Tamil Bayan Points

அபுல் காசிம் என்று பெயர் வைக்கலாமா?

கேள்வி-பதில்: குழந்தை வளர்ப்பு

Last Updated on November 22, 2016 by Trichy Farook

அபுல் காசிம் என்று பெயர் வைக்கலாமா?

அபுல் காசிம் என்றால் காசிமின் தந்தை என்பது பொருள். நபிகள் நாய்கம் ஸல் அவர்களுக்கு காசிம் என்று மகன் பிறந்ததால் அவர்கள் அபுல் காசிம் காசிமின் தந்தை என்று அழைக்கப்பட்டார்கள்.

காசிம் என்று மகனைப் பெற்றவர்கள் இப்பெயரை புணைப் பெயராகச் சூட்டிக் கொள்ளலாம்.

ஆனால் குழந்தையாகப் பிறக்கும் போது யாருக்கும் பிள்ளை இருக்க மாட்டார்கள். எனவே காசிமின் தந்தை என்பது போல் பெயர் வைப்பது பொருளற்றதாகும். ஆனால் தடுக்கப்பட்டதாக ஆகாது. அபூ பக்ர், அபூ தாலிப் அபூ தல்ஹா, அபூ மூஸா என்றெல்லாம் பெயர் சூட்டும் வழக்கம் உள்ளது. பக்ரின் தந்தை, தாலிபின் தந்தை, தல்ஹாவின் தந்தை, மூஸாவின் தந்தை என்றெல்லாம் பெயர் வைப்பது அர்த்தமற்றதாகும். எந்தக் குழாந்தையும் யாருக்கும் தந்தையாக இருக்க முடியாது. இது போன்ற பெயர்கள் ஒருவர் தந்தையாக ஆன பிறகு சூட்டிக் கொள்ள வேண்டிய செல்லப் பெயர்களாகும்.

ஆனாலும் பொருளைக் கவனத்தில் கொள்ளாமல் அபூபக்ர் போல் அபுல் காசிம் எனும் நபிகள் நாயகம் போல் நல்லடியாராக ஆகட்டும் என்ற கருத்தில் இப்பெயர்களை எடுத்துக் கொண்டால் அப்போது பொருளற்றதாக ஆகாது.

ஆனால் அபுல் காசிம் என்ற பெயரை யாரும் சூட்ட வேண்டாம் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்ததாக சில ஹதீஸ்கள் உள்ளன. அது பொதுவான தடை அல்ல. மாறாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் உயிருடன் வாழும் போது அவ்வாறு சூட்டக்கூடாது என்பதற்காகவே அந்தத் தடை விதிக்கப்பட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அபுல் காசிம் என்ற பெயரை மற்றவர்களும் வைத்திருந்தனர். சிலர் நபியவர்களுக்கு அருகில் நின்று கொண்டு நபியவர்களை அழைப்பது போன்று மற்றவர்களை அழைத்தனர். இதன் காரணமாக தனது குறிப்புப் பெயரான அபுல் காசிம் என்பதை மற்றவர்கள் சூட்டக் கூடாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை விதித்தார்கள்.

ஓருவர் அபுல்காசிமே என்று பகீஃ என்ற இடத்தில் இருந்த ஓரு மனிதரை அழைத்தார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள். அப்போது அவர் அல்லாஹ்வின் தூதரே நான் உங்களை நாடவில்லை. இந்த நபரைத் தான் அழைத்தேன் என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனது பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். எனது குறிப்புப் பெயரை சூட்டாதீர்கள் என்று கூறினார்கள்.

நூல் : புஹாரி 2120, 2121, 3537

அறிவிப்பாளர் : அனஸ்

இன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்முடன் இல்லாத காரணத்தால் இந்தத் தடை இந்த காலத்திற்குப் பொருந்தாது. எனவே தற்காலத்தில் ஒருவர் அபுல் காசிம் என்ற பெயரை வைத்துக் கொண்டால் அது தவறல்ல.