Tamil Bayan Points

அருளா? சோதனையா?

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on September 30, 2023 by Trichy Farook

அருளா? சோதனையா?

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!

நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் இந்த உலகத்தில் கடத்துவதற்கு இன்றியமையாத விஷயங்களில் ஒன்று பொருளாதாரம். பொருளாதாரம் இருந்தால் தான் நமது வாழ்க்கையின் அங்கங்களாக இருக்கும் பல காரியங்களை நிறைவேற்ற முடியும். மார்க்கத்தின் பல கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பொருளாதாரம் ஒரு நிபந்தனையாக உள்ளது.

மலை போல் நன்மையைப் பெற்றுத்தரும் உபரியான காரியங்களைச் செய்வதற்கும் பொருளாதாரம் தேவைப்படுகிறது. மேலும், நமக்கான மற்றும் நமது குடும்பத்திற்கான உணவுத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு, நமது மானங்களை மறைத்துக் கொள்ள ஆடைகளுக்கு என எந்தவொரு காரியத்தைச் செய்வதற்கும் பொருளாதாரம்தான் அடிப்படைத் தேவையாக தற்போது இருந்து வருகிறது.

அத்தகைய பொருளாதாரத்தை நோக்கித்தான் ஒவ்வொரு மனிதனின் முயற்சியும் செலவிடப்பட்டு வருகிறது. அறிவாற்றல், உடலாற்றல் என அனைத்து ஆற்றலையும் பொருளாதாரம் என்ற ஒற்றை இலக்கை நோக்கி மனிதம் நகர்த்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரின் உழைப்பும் அதற்கான பிரதிபலனும் வித்தியாசப்பட்டாலும் அடிப்படை பொருளாதாரம் என்ற ஒற்றை வார்த்தைதான்.

இத்தகைய பொருளாதாரத்தை இஸ்லாம் இரண்டு நேரெதிர் நிலைபாடுகளின் கீழ் முஸ்லிம்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ஒன்று, பொருளாதாரம் இறைவனின் அருள்; மற்றொன்று, பொருளாதாரம் சோதனை என்பதுமே அந்த இரு நேரெதிர் நிலைபாடுகள். அந்த இரண்டு நிலைபாடுகளைப் பற்றியும் இந்த உரையில் காண்போம்…

பொருளாதாரம் ஓர் அருள்

பொருளாதாரம் என்பது இறைவனிடமிருந்து கிடைக்கும் அருள் என்று ஏராளமான குர்ஆன் வசனங்கள் எடுத்துரைக்கின்றன.

‌لَيْسَ عَلَيْکُمْ جُنَاحٌ اَنْ تَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّکُمْؕ فَاِذَآ اَفَضْتُمْ مِّنْ عَرَفٰتٍ فَاذْکُرُوا اللّٰهَ عِنْدَ الْمَشْعَرِ الْحَـرَامِ وَاذْکُرُوْهُ کَمَا هَدٰٮکُمْ‌ۚ وَاِنْ کُنْتُمْ مِّنْ قَبْلِهٖ لَمِنَ الضَّآ لِّيْنَ‏

(ஹஜ்ஜின் போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் அரஃபாவிலிருந்து திரும்பும் போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியது போன்று அவனை நினைவு கூருங்கள். நீங்கள் இதற்கு முன்பு வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.

(அல்குர்ஆன்: 2:198)

இந்த வசனத்தில் பொருளாதாரத்தைத் தேடுவதைப் பற்றிப் பேசும் போது ‘அருளைத் தேடுவது’ என்று கூறி செல்வம் அல்லாஹ்வின் அருள் என்று இறைவன் எடுத்துரைக்கிறான்.

فَلَمَّاۤ اٰتٰٮهُمْ مِّنْ فَضْلِهٖ بَخِلُوْا بِهٖ وَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ‏

அவன் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கிய போது அதில் கஞ்சத்தனம் செய்தனர். அவர்கள் புறக்கணித்து, திரும்பிச் சென்றனர்.

(அல்குர்ஆன்: 9:76)

فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏

தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் திரிந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள். அல்லாஹ்வை அதிகமாக நினையுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன்: 62:10)

இந்த அனைத்து வசனங்களிலும் பொருளாதாரத்தை அல்லாஹ் தனது அருள் என்றே குறிப்பிடுகிறான்.

இதே கருத்தில் 3:174, 3:180, 4:32, 9:28, 16:14, 17:12, 24:22, 28:73, 30:23, 35:12, 45:12, 73:20 ஆகிய இடங்களிலும் பொருளாதாரத்தை அருள் என்றே குறிப்பிடுகிறான்.

பொருளாதாரம் என்பது அல்லாஹ்வின் அருள்தான். தான் நாடியேருக்கு அதை அவன் அதிகமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அளவுடன் வழங்குகிறான் என்று ஒரு புறத்தில் பொருளாதாரத்தை நல்லதொரு விஷயமாக இஸ்லாம் அறிமுகப்படுத்துகிறது.

பொருளாதாரம் ஒரு சோதனை

மேலுள்ள வசனங்களுக்கு நேரெதிராக, பொருளாதாரம் ஒரு சோதனை என்று கீழ்காணும் வசனங்களில் இறைவன் குறிப்பிடுகிறான்.

وَاعْلَمُوْۤا اَنَّمَاۤ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ  ۙ وَّاَنَّ اللّٰهَ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِيْمٌ

உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் சோதனை என்பதையும் அல்லாஹ்விடமே மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்: 8:28)

اِنَّمَاۤ اَمْوَالُـكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ‌ؕ وَاللّٰهُ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِيْمٌ‏

உங்கள் செல்வங்களும் பிள்ளைகளும் சோதனையே! அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது.

(அல்குர்ஆன்: 64:15)

இந்த வசனங்களில் செல்வத்தை சோதனை என்று இறைவன் அறிமுகப்படுத்துகிறான். இவ்வாறு, பொருளாதாரத்தை ஒருபுறம் அருள் என்றும், மறுபுறம் சோதனை என்றும் இரு நேரெதிர் நிலைபாடுகளில் இறைவன் தெரிவிக்கிறான். பொருளாதாரம் எப்போது அருளாக இருக்கும்? எப்போது சோதனையாக இருக்கும்? அது எவ்வளவு இருந்தால் அருள்? எவ்வளவு இருந்தால் சோதனை என்றெல்லாம் நமது உள்ளங்களில் தற்போது பல கேள்விகள் எழும்.

அதற்கான் விடையை அல்லாஹ்வும் அவனது தூதருமே தெளிவுபடுத்துகிறார்கள். பொருளாதாரம் என்பது மனிதர்களுக்குப் பெரும் கவர்ச்சியாக ஆக்கப்பட்டிருக்கிறது. அதை நோக்கித்தான் அவனது ஆசைகள், அனைத்தும் விரைந்து செல்கிறது.

 زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَـيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَـرْثِ‌ؕ ذٰ لِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ‌ۚ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ‏

பெண்கள், ஆண்மக்கள், ஒன்று திரட்டப்பட்ட தங்க வெள்ளிக் குவியல்கள், உயர் ரகக் குதிரைகள், (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகள், விளைநிலங்கள் ஆகிய உள்ளம் கவர்பவற்றை விரும்புவது மனிதனுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்வின் இன்பங்கள் அல்லாஹ்விடமே அழகிய தங்குமிடம் உள்ளது.

(அல்குர்ஆன்: 3:14)

اَلْمَالُ وَ الْبَـنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ۚ وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ اَمَلًا‏

செல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும். நிலையான நற்காரியங்களே உமது இறைவனிடம் கூலியால் சிறந்ததும் ஆதரவு வைப்பதில் சிறந்ததுமாகும்.

(அல்குர்ஆன்: 18:46)

பொருளாதாரம் மனிதனுக்கு மிகவும் கவர்ச்சியாக ஆக்கப்பட்டுள்ளது என்பதை மேற்படி வசனங்கள் எடுத்தரைக்கின்றன. மனிதனின் உள்ளம் பொதுவாகவே அதிகம் ஆசைக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. அதிலும் கவர்ச்சியான விஷயங்கள் என்றால் அதன் ஆசையின் அளவு எப்படியிருக்கும் என்பதை சொல்லித் தெரியத் தேவையில்லை.

அத்தகைய பொருளாதாரத்தின் மீதான மனிதனின் அளவு கடந்த ஆசை, அடங்காமலும் போதுமென்ற மனம் கொள்ளாமலும் மரணம் வரை துரத்தி வரும் என்பதை பின்வரும் செய்திகள் தெளிவுப்படுத்துகிறது.

 سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
«لَوْ كَانَ لِابْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ لاَبْتَغَى ثَالِثًا، وَلاَ يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ»

“ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு நீரோடைகள் (அளவுக்கு) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி-6436 

اَلْهٰٮكُمُ التَّكَاثُرُۙ‏

 حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَؕ‏

(செல்வத்தை) அதிகமாக்க வேண்டும் என்பது மண்ணறைகளைச் சந்திக்கும் வரை உங்களை திருப்பி விட்டது.

(அல்குர்ஆன்: 102:1,2)

மனிதனை விடாமல் பொருளாதாரக் கவர்ச்சியின் மோகம் துரத்திக் கொண்டேயிருக்கும் என்று இந்தச் செய்திகளிலிருந்து தெரிகிறது. நிசர்சனத்திலும் இதை உணரத்தான் செய்கிறோம். எவ்வளவுதான் பொருளாதாரமிருந்தாலும் அதில் போதுமென்ற மனமே பலருக்கு வருவதில்லை. ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட தொகை தேவையிருக்கும்.

அதை அடைவதற்கு உழைப்பவன் அந்த இலக்கை அடைந்ததும் ஆசை போதுமாகவில்லை. அடுத்த தேவைகள் அதை விட அதிகமாகிறது. இப்படியே எவ்வளவுதான் இருந்தாலும் அவனது மனதின் தேவைகள் அதைவிட அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறதே தவிர குறைவதில்லை. இத்தகைய அடங்க மறுக்கும் ஆசைகளின் பெருக்கம்தான் பொருளாதாரத்தை நமது வாழ்வின் சோதனையாக்கிவிடுகிறது.

பொருளாதாரத்தின் மீது இத்தகைய அளவுக்கதிமான கவர்ச்சியிருக்கிறது என்று சொல்லப்படுவதால் குறிப்பிட்ட அளவுதான் சம்பாதிக்க வேண்டும். அதிகம் சம்பாதிக்கக் கூடாது என்றெல்லாம் எந்தத் தடையும் இல்லை. நாம் எவ்வளவு வேண்டுமானாலும் ஹலாலான முறையில் பொருளீட்டிக் கொள்ளலாம்.

அத்தகைய பொருளாதாரம் எனும் அருள் நம் வாழ்வில் சோதனையாக உருமாறிவிடாமல் இறைவனது நன்மையாகவே இருக்க வேண்டுமென்றால் அதற்கான வழியை அல்லாஹ் நமக்கு சொல்லித் தருகிறான்.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ‌ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் செல்வங்களும், பிள்ளைகளும் அல்லாஹ்வின் நினைப்பை விட்டு உங்களை திசை திருப்பிட வேண்டாம். யார் அவ்வாறு (திசை திருப்பப்படச்) செய்கிறார்களோ அவர்களே நஷ்டவாளிகள்.

(அல்குர்ஆன்: 63:9)

பொருளாதாரம் எனும் நன்மை இறைவனது சோதனையாக மாறாமல் இருக்க வேண்டுமென்றால் அது குறைவாகத்தான் இருக்க வேண்டும். அதிகமாக இருக்கக் கூடாது என்றெல்லாம் மார்க்கம் சொல்லவில்லை.

குறைவோ, அதிகமோ எவ்வளவாயினும் பொருளாதாரத்திற்காக மார்க்க நினைவை இழந்து விடாமல் இருக்கும் போதுதான் அது நன்மையாக இருக்கும். பொருளாதாரத்தைத் தேடுவதற்காக தொழுகையை மறக்கிறோம் எனில் அந்தப் பொருளாதாரம் நம்மை திசை திருப்பிவிட்டது.

வியாபாரத்தில் அதிக லாபத்திற்காக இறைவன் தடுத்த வியாபார முறைகளைக் கையாளுகிறோம் எனில் திசை திருப்பப்பட்டு விட்டோம் என்று பொருள். விற்பனைக்காகப் பொய், மோசடி, பித்தலாட்டம் செய்கிறோம் எனில் இதில் இறை நினைவில்லை. இவ்வாறு பொருளாதாரத்தைத் தேடும் போதோ அல்லது அது வந்த பிறகோ அல்லாஹ்வை மறக்கிறோம் எனில் அந்தப் பொருளாதாரம் நிச்சயம் நன்மையாக இருக்காது.

பொருளாதாரம் எவ்வளவுதான் இருந்தாலும் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும். ஸகாத், ஹஜ் உட்பட பொருளாதாரத்தை மையமாகக் கொண்டிருக்கும் கடமைகளாயினும், அதீத நன்மைகளை இறைவனிடம் பெற்றுத்தரும் உபரியான தர்மங்களாயினும் அவற்றைச் சரியாக நிறைவேற்ற வேண்டும்.

இத்தகைய மார்க்க நினைவுடன் கூடிய பொருளாதாரம்தான் இறைவனிடத்தில் நன்மையாகக் கருதப்படும். அந்த நினைவை இழந்து, பொருளாதார மோகத்தில் திளைத்துவிட்டால் அது பெரும் சோதனையாகவும் மறுமையில் நஷ்டமாகவுமே ஆகும்.

இதைப் பின்வரும் வசனமும் தெளிவுபடுத்துகிறது.

 قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ

உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் மனைவியரும், உங்கள் குடும்பத்தாரும், நீங்கள் சம்பாதித்த செல்வங்களும், நஷ்டமாகிவிடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விரும்பும் வசிப்பிடங்களும் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விடவும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை விடவும், உங்களுக்கு மிக விருப்பமானவையாக இருந்தால் அல்லாஹ்வுடைய கட்டளை வரும்வரையில் எதிர்பாருங்கள்! அல்லாஹ் பாவிகளான சமுதாயத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்.

(அல்குர்ஆன்: 9:24)

நமது செல்வம், வியாபாரம், சொத்துக்கள் என அனைத்தும் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் அடுத்துதான். அவை எவ்வளவுதான் விரும்பத்தக்கவையாக இருந்தாலும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமே முதலிடம். அல்லாஹ்வை மறந்து, தூதரின் போதனைகளை மறந்து அவர்களுக்கு மாற்றமாக நமது பொருளாதாரம் சென்றால் அது நஷ்டத்திற்குரியதே!

எனவே, பொருளாதாரத்தின் அளவு இங்கு நன்மையென்றும் சோதனையென்றும் தீர்மானிக்கவில்லை. மாறாக, மார்க்க நினைவுதான் தீர்மானிக்கிறது. ஒருவன் குறைவான பொருளாதாரம் ஈட்டுகிறான். அதில் இறை நினைவோ மார்க்க வரையறைகளோ பேணப்படவில்லையென்றால் இது நஷ்டத்திற்குரிய பொருளாதாரமே!

ஒருவன் அதிகம் ஈட்டினாலும் அல்லாஹ்வின் நினைவுடன் மார்க்க வரையறைகளைப் பேணி நடக்கிறான் எனில் இது நன்மைக்குரிய பொருளாதாரமே! எனினும், பொருளாதாரத்தை நோக்கிச் செல்லும் போது பலரின் முழுக் கவனமும் அதை நோக்கிச் செலுத்தப்பட்டு இறை நினைவை மறந்துவிடுகிற அபாயமும் இதில் இருக்கிறது.

இதைத்தான் பொருளாதாரம் தொடர்பாக இந்த நேரெதிர் நிலைபாடுகளை புரிந்து கொள்வதற்கான வழியாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். நபி (ஸல்) அவர்களும் தமது வாழ்க்கையில் இந்த அடிப்படையை நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பகலிலோ அல்லது இரவிலோ வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?’’ என்று கேட்டார்கள். அதற்கு, “பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!’’ என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியே வரச் செய்தது’’ என்று கூறி விட்டு, “எழுங்கள்’’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.

அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், “வாழ்த்துகள்! வருக’’ என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “அவர் எங்கே?’’ என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்’’ என்று பதிலளித்தார்.

அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை’’ என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார்.

அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், “இதை உண்ணுங்கள்’’ என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்’’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர்.

…قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي بَكْرٍ، وَعُمَرَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَتُسْأَلُنَّ عَنْ هَذَا النَّعِيمِ يَوْمَ الْقِيَامَةِ، أَخْرَجَكُمْ مِنْ بُيُوتِكُمُ الْجُوعُ، ثُمَّ لَمْ تَرْجِعُوا حَتَّى أَصَابَكُمْ هَذَا النَّعِيمُ …

வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-4143 

நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகிய மூவரும் பசியினால் வெளியே வந்து நடைபோடுகிறார்கள். அப்போது அன்ஸாரித் தோழரால் விருந்தொன்று வைக்கப்படுகிறது.
அந்த விருந்தில் பேரீச்சம் பழங்களும், ஆட்டிறைச்சியும் வழங்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டவுடன் நபி (ஸல்) அவர்களின் வார்த்தை என்னவாக இருந்தது?

தனக்குக் கிடைத்தது அற்பமோ அதிகமோ என்று பார்க்கவில்லை. இறையருள் கிடைத்ததும் இதுகுறித்தும் மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்று மறுமையை நினைவுகூர்கிறார்களே அத்தகைய நினைவுதான் நமக்கும் தேவை. எவ்வளவு பொருளாதாரம் வந்தாலும், மார்க்கத்தையும் மறுமையையும் மறந்துவிடாமல் இறை நினைவுடனும் இருந்தால் அதுவே நமக்கு நன்மையைப் பெற்றுத்தரும்.

இல்லையேல் அதில் எந்த பயனும் இருக்காது. மறுமையில் கைசேதம் தான் கிடைக்கும்.

اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِيْنَةٌ وَّتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِ‌ؕ كَمَثَلِ غَيْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ يَهِيْجُ فَتَرٰٮهُ مُصْفَرًّا ثُمَّ يَكُوْنُ حُطٰمًا‌ؕ وَفِى الْاٰخِرَةِ عَذَابٌ شَدِيْدٌ ۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ‌ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏

سَابِقُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَآءِ وَ الْاَرْضِۙ اُعِدَّتْ لِلَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ‌ؕ ذٰلِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ‌ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏

“இவ்வுலக வாழ்க்கை என்பது விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருள் செல்வத்தையும், மக்கள் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதுமே ஆகும்’’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

(இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் இறைமறுப்பாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.

உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும், சொர்க்கத்திற்கும் முந்துங்கள்! அதன் பரப்பளவு வானம் மற்றும் பூமியின் பரப்பளவு போன்றது. அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்பியவர்களுக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே அல்லாஹ்வின் அருட்கொடை. தான் நாடியோருக்கு அதை வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.

(அல்குர்ஆன்: 57:20,21)

எனவே பொருளாதாரத்தைப் பற்றி இஸ்லாம் காட்டும் வழிமுறையை கடைபிடித்து வாழும் நன் மக்களாய் அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.