Tamil Bayan Points

இணை வைப்பின் வாசலை அடைத்த இஸ்லாம்

பயான் குறிப்புகள்: கொள்கை உறுதி

Last Updated on October 2, 2023 by

இணை வைப்பின் வாசலை அடைத்த இஸ்லாம்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

இறைவனால் மன்னிப்பு வழங்கப்படாத குற்றம் உலகில் உண்டென்றால் அது இணைவைப்பாகும். அல்லாஹ்வுடைய இடத்தில் வேறு யாரைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் அதை அல்லாஹ் அறவே வெறுக்கின்றான். மனிதர்கள் இறைவனுக்குச் சமமாக யாரையும் கருதுவதை அல்லாஹ் விரும்பவில்லை. மாறாகக் கடும் கோபம் கொள்கின்றான்.

ஆகையால் தான் இணை வைப்பிலேயே மரணித்தவர்களுக்கு இறைவன் நிரந்தர நரகைப் பரிசாக அளிக்கின்றான். இப்போது ஓர் புதிய நினைவலையாக இணைவைப்பிற்கான காரணிகளை இஸ்லாம் எப்படி தடை செய்கின்றது என்பதை இந்த உரையின் மூலம் அறிந்துக் கொள்வோம். 

எந்தெந்த வாசல் வழியாக வெல்லாம் இணைவைப்பு எனும் நச்சுக்கிருமி நுழைய முயலுமோ அத்தகைய வாசல்கள் யாவற்றையும் நச்சென இஸ்லாம் மூடி வைத்துள்ளது. எந்த வகையிலும் இணைவைப்பு மக்களிடம் நுழைந்து விடாமலிருக்க இஸ்லாம் பல பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது.

இணைவைப்பின் பக்கம் கொண்டு செல்லும் செயல் எதுவாக இருந்தாலும் அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற அடிப்படையில் இஸ்லாம் இணைவைப்பின் காரணிகளைத் தடை செய்துள்ளது. இஸ்லாம் தடை செய்திருக்கிற சில விஷயங்களை நுணுக்கமாக அணுகும் போது அதன் வழியாக இணைவைப்பு நுழைய வாய்ப்புண்டு என்பதாலேயே அவை தடுக்கப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.

எல்லையற்ற புகழ்மாலை

யாரையும் வரம்பு மீறிப் புகழக் கூடாது என்று இஸ்லாம் கட்டளை பிறப்பித்துள்ளது. இறைத்தூதர்களாகவே இருந்தாலும் வரம்புமீறிப் புகழ்வது பாவம் என்று மார்க்கம் எச்சரித்துள்ளது.

لاَ تُطْرُونِي، كَمَا أَطْرَتْ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا عَبْدُ اللَّهِ، وَرَسُولُهُ

“நபி (ஸல்) அவர்கள், “கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) “அல்லாஹ்வின் அடியார்‘ என்றும் “அல்லாஹ்வின் தூதர்‘ என்றும் சொல்லுங்கள்‘ என்று கூறினார்கள்” என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி-3445 

இறைத்தூதர்களை வரம்பு மீறிப் புகழக் கூடாது என்ற தடையின் பின்னணியில் என்ன உள்ளது என்று பார்த்தால், அது இணைவைப்பிற்கு அழைத்துச் சென்று விடும் என்கிற அபாயம் தான் காரணம் என்பதைப் புரியலாம். முதலில் சாதாரணமாகப் புகழ ஆரம்பிப்பவர், பிறகு படிப்படியாக புகழ் சூட்டுவதை அதிகரிப்பார். முடிவில் இறைவனின் அந்தஸ்தை மனிதருக்கு வழங்கி புகழ ஆரம்பித்து விடுவார். நபிகள் நாயகம் காலத்திலேயே இது போன்று நடந்துள்ளது என்பதை வரலாற்றில் காண்கிறோம்.

لاَ تَقُولِي هَكَذَا وَقُولِي مَا كُنْتِ تَقُولِينَ

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் -ரஹ்- அவர்களிடம்) “எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்” (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், “இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-4001 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மறைவானவற்றை அறிபவர் என்று சிறுமி புகழும் போது நபிகள் நாயகம் அதைக் கண்டித்து இவ்வாறு இனி கூறாதே என்று எச்சரிக்கின்றார்கள். வரம்பு மீறிப் புகழ ஆரம்பிக்கும் போது இப்படித்தான் இறைவனின் அந்தஸ்துகள் வழங்கப்பட்டு புகழ்பாடும் சூழல் ஏற்பட்டு விடும்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் காலத்தில் கிரகணம் ஏற்பட்ட போது நபியின் மகனது இறப்பிற்காகத் தான் கிரகணம் ஏற்பட்டுள்ளது என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். தனது மகனின் இறப்பிற்காக கிரகணம் ஏற்படுகின்றது என்று மக்கள் பேசிக் கொள்ளும் போது இந்தப் புகழ் தனக்குச் சேர்வதையும் நபிகள் நாயகம் கண்டித்தார்கள். தான் பெரும் சோகத்தில் இருந்த போதிலும் மக்களின் இந்தப் பேச்சு, புகழ்மாலை இணைவைப்பிற்கு அழைத்துச் சென்று விடும் என்பதை மக்களுக்கு உணர்த்த நபிகள் நாயகம் தவறவில்லை.

كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ، فَقَالَ النَّاسُ: كَسَفَتِ الشَّمْسُ لِمَوْتِ إِبْرَاهِيمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّمْسَ وَالقَمَرَ لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ فَصَلُّوا، وَادْعُوا اللَّهَ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அன்றைய தினத்தில் (நபி (ஸல்) அவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) இறந்தார். இதையொட்டி மக்கள் “இப்ராஹீமின் இறப்புக்காகத்தான் கிரகணம் ஏற்பட்டது” என்று பேசிக்கொண்டனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும், எவரது பிறப்புக் காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால் (பிரகாசம் வரும்வரை) அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; தொழுங்கள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஃகீரா (ரலி),
நூல்: புகாரி-1043 

இறைத்தூதர்களையே இவ்வாறு புகழக் கூடாது என்றால் மற்றவர்களைக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. இன்றைக்கு இறைவனுக்கு இணை கற்பிக்கும் பாவங்கள் பெரும்பாலும் எல்லை மீறிப் புகழ்வதினாலேயே ஏற்படுகின்றன.

மவ்லித், மீலாது என்ற பெயரில் படிக்கப்படும் பாடல்கள் அத்தனையும் நபிகள் நாயகத்தையும், மற்ற சாதாரண மனிதர்களையும் இறைவனுக்குச் சமமாக்கும் இணைவைப்பைத் தாங்கியே நிற்கின்றன.

எல்லை மீறிப் புகழ்வதே இத்தகைய இணைவைப்பிற்கு அழைத்து வந்தது என்பதை ஏனோ மக்கள் உணர்வதில்லை. இதனாலே இணைவைப்பின் வாசலான எல்லை மீறிப்புகழ்வதை இஸ்லாமிய மார்க்கம் தடுக்கின்றது.

எல்லை மீறிய மரியாதை

பெரியோர்களை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை மரியாதை என்பது குறிப்பிட்ட வரம்புக்குள் நிற்க வேண்டும். வரம்பைத் தாண்டியதாய் அமைந்து விடக்கூடாது. மரியாதை என்பது அதன் வரம்பைத் தாண்டும் கட்டமானது நம்மை இணைவைப்பை நோக்கி இழுத்துச் செல்லும் அபாயகரமான கட்டம் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

எல்லை மீறிய மரியாதை என்பது இணைவைப்பின் ஓர் வாசலாக இருப்பதால் தான் மார்க்கம் இந்த வாசலையும் அடைத்து வைக்கின்றது. மரியாதை என்ற பெயரில் அளவு கடந்து போகக் கூடாது என்றும், அதுவும் இணைவைப்பின் பக்கம் நம்மை அறியாமல் கடத்தி விடும் என்றும் மார்க்கம் போதிக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மக்கள் மரியாதை தர விரும்பி எழுந்து நிற்பார்கள். அதை நபிகள் நாயகம் வேண்டாமென தடுத்து விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவர்களுக்குப் பின்னால் நாங்கள் (நின்றவாறே) தொழுதோம். அவர்கள் அமர்ந்தவாறே எங்களுக்குத் தொழுவித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தக்பீர் கூற, அதை அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குக் கேட்கும் விதமாக  (உரத்த குரலில்) கூறிக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைத் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது நாங்கள் நின்றவாறு தொழுது கொண்டிருந்தோம். உடனே எங்களையும் உட்கார்ந்து தொழுமாறு சைகை செய்தார்கள்.

உடனே நாங்கள் உட்கார்ந்தவாறே அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். அவர்கள் சலாம் கொடுத்(து தொழுகையை முடித்த)ததும், “நீங்கள் சிறிது நேரத்திற்கு முன் பாரசீகர்கள் மற்றும் ரோமர்களைப் போன்று நடந்து கொள்ளப் பார்த்தீர்கள். அவர்கள் தாம் தங்கள் மன்னர்கள் அமர்ந்திருக்கும் போது நின்றுகொண்டு இருப்பார்கள். நீங்கள் அவ்வாறு செய்யாதீர்கள்.

ائْتَمُّوا بِأَئِمَّتِكُمْ إِنْ صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا وَإِنْ صَلَّى قَاعِدًا فَصَلُّوا قُعُودًا

உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பவர்களை நீங்கள் பின்பற்றுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்தே தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
நூல்: முஸ்லிம்-701 

நபிகள் நாயகம் இதைத் தடுக்கக் காரணம் இன்று எழுந்து நிற்பதில் ஆரம்பிப்பார்கள், பிறகு இன்னும் கொஞ்சம் மரியாதையை அதிகப்படுத்த சற்று குனிவார்கள், பிறகு தரையில் தலை படுமளவு குனியவும், அடுத்து குப்புறப்படுத்து காலில் விழவும் ஆரம்பித்து விடுவார்கள்.

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقْبِلُ وَمَا عَلَى الْأَرْضِ شَخْصٌ أَحَبَّ إِلَيْنَا مِنْهُ، فَمَا نَقُومُ لَهُ لِمَا نَعْلَمُ مِنْ كَرَاهِيَتِهِ لِذَلِكَ

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. எனறாலும், அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: அஹ்மத்-12526 (12068)

எழுந்து நிற்பதைத் தடுத்த போதிலும் மக்கள் நபியின் காலில் விழ எத்தனித்தார்கள். அதற்காக நபியிடமே அனுமதி கோரினார்கள். நபிகள் நாயகத்திற்கு மரியாதை செய்யும் விதமாகக் காலில் விழலாமா என்று மக்கள் கேட்டபோது வன்மையாக அதைக் கண்டித்தார்கள்.

لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ المَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا

ஒருவர் இன்னொருவருக்கு ஸஜ்தா (காலில் விழுவது) செய்யும்படி கட்டளையிடுவதாக இருந்தால் கணவனுக்கு மனைவி ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: திர்மிதீ-1159 (1079)

தனக்கு எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் தடை விதித்ததிலிருந்து யாரும் யாருக் காகவும் எழுந்து நின்று மரியாதை செய்தல் இஸ்லாத்தில் கூடாது என்பதை அறியலாம். மக்கள் தனக்கு எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்று விரும்புவர் நரகை அஞ்சிக் கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் எச்சரித்துள்ளார்கள்.

مَنْ أَحَبَّ أَنْ يَمْثُلَ لَهُ الرِّجَالُ قِيَامًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ

“தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ, அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதை நான் செவியேற்றுள்ளேன் என்று முஆவியா (ரலி) சொன்னார்கள்.

நூல்: அபூதாவூத்-5229 (4552)

தனக்காக எழுந்து நிற்கவேண்டும் என்று முதலில் விரும்புவார். பிறகு தன் காலில் மக்கள் விழ வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார். அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர்.

நபியவர்களின் கண்டிப்பும், மக்களின் நடைமுறையும் இது இணைவைப்பின் வாசலே என்பதைச் சந்தேகமற உணர்த்திவிடுகின்றது. அதனாலேயே மார்க்கம் இதைத் தடுத்து, அணைபோட்டு வைத்துள்ளது.

நல்லோர்களின் உருவப்படம்

நல்லடியார்களின் உருவப் படங்களை வரைதலையும், அவர்களுக்குச் சிலை வடிப்பதையும் இஸ்லாம் அறவே தடை செய்கின்றது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை மனிதர்களிலேயே மிக மோசமானவர்கள் என்று மார்க்கம் வர்ணிக்கின்றது.

أَنَّ أُمَّ سَلَمَةَ، ذَكَرَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَنِيسَةً رَأَتْهَا بِأَرْضِ الحَبَشَةِ يُقَالُ لَهَا مَارِيَةُ، فَذَكَرَتْ لَهُ مَا رَأَتْ فِيهَا مِنَ الصُّوَرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُولَئِكَ قَوْمٌ إِذَا مَاتَ فِيهِمُ العَبْدُ الصَّالِحُ، أَوِ الرَّجُلُ الصَّالِحُ، بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، أُولَئِكَ شِرَارُ الخَلْقِ عِنْدَ اللَّهِ

அபிசீனிய நாட்டில் தாம் கண்ட “மரியா‘ என்றழைக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உம்மு சலமா அவர்கள் கூறினார்கள். அதில் தாம் கண்ட உருவப்படங்களைக் குறித்தும் உம்மு சலமா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் எத்தகைய மக்கள் எனில், அவர்களிடையே “நல்ல அடியார்‘ அல்லது “நல்ல மனிதர்‘ ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி விடுவார்கள்; அதில் அந்த உருவங்களை வரைந்தும் விடுவார்கள். இத்தகையோர்தாம் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிகவும் மோசமானவர்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி-434 

நல்லடியார்களின் பெயரில் உருவப் படங்களை வரைவதும், சிலை வடிப்பதும் கண்டிப்பாக இணை வைப்பிற்கே அழைத்துச் செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அது எப்படி?

நல்லடியாரின் உருவப்படத்தை வீட்டிலோ சமாதியிலோ அமைத்திருப்பார்கள். முதல் தலைமுறை அவரை நல்லடியார் என்று கூறும். அடுத்த தலைமுறை அவரை மகான், அவ்லியா என்று வார்த்தைகளை மாற்றிக் கூறும். அப்படியே நான்காம் ஐந்தாம் தலைமுறை அவரைக் கடவுளாகவோ கடவுளின் குமாரராகவோ ஆக்கி விடும்.

நவீன உலகில் கடவுள்களின் எண்ணிக்கை  கணக்கிலடங்காமல் பெருகியிருக்க இது போன்ற உருவ வழிபாடு ஓர் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. கருப்பசாமி, முனியாண்டி, சுடலையப்பன், மாரியம்மன் இவர்கள் எல்லாம் எப்படிக் கடவுள்களாக ஆக்கப்பட்டார்கள்? இவர்கள் எல்லாம் அந்தந்த ஊரின் நல்ல மனிதர்களாக இருந்திருக்கலாம்.

நல்ல மனிதராயிற்றே என்று முதல் தலைமுறை அவர்களுக்குச் சிலை வடித்திருப்பார்கள். காலம் செல்லச் செல்ல அடுத்தடுத்த தலைமுறைகளால் அவர்கள் கடவுளர்களாக ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆக நல்ல மனிதர் என்று சொல்லி அவரின் உருவத்தை வரைதல், கற்சிலை வடித்தல் போன்றவை இணைவைப்பிற்கு அழைத்துச் செல்லும் அபாயகரமான காரணியாக இருக்கின்றது. அதனாலேயே இது மார்க்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

நபிமார்களாக இருந்தாலும் அவர்களுடைய உருவச்சிலையை வடித்தலோ, வரைதலோ கூடாது என்று உறுதிபட மார்க்கம் தெரிவித்து விட்டது.

சமாதி கட்டுதல்

இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சமாதி எழுப்புதல் கூடாதென்று மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதும் இந்த வகையைச் சார்ந்ததே! மற்ற மனிதர்களை விட்டும் தனித்துத் தெரியும் வகையில் சமாதி எழுப்பி அதற்கு ஓர் நினைவாலயம் அமைத்து பெயர் பொறித்து விட்டால் போதும். அது யார்? ஏன்? என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் மக்கள் அந்த சமாதியைத் தொட்டுக் கும்பிட ஆரம்பித்து விடுவார்கள். முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

எல்லை மீறிய மரியாதை அளிப்பதற்கு இத்தகைய சமாதிகள் ஊக்கம் கொடுக்கின்றன. தூண்டுகின்றன. வெற்றுத் தரையாக இருக்கும் வரை மக்கள் அதைக் கண்டு கொள்ளமாட்டார்கள். அதுவே கட்டியெழுப்பபட்டதாக இருக்கும் எனில் அது பல இணைவைப்பு காரியங்கள் நடைபெறுவதற்கு உந்து சக்தியாக மாறிவிடுகின்றன.

யூத, கிறித்தவர்கள் நபிமார்களின் மண்ணறைகளைச் சமாதிகளாக கட்டியெழுப்பியதாலே இணை வைப்பில் விழுந்தார்கள் என்று நபிமொழி எச்சரிக்கின்றது.

لَعَنَ اللَّهُ اليَهُودَ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسْجِدًا قَالَتْ: وَلَوْلاَ ذَلِكَ لَأَبْرَزُوا قَبْرَهُ غَيْرَ أَنِّي أَخْشَى أَنْ يُتَّخَذَ مَسْجِدًا

நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது, “யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்டுத்துவானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டனர்” என்று கூறினார்கள்.

இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி-1330 

எனவே தான் இஸ்லாம் யாருடைய மண்ணறையின் மீதும் கட்டடம் எழுப்பக் கூடாது என்று மறுப்பு தெரிவிக்கின்றது.

نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجَصَّصَ الْقَبْرُ، وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ، وَأَنْ يُبْنَى عَلَيْهِ

கப்றுகள் பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் ரலி,
நூல்: முஸ்லிம்-1765 

மீறி எழுப்பப்பட்ட கட்டடத்தை ஆட்சியாளர்கள் தகர்க்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது.

قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ «أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ

அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.      

நூல்: முஸ்லிம்-1764 

மண்ணறையின் மீது சமாதி எழுப்புவதை இவ்வளவு காட்டமாக, கடுமையாகக் கண்டிப்பதற்கு காரணம் இது இணைவைப்பிற்கு அழைத்துச் செல்லும் என்பதே.

இணைவைப்பின் சாயல்

இப்படி எவையெல்லாம் இணை வைப்பின் காரணிகள் என்பதை இனம் கண்டு அவை அனைத்தையும் மார்க்கம் தடுக்கின்றது. இதுபோலவே எந்த ஒரு செயலிலும், வணக்கத்திலும் இணை வைப்பின் சாயல் ஏற்படுவதைக் கூட மார்க்கம் விரும்பவில்லை.

ஒரு செயல் அனுமதிக்கப்பட்ட தாகவே இருந்தாலும் அதில் இறைவனுக்கு நிகராக இன்னொருவரை ஆக்கும்படியான ஒப்பு இருந்தாலோ, அதன் சாயல் துளி தெரிந்தாலோ அதையும் மார்க்கம் தடை செய்து இணைவைப்பை எந்த வகையிலும் எட்டிப்பார்க்கவிடாமல் வேரறுக்கின்றது.

இதைப் பல ஹதீஸ்களிலிருந்து அறிய முடிகின்றது.

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டதே. அவ்வாறு செய்த நேர்ச்சையை எங்கும் நிறைவேற்றலாம். ஆனால் பிறமத வழிபாட்டுத் தலங்களில் இறைவனுக்காகச் செய்த நேர்ச்சைகளை நிறைவேற்றக் கூடாது என்று மார்க்கம் தடை செய்கின்றது.

نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ؟» قَالُوا: لَا، قَالَ: «هَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ؟»، قَالُوا: لَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْفِ بِنَذْرِكَ، فَإِنَّهُ لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ، وَلَا فِيمَا لَا يَمْلِكُ ابْنُ آدَمَ

புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று ஒருவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நேர்ச்சை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்திருக்கின்றேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதில் வணங்கப்படக் கூடிய அறியாமைக் கால சிலைகளில் ஏதேனும் ஒரு சிலை இருக்கின்றதா?” என்று (மக்களிடம்) கேட்டார்கள். அதற்கு (மக்கள்) இல்லை என்று பதிலளித்தார்கள்.

“அவர்களது திருவிழாக்களில் ஏதேனும் ஒரு திருவிழா அங்கு நடப்பதுண்டா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். “நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள். ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலோ அல்லது ஆதமுடைய மகனுக்கு இயலாத காரியத்திலோ நேர்ச்சையை நிறைவேற்றுதல் இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக்(ரலி),
நூல்: அபூதாவூத்-3313 , அஹ்மத்-16012

இதற்கு என்ன காரணம் என்றால் பிறமத வழிபாட்டுத்தலங்களில் இறைவனுக்கான வணக்கத்தைச் செய்யும் போது வெளிப்பார்வையில் அல்லாஹ்வுக்காக என்பது அடிபட்டுப் போய் வேறு கடவுளுக்காக இது செய்யப்படுகிறது என்கிற தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இறைவனுக்காக ஒருவர் ஆட்டை அறுக்கிறார். அதைப் பொதுவெளியில் அறுத்தால் ஒன்றும் தெரியாது. அதையே கோயில் வளாகத்தில் போய் அறுத்தால் கோயில் கடவுளுக்காக அறுத்ததாகத் தான் மக்கள் நினைப்பார்கள்.

ஒரு முஸ்லிமின் செயல்பாட்டில், வணக்கத்தில் இணைவைப்பின் சாயல் கூட எட்டிப்பார்க்க கூடாது என்பதற்காகவே இந்தத் தடை என்பதை யாரும் எளிதில் புரியலாம்.

கப்ரை முன்னோக்கி தொழுதல்

அல்லாஹ்வுக்காகத் தொழும் ஒருவர் தனது தொழுகையை கப்ரை முன்னோக்கி அமைத்துக் கொள்ளும் போதும் இந்த இணைவைப்பின் ஒப்பு எட்டிப்பார்க்கின்றது.

தொழுபவர் அல்லாஹ்வுக்காகத் தான் தொழுகிறார் என்றாலும் ஒரு குறிப்பிட்ட கப்ரை முன்னோக்கி தொழுகையை அமைக்கும் போது கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட மனிதருக்காகத் தொழுகிறாரோ என்ற சந்தேகத்தை பார்வையாளனுக்கு ஏற்படுத்தி விடுகிறது. இதனால் மார்க்கம் இதையும் தடுக்கின்றது.

لَا تُصَلُّوا إِلَى الْقُبُورِ، وَلَا تَجْلِسُوا عَلَيْهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடக்கத் தலங்களை (கப்று) நோக்கித் தொழாதீர்கள்; அவற்றின் மீது உட்காராதீர்கள்.

அறிவிப்பவர்: அபூமர்ஸத் அல்ஃகனவீ (ரலி),
நூல்: முஸ்லிம்-1769 

சூரியன்

குறிப்பிட்ட நேரங்களில் அல்லாஹ்வுக்காகக் கூட தொழக்கூடாது என்று மார்க்கம் தடை செய்கின்றது. சூரியன் தோன்றி முழுமையாக வெளிப்படும் வரை, சூரியன் மறையத் துவங்கியதிலிருந்து முழுமையாக மறையும் வரை. இது போன்ற நேரங்களைத் தேர்ந்தெடுத்து தொழக்கூடாது என்று மார்க்கம் சொல்கின்றது.

 عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«إِذَا بَدَا حَاجِبُ الشَّمْسِ، فَأَخِّرُوا الصَّلَاةَ حَتَّى تَبْرُزَ، وَإِذَا غَابَ حَاجِبُ الشَّمْسِ، فَأَخِّرُوا الصَّلَاةَ حَتَّى تَغِيبَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியனின் ஒரு பகுதி (கிழக்கில்) தோன்றும்போது (தொழாதீர்கள்.) அது முழுமையாக வெளிப்படும்வரை தொழுவதைத் தாமதப்படுத்துங்கள்; சூரியனின் ஒரு பகுதி (மேற்கில்) மறையும்போது (தொழாதீர்கள்); அது முழுமையாக மறையும்வரை தொழுகையைத் தாமதப்படுத்துங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: முஸ்லிம்-1509 

சூரியனை வணங்கி வழி பட்டவர்கள் இந்த நேரத்தைத் தேர்வு செய்தே வழிபட்டார்கள். இன்றும் இவ்வாறு வணங்கும் சிலர் இருக்கிறார்கள். அல்லாஹ்வை மட்டுமே வணங்கும் முஸ்லிம்கள் இந்த நேரங்களில் தொழும்போது சூரியனை வணங்குவது போன்ற வெளித் தோற்றம் ஏற்படுகின்றது.

வெளித்தோற்றத்தில் கூட இணை வைப்பின் சாயல் தென்படக் கூடாது என்பதற்காகவே இந்த நேரங்களில் தொழத் தடை விதிக்கப்பட்டு உள்ளது என விளங்கலாம்.

இஸ்லாம் இணைவைப்பை ஒரு போதும் ஆதரிக்காது, இணை வைப்பின் சாயலைக் கூட இஸ்லாம் சகித்துக் கொள்ளாது என்பதே இவை நமக்கு போதிக்கும் பாடமாகும். எனவே இணை வைப்பின் சாயலை விட்டும் விலகி வாழும் நன் மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.