Tamil Bayan Points

அல்குர்ஆன் ஆன்மீக நூல் மட்டுமல்ல! ஆட்சி மாற்றம் தந்த அரசியல் சாசனம்!

பயான் குறிப்புகள்: கொள்கை உறுதி

Last Updated on August 4, 2020 by Trichy Farook

அல்குர்ஆன் ஆன்மீக நூல் மட்டுமல்ல!

ஆட்சி மாற்றம் தந்த அரசியல் சாசனம்!

இன்று இந்தியாவில் வாழ்கின்ற மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லை என்று ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உணர்கின்றான். அந்த அளவுக்குக் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் தலைவிரித்தாடுகின்றன. அதிலும் குறிப்பாக, பெண்களின் கற்புக்கு அறவே பாதுகாப்பில்லை.

கன்னிப்பெண், கல்யாணம் முடித்த பெண் என்ற வரம்பு எல்லைகளைத் தாண்டி, பருவமடையாத, பால் முகம் மாறாத சின்னஞ்சிறுமிகளும் காட்டுமிராண்டிகளின் காமப்பசிக்கு இரையாகின்றனர். பறந்து திரியும் பருந்துகளின் பாலியல் சேட்டைக்கும், வாய் பிளந்து நிற்கும் காம ஓநாய்களின் வேட்டைக்கும் இலக்கான அந்தச் சிறுமியர், உயிருடன் கூட விட்டு வைக்கப்படாமல் வெறும் சடலங்களாக சாலை ஓரங்களிலும், சாக்கடைகளிலும், பாழுங்கிணறுகளிலும், புதர்களிலும் வீசி எறியப்படுகின்றனர்.

இது எதைக் காட்டுகின்றது? இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு மருந்துக்குக் கூட இல்லை என்பதையும், சட்டம் ஒழுங்கு சவக்குழிக்கு அனுப்பப்பட்டு அதற்கு சமாதியும் கட்டப்பட்டு விட்டது என்பதையும் தான் இது காட்டுகின்றது.

இதுபோன்ற நிலை தான் அன்றைய அரபகத்தில் நிலவியது. திருக்குர்ஆன் எனும் வேதம் அருளப்படுவதற்கு முன்னால் அரபகத்தில் இத்தகைய காட்டாட்சி தான் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையை திருக்குர்ஆன் தலைகீழாக மாற்றி ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அது தொடர்பாகத் திருக்குர்ஆன் மக்களுக்கு ஒரு வாக்குறுதியையும் அளித்தது.

அவர்களின் முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணைகற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.

(அல்குர்ஆன்:24:55)

  • ஆட்சி அதிகாரத்தை அளித்தல்.
  • அவர்கள் பின்பற்றுகின்ற இஸ்லாம் மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்துதல்.
  • அச்சத்திற்குப் பின் அச்சமின்மை, அதாவது அவர்களுக்கு ஏற்பட்டிருந்த அந்த அச்சமான சூழலைப் போக்கி பாதுகாப்பு அளித்தல்.

ஆகிய மூன்று விஷயங்களை நிறைவேற்றுவதாக திருக்குர்ஆன், தன்னை நம்பிக்கை கொண்ட மக்களுக்கு வாக்குறுதியை அளித்தது.

அந்த மூன்று வாக்குறுதிகளையும் 23 ஆண்டுகளில் நிறைவேற்றியும் கொடுத்தது. அவை அனைத்தையும் இங்கு நாம் விரிவாகப் பார்ப்பதற்கு இக்கட்டுரை போதாது. 

திருக்குர்ஆன் உலகம் முழுவதும் அரசியல் சாசனமாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு வேதம் என்பதை விளக்குவதற்கு இதில் மூன்றாவதாக இடம்பெறும் ‘பயத்திற்குப் பின் பாதுகாப்பு’ என்ற அந்த வாக்குறுதியை மட்டும் இப்போது பார்ப்போம்.

நிறைவேறிய அந்த வாக்குறுதி பற்றி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அருமைத் தோழர் அதீ பின் ஹாத்திம் (ரலி) அறிவிக்கக் கேட்போம்:

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘‘அதீயே! நீ ஹீராவைப் பார்த்ததுண்டா?’’ என்று கேட்டார்கள். ‘‘நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது’’ என்று பதிலளித்தேன்.

அதற்கு அவர்கள், ‘‘நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்’’ என்று சொன்னார்கள். -நான் என் மனத்திற்குள், அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட ‘தய்யி’ குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்? என்று கேட்டுக் கொண்டேன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தொடர்ந்து), ‘‘நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ(பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை நீ பார்ப்பாய்’’ என்று சொன்னார்கள். நான், ‘‘(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா?’’ என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘‘கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான் (தோற்கடிக்கப்படுவார்)’’ என்று பதிலளித்தார்கள்.  (ஹதீஸின் சுருக்கம், நூல்: புகாரி 3595)

மேற்கண்ட இந்தச் செய்தியில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் இரண்டு பிரச்சனைகள் முன்வைக்கப்படுகின்றன.

  • வழிப்பறி

முஹம்மது (ஸல்) அவர்கள், வழிப்பறி என்ற பிரச்சனைக்குத் தீர்வு சொல்லும் போது, ஒரு பெண் ஹீரா என்ற இடத்திலிருந்து தன்னந்தனியாக மக்காவிற்கு வந்து திரும்பிச் செல்வாள் – அதாவது தான் பயணிக்கும் வழியில் தனது உயிர், கற்பு, உடைமை போன்றவற்றுக்கு ஆபத்து ஏற்படும் என்ற எவ்வித பயமும் இல்லாமல் வந்து திரும்பிச் செல்வாள் – என்று கூறுகின்றார்கள்.

  • வறுமை

இரண்டாவதாக அவர்களிடம் வைக்கப்பட்ட பிரச்சனை வறுமை. அதற்கு முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிவடைந்து, வளமடைந்து வறுமை தீரும் என்று குறிப்பிடுகின்றார்கள்.

இந்த இரண்டும் நடந்ததா? என்றால் அதையும் அதே அதீ பின் ஹாத்திம் பின்வருமாறு தெரிவிக்கின்றார்கள்.

ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன். (பாரசீக மன்னன்) கிஸ்ரா பின் ஹுர்முஸின் கருவூலங்களை வெற்றி கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். (ஹதீஸின் சுருக்கம், நூல்: புகாரி 3595)

முஹம்மது (ஸல்) அவர்கள் நிறுவி, நிர்மாணித்த இஸ்லாமிய ஆட்சியில் இந்த இரண்டும் நிறைவேறியதை அன்னாரின் தோழர் அதீ பின் ஹாத்திம் (ரலி) தெளிவுபடத் தெரிவிக்கின்றார்கள்.

வழிப்பறி, வறுமை ஆகிய இரண்டும் தான் இந்த உலகம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற மிகப் பெரிய சவால்களாகும்.

இவ்விரண்டில் வறுமையைப் பற்றிப் பேச இக்கட்டுரை போதாது. அதனால் வழிப்பறிக் கொள்ளையை ஒழித்து, ஒரு பாதுகாப்பான சாம்ராஜ்யத்தை இஸ்லாம் எப்படி உருவாக்கியது என்பதை மட்டும் பார்க்கவுள்ளோம்.

இது எப்படி சாத்தியமானது? இதற்குத் திருக்குர்ஆன் நடைமுறைப்படுத்திய குற்றவியல் சட்டம் முக்கியக் காரணமாகும்.

குற்றவியல் சட்டம்

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் என்ற சட்டமும் (பார்க்க: அல்குர்ஆன்:5:45) திருட்டிற்கு கையை வெட்ட வேண்டும் என்ற சட்டமும் (பார்க்க: அல்குர்ஆன்:5:38) குற்றவாளிகளின் உள்ளங்களில் குலைநடுக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் குற்றங்கள் வெகுவாகக் குறைந்தன. மக்களின் உயிர்களுக்கும் அவர்களின் பொருட்களுக்கும் பாதுகாப்பு ஏற்பட்டது.

மணமுடிக்காதவர் விபச்சாரம் செய்தால் 100 கசையடிகள், மணமுடித்தவர் விபச்சாரம் செய்தால் அவரைக் கல்லெறிந்து கொல்லுதல் என்ற தண்டனையை இஸ்லாம் விதியாக்கியது. இதன் மூலம் விபச்சாரத்தின் வாசல் அடைக்கப்பட்டது.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தீமைகள் களையெடுக்கப்பட்டு விட்டாலே அந்தச் சமுதாயத்தில் அமைதியும் அச்சமின்மையும் ஏற்பட்டு விடும். அந்த அடிப்படையில் திருக்குர்ஆன் தனது கடுமையான சட்டத்தின் மூலம் இந்தத் தீமைகளைக் களைந்தெறிகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சி நடத்திய மதீனாவில் இது முதலில் நிறைவேறியது. பின்னர் ஒட்டுமொத்த அரபகத்திலும், அதன்பின் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்த அண்டை, அயல் நாடுகளிலும் நிறைவேறியது. இது திருக்குர்ஆன் நிறைவேற்றிய வாக்குறுதிக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

இங்கு இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். குற்றவியல் சட்டம் என்று சொல்லும் போது, வெறுமனே குற்றவியல் சட்டத்தால் மட்டும் மக்களிடம் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதல்ல. அது திருக்குர்ஆனின் நோக்கமும் அல்ல! காரணம், சட்டத்தை அமல்படுத்த சாட்சிகள் தேவை. சாட்சிகள் இல்லாமல் எந்தத் குற்றத்திற்கும் தண்டனை வழங்க முடியாது.

இந்த உலகத் தண்டனையிலிருந்து ஒருவன் சாட்சிகள் இல்லாமல் அல்லது சாட்சிகளைக் கலைத்து அல்லது மிரட்டி தப்பி விடலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் இறந்த பிறகு ஒரு வாழ்க்கை நிச்சயம் உண்டு. அந்த வாழ்க்கையில் அதற்குரிய தண்டனையிலிருந்து அவன் தப்ப முடியாது என்று அவனுக்கு மறுஉலக நம்பிக்கையைப் போதிக்கின்றது.

நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் இந்தச் சிந்தனையைக் குர்ஆன் நங்கூரமாகப் பாய்ச்சி விடுகின்றது. அது தான் இறையச்சமாகும். நம்பிக்கை கொண்ட மனிதனை இதுபோன்ற பாவங்களில் தடுக்கி விழாமல் அந்த இறையச்சம் தடுத்து விடுகின்றது.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இந்த இறையச்சம் என்பது பாவங்கள் என்ற கிருமிகளின் தாக்குதலுக்குப் பலியாகி விடாமல் தடுத்த நிறுத்துகின்ற தடுப்பூசியாக அமைந்து விடுகின்றது. ஒரு பக்கம் முதன்மையாக இறையச்சம், இன்னொரு பக்கம் குற்றவியல் சட்டம் என்ற இரு அடிப்படைகளில் மனித சமுதாயத்திற்கு அமைதி, அச்சமின்மை, பாதுகாப்பு ஆகியவற்றை திருக்குர்ஆன் தருகின்றது.

இறந்த பிறகு ஒரு வாழ்க்கையா? என்று ஒருவன் மறுஉலக வாழ்க்கையை நம்ப மறுத்தால் அவனை நோக்கி இந்தத் திருக்குர்ஆன் ஓர் அறைகூவலை விடுக்கின்றது.

மறுமை வாழ்க்கை உட்பட இந்த வேதத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்துமே உண்மை! இது பொய் என்றால் அதை உடைத்துக் காட்டுங்கள்; இதுபோன்ற ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள் என்று ஒரு பகிரங்க அறைகூவலை விடுக்கின்றது.

“இவர் இதனை இட்டுக்கட்டிவிட்டார்’’ எனக் கூறுகிறார்களா? அவ்வாறில்லை! அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.

(அல்குர்ஆன்:52:33,34)

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்:2:23)

தான் கூறுகின்ற மறுஉலக வாழ்க்கைக்கு மட்டுமல்ல! தான் கூறுகின்ற கொள்கை கோட்பாடுகள், குற்றவியல், சிவில் சட்டங்கள், குடும்பவியல், பொருளியல், நீதியியல், வாழ்வியல், வணக்கவியல், அறிவியல் என்று ஒட்டு மொத்த துறைகளையும் உடைத்தெறிய திருக்குர்ஆன் அழைக்கின்றது. அதிலும் இன்றைய அறிவியல் உலகத்திற்கும் அதன் அறைகூவல் நீடிக்கின்றது. 1400 ஆண்டுகளாக அது விடுக்கின்ற அறைகூவலை இதுவரையில் ஏற்பவரில்லை. அதை ஏற்கும் எவரும் இனி பிறக்கப் போவதுமில்லை என்பது தான் உண்மையாகும்.

இந்தியா முதல் உலக நாடுகள் அத்தனையிலும் குற்றங்கள் மிகைத்திருப்பது, மனிதர்கள் இயற்றிய அந்தக் குற்றவியல் சட்டங்கள் தோற்றுவிட்டன என்பதையே நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. ஆம்! அரபு நாட்டு (அதாவது குர்ஆன்) சட்டம் வேண்டும் என்று இந்தியாவில் உள்ள மக்களே குரல் எழுப்புவதன் மூலம் இங்குள்ள குற்றவியல் சட்டம் தோற்றுவிட்டது என்று அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றனர்.

புள்ளி விவரப்படி, குர்ஆனிய குற்றவியல் சட்டம் அமலில் இருக்கின்ற சவூதி அரேபியாவில் நிகழும் குற்றங்கள், மற்ற உலக நாடுகளில் நிகழும் குற்றங்களைக் காட்டிலும் ஒப்பீட்டு அடிப்படையில் மிக மிகக் குறைவாகும். இதை இங்கு குறிப்பிடுதற்குக் காரணம் இந்தியாவுக்கு மட்டுமல்ல! ஒட்டு மொத்த உலகிற்கும் அமைதியையும் அச்சமின்மையையும் தருவதற்குரிய, சட்ட ஒழுங்கைச் சீரமைக்கின்ற ஒரே ஓர் அரசியல் சாசனம் திருக்குர்ஆன் தான்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்று குர்ஆன் கூறுகின்ற குற்றவியல் சட்டம் இங்கு ஒரு மாதிரிக்குத் தான் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. குர்ஆன் வெற்றிகரமாகச் செயல்படுத்திய இதர சட்டங்களையும் உங்களின் கனிவான பார்வைக்குத் தருகின்றோம்.

மதுவிலக்கு

உலக நாடுகள் மதுவிலக்கை அமல் செய்வதில் தோல்வியைத் தழுவி விட்டன. இன்றளவும் குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகள் மதுவிலக்கை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம் 14 நூற்றாண்டுகளைத் தாண்டித் தொடரும் திருக்குர்ஆனின் ஆளுமை தான். அது, மதுவை ஒழிக்க வெறுமனே மதுவை மட்டும் தடை செய்வதுடன் நின்று விடவில்லை. மதுவின் மூலம் வருகின்ற வருவாய் அனைத்தையும் தடை செய்து மதுவின் வாசனையும் வாடையும் மனிதனின் பக்கம் அண்ட விடாது பாதுகாத்துக் கொண்டது.

வட்டி ஒழிப்பு

உலகத்தின் பொருளாதாரம் வட்டியை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கின்றது. எங்கும் வட்டி, எதிலும் வட்டி என்று வணிகத்துறை அனைத்தையும் வட்டி எனும் மாய வலை வளைத்து நிற்கின்றது. இந்தியாவில் கந்து வட்டி பல உயிர்களைப் பலி கொண்டிருக்கின்றது. வட்டியினால் பாதிக்கப்பட்ட மக்கள் வட்டியில்லாத ஒரு பொருளாதார வாழ்க்கை தங்களுக்கு அமையாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் திருக்குர்ஆனோ வட்டியில்லாத ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பியது. இன்று உலகில் கொலை, கொள்ளைகள் நடப்பதற்கு முக்கிய மூல காரணமாக அமைவது பொருளாதாரம் தான். அந்தப் பொருளாதாரத்தில் வட்டி அடிப்படையிலான அனைத்து கொடுக்கல் வாங்கலையும் தடை செய்து, தான தர்மங்களின் வாசல்களைத் திறந்து விட்டு மாபெரும் ஒரு பொருளாதாரப் புரட்சியை உலகுக்கு அளித்தது திருக்குர்ஆன் தான்.

மூட நம்பிக்கை ஒழிப்பு

மனிதர்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துபவர்கள் மக்களின் அறியாமையை மூலதனமாக்கியே தொழில் செய்கின்றனர். பில்லி, சூனியம், ஜோதிடம், செய்வினை, ஏவல் போன்ற மூட நம்பிக்கைகளை விதைத்து, மக்களிடமிருந்து பொருளாதாரத்தைச் சுரண்டி வருகின்றனர்.

விஞ்ஞானம் வளர்ந்து, விண்வெளியில் போய் தங்குவதற்கு இடம் தேடிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்திலேயே இதுபோன்ற மூட நம்பிக்கைகளில் மக்கள் விழுந்து தங்கள் பொருளாதாரத்தையும் சில சமயங்களில் உயிர்களையும் பறி கொடுப்பதைப் பார்க்கிறோம்.

ஆனால் அறிவியல் வளர்ச்சியில்லாத, காட்டுமிராண்டி சமுதாயம் என்று எண்ணப்பட்ட அந்தக் காலத்திலேயே இந்த மூட நம்பிக்கைகள் அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்து, இஸ்லாம் ஒரு பகுத்தறிவு மார்க்கம் என்பதைத் திருக்குர்ஆன் பறைசாற்றியது.

தீண்டாமை ஒழிப்பு

உலக மக்கள் தீண்டாமையினால் பல நூற்றாண்டுகளாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தீண்டாமையின் கொடுமை உச்சத்தில் உள்ளது. திருக்குர்ஆன் அந்தத் தீண்டாமையை தகர்த்தெறிந்து மக்கள் அனைவரையும் ஒரு தந்தை, தாய்க்குப் பிறந்த சகோதரர்கள் என்று மனித குலம் அனைத்தையும் ஒரே கயிற்றில் பிணைத்திருக்கின்றது.

ஆண்டுதோறும் மொழி, இனம், நிறம், குலம், கோத்திரம், நாடு என அனைத்து வேறுபாடுகளையும் களைந்து விட்டு, வெள்ளையர்கள், கறுப்பர்கள் என உலக மக்கள் அனைவரையும் மக்காவில் அமைந்திருக்கின்ற புனித கஅபா ஆலயத்தில் ஹஜ் எனும் உலகளாவிய மாநாடு மூலம் சந்திக்கவும் சங்கமிக்கவும் செய்கின்றது. அன்றாடம் அந்தந்த ஊர்களில் ஐவேளைத் தொழுகைகள் மூலம் பள்ளிகளில் மக்களை ஒருவருக்கொருவர் சந்திக்கச் செய்கின்றது.

இப்படி மனித குலத்தை அரித்து, அழித்துத் தள்ளுகின்ற அத்தனை தீமைகளையும் அடையாளங்காட்டி அவற்றைத் தடை செய்து ஒவ்வொரு தனிமனிதனையும் சமுதாயத்தையும் திருக்குர்ஆன் பாதுகாக்கின்றது. இதன் மூலம் உலகத்தை அமைதியாக வாழச்செய்கின்றது.

இது மட்டுமின்றி உலக அரசாங்கங்கள் வழங்காத உரிமைகளையும் திருக்குர்ஆன் அளித்தது. அவற்றையும் பார்ப்போம்.

குடிமையியல் (சிவில்) சட்டங்கள்

மனிதர்களுக்குரிய சட்டங்கள் குற்றவியல் (கிரிமினல்), குடிமையியல் (சிவில்) என்று இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. குர்ஆன் கூறுகின்ற குற்றவியல் சட்டத்தின் சிறப்பம்சத்தை மேலே நாம் பார்த்தோம். அந்தச் சட்டத்திற்கு முன்னால் உலகக் குற்றவியல் சட்டங்கள் தோற்றுப் போனது போன்று குர்ஆன் கூறுகின்ற குடிமையியல் சட்டங்களுக்கு முன்னாலும் உலக நாடுகளின் குடிமையியல் சட்டங்கள் தோற்றுப் போய்விட்டன.

அதற்கு காரணம் உலக நாடுகளின் சட்ட மன்றங்கள், நாடாளுமன்றங்கள் குடிமையியலின் ஓர் அங்கமான சொத்துரிமையைப் பெண்களுக்குக் கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்று அதை இன்று வரையில் விவாதப் பொருளாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் திருக்குர்ஆன் அவர்களுக்கு சொத்துரிமையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது ஆறாம் நூற்றாண்டிலேயே வழங்கி மனிதர்கள் இயற்றிய குடிமையியல் சட்டங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்ட்து.

மகளிருக்கு அளித்த மகத்தான உரிமைகள்

அன்றைய அரபகம் மட்டுமல்ல, அகில உலகமும் பெண்களுக்கு வாழ்வுரிமையைப் பறித்துக் கொண்டிருந்தது. பெண்களுக்கு ஆன்மா இருக்கின்றதா? என்று உலகம் அதிபுத்திசாலித்தனமாக (?) விவாதித்துக் கொண்டிருந்தது. ஆனால் திருக்குர்ஆன் வாழ்வுரிமையைத் தாண்டி வாரிசுரிமை (சொத்துரிமை), வழிபாட்டு உரிமை, விரும்பும் கண்வனைத் தேர்வு செய்யும் உரிமை, பிடிக்காத கணவனிடமிருந்து விலகும் உரிமை என்று அத்தனை உரிமைகளையும் அள்ளி வழங்கியது.

பெண்களுக்கு ஆலயத்தில் நுழைவதற்கு இதுவரையில் பல நாடுகளில் அனுமதி இல்லை. இந்தியாவில் சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு நடத்தப்படும் போராட்டங்கள் இதற்கு ஒரு நிதர்சனமான எடுத்துக் காட்டாகும். ஆனால் திருக்குர்ஆன் முஸ்லிமான ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் உலகின் முதல் ஆலயமான மக்காவில் உள்ள புனிதப் பள்ளியிலும், இன்னும் உலகிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் வணங்குவதற்குரிய வழிபாட்டுரிமையை வழங்கியிருக்கின்றது.

பெண்களுக்குரிய வழிபாட்டுரிமை ஒரு பக்கமிருக்க, ஆண்களுக்கே குறிப்பிட்ட சாதியினர் கோயில்களில் நுழைய அனுமதி கிடையாது என்று மறுக்கப்படுகின்றது. ஆனால் திருக்குர்ஆனோ ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்டு விட்டால் புனிதமிகு மக்கா ஆலயம் முதல் உலகில் உள்ள அத்தனை ஆலயங்களிலும் நுழையவும், இறைவனைத் தொழவும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒருசேர அனுமதியளிக்கின்றது.

இவை அனைத்தும் திருக்குர்ஆன் தனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் வெற்றிகரமாகச் செயல்படுத்தி, நிறைவேற்றிய வாக்குறுதிகளாகும். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு ஒரு நிபந்தனையை இடுகின்றது. அந்த நிபந்தனை இதோ:

‘‘அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணைகற்பிக்க மாட்டார்கள்”

(அல்குர்ஆன்:24:55.)

ஆம்! அன்று அரபுலகம் கண்ட அதே அமைதி உலகம் முழுவதும் திரும்ப வேண்டுமென்றால் உலக மக்கள் உருப்படியான, உன்னதமான ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவேண்டும். பலதெய்வக் கொள்கையைக் கைவிடவேண்டும். அப்போது தான் அந்த வாக்குறுதி நிறைவேறும். ஆக இறைவனுக்கு இனைகற்பிக்காமல் வாழ்ந்து மறைவோமாக.!