Tamil Bayan Points

இரு சாரார் சண்டையிட்டால் சமாதானம் செய்து வையுங்கள்

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்

Last Updated on September 30, 2016 by Trichy Farook

அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம், ‘தாங்கள் அப்துல்லாஹ் இப்னு உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்’ என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி(ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது.

அவனை நபி(ஸல்) அவர்கள் சென்றடைந்தபோது அவன், ‘தூர விலகிப் போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உன் கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்திவிட்டது’ என்று கூறினான்.

அப்போது அவர்களிடையே இருந்த அன்சாரி (தோழர்) ஒருவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய கழுதை உன்னை விட நல்ல வாசனையுடையதாகும்’ என்று கூறினார்.

அப்துல்லாஹ்வுக்காக அவனுடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். தங்களுக்கிடையே ஈச்சங் (கிளையின்) குச்சியாலும், கைகளாலும் செருப்புகளாலும் அடித்துக் கொண்டார்கள்.

அப்போது, ‘மேலும், இறைநம்பிக்கையாளர்களில் இரண்டு குழுவினர் தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள்’ (திருக்குர்ஆன் 49:09) என்னும் வசனம் அருளப்பட்டிருக்கிறது என்னும் செய்தி எங்களுக்கு எட்டியது.

(புகாரி 2691)