Tamil Bayan Points

08) அரஃபா மற்றும் முஸ்தலிஃபாவுக்கு செல்வது

நூல்கள்: நபி வழியில் நம் ஹஜ்

Last Updated on April 15, 2023 by

அரஃபாவுக்குச் செல்வது

மினாவில் ஒன்பதாம் நாளின் சுபுஹ் தொழுகையை முடித்து விட்டு சூரியன் உதயமாகும் வரை தங்கி விட்டு அரஃபாவுக்குப் புறப்பட வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) சூரியன் உதயமாகும் வரை மினாவில் தங்கியதாக ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 2137

மினாவிலிருந்து அரஃபாவுக்குச் செல்லும் வழியில் தல்பியாகூறிக் கொண்டும் தக்பீர்கூறிக் கொண்டும் செல்ல வேண்டும்.

நானும் அனஸ் (ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரஃபாவுக்குச் சென்று கொண்டிருக்கும் போது தல்பியா பற்றி அவர்களிடம் கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் செல்லும் போது நீங்கள் எவ்வாறு செய்து வந்தீர்கள்? எனக் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் தல்பியா கூற விரும்பியவர் தல்பியா கூறுவார். அது ஆட்சேபிக்கப்படவில்லை. தக்பீர் கூறுபவர் தக்பீர் கூறுவார். அதுவும் ஆட்சேபிக்கப்படவில்லைஎன்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர்: முஹம்மத் பின் அபீபக்ர்

நூல்: புகாரி 970, 1659

 

அரஃபா நாளில் நோன்பு நோற்பது

அரஃபா நாளில் (ஒன்பதாம் நாளில்) நோன்பு நோற்பது சுன்னத் என்றாலும் ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் அன்றைய தினம் நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது.

பார்க்க: புகாரி 1658, 1663, 1988, 1989, 5604, 5618, 5636

 

அரஃபாவில் தங்குவதன் அவசியம்

ஹஜ்ஜின் மிக முக்கியமான கிரியை அரஃபாவில் தங்குவது தான். சிறிது நேரமேனும் அரஃபாவில் ஒன்பதாம் நாள் தங்காவிட்டால் ஹஜ் கூடாது.

ஹஜ் என்பதே அரஃபா(வில் தங்குவது) தான். பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் (அரஃபாவுக்கு) வந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துர் ரஹ்மான் பின் யஃமர் (ரலி)

நூல்கள்: நஸயீ 2966, 2994 திர்மிதீ 814

ஒன்பதாம் நாள் நண்பகலுக்குள் அரஃபாவுக்கு வந்து விடுவது நபிவழி என்றாலும், மறு நாள் பஜ்ருக்கு முன்பாக வந்து விட்டாலும் ஹஜ் கூடி விடும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

 

அரஃபாவில் எந்த இடத்திலும் தங்கலாம்

அரஃபா மைதானத்தில் குறிப்பிட்ட இடத்தில் தான் தங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அரஃபா மைதானத்தின் எந்த இடத்திலும் தங்கலாம்.

அரஃபா மைதானம் முழுவதும் தங்குவதற்கு ஏற்ற இடமாகும்என்பது நபி மொழி.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2138

 

அரஃபாவில் செய்ய வேண்டியவை

நான் அரஃபாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல்: நஸயீ 2961

அரஃபாவில் லுஹரையும், அஸரையும் ஜம்வு செய்து இமாம் தொழுவார். அதில் சேர்ந்து தொழ வேண்டும். அதற்கு முன் நிகழ்த்தப்படும் குத்பாவை – உரையை – செவிமடுக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபா நாளில் குத்பா – உரை – நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) உங்களின் இரத்தங்களும் உங்கள் செல்வங்களும் உங்களுக்குப் புனிதமானவையாகும் என்று தொடங்கும் நீண்ட உரையை நிகழ்த்தினார்கள். பிறகு பாங்கு சொல்லி பின்னர் இகாமத் கூறி லுஹர் தொழுதார்கள். பிறகு மீண்டும் இகாமத் கூறி அஸர் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137

 

முஸ்தலிஃபாவுக்குச் செல்வது

அரஃபா மைதானத்தில் சூரியன் மறையும் வரை தங்கி விட்டு சூரியன் மறைந்ததும் மஃரிப் தொழாமல் முஸ்தலிஃபாவுக்குச் செல்ல வேண்டும். முஸ்தலிஃபாவுக்குச் சென்றதும் மஃரிபையும், இஷாவையும் ஜம்வு செய்து தொழ வேண்டும். அங்கே சுப்ஹ் வரை தங்கி விட்டு சுப்ஹ் தொழ வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூரியன் மறையும் வரை அரஃபாவில் தங்கினார்கள். சூரியன் மறைந்ததும் புறப்பட்டு முஸ்தலிஃபாவுக்கு வந்தார்கள். ஒரு பாங்கு, இரண்டு இகாமத்கள் கூறி மஃரிபையும், இஷாவையும் தொழுதார்கள். அவ்விரண்டுக்குமிடையே எதையும் தொழவில்லை. பிறகு பஜ்ரு நேரம் வரை படுத்து (உறங்கி) விட்டு பஜ்ரு நேரம் வந்ததும் ஒரு பாங்கு கூறி பஜ்ரு தொழுதார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137