Tamil Bayan Points

இமாம் ருகூவுக்கு சென்றால் அல்ஹம்து ஓதலாமா?

கேள்வி-பதில்: தொழுகை

Last Updated on January 21, 2017 by Trichy Farook

இமாம் ருகூவுக்கு சென்றால் அல்ஹம்து ஓதலாமா?

ஜமாஅத் தொழுகையில் அல்ஹம்து அத்தியாயம் முழுதும் ஓத முடியாமல் ருகூவுக்குப் போகும் நிலை சில நேரங்களில் ஏற்படுகிறது. ருகூவுக்குப் போவதா? அல்ஹம்தை முடிப்பதா?

இமாம் ருகூவில் இருக்கும் போது ருகூவில் சேர்ந்தால் அது ரக்காதாகக் கணக்கிடப்படுமா?

ருகூவைத் தவிர்த்து விட்டு அடுத்த நிலைக்கு இமாம் வரும் வரை காத்திருந்து அதில் சேரலாமா?

அப்துல் ஹமீத்

பதில் :

நீங்கள் பல கேள்விகளைக் கேட்டுள்ளீர்கள். முதலில் இமாமை எந்நிலையில் நாம் அடைந்தால் நமக்கு அந்த ரக்அத் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வோம். இமாம் ருகூவிலிருந்து எழுவதற்கு முன்பாக ஒருவர் ஜமாஅத்துடன் சேர்ந்து விட்டால் அந்த ரக்அத் அவருக்குக் கிடைத்து விடும் என்று நாம் கூறிவருகிறோம்.

யார் தொழுகையில் இமாம் முதுகை உயர்த்துவதற்கு முன்னதாக ருகூவை அடைந்து கொள்வாரோ அவர் அந்த ரக்அத்தை அடைந்து கொண்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : இப்னுஹுஸைமா 1595

இந்த ஹதீஸை இதற்கு ஆதாரமாக நாம் குறிப்பிட்டு வந்தோம். தற்போது இந்த ஹதீஸை நாம் ஆய்வு செய்யும் போது பலவீனமானது என்பது நமக்குத் தெரிய வருகின்றது. இதன் அறிவிப்பாளர் தொடரில் குர்ரா பின் அப்திர் ரஹ்மான் என்பர் இடம்பெறுகிறார்.

இவர் பலவீனமானவர் என்றும், ஹதீஸை அறிவிப்பதில் இவர் அலட்சியப் போக்குடையவராக இருந்தார் என்றும் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். இவருடைய செய்திகள் பெரும்பாலும் நம்பகமானவர்களின் அறிவிப்புக்கு மாற்றமாகவே இருக்கும் என அஹ்மது பின் ஹம்பள், அபூதாவுத், அபூ ஸுர்ஆ ஆகியோர் கூறியுள்ளனர். இவர் பலமானவர் இல்லை என நஸாயீ, அபூஹாதிம் ஆகியோர் கூறியுள்ளனர்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்

எனவே ஹதீஸ் கலை அறிஞர்களின் கூற்றுப்படி இவர் பலவீனமானவர் என்பதால் இந்தச் செய்தியை நாம் ஆதாரமாகக் குறிப்பிட முடியாது.

எனினும் இமாம் ருகூவிலிருந்து எழுவதற்கு முன்பு அவரை அடைந்து விட்டால் அந்த ரக்அத் கிடைத்து விடும் என்று நாம் கூறிய சட்டத்துக்கு வேறு சரியான ஆதாரங்கள் இருக்கின்றன.

 

783 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ الْأَعْلَمِ وَهُوَ زِيَادٌ عَنْ الْحَسَنِ عَنْ أَبِي بَكْرَةَ أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَاكِعٌ فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ زَادَكَ اللَّهُ حِرْصًا وَلَا تَعُدْ رواه البخاري

அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ருகூஉ செய்து கொண்டிருந்த போது வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்து விட்டேன். (பின்னர்) இது குறித்து நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களீடம் தெரிவித்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்” என்று கூறினார்கள்

நூல் புகாரி 783

அபூதாவூதிலும், முஸ்னது அஹ்மதிலும் இடம் பெற்றுள்ள அறிவிப்புகளில் கூடுதல் தகவல்கள் உள்ளன.

 

586حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا حَمَّادٌ أَخْبَرَنَا زِيَادٌ الْأَعْلَمُ عَنْ الْحَسَنِ أَنَّ أَبَا بَكْرَةَ جَاءَ وَرَسُولُ اللَّهِ رَاكِعٌ فَرَكَعَ دُونَ الصَّفِّ ثُمَّ مَشَى إِلَى الصَّفِّ فَلَمَّا قَضَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ قَالَ أَيُّكُمْ الَّذِي رَكَعَ دُونَ الصَّفِّ ثُمَّ مَشَى إِلَى الصَّفِّ فَقَالَ أَبُو بَكْرَةَ أَنَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَادَكَ اللَّهُ حِرْصًا وَلَا تَعُدْ قَالَ أَبُو دَاوُد زِيَادٌ الْأَعْلَمُ زِيَادُ بْنُ فُلَانِ بْنِ قُرَّةَ وَهُوَ ابْنُ خَالَةِ يُونُسَ بْنِ عُبَيْدٍ رواه أبو داود

ஹசன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூவு செய்து கொண்டிருந்த போது அபூபக்ரா (ரலி) அவர்கள் (பள்ளிக்கு) வந்தார்கள். தொழுகையின் வரிசையில் சேருவதற்கு முன்னே ருகூவு செய்து பிறகு நடந்து வந்து வரிசையில் சேர்ந்து கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பிறகு உங்களில் யார் வரிசையில் இணைவதற்கு முன்பே ருகூவு செய்தவர் என்று கேட்டார்கள். அபூபக்ரா (ரலி) அவர்கள் நான் தான் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்” என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவுத் 586

அபூபக்ரா (ரலி) அவர்கள் ஸஃப்பிற்கு வெளியே ருகூவு செய்து அதே நிலையில் நடந்து வந்து ஸஃப்பில் சேருகிறார்கள். ஒரு ரக்அத் தனக்கு தவறிவிடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு அவர்கள் செய்துள்ளார்கள். ருகூவில் வந்து சேர்ந்தாலும் அந்த ரக்அத் கிடைக்காதென்றால் ஸஃப்புக்கு வெளியே அவர்கள் ருகூவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ருகூவைத் தவற விட்டால் அந்த ரக்அத் கிடைக்காது என்பதால் தான் அவர்கள் ஸஃப்புக்கு வெளியே ருகூவு செய்து நடந்து வந்து ஸஃப்பில் இணைகிறார்கள்.

இமாம் ருகூவில் இருக்கும் போது ஜமாஅத்தில் சேர்ந்தால் அந்த ரக்அத் கிடைத்துவிடும் என்று அபூபக்ரா (ரலி) அவர்கள் கருதியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவறு என்று கூறவில்லை. இவ்வாறு செய்வது தவறு என்றிருக்குமேயானால் அபூபக்ரா (ரலி) அவர்களிடம் அந்த ரக்அத்தை மீண்டும் நிறைவேற்றுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு கூறவில்லை.

மாறாக தொழுகைக்கு விரைந்து ஓடி வருவதும், ஸஃப்பில் இணையாமல் வெளியே ருகூவு செய்வதும் மட்டுமே கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

எனவே இமாம் ருகூவிலிருந்து எழுவதற்கு முன்பாக ஜமாஅத்துடன் சேர்ந்து விட்டால் அந்த ரக்அத் கிடைத்துவிடும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

ஆகவே இமாம் ருகூவிலிருக்கும் போது நீங்கள் ஜமாஅத்தில் சேர்ந்து விட்டால் அந்த ரக்அத் உங்களுக்குக் கிடைத்து விடுகிறது. அதையே நீங்கள் முதல் ரக்அத்தாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட வேண்டிய அவசியமும் இல்லை.

மேலும் இந்தச் சூழ்நிலையில் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதுவதற்கு உங்களுக்கு வாயப்பு இல்லாமல் போகிறது. இந்தச் சூழ்நிலையில் மட்டுமல்ல இமாம் நிலையில் வளள்ளால்லீன் என்று சொல்லும் போது நீங்கள் ஜமாஅத்தில் வந்து சேர்ந்தாலும் அப்போதும் உங்களால் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓத முடியாத சூழ்நிலை ஏற்படவே செய்யும்.

ஓதுவதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்காத இது போன்ற இக்கட்டான நேரங்களில் ஃபாத்திஹா சூராவை ஓத முடியாமல் போனால் அதனால் நமது தொழுகைக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை என்பதால் தான் அந்த ரக்அத் நமக்கு கிடைத்து விடும் என்று நபிமொழி சொல்கிறது.

ருகூவில் வந்து சேர்ந்த பிறகு சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதினால் ருகூவில் குர்ஆன் ஓதக்கூடாது என்று கூறும் நபிமொழியை மீறிய குற்றம் ஏற்படும்.

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉ அல்லது சஜ்தாவில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று எனக்குத் தடை விதித்தார்கள்.

நூல் : முஸ்லிம் 826

எனவே உங்களால் ஓத முடியா விட்டாலும் இமாம் ஓதியதே உங்களுக்குப் போதுமானதாகி விடும். நமக்கு அந்த ரக்அத் கிடைத்துவிடும்.