’ என்று கூறிக் கொண்டிருக்கின்ற பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?

நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். (ஏக இறைவனை) மறுப்போர் தீய சக்திகளின் பாதையில் போரிடுகின்றனர். எனவே ஷைத்தானின் கூட்டாளிகளுக்கு எதிராகப் போரிடுங்கள்! ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாக உள்ளது.

(அல்குர்ஆன்: 4:75,76)

இந்த வசனத்தை மெய்ப்பிக்க வேண்டிய இஸ்லாமிய அரசுகள் வாய் மூடி மௌனம் காக்கின்றன. பக்கத்து நாடுகளில் இருந்து அல்லல்பட்டு வரும் அகதிகளை அரவணைக்கக் கூட மறுத்து விடுகின்றன.

அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவுங்கள்!

நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு இயன்றளவு உதவுவது அவசியம். அத்துடன் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர் ஆகியோர் அட்டூழியம் செய்யும் போது அவர்களைக் கண்டித்துக் களம் காணவும் தயாராக வேண்டும்.

انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا»  قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، هَذَا نَنْصُرُهُ مَظْلُومًا، فَكَيْفَ نَنْصُرُهُ ظَالِمًا؟ قَالَ: «تَأْخُذُ فَوْقَ يَدَيْهِ

நபி (ஸல்) அவர்கள், “உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்’’ என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவி செய்வோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவி செய்வோம்?’’ என்று கேட்டனர்.

நபி (ஸல்) அவர்கள், “அவனது கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி-2444 

(ஒரு போரின்போது) முஹாஜிர்களில் ஓர் இளைஞரும் அன்சாரிகளில் ஓர் இளைஞரும் சண்டையிட்டுக் கொண்டனர். அப்போது அந்த முஹாஜிர், “முஹாஜிர்களே (உதவிக்கு வாருங்கள்)’’ என்று அழைத்தார். அந்த அன்சாரி, “அன்சாரிகளே! (உதவிக்கு வாருங்கள்)!’’ என்று அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, “என்ன இது, அறியாமைக் காலத்தவரின் கூப்பாடு?’’ என்று கேட்டார்கள்.

அதற்கு மக்கள், “இல்லை; அல்லாஹ்வின் தூதரே! இளைஞர்கள் இருவர் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களில் ஒருவர் மற்றவரின் புட்டத்தில் அடித்துவிட்டார்’’ என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பிரச்சினை இல்லை. ஒருவர் தம் சகோதரர் அநீதியிழைப்பவராக இருக்கும் நிலையிலும் அநீதிக்குள்ளானவராக இருக்கும் நிலையிலும் அவருக்கு உதவட்டும். (அது எவ்வாறெனில்) அவர் அநீதியிழைப்பவராக இருந்தால், (அநீதியிழைக்கவிடாமல்) அவரைத் தடுக்கட்டும்! அதுவே அவருக்குச் செய்யும் உதவியாகும். அவர் அநீதியிழைக்கப்பட்டவராக இருந்தால், அவருக்கு உதவி செய்யட்டும்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),
நூல்: முஸ்லிம்-5040 

அநீதியை எதிர்ப்பதும் ஜிஹாத்

தீமைகளைக் காணும் போது எப்படி எதிர்வினை ஆற்ற வேண்டுமெனும் வழிமுறையை நபிகளார் நமக்குப் போதித்து இருக்கிறார்கள். தீமையைக் கரத்தால் தடுக்க இயலாத சமயங்களில் நாவால் தடுக்க முயற்சிக்க வேண்டும். பெரும்பாலும் இந்த வாய்ப்பு அனைத்து மக்களுக்கும் கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்துவதன் சிறப்பைப் பாருங்கள்.

مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும், முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்), அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம்-78 

أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ، أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: «كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ»

‘‘எந்த ஜிஹாத் சிறந்தது?’’ என்று ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘அநியாயம் செய்யும் மன்னர் முன் சத்தியத்தை எடுத்துரைப்பதுதான்’’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி),
நூல்கள்: நஸாயீ-4209 (4138), அஹ்மத் (18076)

அநீதிக்கு எதிராக கையேந்துவோம்

அநீதியைத் தட்டிக் கேட்கும் வாய்ப்பு இல்லை; அதனால் சிரமப்படும் சகோதரர்களுக்கு உதவுவதற்கும் வழியில்லை எனும் போது கவலைப்படாதீர்கள். நம் கண்முன் இல்லாத அந்த மக்களுக்காக அல்லாஹ்விடம் அழுது மன்றாடுங்கள். அல்லாஹ்வின் உதவி அவர்களுக்குக் கிட்டும்.

 مَنْ دَعَا لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ، قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ: آمِينَ، وَلَكَ بِمِثْلٍ

ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், “ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!’’ என்று கூறுகிறார். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்முத் தர்தா (ரலி)
நூல்: முஸ்லிம்-5280 

ஸஃப்வான் பின் அப்தில்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஸஃப்வான் கூறுகிறார்: நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காண முடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத்தர்தா அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், “இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?’’ என்று கேட்டார்.

நான் “ஆம்’’ என்றேன். அதற்கு அவர் சொன்னார்: அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், “ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும் போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், “இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக்கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்’’ என்று கூறினார்கள்.

பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டுக் கடைத்தெருவுக்குச் சென்றபோது, அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். நபி (ஸல் அவர்கள் அவ்வாறு கூறியதாக அவர்களும் என்னிடம் அறிவித்தார்கள்.

(நூல்: முஸ்லிம்-5281 )

அநீதிக்கு எதிராக குனூத் ஓதுதல்

அநீதிக்கு இலக்காகும் மக்களைக் காக்குமாறும், அக்கிரமக்காரர்களைத் தண்டிக்குமாறும் அல்லாஹ்விடம் கூட்டாகக் கோரிக்கை வைப்பதற்குத் தொழுகையில் பிரத்தியேகமான முறையை நபியவர்கள் கற்று தந்திருக்கிறார்கள். 

அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நான் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தது போன்றே உங்களுக்குத் தொழுவிக்கிறேன்’’ என்று கூறுவார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹ்ர், இஷா, சுப்ஹு  ஆகிய தொழுகைகளின் கடைசி ரக்அத்களில் (ருகூஉவிலிருந்து எழுந்து) “சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறிய பிறகு குனூத் (சிறப்புப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில் (மக்காவில் சிறைப்பிடிக்கப் பட்டிருந்த) இறை நம்பிக்கையாளர்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். (கொடுஞ்செயல் புரிந்த குறைஷி) இறைமறுப்பாளர்களைச் சபிப்பார்கள்.

நூல்: புகாரி-797 

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ العِشَاءِ قَنَتَ: «اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أَنْجِ الوَلِيدَ بْنَ الوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ المُسْتَضْعَفِينَ مِنَ المُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِي يُوسُفَ

நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தவரின் புகழுரையை அல்லாஹ் செவியேற்றான்) என்று கூறிய பிறகு “குனூத்’ (சிறப்பு துஆ) ஓதினார்கள். அதில்,  “இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும் சில வருடங்களை அளிப்பாயாக!’’ என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-6393 

பாதிக்கப்பட்ட மக்கள் யாராயினும் அவர்களின் உரிமையைப் பெற்றுத் தருவதற்கு உத்வேகத்துடன் செயல்பட்டு வருவோமாக.! அநீதிக்கு எதிராக ஆர்த்தெழுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.