Tamil Bayan Points

அவ்லியாக்களிடம் உதவி தேடலாமா? ஓர் ஆய்வு

முக்கிய குறிப்புகள்: முக்கிய ஆய்வுகள்

Last Updated on December 9, 2016 by Trichy Farook

அவ்லியாக்களிடம் உதவி தேடலாமா?

இன்றைய இஸ்லாமிய சமூகத்தில் சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரில் உள்ள அனைவரும் ஒரே கொள்கையைச் சார்ந்தவர்கள் என்று பலர் தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

தர்ஹா வழிபாடு, மவ்லூத் பாடல், இறந்தவர்களிடம் நேரடியாக உதவி தேடுவது இன்னும் சமுதாயத்தில் வணக்கம் என்ற பெயரில் செய்யப்படும் இது போன்ற காரியங்களை இணைவைப்பு என்றும் இவற்றை செய்யக்கூடாது என்று கூறும் மத்ரஸாக்களும் மவ்லவிமார்களும் சுன்னத் வல்ஜமாத்தில் இருக்கிறார்கள். இந்த விசயத்தில் இவர்களும் நாமும் ஒத்த கருத்தில் இருக்கின்றோம்.

பொய்யான செய்திகளையும், சம்பந்தமில்லாத தகவல்களையும் கூறி மேற்கண்ட இணைவைப்புக் காரியங்களை எப்பாடுபட்டாவது நியாயப்படுத்தி இவை தான் இஸ்லாம் என்று கூறும் வழிகேடர்களும் இணைவைப்பாளர்களும் சுன்னத் வல்ஜமாத் என்ற பெயரில் இயங்கி வருகின்றனர்.

இவர்கள் ஒரு காலத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தை மட்டும் கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் தற்போது தவ்ஹீத் ஜமாஅத்துடன் சேர்த்து, இவர்களின் இணைவைப்புக் காரியங்களைக் கூடாது என்று சொல்லும் சுன்னத்வல்ஜமாத்தைச் சார்ந்தவர்களையே வெளிப்படையாக எதிர்க்கவும் விமர்சனம் செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

உண்மையை வெளிப்படுத்திய குர்ஆனின் குரல்

சமீபத்தில் குர்ஆனின் குரல் என்ற மாத இதழில் அவ்லியாக்களிடம் நேரடியாக உதவி தேடலாமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் பின்வருமாறு அற்புதமாக சரியான மார்க்கத் தீர்ப்பை வழங்கினார்கள்.

மனிதருக்குக் கொடுக்கப்பட்டுள்ள சக்திக்கு உட்பட்டு ஒருவருக்கொருவர் உதவி கேட்பதும் உதவி பெறுவதும் ஆகுமான செயலாகும். மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயலில் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும். அது துஆவாகும். துஆ இபாதத்தாகும். இபாதத் அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது. இறைத்தூதர்களையும் இறைநேசர்களையும் அழைத்து அவர்களிடம் உதவி கேட்பது அல்லாஹ்வுக்கு நிகராக அவர்களை ஆக்கியதாக ஆகிவிடும். எங்கிருந்து யார் அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் அத்தனை பேருடைய வேண்டுதல்களையும் ஒரே நேரத்தில் கேட்கும் சக்தியும் அவற்றை அறியும் ஆற்றலும் அல்லாஹ்வின் பண்பாகும். இந்தப் பண்பில் அல்லாஹ்விற்கு ஷிர்க் வைத்ததாக ஆகிவிடும். அன்பியாக்களும் அவ்லியாக்களும் ஆலமும் பர்ஜகில் விசேசமான ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்பது சுன்னத் வல்ஜமாஅத்துடைய கொள்கை என்றாலும் இந்த உலக வாழ்க்கையை ஆலமுல் பர்ஜஹ் உடைய ஹயாத்துடன் ஒப்பிட்டு சட்டங்கள் எடுப்பது கூடாது. அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் கூடாது என்பதே நமது சுன்னத் வல்ஜமாஅத்தின் தீர்ப்பாகும்.

குர்ஆனின் குரல் (ஜனவரி 2014)

அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கும் காரியத்தை இணைவைப்பு என்றும் அதை செய்யக்கூடாது என்றும் கூறிய குர்ஆனின் குரல் மாத இதழையும் இந்த ஃபத்வாவை வழங்கிய மார்க்க அறிஞர்களையும் நாம் பாராட்டுகிறோம். அல்லாஹ் இவர்களுக்கு அருள் புரியட்டும்.

அன்பான அறிவுரை

அதே நேரத்தில் இங்கே இவர்களிடத்தில் உள்ள ஒரு பெரிய தவறையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டிய கடமை உள்ளது. பாரதுôரமான இணைவைப்புக்கு எதிராக ஒரு மாத இதழில் ஃபத்வா கொடுக்கும் இவர்கள் இந்த இணைவைப்பை இஸ்லாம் என்று இஸ்லாமிய சமுதாயத்தில் பலர் தவறாக நம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் இதற்கு எதிராக இதே ஃபத்வாவை விளக்கி மக்களுக்கு ஜும்ஆ உரை ஆற்றியிருக்கிறார்களா?

அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடப்படும் ஊர்களுக்குச் சென்று மக்களுக்கு இவையெல்லாம் இணைவைப்பு என்று விளக்கி பயான் செய்ததுண்டா? அல்லது இவர்கள் நடத்தும் மாநாடுகளிலும் மக்கள் கூடும் பயான் நிகழ்ச்சிகளிலும் இது குறித்த எச்சரிக்கையைச் செய்ததுண்டா?

இந்தப் பணியை இவர்கள் செய்யாத காரணத்தால் இவர்களின் ஏகத்துவ ஃபத்வா ஏட்டில் மட்டுமே இருக்கின்றது. மக்களிடம் அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. நமது ஜமாஅத்தின் ஏகத்துவ அறிஞர்கள் இந்தப் பணியைக் கையில் எடுத்து மக்களிடம் செய்த கடும் பிரச்சாரத்தின் விளைவாக தமிழகத்தில் கணிசமான மக்கள் இணைவைப்பை விட்டும் விலகி ஏகத்துவத்தின் பக்கம் வந்தனர்.

எனவே இணைவைப்பிற்கு எதிராக ஃபத்வா வழங்கிய இந்த சகோதரர்கள் யாருக்கும் அஞ்சாமல் தயவு தாட்சண்யம் பார்க்காமல் இது இணைவைப்பு தான் என்பதை மக்களுக்கு மத்தியில் வீரியத்துடன் உண்மையை உடைத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற அறிவுரையை இவர்களுக்குக் கூறிக்கொள்கிறோம்.

சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரில் இறந்தோர்களை வணங்கும் கூட்டத்தினர் இவர்கள் அளித்த ஃபத்வாவை விமர்சித்துள்ளனர். சம்பந்தமில்லாத சில குர்ஆன் வசனங்களையும் பொய்யான தகவல்களையும் கொண்டு வந்து இறந்தவர்களிடம் உதவி கேட்கலாம் என்று கூசாமல் எழுதியுள்ளனர்.

இந்தக் கட்டுரையில் இவர்கள் ஆதாரங்களாக குறிப்பிடும் விஷயங்களுக்குரிய சரியான விளக்கத்தை அறிந்துகொள்வோம்.

சுலைமான் நபி இறந்தவர்களிடம் உதவி தேடினாரா?

இறந்தோர்களை வணங்கக்கூடியவர்கள் இவர்களின் ஷிர்க் கொள்கையை நியாயப்படுத்த இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களை முஷ்ரிக்காகக் காட்டும் கேவலமான முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கு இவர்கள் பின்வரும் வசனத்தை ஆதாரமாகக் கூறுகிறார்கள்.

“பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?” என்று (ஸுலைமான்) கேட்டார். “உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்” என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது. கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் “நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?” என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ (தமக்காகவே நன்றி மறக்கிறார்.) என் இறைவன் தேவையற்றவன்; கண்ணியமிக்கவன்.

அல்குர்ஆன் 27:40

இந்த வசனத்தில் அரசியின் சிம்மாசனத்தை கண் மூடித் திறப்பதற்குள் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது கூறியது என அல்லாஹ் கூறுகிறான்.

நீண்ட தொலைவில் உள்ள சிம்மாசனத்தை கண் மூடித்திறப்பதற்குள் கொண்டு வருவது சாதாரண மனிதனுக்கு இல்லாத ஆற்றல். இப்படிப்பட்ட ஆற்றல் ஒரு இறைநேசருக்கு இருந்துள்ளது. அந்த இறைநேசரிடம் சுலைமான் (அலை) அவர்கள் உதவி கேட்டுள்ளார்கள். எனவே இறந்துவிட்ட அவ்லியாக்களிடம் எதை வேண்டுமானாலும் கேட்டுப் பிரார்த்திக்கலாம் என்று இவர்கள் கூறுகின்றனர்.

கூறியது ஜின்னா? மனிதரா?

வேதம் வழங்கப்பட்ட இறைநேசர் இவ்வாறு கூறினார் என்று அல்லாஹ் கூறவில்லை. இந்த வசனத்தை அவ்லியாக்களுடன் கோர்ப்பதற்காக குர்ஆனில் இல்லாத இறைநேசர் என்ற இவர்களின் சொந்தச் சரக்கை இவர்களாகப் புகுத்தியுள்ளனர். அப்போது தான் இறந்தவர்களிடம் உதவி தேடலாம் என்ற இணைவைப்பை நியாயப்படுத்தும் முயற்சியைத் தொடங்க முடியும்.

சிம்மாசனத்தை யார் கொண்டு வருவார் என்று சுலைமான் (அலை) அவர்கள் கேட்டபோது இப்ரீத் என்ற ஜின், “நீங்கள் எழுவதற்கு முன்பு கொண்டு வருகிறேன்’ என்று கூறியது. இதன் பின்னே வேத ஞானம் வழங்கப்பட்டது, “நான் கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டுவருகிறேன்’ என்று கூறியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் சிம்மாசனத்தைக் கொண்டுவந்தது மனிதரல்ல. ஜின் என்பது தான் பல காரணங்களால் சரியான கருத்தாகும்.

அல்லாஹ் மனிதர்களைக் காட்டிலும் ஜின்களை வலிமையான படைப்பாகப் படைத்துள்ளான். விண்ணுலகத்தில் பல லட்சக்கணக்கான கி.மீ. பயணத்தைக் குறுகிய நேரத்தில் செய்யும் ஆற்றலையும் அல்லாஹ் ஜின்களுக்கு வழங்கியுள்ளான். இந்த ஆற்றல் தீய ஜின்களுக்குக் கூட வழங்கப்பட்டுள்ளது. எனவே தான் ஜின்கள் வானுலகத்தில் பேசப்படும் விஷயங்களை ஒட்டுக்கேட்பதற்காகப் பயணம் செய்கின்றன. ஜின்களுக்கு இத்தகைய ஆற்றல் உண்டு என்பதற்குக் குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் ஆதாரமாக உள்ளது. சாதனம் ஏதுமின்றி விண்ணில் சுயமாக நீண்டதூரம் சுலபமாகப் பயணம் செய்யும் இத்தகைய சக்தியை அல்லாஹ் மனித இனத்திற்கு வழங்கவில்லை.

இத்தகைய ஜின்களை அல்லாஹ் சுலைமான் (அலை) அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தான். நபி சுலைமான் (அலை) அவர்களால் செய்ய முடியாத காரியங்களை ஜின்கள் அவர்களுக்கு செய்து கொடுத்தன. எனவே தான் சுலைமான் (அலை) அவர்கள் ஜின்களைப் பார்த்து யார் சிம்மாசனத்தை கொண்டு வருவார்? என்று கேட்டார்கள்.

சுலைமான் (அலை) அவர்கள் கேட்ட கேள்விக்கு இப்ரீத் என்ற ஜின் பதிலளித்துள்ளது. எனவே சுலைமான் (அலை) அவர்கள் ஜின்களைப் பார்த்துத் தான் இந்த கேள்வியைக் கேட்டுள்ளார்கள் என்பதை அறிய முடியும்.

அல்லாஹ் எதையும் சுருக்கமாக பேசக்கூடியவன். இப்ரீத் என்ற ஜின் கூறியது என்று சொன்ன பிறகு வேத ஞானமுள்ள ஒருவர் கூறினார் என்றாலே அந்த ஒருவர் ஜின் தான் என்பதை எளிதாக விளங்க முடியும். அந்த ஒருவரும் ஜின் தான் என மறுபடியும் கூற வேண்டிய அவசியமில்லை.

உதாரணமாக ஐந்தும் ஐந்தும் எத்தனை என்று ஆசிரியர் கேட்டார். ஒரு மாணவன் எட்டு என்று கூறினான். அறிவுள்ள ஒருவன் பத்து என்று கூறினான் என்று சொன்னால் அறிவுள்ள ஒருவன் என்று சொல்லப்பட்டவனும் மாணவன் தான் என்பதை விபரமுள்ள யாரும் மறுக்க மாட்டார்கள். இதே போன்று தான் முன்பு நாம் சுட்டிக்காட்டிய வசனமும் அமைந்துள்ளது.

எனவே கண்ணிமைக்கும் நேரத்தில் சிம்மாசனத்தைக் கொண்டுவந்தது வேதஞானமுள்ள ஜின்னே தவிர மனிதரல்ல.

இறைவாக்கை துஷ்பிரோயகம் செய்யும் பரேலவிகள்

ஒரு வாதத்திற்கு கண்ணிமைக்கும் நேரத்தில் சிம்மாசனத்தை கொண்டு வந்தவர் மனிதர் என்றும் இறைநேசர் என்றும் நம்பினாலும் இவர்களின் இணைவைப்பை நியாயப்படுத்த முடியாது.

சுலைமான் (அலை) அவர்கள் உதவி தேடியதற்கும் இவர்கள் இறந்தவர்களிடம் உதவி தேடுவதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது.

இறந்தவர்களை நாம் கண்ணால் காண முடியாது. அவர்களால் நாம் பேசுவதைச் செவியுறவும் முடியாது. நாம் பேசினால் அதற்கு அவர்கள் பதிலளிக்கவுமாட்டார்கள். அவர்கள் இவ்வுலகவாழ்வை விட்டும் பிரிந்து திரையிடப்பட்ட மறைமுகமான வாழ்வுக்குள் சென்று உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பரேலவிகள் இத்தகையவர்களிடம் தாங்கள் விரும்பிய உதவிகளைக் கேட்கிறார்கள்.

மனதிற்குள் ரகசியமாக எங்கிருந்து கொண்டும் எத்தனை பேர் அழைத்தாலும் இறந்தவர் உதவி செய்வார் என்று நம்புகின்றனர். இவர்கள் அல்லாஹ்விடம் உதவி தேடுவதற்கும் இறந்தவர்களிடம் உதவி தேடுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டும் ஒன்று தான். அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது போன்று அப்படியே இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இந்த அடிப்படையில் இவர்கள் முஷ்ரிக்குகளாக இருக்கிறார்கள்.

சுலைமான் (அலை) அவர்கள் இவர்களைப் போன்று இறந்தவரிடம் உதவி தேடவில்லை. கண்களுக்குத் தெரிகின்ற, சுலைமான் (அலை) பேசுவதைக் கேட்கின்ற, அவர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கின்ற ஒருவரிடத்திலேயே சிம்மாசனத்தைக் கொண்டு வருமாறு கூறினார்கள். எங்கிருந்து அழைத்தாலும் எப்படி அழைத்தாலும் எத்தனைபேர் அழைத்தாலும் என்ற வாதத்திற்கே இங்கு வேலையில்லை. சுலைமான் (அலை) அவர்கள் இந்த அடிப்படையில் யாரையும் அழைக்கவில்லை.

சுலைமான் (அலை) அவர்கள் சிம்மாசனத்தைக் கொண்டு வருமாறு கூறிய போது அந்த இறைநேசர் (இவர்களின் வாதப்படி) “நான் கொண்டு வருகிறேன்’ என்று பதிலளித்தார். அதை சுலைமான் (அலை) அவர்கள் தம் காதால் கேட்டார்கள். மேலும் சுலைமான் (அலை) அவர்களின் கண்களுக்கு முன்னால் அந்த சிம்மாசனத்தையும் கொண்டு வந்தார்.

அவ்லியாக்களின் அழைப்புக்கு இதை ஆதாரமாகக் காட்டும் இந்த பரேலவிகள், “இறந்தவர்கள் நமது பிரார்த்தனைக்கு எழுந்து வந்து நாம் கேட்கும் விதத்தில் பதிலளிப்பார்களா? நமது தேவைகளை நமது கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி நிறைவேற்றுவார்களா?’ ஆகிய கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

அவ்லியாவே! எனக்குக் குழந்தை பாக்கியத்தைக் கொடுங்கள் என்று நான் கேட்டால் அவ்லியா எனக்கு முன்னால் தோன்றி நான் தருகிறேன் என்று சொல்ல வேண்டும். அவர் சொன்னது போல் அது கிடைக்கவும் வேண்டும். இதை நாம் உணரும் விதத்தில் இருந்தாலே இறந்தவர்களிடம் கேட்க முடியும். ஆனால் இது ஒரு போதும் நடக்கப்போவதில்லை. எனவே இறந்தவர்களிடம் நாம் தேவைகளை முறையிடவும் முடியாது.

சுலைமான் (அலை) அவர்கள் சிம்மாசனத்தைக் கொண்டுவருமாறு கூறியது சாதாரணமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் பேசுவதைப் போன்று தான் அமைந்துள்ளது. இவர்கள் இறந்தவர்களை அழைப்பது போன்ற அழைப்பு இல்லை.

நபி சுலைமான் (அலை) அவர்களின் காலத்தில் குறிப்பிட்ட ஒருவருக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் சிம்மாசனத்தைக் கொண்டு வரும் ஆற்றல் இருந்தது என்று அல்லாஹ் கூறுகிறான். இதை நாம் நம்ப வேண்டும்.

சுலைமான் நபி காலத்தில் ஒருவருக்கு ஒரு ஆற்றல் இருந்தது என்பதால் அவ்லியா (?) என்று இவர்கள் யாருக்கெல்லாம் பட்டம் தருகின்றார்களோ அவர்கள் அனைவரும் இத்தகைய ஆற்றல் உள்ளவர்கள் என்று கூறுவது பைத்தியக்காரத்தனமாகும்.

நீங்கள் ஒரு மனிதருக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தீர்கள் என்று நான் கேள்விப்பட்டால் அந்த மனிதருக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தீர்கள் என்பதைத் தாண்டி வேறு எதையும் அதிலிருந்து புரிய முடியாது. அவரல்லாத பலருக்கும் குறிப்பாக இன்னாருக்கும் இன்னாருக்கும் நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தீர்கள் என்று அறிவுள்ள யாரும் புரிய மாட்டார்கள்.

ஆனால் இந்த பரேலேவிகள் அல்லாஹ்வுடைய ஆற்றல் விசயத்தில் இவ்வாறு புரியாமல் ஏறுக்குமாறாகப் புரிந்ததால் இணைவைப்புக்குக் குர்ஆன் வசனத்தை ஆதாரம் காட்டுகிறார்கள்.

இன்னாருக்கு இந்த ஆற்றல் இருந்தது என்று அல்லாஹ் சொன்னால் நாம் நம்ப வேண்டும். இந்த பரேலவிகள் சொன்னால் நாம் நம்ப வேண்டுமா? இவர்களாக அல்லாஹ் இந்த அவ்லியாவுக்கு வழங்கியுள்ளான். அந்த அவ்லியாவுக்கு வழங்கியுள்ளான் என்று துணிந்து கூறுகிறார்கள். இதன் மூலம் அல்லாஹ்வின் அதிகாரத்தை இவர்கள் கையில் எடுக்க முனைகிறார்கள். அல்லாஹ் இந்த அவ்லியாக்களுக்கு வழங்கும் போது அதை இவர்கள் பார்த்தார்களா? குருட்டு நம்பிக்கையைத் தவிர இதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது?

அல்லாஹ் நபிமார்களில் சிலருக்கு குறிப்பிட்ட சில ஆற்றலை விஷேசமாக வழங்கிய போது மக்கள் அனைவரும் வெளிப்படையாகக் கண்டு அது உண்மை என்று நம்பும் விதத்தில் அந்த ஆற்றல் இருந்தது. நபி ஈசா (அலை) அவர்களுக்கு குருடருக்குப் பார்வை கொடுப்பது, குஷ்ட நோயாளியின் தோலைச் சரிசெய்வது, இறந்தவரை உயிர்பிப்பது போன்ற ஆற்றலை வழங்கினான். ஈசா (அலை) அவர்கள் இதை மக்கள் கண்கூடாக கண்டு நம்பும் விதத்தில் மக்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.

மூசா (அலை) அவர்களுக்கு கைத்தடியைப் பாம்பாக மாற்றும் அற்புதத்தை வழங்கினான். இதை மூசா (அலை) அவர்கள் மக்களுக்கு முன்னால் செய்து காட்டி மக்களை நம்பச் சொன்னார்கள். எனக்கு அல்லாஹ் சக்தி வழங்கியுள்ளான் என்று குருட்டுத்தனமாக நம்புங்கள் என்று அவர்கள் கூறவில்லை. இந்த சம்பவங்களை அல்லாஹ் குர்ஆனில் நமக்கு எடுத்துச் சொல்வதால் அதை நாம் கண்கூடாக பார்க்காவிட்டாலும் நம்புகிறோம்.

எனவே இறந்தவர்களுக்குப் பலவகையான ஆற்றல்கள் உண்டு என்றால் அதை நம் கண்களுக்கு முன்னால் வெளிப்படுத்தி நிரூபிப்பது இந்த பரேலவிகளின் கடமையாகும். ஆனால் இவர்களால் ஒரு போதும் நிரூபிக்க முடியாது. பிறகு ஏன் அவ்லியாக்களுக்கு (?) அது முடியும். இது முடியும் என்று குருட்டு நம்பிக்கை வைத்துக் கதை விட வேண்டும்?

மூசா (அலை) அவர்களுடை கைத்தடி பாம்பாக மாறியது என்பதால் உலகில் உள்ள மற்ற கைத்தடிகளும் பாம்பாக மாறும் என்று கூறுவதை மிஞ்சிய அறிவீனம் எதுவுமில்லை. ஈசா (அலை) அவர்கள் இறந்தவர்களை உயிர்ப்பித்ததால் மற்றவர்களும் உயிர்பிப்பவார்கள் என்று அறிவுள்ளவன் கூறமாட்டான்.

ஆனால் இந்த பரேலேவிகள் சுலைமான் நபி காலத்தில் ஒருவருக்கு ஒரு ஆற்றல் இருந்ததால் இறந்துவிட்ட இறைநேசர்களுக்கும் (?) இந்த ஆற்றல் உண்டு; எனவே அவர்களிடம் நேரடியாக உதவி தேடலாம் என்கின்றனர். இவர்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை என்பதை அறிய முடிகின்றது.

சுலைமான் (அலை) அவர்கள் குறிப்பிட்ட ஆற்றல் ஒருவரிடம் இருந்ததைக் கண்ட போது அதற்குரிய வேலையைச் செய்யுமாறு உத்தரவிட்டார்கள். இவர்களோ அவ்லியாக்களிடம் (?) கணக்கு வழக்கில்லாமல் கண்டதையும் கேட்கிறார்கள். அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டிய விஷயங்களையும் கேட்கிறார்கள்.

அல்லாஹ் வேறு, அவ்லியாக்கள் வேறு என்பதெல்லாம் இவர்களின் வெறும் வார்த்தை தான். இவர்களின் நம்பிக்கையைப் பார்த்தால் அல்லாஹ்விற்குரிய அத்தனை ஆற்றல்களையும் அவ்லியாக்களுக்குக் கொடுத்து விட்டார்கள்.

சிலை வழிபாட்டிற்கும் இவர்களின் கப்று வழிபாட்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை கல்லின் மீது வைத்தால் ஷிர்க் என்றும் குஃப்ர் என்றும் கூறும் இவர்கள் அதே நம்பிக்கையை இறந்தவர்களின் மீது வைத்தால் ஷிர்க் இல்லை என்கிறார்கள்.

பாருங்கள்! இறந்தவர்களின் பெயரால் ஷைத்தான் இவர்களை எப்படி ஷிர்க்கில் தள்ளுகிறான்?

யூசுப் நபியின் சட்டை ஆதாரமாகுமா?

இறந்தவர்களிடம் உதவி தேடலாம் என்பதற்குக் குர்ஆனில் இன்னொரு வசனத்தையும் இவர்கள் ஆதாரமாக காட்டுகிறார்கள்.

“எனது இந்தச் சட்டையைக் கொண்டு சென்று, என் தந்தையின் முகத்தில் போடுங்கள்! அவர் பார்வையுடையவராக ஆவார். உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!” (எனவும் கூறினார்) நற்செய்தி கூறுபவர் வந்து, அதை அவரது முகத்தில் போட்டார். உடனே அவர் பார்வை பெற்றவராக மாறினார். “நீங்கள் அறியாததை நான் அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன் என உங்களிடம் கூறவில்லையா?” என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 12:96

யூசுஃப் (அலை) அவர்கள் பார்வை இழந்த தனது தந்தையின் முகத்தில் தனது சட்டையைப் போடுமாறு கொடுத்து விடுகிறார்கள். சட்டையைப் போட்டவுடன் யஃகூப் (அலை) அவர்களுக்குப் பார்வை கிடைத்தது.

பார்வை இல்லாமல் இருந்த யஃகூப் (அலை) அவர்களுக்கு யூசுஃப் (அலை) அவர்கள் பார்வை கிடைக்க உதவியுள்ளார்கள். ஒரு நபி இன்னொரு நபிக்கு உதவி செய்ய முடியும் என்பதால் அவ்லியாக்களும் நமக்கு உதவி செய்வார்கள். எனவே நாம் அவ்லியாக்களிடம் உதவி தேடலாம் என்பது இவர்களின் தரங்கெட்ட வாதம்.

முதலில் யூசுஃப் (அலை) அவர்களுக்கும் யஃகூப் (அலை) அவர்களுக்கும் இடையே நடந்த இந்தச் சம்பவம் உலகத்தில் இருவரும் உயிருடன் இருக்கும் போது நடந்தது. யஃகூப் (அலை) அவர்கள் யூசுஃப் (அலை) அவர்களிடம் கண் பார்வையை எனக்குத் திருப்பி அளியுங்கள் என்று பிரார்த்தனை செய்யவில்லை.

எங்கிருந்தாலும் எப்படி அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் இறந்த பிறகும் அவ்லியாக்கள் உதவி செய்வார்கள் என்ற வாதத்திற்கும் இந்த நிகழ்வுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? இவர்கள் செய்யும் ஷிர்க்கை நிலைநாட்ட குர்ஆன் வசனத்துடன் அநியாயமாக விளையாடுகிறார்கள்.

நபிமார்கள் எந்தக் காரியத்தையும் சுயமாகச் செய்ய மாட்டார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் தமது சட்டையை தந்தையின் முகத்தில் போட வேண்டும் என்று இறைவன் அவர்களுக்குக் கூறியதால் அவ்வாறு யூசுஃப் (அலை) அவர்கள் செய்தார்கள். யஃகூப் (அலை) அவர்களுக்கும் பார்வை கிடைத்தது.

யஃகூப் (அலை) அவர்களுக்கு இவ்வாறு பார்வை கிடைக்கும் என்பதை யஃகூப் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் முன்கூட்டியே அறிவித்துள்ளான். பின்வரும் வசனத்திலிருந்து இதை அறியலாம்.

நற்செய்தி கூறுபவர் வந்து, அதை அவரது முகத்தில் போட்டார். உடனே அவர் பார்வை பெற்றவராக மாறினார். “நீங்கள் அறியாததை நான் அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன் என உங்களிடம் கூறவில்லையா?” என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 12:96

அல்லாஹ் ஏற்படுத்திய ஏற்பாட்டின் படியே யஃகூப் (அலை) அவர்களுக்குப் பார்வை கிடைத்தது. நபி யூசுஃப் (அலை) அவர்கள் சுயமாக இந்தக் காரியத்தைச் செய்யமாட்டார்கள். அவ்வாறு செய்திருந்தால் யஃகூப் (அலை) அவர்களுக்குப் பார்வையும் கிடைத்திருக்காது. எங்கிருந்து கொண்டும் குணமளிக்க முடியும் என்றால் தனது சட்டையைக் கொடுத்தனுப்ப வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலை அல்லாஹ் அவர்களுக்குக் காண்பித்து அதன் படி அவர்கள் செய்த காரணத்தினாலேயே பார்வை கிடைத்தது.

அய்யூப் (அலை) அவர்கள் நோய்வாய்பட்டிருந்த போது புல்லை எடுத்து உடலில் அடிக்குமாறு அல்லாஹ் கூறினான். அய்யூப் (அலை) அவர்கள் அல்லாஹ் கூறியவாறு செய்தார்கள். நோய் குணமாயிற்று. இதை அல்லாஹ் குர்ஆனில் விவரிக்கின்றான்.

இந்நிகழ்விலிருந்து நோயை நீக்கும் அதிகாரம் அல்லாஹ்விற்கு இருந்தது என்று புரிவோமா? அல்லது அய்யூப் (அலை) அவர்கள் நோயை குணப்படுத்தும் சக்தி பெற்றிருந்தார்கள் என்று புரிவோமா?

மூசா (அலை) அவர்களின் கைத்தடி பாம்பாக மாறியது. அந்த கைத்தடி மூலம் அவர்கள் கடலை பிளந்தார்கள். இவையெல்லாம் கைத்தடியின் மகிமையினாலோ மூசா (அலை) அவர்களின் ஆற்றலினாலோ நடக்கவில்லை. அல்லாஹ் கைத்தடிக்கும் அதை வைத்திருந்த மூசா (அலை) அவர்களுக்கும் உத்தரவிட்ட காரணத்தாலே இவ்வாறு நடந்தது.

இதே போன்று தான் யூசுஃப் (அலை) தனது சட்டையை யஃகூப் (அலை) அவர்களின் முகத்தில் போட வேண்டும் என்பது அல்லாஹ்வின் உத்தரவு. இதன் மூலம் அல்லாஹ் யஃகூப் (அலை) அவர்களுக்குப் பார்வை தர விரும்பியுள்ளான். இதை அல்லாஹ் குர்ஆனில் சொன்னதால் நாம் நம்புகிறோம்.

இது போன்ற அற்புதங்களை நபிமார்களானாலும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நிகழ்த்த முடியும் என்று குர்ஆன் தெளிவாகப் பல இடங்களில் கூறுகின்றது. நபிமார்கள் அற்புதம் நிகழ்த்தினாலும் அதன் அதிகாரம் முழுவதும் அல்லாஹ்விடம் தான் உள்ளது.

நபியானாலும் விரும்பிய நேரத்தில் விரும்பிய அற்புதங்களைச் செய்ய முடியாது. எந்த நேரத்தில் எந்த அற்புதத்தைச் செய்ய அல்லாஹ் நாடுகிறானோ அப்போது தான் அது நடந்தேறும். இந்த அடிப்படையில் தான் யஃகூப் (அலை) அவர்களுக்குப் பார்வை கிடைத்தது.

இந்நிகழ்வை அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். எனவே நம்புகிறோம். நம்ப வேண்டும். ஷாகுல் ஹமீது பாதுஷா, அஜ்மீர் காஜா, அப்துல் காதிர் ஜீலானீ இன்னும் இவர்களின் அவ்லியா பட்டியலில் வரக்கூடியவர்கள் இது போன்ற அற்புதங்களைச் செய்வார்கள் என்று நம்புவதற்கு என்ன ஆதாரம் உள்ளது? இவர்களுக்கு இத்தகைய ஆற்றல் உண்டு என்று அல்லாஹ் நம்பச் சொல்கிறானா? ஈமான் கொள்ள வேண்டிய விசயங்களில் இதுவும் ஒன்று என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களா?

ஒரு பேச்சிற்கு இவர்கள் வாழ்ந்த காலத்தில் இத்தகைய ஆற்றல் இவர்களுக்கு இருந்தது என்று குருட்டுத்தனமாக நம்பினாலும் இன்றைக்கு இறந்துவிட்ட இவர்களை உயிருடன் இருக்கும் நாம் எங்கிருந்தாலும் எப்படி அழைத்தாலும் எங்கிருந்து அழைத்தாலும் நமது அழைப்பை ஏற்று உதவி செய்வார்கள் என்று நம்புவதற்கு என்ன ஆதாரம் உள்ளது?

மறுமையில் அல்லாஹ்வின் அனுமதியுடன் நல்லவர்கள் பரிந்துரை செய்ய முடியும். ஆனால் பரிந்துரை செய்பவர்கள் யார்? அவர்கள் யாருக்கு பரிந்துரை செய்வார்கள் என்பவை அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது. இதை யாரும் அறிய முடியாது.

ஆனால் மக்கத்து காஃபிர்கள் தாங்களாக சிலரை, இவர்கள் நமக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள் என்று நம்பி அவர்களிடம் பிரார்த்தனை செய்தார்கள். இத்தகையவர்களைத் தான் அல்லாஹ் முஷ்ரிக்குகள் என்று குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

மக்கத்து காஃபிர்களின் இந்தச் செயலுக்கும் இந்தப் பரேலேவிகளின் செயலுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? அல்லாஹ்வுடைய அதிகாரங்களில் அவன் கூறாமல் இவர்களாக இந்த அவ்லியாவுக்கு (?) அனைத்து ஆற்றலும் உள்ளது என்று நம்பி மக்கத்து இணைவைப்பாளர்களைப் போல் உதவி தேடுகிறார்கள்.

பரேலேவிகளே! உங்களின் கற்பனையும் மனோ இச்சையும் கட்டுக்கதைகளும் தான் மார்க்க ஆதாரமா? நீங்கள் யாருடன் மோதுகிறீர்கள்? யாரது அதிகாரத்தில் கை வைக்கின்றீர்கள்? அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்வதால் உங்களுக்கு என்ன கேடு வரப்போகின்றது? என்பதை சிந்தியுங்கள்.

அல்லாஹ்வின் ஆற்றலை உணர்த்தக்கூடிய இது போன்ற நிகழ்வுகளைக் கூட அவ்லியாக்களின் (?) பொய்யான ஆற்றலை நிறுவுவதற்கு முடிச்சுபோடுகிறார்கள் என்றால் இவர்களுக்கு அல்லாஹ்வின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. மாறாக இவர்களுக்கு அவ்லியா பைத்தியம் பிடித்துவிட்டது என்பது தான் உண்மை.

இந்த பரேலேவிகள் இறந்துவிட்ட அவ்லியாக்கள் (?) உயிருடன் இருக்கும் நமக்கு உதவி செய்வார்கள் என்பதற்கு இது போன்ற சொத்தை வாதங்களைத் தவிர்த்து எந்த ஆதாரத்தையும் காட்ட முடியாது. இவர்கள் சம்பந்தமில்லாத இதுபோன்ற வசனங்களைத் தங்களின் வழிகெட்ட கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுவதிலிருந்து இவர்களின் கொள்கை வழிகேட்டின் உச்சியில் உள்ளது என்பதையே இவர்கள் வெளிக்காட்டுகிறார்கள்.

மரணித்தவர்களிடம் பிரார்த்தனை செய்யலாம் என்று கூறும் கப்ரு வணங்கிகள் தங்களின் இணைவைப்புச் செயலை நியாயப்படுத்துவதற்காக மார்க்கத்தில் ஆதாரம் இருப்பதாக இட்டுக்கட்டுகின்றனர். இவர்கள் குர்ஆன் வசனங்களில் செய்த தில்லுமுல்லு வேலைகளைக் கடந்த இதழில் அறிந்துகொண்டோம். ஹதீஸ்கள் என்ற பெயரில் இவர்கள் சில பொய்யான செய்திகளை ஆதாரமாகக் கூறி வருகின்றனர்.

கப்ரு வணக்கத்தை நியாயப்படுத்துவதற்கு ஒரேயொரு ஆதாரப்பூர்வமான செய்தி கூட கிடையாது. எனவே தான் கப்ரு வணங்கிகள் பிரபலமான ஹதீஸ் நூற்களான புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அஹ்மது போன்ற ஹதீஸ் நூற்களை விட்டுவிட்டு வேறு நூற்களில் யாருக்கும் தெரியாத பலவீனமான செய்தியைத் தேடிப்பிடித்து தங்களின் தவறான கொள்கையை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு இவர்கள் கூறும் ஒரு ஹதீஸைப் பற்றியும் அதன் நிலையைப் பற்றியும் இந்த இதழில் அறிந்துகொள்வோம். இறந்தவர்களிடம் உதவி தேடலாம் என்பதற்குப் பின்வரும் செய்தியை இவர்கள் ஆதாரமாகக் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஏதாவது ஒன்றைத் தவறவிட்டால் அல்லது நீங்கள் மனித இனம் இல்லாத பகுதியில் இருக்கும் போது உதவி தேவைப்பட்டால் அப்போது, “அல்லாஹ்வின் அடியார்களே! என்னைக் காப்பாற்றுங்கள். அல்லாஹ்வின் அடியார்களே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கூறுங்கள். ஏனென்றால் நம் கண்களுக்குப் புலப்படாத அல்லாஹ்வின் அடியார்கள் இருக்கின்றார்கள். இது அனுபவத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

நூல்: தப்ரானீ 14146

இந்தத் செய்தி எவ்வாறு பலவீனமானது என்ற விபரத்தை அறிந்து கொள்வதற்கு முன்னால் இவர்களின் கொள்கைக்கும், இந்தச் செய்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் அறிந்துகொள்வோம்.

இறந்தவர்களிடத்தில் உதவி தேடலாம் என்பதற்கு கப்ரு வணங்கிகள் இந்தச் செய்தியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இந்தச் செய்தியில் இறந்த மனிதர்களை அழைத்துப் பிரார்த்தனை செய்யலாம் என்று சொல்லப்படவில்லை.

மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாத அல்லாஹ்வின் அடியார்கள் பூமியில் இருக்கின்றார்கள் என்று இந்த செய்தி கூறுகின்றது. மனிதர்கள் இறந்துவிட்டால் இந்தப் பூமியை விட்டுப் பிரிந்து மறைவான கப்ரு வாழ்க்கைக்குச் சென்றுவிடுகின்றனர். கப்ரில் விசாரணை செய்யப்பட்டு நல்லவராக இருந்தால் கியாமத் நாள் வரும் வரை கப்ரில் உறங்கிக்கொண்டே இருப்பார்கள். இறந்தவர் தீயவராக இருந்தால் கியாமத் நாள் வரும் வரை வேதனை செய்யப்பட்டுக்கொண்டே இருப்பார். எனவே இறந்துவிட்ட மனிதர்களுக்கும் இந்தப் பூமி வாழ்வுக்கும் எள்ளளவு கூட சம்பந்தம் கிடையாது.

இந்தச் செய்தி மனிதர்கள் அல்லாத அல்லாஹ்வின் வேறொரு படைப்பைப் பற்றிப் பேசுகின்றது. அந்தப் படைப்பு வானவர்கள் தான் என்று இது தொடர்பாக வரும் வேறொரு பலவீனமான அறிவிப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

மரத்தின் இலைகள் கீழே விழுந்தாலும் அதைப் பதிவு செய்யும் வானவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அல்லாத இன்னும் சில வானவர்களும் அல்லாஹ்விற்காக உள்ளனர். எனவே பயணத்தில் உங்களில் ஒருவருக்கு திடுக்கம் ஏற்பட்டால், “அல்லாஹ்வின் அடியார்களே! உதவி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்” என்று அழைக்கட்டும்.

நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

மனிதர்களுக்கு உதவி செய்வதற்காக அல்லாஹ் சில வானவர்களை பூமியில் ஏற்படுத்தியுள்ளான். எந்த மனிதரும் இல்லாத இடத்தில் உதவி தேவைப்பட்டால் அந்த வானவர்களை அழைக்கலாம் என்று தான் இந்தச் செய்தி கூறுகின்றது.

கப்ரு வணங்கிகள் யாரும் இந்தச் செய்தியில் கூறப்பட்டது போல் மனிதர்கள் யாரும் இல்லாத இடத்தில் ஆபத்து ஏற்படும் போது வானவர்களை அழைப்பதில்லை. மாறாக இறந்துவிட்டவர்களை அழைத்து வருகின்றனர். இவர்களின் கொள்கைக்கும், செயலுக்கும் சற்றும் சம்பந்தமில்லாத செய்திகளைக் கொண்டு வந்து தங்களின் வழிகெட்ட கொள்கையை நியாயப்படுத்த முயற்சிப்பதைத் தவிர வேறு எந்த ஆதாரத்தையும் இவர்களால் காட்ட இயலாது.

யாரும் இல்லாத நேரத்தில் தேவை ஏற்படும் போது வானவர்களை உதவிக்கு அழைக்கலாம் என்ற கருத்தும் தவறானதாகும். படைத்த இறைவன் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். அல்லாஹ்வை அழைத்து உதவி தேடவேண்டுவது போல் வானவர்களை அழைத்து உதவி தேடினால் அதுவும் இணை கற்பித்தலாகும். இணை கற்பித்தலுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் இதற்கு எதிராகவும் பொருந்தும். மனிதர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் வானவர்களை நியமித்து இருந்தாலும் நாம் அந்த உதவியை அல்லாஹ்விடம் தான் கோரிப்பெற வேண்டும்.

மேலும் இந்தக் கருத்தைக் கூறும் மேற்கண்ட செய்திகள் பலவீனமாக உள்ளன. அவை எவ்வாறு பலவீனமானது என்பதை அறிந்துகொள்வோம்.

பலவீனமான அறிவிப்பு – 1

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஏதாவது ஒன்றைத் தவறவிட்டால் அல்லது நீங்கள் மனித இனம் இல்லாத பகுதியில் இருக்கும் போது உதவி தேவைப்பட்டால் அப்போது “அல்லாஹ்வின் அடியார்களே! என்னைக் காப்பாற்றுங்கள். அல்லாஹ்வின் அடியார்களே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கூறுங்கள். ஏனென்றால் நம் கண்களுக்குப் புலப்படாத அல்லாஹ்வின் அடியார்கள் இருக்கின்றார்கள். இது அனுபவத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

நூல்: தப்ரானீ (14146)

தப்ரானியில் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பில் ஒரு அறிவிப்பாளரின் பெயர் தவறாக மாற்றிக் கூறப்பட்டுள்ளது. இதில் அப்துர் ரஹ்மான் பின் ஷரீக் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரை நூலாசிரியர் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் என்று தவறாகக் கூறியுள்ளார்.

அப்துர் ரஹ்மான் பின் ஷரீக் பலவீனமானவர் ஆவார். இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று அபூ ஹாதிம் கூறியுள்ளார். இவர் நேர்மையானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.

அப்துர் ரஹ்மான் இந்தச் செய்தியை தன்னுடைய தந்தை ஷரீக் பின் அப்தில்லாஹ் வழியாக அறிவிக்கின்றார். ஷரீக் பின் அப்தில்லாஹ்வும் நினைவாற்றல் குறைபாட்டின் காரணமாக பலவீனமானவர் ஆவார்.

இவர் நேர்மையானவர் என்றாலும் மிகவும் மோசமான நினைவாற்றல் உள்ளவர் என யஃகூப் பின் ஷைபா கூறியுள்ளார். ஹதீஸ்களை தவறாக மாற்றி அறிவிப்பவர் என இப்ராஹீம் பின் யஃகூப் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறிழைப்பவர் என அபூசுர்ஆ கூறியுள்ளார். மற்றும் பலரும் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். (தஹ்தீபுல் கமால்)

மேலும் இவர் தத்லீஸ் என்ற அறிவிப்பாளரை விட்டு அறிவிக்கும் வேலையை செய்யக்கூடியவர் என்று யஹ்யா பின் கத்தான் கூறியுள்ளார். இவர் மேற்கண்ட செய்தியை யாரிடமிருந்து அறிவிக்கின்றாரோ அவரிடமிருந்து நேரடியாகக் கேட்டதாக இவர் சொல்லவில்லை. இதன் காரணத்தாலும் இந்தச் செய்தி பலவீனமாகின்றது.

இத்துடன் இந்த அறிவிப்பாளர் தொடரில் முறிவும் உள்ளது. இந்தச் செய்தியை உத்பா பின் கஸ்வான் என்ற நபித்தோழரிடமிருந்து ஸைத் பின் அலீ என்பவர் அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்விருவருக்கும் இடையில் நீண்ட கால இடைவெளி உள்ளது.

நபித்தோழர் உத்பா பின் கஸ்வான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 17 வது வருடத்தில் மரணிக்கின்றார். ஆனால் ஸைத் பின் அலீ ஹிஜ்ரீ 80 வது வருடத்தில் தான் பிறக்கின்றார். உத்பா பின் கஸ்வான் (ரலி) அவர்கள் மரணித்து 63 வருடங்களுக்குப் பிறகே ஸைத் பின் அலீ பிறக்கின்றார். எனவே இவ்விருவருக்கும் இடையில் பலர் விடுபட்டுள்ளனர். இது மோசமான அறிவிப்பாளர் தொடர் முறிவாகும். இதன் காரணத்தாலும் இந்தச் செய்தி பலவீனமாக உள்ளது.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தக்ரீஜுல் அத்கார் என்ற நூலில் இதன் அறிவிப்பாளர் தொடரில் முறிவுள்ளது என்று கூறியுள்ளார். இமாம் ஹைஸமீ அவர்கள் மஜ்மவுஸ் ஸவாயித் என்ற நூலில் ஸைத் பின் அலீ என்பார் உத்பா பின் கஸ்வான் (ரலி) அவர்களை அடையவில்லை என்றும் இதன் அறிவிப்பாளர்களில் சிலர் பலவீனமானவர்கள் என்றும் கூறியுள்ளார். அல்பானீ அவர்களும் மேற்கண்ட காரணங்களால் இந்தச் செய்தி பலவீனமானது என்று கூறியுள்ளார்.

மொத்தத்தில் இந்தச் செய்தி நான்கு காரணங்களால் பலவீனமாக உள்ளது.

1. அப்துர் ரஹ்மான் பின் ஷரீக் பலவீனமானவர்.

2. ஷரீக் பின் அப்தில்லாஹ் பலவீனமானவர்

3. ஷரீக் பின் அப்தில்லாஹ் தத்லீஸ் செய்யக்கூடியவர்.

4. அறிவிப்பாளர் தொடர் முறிவு

இப்படிப்பட்ட மிகவும் பலவீனமான செய்தியைத் தான் கப்ரு வணங்கிகள் தங்களின் வழிகெட்டக் கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். மக்களின் அறியாமையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளையாடுகின்றனர்.

பலவீனமான அறிவிப்பு – 2

இதே கருத்தில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவித்தாக இன்னொரு அறிவிப்பும் உள்ளது. இதுவும் பலவீனமானதாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பாலைவனப் பகுதியில் இருக்கும் போது அவருடைய வாகனம் தப்பிவிட்டால் அவர், “அல்லாஹ்வின் அடியார்களே! என்னிடத்தில் (வாகனத்தை) அனுப்புங்கள். அல்லாஹ்வின் அடியார்களே! என்னிடத்தில் (வாகனத்தை) அனுப்புங்கள்” என்று கூறட்டும். ஏனென்றால் பூமியில் அல்லாஹ்விற்காக சிலர் இருக்கின்றனர். அவர்கள் அதை உங்களிடத்தில் திருப்பி அனுப்புவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: தப்ரானி

இந்தச் செய்தியில் மஃரூப் பின் ஹஸ்ஸான் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரை நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இவர் யார் என அறியப்படாதவர் என அபூஹாதிம் கூறியுள்ளார். இவர் ஹதீஸ்களை தவறுதலாக அறிவிப்பவர் என இப்னு அதீ கூறியுள்ளார். (நூல்: லிஸானுல் மீஸான்)

இந்தச் செய்தியில் இன்னொரு குறையும் உள்ளது. இந்தச் செய்தியை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் புரைதா என்பவர் அறிவிக்கின்றார். இவ்விருவருக்கிடையே அறிவிப்பாளர் தொடரில் முறிவு இருப்பதாக இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 32ல் மரணிக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் புரைதா ஹிஜ்ரீ 105ல் மரணிக்கின்றார். இருவரின் மரணத்திற்கும் இடையில் 73 வருடங்கள் உள்ளது. எனவே அப்துல்லாஹ் பின் புரைதா அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என்பதால் இதன் தொடர் முறிவுள்ளதாகின்றது. இதன் காரணத்தாலும் இந்தச் செய்தி பலவீனமாக உள்ளது.

பலவீனமான அறிவிப்பு – 3

இந்தச் செய்திக்கு இன்னொரு பலவீனமான அறிவிப்பும் உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரும் இல்லாத பூமியில் வெட்ட வெளியில் உங்களில் ஒருவருடைய வாகனம் அல்லது ஒட்டகம் தப்பி ஓடிவிட்டால் அவர், “அல்லாஹ்வின் அடியார்களே! எனக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறட்டும். அவருக்கு உதவி செய்யப்படும்.

நூல்: முஸன்னஃப் இப்னி அபீ ஷைபா

இந்தச் செய்தியில் இரண்டு பலவீனங்கள் உள்ளன. முதலாவது பலவீனம் என்னவென்றால் இதில் இடம்பெறும் முஹம்மது பின் இஸ்ஹாக் நம்பகமானவர் என்றாலும் தத்லீஸ் என்ற அறிவிப்பாளரை விட்டு அறிவிக்கும் இருட்டடிப்பு வேலையைச் செய்யக்கூடியவர். இவரைப் போன்றவர்கள் தான் நேரடியாகக் கேட்டதை தெளிவுபடுத்தும் வாசகத்தை கூறினாலே இவரின் அறிவிப்பு ஏற்கப்படும். ஆனால் மேலுள்ள அறிவிப்பில் இவர் அப்பான் பின் ஸாலிஹிடம் தான் நேரடியாகக் கேட்டதாக கூறவில்லை. எனவே இது பலவீனமான அறிவிப்பாகும்.

இரண்டாவது பலவீனம் என்னவென்றால் இந்தச் செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அப்பான் பின் ஸாலிஹ் என்பவர் தான் அறிவிக்கின்றார். இவர் நபித்தோழர் அல்ல. இவர் ஹிஜ்ரீ 100க்குப் பிறகு மரணிக்கின்றார். இவர் எந்த நபித்தோழரையும் சந்திக்கவில்லை. எனவே இதன் அறிவிப்பாளர் தொடரில் பலர் விடுபட்டிருக்கிறார்கள். விடுபட்டவர்கள் யார்? என்ற விபரம் தெரியாத காரணத்தால் இது பலவீனமாக உள்ளது.

பலவீனமான அறிவிப்பு – 4

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

மரத்தின் இழைகள் கீழே விழுந்தாலும் அதைப் பதிவு செய்யும் வானவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அல்லாத இன்னும் சில வானவர்களும் அல்லாஹ்விற்காக உள்ளனர். எனவே பயனத்தில் உங்களில் ஒருவருக்கு திடுக்கம் ஏற்பட்டால், “அல்லாஹ்வின் அடியார்களே! உதவி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்” என்று அழைக்கட்டும்.

நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

இந்த அறிவிப்பில் உசாமா பின் ஸைத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மது பின் ஹம்பள், யஹ்யா பின் மயீன், அபூ ஹாதிம், நஸாயீ, இப்னு சஅத், இப்னு ஹிப்பான், அபூ தாவுத், இப்னு ஹஜர், தஹபீ ஆகியோர் கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்)

இவர் இந்தச் செய்தியை அறிவிக்கையில் பலருக்கு இதை நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். அபூகாலித் என்பவருக்கு மட்டும் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். இவர் இந்தச் செய்தியை சரியான அடிப்படையில் அறிவிக்காமல் குழம்பியுள்ளார் என்பதை அறிய முடிகின்றது.

இத்துடன் இவரை விட வலிமையானவரான முஹம்மது பின் இஸ்ஹாக்கின் அறிவிப்புக்கு மாற்றமாகவும் இவருடைய அறிவிப்பு உள்ளது.

முஹம்மது பின் இஸ்ஹாக் அவர்கள் அப்பான் பின் ஸாலிஹிடமிருந்து அறிவிக்கையில் முழு அறிவிப்பாளர் தொடரையும் கூறாமல் முர்சலாகவே அறிவித்தார். அதாவது நபித்தோழரை குறிப்பிடாமல் அறிவித்துள்ளார். மூன்றாவது பலவீனமான அறிவிப்பாக மேலே நாம் இதைச் சுட்டிக்காட்டியுள்ளோம்.

ஆனால் உசாமா பின் ஸைத் அவர்கள் அப்பான் பின் சாலிஹிடமிருந்து அறிவிக்கையில் முர்சலாக அறிவிக்காமல் முழு அறிவிப்பாளர் தொடரையும் குறிப்பிட்டுள்ளார். இவர் பலவீனமானவர் என்பதால் இந்த முரண்பாட்டின் மூலம் இவர் இந்தச் செய்தியை சரியான அடிப்படையில் அறிவிக்கவில்லை என்பது உறுதியாகின்றது.

இப்படிப்பட்ட பலவீனமான செய்தியை அடிப்படையாக வைத்து அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டிய உதவியை வானவர்களிடமோ, இந்த உலகத்தை விட்டும் உலகத்தின் அனைத்துத் தொடர்புகளை விட்டும் முழுவதுமாகப் பிரிந்துவிட்ட இறந்தவர்களிடமோ கேட்க முடியாது.

மனிதர்கள் யாரும் இல்லாத இடத்தில் நமக்கு ஆபத்து ஏற்பட்டால் பிடரி நரம்பை விட நமக்கு மிக அருகில் இருக்கும் சர்வ வல்லமையும் கொண்ட அல்லாஹ்வை மட்டுமே நாம் அழைக்க வேண்டும். அவனிடம் மட்டுமே உதவிதேட வேண்டும்.