Tamil Bayan Points

இணைவைத்து விட்டால் பரிகாரம் என்ன?

கேள்வி-பதில்: நம்பிக்கை தொடர்பானவை

Last Updated on October 14, 2016 by Trichy Farook

இணைவைத்து விட்டால் பரிகாரம் என்ன?

கலிமா சொன்ன ஒரு முஸ்லிம் இணைவைத்துவிட்டால் அதற்கு பரிகாரம் செய்து மீண்டும் இஸ்லாத்தில் நுழைய முடியுமா?

பதில்

இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் இணைவைத்து விட்டால் அவர் இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியேறி விடுகின்றார். இவர் மீண்டும் இஸ்லாத்தில் இணையவேண்டுமானால் முதலில் இவர் செய்து கொண்டிருந்த இணைவைப்புக் காரியத்திலிருந்து முழுவதுமாக விடுபடவேண்டும். இந்த பாவத்துக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு லாயிலாஹ இல்லல்லாஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்கு தகுதியானவர் இல்லை) என்று கூற வேண்டும்.

இணைவைத்தவர் லாயிலாஹ இல்லல்லாஹு என்று கூறி இஸ்லாத்தில் நுழைய வேண்டும் என்பதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும். வேறு யார்மீதாவது எதன் மீதாவது சத்தியம் செய்தால் அது இணைவைத்தலில் சேரும். நபிகள் நாயகம் ஸல் அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்கள் லாத் உஸ்ஸா ஆகிய சிலைகளை வணங்கிவந்தனர். அந்தச் சிலைகள் மீதே சத்தியம் செய்து வந்தனர். இஸ்லாத்தை ஏற்ற பின்பும் பழைய வழக்கப்படி இது போல் வாய் தவறி சொல்லி விடுவார்கள். இது குறித்து நபிகள் நாயகம் ஸல் அவர்கள் விளக்கும் போது

4860حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَلَفَ فَقَالَ فِي حَلِفِهِ وَاللَّاتِ وَالْعُزَّى فَلْيَقُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَمَنْ قَالَ لِصَاحِبِهِ تَعَالَ أُقَامِرْكَ فَلْيَتَصَدَّقْ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் சத்தியம் செய்யும் போது “லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக!’ என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) “லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்!

இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல் : புகாரி (4860)