Tamil Bayan Points

இதுதான் உலகம்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

Last Updated on October 15, 2023 by Trichy Farook

இதுதான் உலகம்!

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!

இம்மைக்கும் மறுமைக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை முஸ்லிம்கள் சரியாகப் புரிந்திருக்க வேண்டும். மறுமை வாழ்வின் உயர்வை அறிந்திருந்தால் மட்டும் போதாது. இந்த உலகம் எந்தளவுக்குக் கீழானது என்பதையும் புரிந்திருப்பது அவசியம். ஆகவேதான், உலகத்தின் நிலையைப் பற்றிய உதாரணங்கள், ஒப்பீடுகள் மார்க்கத்தில் அதிகம் கூறப்படுள்ளன. அந்தச் செய்திகளை அறிவதே இவ்வுரையின் நோக்கம்..

நிரந்தமற்ற வாழ்க்கை:

வானிலிருந்து வரும் மழைநீர் பூமியில் விழுந்து தாவரங்களுடன் கலந்து கடைசியில் ஒன்றுமில்லாமல் காணாமல் போகிறது. அதுபோன்று தான், ஒருநாள் நாமும் இருக்க மாட்டோம்; நமது வாழ்வும் இருக்காது. இன்னும் ஏன்? இந்த உலகமே இல்லாமல் போய்விடும். இப்படியான நிலையற்ற வாழ்க்கைதான் நமக்குத் தரப்பட்டிருக்கிறது.

وَاضْرِبْ لَهُمْ مَثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنْزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ ۗ وَكَانَ اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ مُقْتَدِرًا

தண்ணீரை வானத்திலிருந்து நாம் இறக்கினோம். அது பூமியின் தாவரங்களுடன் இரண்டறக் கலந்தது. (பின்னர் காய்ந்து) அவை சருகுகளாக மாறின. அவற்றைக் காற்று அடித்துச் சென்றது. இதை இவ்வுலக வாழ்வுக்கு உதாரணமாகக் கூறுவீராக! அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன்: 18:45)

كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا ۖ وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِنَ اللَّهِ وَرِضْوَانٌ ۚ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ

(இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு.

(அல்குர்ஆன்: 57:20)

அனைத்தும் அற்ப சுகம்:

பூமியில் நாம் சந்தோசமாக வாழ்வதற்கு ஏராளமான இன்பங்களை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். அவன் அளித்த அறிவைக் கொண்டு மனிதனும் செயற்கையாகப் பல்வேறு கேளிக்கைகளை, பொழுதுபோக்குகளை உருவாக்கியுள்ளான். இவ்வகையில், எத்தனை விதமான சுகபோகங்கள் இங்கு இருந்தாலும் மறுமை வாழ்க்கையோடு ஒப்பிடும் போது அவை அனைத்தும் அற்பத்திலும் அற்பமானதாகும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَا لَكُمْ إِذَا قِيلَ لَكُمُ انْفِرُوا فِي سَبِيلِ اللَّهِ اثَّاقَلْتُمْ إِلَى الْأَرْضِ ۚ أَرَضِيتُمْ بِالْحَيَاةِ الدُّنْيَا مِنَ الْآخِرَةِ ۚ فَمَا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا قَلِيلٌ

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? “அல்லாஹ்வின் பாதையில் புறப்படுங்கள்!’’ என்று உங்களிடம் கூறப்படும் போது இவ்வுலகை நோக்கிச் சாய்ந்து விடுகிறீர்கள்! மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது.

(அல்குர்ஆன்: 9:38)

اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ ۚ وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை.

(அல்குர்ஆன்: 13:26)

இது ஒரு சோதனைக் களம்:

மறுமை வாழ்க்கை இரு பிரிவைக் கொண்டது. ஒன்று சொர்க்கம். மற்றொன்று நரகம். அவ்வாறான சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் தகுதியானவர்கள் யார் யாரென்று சோதிப்பதற்காகவே உலக வாழ்வு தரப்பட்டுள்ளது.

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ

உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.

(அல்குர்ஆன்: 67:2)

وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا

“உங்களில் அழகிய செயல்பாடுகள் உள்ளவர் யார்?’ என்பதைச் சோதிப்பதற்காக அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது.

(அல்குர்ஆன்: 11:7)

إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا

அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகப் பூமியில் உள்ளதை அதற்கு (பூமிக்கு) அலங்காரமாக நாம் ஆக்கினோம்.

(அல்குர்ஆன்: 18:7)

ஏமாற்றும் வசதிகளே உலகம்:

இந்த உலகத்திலுள்ள வசதி வாய்ப்புகள் அனைத்தும் நமது மறுமைத் தேடலை மறக்கடிக்கும் வகையில் அமைந்துள்ளன. அவற்றின் மீது அபரிமிதமான ஆர்வத்தையும் மோகத்தையும் தூண்டி வழிகெடுக்க ஷைத்தான் துடித்துக் கொண்டிருக்கிறான். அதற்கு ஒருக்காலும் நாம் இடம்  கொடுத்து விடக் கூடாது.

وَفِى الْاٰخِرَةِ عَذَابٌ شَدِيْدٌ ۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ‌ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏

மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.

(அல்குர்ஆன்: 57:20)

يَا أَيُّهَا النَّاسُ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا ۖ وَلَا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ

மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவன் (ஷைத்தான்) அல்லாஹ் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.

(அல்குர்ஆன்: 35:5)

மயக்கும் மாய வாழ்க்கை:

மனிதனின் எண்ணத்தை, சிந்தனையைக் கவர்ந்திழுக்கும் வகையில் உலக வாழ்வின் கட்டமைப்பு இருக்கிறது. அதன் எந்த மூலைக்குச் சென்றாலும் மனதை மயக்கும் அம்சங்கள் மலிந்து இருக்கும். இதனால்தான் அதன் இனிமையிலும் பசுமையிலும் பலரும் மயங்கிக் கிடக்கிறார்கள்.

وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِ أَزْوَاجًا مِنْهُمْ زَهْرَةَ الْحَيَاةِ الدُّنْيَا لِنَفْتِنَهُمْ فِيهِ ۚ وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَأَبْقَىٰ

(முஹம்மதே!) சோதிப்பதற்காக அவர்களில் சிலருக்கு நாம் வழங்கிய இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! உமது இறைவனின் செல்வம் சிறந்ததும், நிலையானதுமாகும்.

(அல்குர்ஆன்: 20:131)

وَذَرِ الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَعِبًا وَلَهْوًا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا ۚ وَذَكِّرْ بِهِ أَنْ تُبْسَلَ نَفْسٌ بِمَا كَسَبَتْ

யார் தமது மார்க்கத்தை விளையாட்டாகவும், வீணாகவும் ஆக்கி, இவ்வுலக வாழ்க்கையும் அவர்களை மயக்கி விட்டதோ அவர்களை விட்டு விடுவீராக! தான் செய்தவற்றுக்கு ஒவ்வொருவரும் கூலி கொடுக்கப்படுவது பற்றி இதன் மூலம் அறிவுரை கூறுவீராக!

(அல்குர்ஆன்: 6:70)

 عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«إِنَّ الدُّنْيَا حُلْوَةٌ خَضِرَةٌ، وَإِنَّ اللهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا، فَيَنْظُرُ كَيْفَ تَعْمَلُونَ، فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ، فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِي إِسْرَائِيلَ كَانَتْ فِي النِّسَاءِ» وَفِي حَدِيثِ ابْنِ بَشَّارٍ: «لِيَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ»

இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான். ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிலிருந்தும் பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் இடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால்தான் ஏற்பட்டது.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம்-5292 

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக (அவ்வாறு இனிமையும் பசுமையும் நிறைந்ததாக அதை ஆக்கியுள்ளான்)’’ என்று காணப்படுகிறது.

வீணும் விளையாட்டும் நிறைந்தது:

பூமியில் பயனற்ற சிந்தனைகளும் செயல்களும் பரவிக் காணப்படும். வேடிக்கை மற்றும் விளையாட்டான விஷயங்கள் நிறைந்திருக்கும். அவற்றில் மூழ்கிவிடாது வாழ வேண்டுமென அல்லாஹ் நம்மை எச்சரிக்கிறான்.

وَمَا هَٰذِهِ الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَهْوٌ وَلَعِبٌ ۚ وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ

இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா?

(அல்குர்ஆன்: 29:64)

وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَعِبٌ وَلَهْوٌ ۖ وَلَلدَّارُ الْآخِرَةُ خَيْرٌ لِلَّذِينَ يَتَّقُونَ ۗ أَفَلَا تَعْقِلُونَ

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

(அல்குர்ஆன்: 6:32)

பகட்டுக்குப் பலியாகும் வாழ்க்கை:

பெரும்பாலான மக்கள், நீயா? நானா? என்று மற்றவர்களிடம் போட்டி போட்டு, பெருமை அடிப்பதிலேயே பொழுதைக் கழிக்கிறார்கள். அதற்குரிய இன்பங்களைப் பெருக்கும் முயற்சியில் வாழ்வைத் தொலைத்து விடுகிறார்கள். எனவேதான் அல்லாஹ் உலகத்தைப் பற்றி இப்படிக் கூறுகிறான்.

اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ

“விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட்செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை’’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்: 57:20)

وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُونَ

(ஏக இறைவனை) மறுத்தோர் நரகத்தின் முன்னே கொண்டு செல்லப்படும் நாளில் “உங்கள் உலக வாழ்க்கையில் உங்கள் நன்மைகளை நீங்களே அழித்து விட்டீர்கள். அதிலேயே இன்பம் கண்டீர்கள். நியாயமின்றி பூமியில் நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததாலும், நீங்கள் குற்றம் புரிந்து கொண்டிருந்ததாலும் இன்று இழிவு தரும் வேதனை பரிசாக வழங்கப்படுகின்றீர்கள்’’ (என்று கூறப்படும்.)

(அல்குர்ஆன்: 46:20)

தரம் தாழ்ந்த உலகம்:

மறுமை வாழ்க்கையோடு எந்த வகையில் ஒப்பிட்டுப் பார்த்தாலும் உலக வாழ்க்கை என்பது தரம் குறைந்தது; அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் கீழானது. இப்படியான வாழ்வில் நன்றாக இருப்பதற்காக மறுமை வாழ்வை நாசமாக்கிக் கொள்வது மிகப்பெரும் முட்டாள்தனம்.

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِالسُّوقِ، دَاخِلًا مِنْ بَعْضِ الْعَالِيَةِ، وَالنَّاسُ كَنَفَتَهُ، فَمَرَّ بِجَدْيٍ أَسَكَّ مَيِّتٍ، فَتَنَاوَلَهُ فَأَخَذَ بِأُذُنِهِ، ثُمَّ قَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنَّ هَذَا لَهُ بِدِرْهَمٍ؟» فَقَالُوا: مَا نُحِبُّ أَنَّهُ لَنَا بِشَيْءٍ، وَمَا نَصْنَعُ بِهِ؟ قَالَ: «أَتُحِبُّونَ أَنَّهُ لَكُمْ؟» قَالُوا: وَاللهِ لَوْ كَانَ حَيًّا، كَانَ عَيْبًا فِيهِ، لِأَنَّهُ أَسَكُّ، فَكَيْفَ وَهُوَ مَيِّتٌ؟ فَقَالَ: «فَوَاللهِ لَلدُّنْيَا أَهْوَنُ عَلَى اللهِ، مِنْ هَذَا عَلَيْكُمْ»

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள) ‘ஆலியா’வின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள், செத்துக் கிடந்த, காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த ஆட்டை எடுத்து, அதன் (சிறிய) காதைப் பிடித்துக்கொண்டு, “உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக் காசுக்குப் பகரமாக வாங்கிக்கொள்ள விரும்புவார்?’’ என்று கேட்டார்கள்.

அதற்கு மக்கள், “எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்பமாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்?’’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?’’ என்று கேட்டார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில், இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க, இது செத்துப் போயிருக்கும்போது எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்)?’’ என்று கேட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்‘’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம்-5664 

«وَاللهِ مَا الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مِثْلُ مَا يَجْعَلُ أَحَدُكُمْ إِصْبَعَهُ هَذِهِ – وَأَشَارَ يَحْيَى بِالسَّبَّابَةِ – فِي الْيَمِّ، فَلْيَنْظُرْ بِمَ تَرْجِعُ؟»

அல்லாஹ்வின் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது இந்த, –அதாவது சுட்டு- விரலை (அறிவிப்பாளர் யஹ்யா சுட்டு விரலால் சைகை செய்கிறார்) கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (அந்த அளவு குறைவானதேயாகும்.) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி)
நூல்: முஸ்லிம்-5490

இது நிஜ வாழ்க்கையே அல்ல:

இன்னும் தெளிவாகக் கூறுவதாக இருந்தால், மறுமை வாழ்க்கை என்பதுதான் உண்மையான, மெய்யான வாழ்க்கை. இங்கு வாழ்வது ஒரு வாழ்க்கையே அல்ல. மாறாக, மறுமை வாழ்வுக்கான ஒரு முன்னோட்டம் அவ்வளவுதான்.

 وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ

மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா?

(அல்குர்ஆன்: 29:64)

 عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«اللَّهُمَّ لاَ عَيْشَ إِلَّا عَيْشُ الآخِرَهْ، فَأَصْلِحِ الأَنْصَارَ وَالمُهَاجِرَهْ»

(அகழ்ப் போருக்காக அகழ் தோண்டிக் கொண்டிருந்த போது) நபி (ஸல்) அவர்கள் “இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை; ஆகவே, அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிலையான மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக!’’ என்று (பாடியபடி) சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி-6413 

இதுவரை பார்த்தவை எல்லாம், உலக வாழ்வின் யதார்த்தமான நிலைகள். இவற்றைப் புரிந்து கொண்டவர்கள், மறுமைக்கு இணையாக உலக வாழ்வைப் பெரிதாக நினைக்க மாட்டார்கள். அதைவிடவும் உலக வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் தரமாட்டார்கள். என்றும் எப்போதும் சுதாரிப்போடு வாழ்வார்கள்.

குறிப்பாக, மறுமை வெற்றியை விரும்பும் மக்களுக்கு இந்த உலகம் எப்படி இருக்கும்? இங்கு அவர்கள் எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்தும் நபிகளார் போதித்து இருக்கிறார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ، وَجَنَّةُ الْكَافِرِ»

‘‘இவ்வுலகம், இறை நம்பிக்கை கொண்டவர்களுக்குச் சிறைச்சாலை ஆகும். இறைமறுப்பில் இருப்பவர்களுக்குச் சொர்க்கச் சோலை ஆகும்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-5663 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْكِبِي، فَقَالَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி-6416 

ஆடை, உணவு, பொருளாதாரம் என்று வாழ்வின் அனைத்து விஷயத்திலும் முஃமின்களுக்குப் பல்வேறு  கட்டுப்பாடுகளை இஸ்லாம் விதித்திருக்கிறது. அவற்றுக்கு உட்பட்டு வாழ வேண்டும்.

தமது சொந்த நாட்டிலிருந்து வேறு நாட்டிற்குச் சென்றிருக்கும் நபரைப் பாருங்கள். பெரும்பாலும் தம்மிடம் இருக்கும் பொருளாதாரத்தை கவனத்துடன் செலவழிப்பார்; அவசியமற்ற பொருட்களை வாங்கமாட்டார். ஒவ்வொரு செயலையும் கவனத்துடன் அமைத்துக் கொள்வார். எல்லாவற்றுக்கும் மேலாக, சொந்த தேசத்திற்குச் சென்று சந்தோஷமாக வாழ்வதற்குச் சிக்கல் ஏற்படுத்தும் காரிங்களில் ஈடுபட மாட்டார்.

இவ்வாறு, நாமும் இறைவன் தந்த பாக்கியங்களை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். எந்தவொரு அருட்கொடையையும் வீணடித்துவிடக் கூடாது. கடமையான காரியங்களை அக்கறையுடன் செய்வதோடு, பாவமான காரியங்களை விட்டும் விலகியிருக்க வேண்டும்.

குறிப்பாக, மறுமையில் நல்ல நிலையில் இருப்பதற்கேற்ப எல்லா வகையிலும் இங்கு விழிப்புடன் வாழ வேண்டும். இந்தப் பக்குவத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.