Tamil Bayan Points

இரைக்குப் பொறுப்பு இறைவனே!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on October 1, 2023 by Trichy Farook

இரைக்குப் பொறுப்பு இறைவனே!

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் அன்றாடம் தமது தேவைகளை அடைவதற்காக காலையில் கண் விழித்தது முதல் இரவு தூங்கச் செல்கின்ற வரை தமது வியர்வைத் துளிகளை இரத்தத் துளிகளாக்கி அயராது உழைத்துப் பாடுபடுகின்றனர்.

எந்த அளவிற்கென்றால் சில நேரங்களில் மனிதன் தன்னுடைய அன்றாடத் தேவையை நிறைவேற்றுவதற்காகச் சில தவறான வழிகளையும் கையாண்டு பிற மக்களை ஏமாற்றிப் பிழைக்கின்றான். இதை மனிதன் செய்வதற்குண்டான காரணமே நமக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம்  நமக்கு கிடைக்காதோ என்ற ஏக்கத்திலும், அச்சத்திலும் தான்.

இவை அத்தனைக்கும் இஸ்லாம் நமக்கு அற்புதமான முறையில் பாடம் நடத்துகின்றது. அவ்வாறு இஸ்லாம் நமக்கு வழிகாட்டும் முறைகளைப் பற்றியும் அதில் கிடைக்கும் பாடங்களைப் பற்றியும் சில செய்திகளை இந்த உரையில் நாம் தெரிந்துக் கொள்வோம். முதலாவதாக 

படைத்தவனே அனைத்திற்கும் பொறுப்பு  

மனிதர்களாகிய நமக்கும், இறைவனால் படைக்கப்பட்ட மற்ற உயிரினங்கள் அனைத்திற்கும் உணவு வழங்கும் கடமையும், பொறுப்பும், அதிகாரமும் நம்மைப் படைத்தவனான இறைவனைச் சார்ந்ததே என்று இஸ்லாம் கூறுகிறது.

இதை இறைவன் தன்னுடைய திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது,

وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ؕ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும் அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில் உள்ளது.

(அல்குர்ஆன்: 11:6)

இதற்கு மாற்றமாக உணவுக்குரிய கடமையும், பொறுப்பும் நம்மைச் சார்ந்ததே, இறைவன் பொறுப்பல்ல என்பது போன்று நம்முடைய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. இதனால் மனிதர்கள் செய்யும் தொழில், வியாபாரம் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் மோசடி, ஏமாற்று, பொய், பித்தலாட்டம் நிறைந்திருப்பதைப் பார்க்கின்றோம்.

அறிவியலிலும், புதிய புதிய கண்டுபிடிப்புகளிலும் மனிதன் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே செல்கின்றான். பொருளாதாரத்திலும், வியாபாரத்திலும் எவ்வளவோ நவீன வசதிகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் ஏற்ப மனிதன் வளர்ச்சி கண்டிருக்கின்றான். என்னதான் இப்படி அறிவியலில் மனிதன் வளர்ந்திருந்தாலும் இஸ்லாம் காட்டித் தந்ததன் அடிப்படையில் நீதியாக, நியாயமாக தங்களுடைய வியாபாரங்களை அமைத்துக் கொள்ளாமல் மனிதனை மனிதன் ஏமாற்றுவதும், மனிதனை மனிதன் சுரண்டிப் பிழைப்பு நடத்துவதும் அதற்கு ஏற்ப குறைந்தபாடில்லை.

இதற்கு மிக முக்கியக் காரணம் நமக்கு கிடைக்க வேண்டிய உணவு நமக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் தான். மனிதர்களுடைய இந்த அற்ப எண்ணங்களை எல்லாம் குழி தோண்டிப் புதைக்கும் விதமாக இறைவன் அற்புதமான முறையில் சொல்லிக் காட்டுகின்றான்.

வறுமைக்கு அஞ்சாதீர்கள்!!

قُلْ تَعَالَوْا اَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ‌ اَلَّا تُشْرِكُوْا بِهٖ شَيْـٴًـــــا وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ ۚ وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ مِّنْ اِمْلَاقٍ‌ؕ نَحْنُ نَرْزُقُكُمْ وَاِيَّاهُمْ‌ ۚ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ‌ ۚ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ‌ ؕ ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏

“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது’’ என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்!

வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்!

அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

(அல்குர்ஆன்: 6:151)

இந்த வசனத்தில் அறியாமைக்கால மக்களிடத்தில் இருந்த ஒரு கெட்டப் பழக்கத்தை இறைவன் சுட்டிக் காட்டி கடுமையான முறையில் எச்சரிக்கின்றான்.

அதாவது, அறியாமைக்கால மக்கள் வறுமை எனும் உணவு சார்ந்த பொருளாதார நெருக்கடிக்குப் பயந்து குழந்தைகளைக் கொலை செய்து, அந்தக் கொலையை நியாயப்படுத்தினர். ஆனால் இறைவன் குழந்தைகளாகிய (அவர்களுக்கும்), பெற்றோர்களாகிய (உங்களுக்கும்) நாமே உணவளிக்கின்றோம். பிறகு ஏன் குழந்தைகளைக் கொலை செய்கிறீர்கள்? என்று உணவு வழங்கும் பொறுப்பு தன்னைச் சார்ந்தது என்று சுட்டிக் காட்டுகின்றான்.

நம்முடைய குழந்தைகளின் உணவுக்குப் பொறுப்பு இறைவன் அல்ல என்று பயந்து, வறுமைக்கு அஞ்சி தங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்வதை நபி (ஸல்) அவர்கள் மிகப் பெரும் பாவமாகக் கருதி வன்மையாகக் கண்டித்திருக்கின்றார்கள்.

سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَيُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ؟ قَالَ: «أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ». قُلْتُ: إِنَّ ذَلِكَ لَعَظِيمٌ، قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «وَأَنْ تَقْتُلَ وَلَدَكَ تَخَافُ أَنْ يَطْعَمَ مَعَكَ». قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.
நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது’ என்று கூறினார்கள். நான், ‘நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்’ என்று சொல்லிவிட்டு, ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது’ என்று கூறினார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்க, அவர்கள், ‘உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது’ என்று கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி-4477 

எனவே, இறைவன் தான் நம்முடைய உணவுக்குப் பொறுப்பு என்று ஒவ்வொருவரும் ஆழமாக நம்ப வேண்டும். அப்படி நம்பினால் இறைவன் கட்டாயமாக நமக்கு உணவளிக்கப் போதுமானவன். எந்த அளவிற்கென்றால் பறவைகளுக்கு உணவளிப்பது போல் நாமும் உணவளிக்கப்படுவோம். அதிகாலை நேரத்தில் வயிறு காலியாகச் செல்கின்ற பறவைகள் கூடு திரும்பும் போது வயிறு நிரம்பியதாகத் திரும்புவதைப் பார்க்கின்றோம்.

இறைவன் தனது திருமறையில் கூறுகின்றான்..

وَكَاَيِّنْ مِّنْ دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا ۖ اللّٰهُ يَرْزُقُهَا وَاِيَّاكُمْ‌‌ۖ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏

எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 29:60)

عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لَوْ أَنَّكُمْ كُنْتُمْ تَوَكَّلُونَ عَلَى اللَّهِ حَقَّ تَوَكُّلِهِ لَرُزِقْتُمْ كَمَا يُرْزَقُ الطَّيْرُ تَغْدُو خِمَاصًا وَتَرُوحُ بِطَانًا

மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் அல்லாஹ்வின் மீது (நம்முடைய உணவுக்குப் பொறுப்பு இறைவன் தான் என்று) நம்பிக்கை வைக்க வேண்டிய விதத்தில் (பரிபூரணமாக) நம்பிக்கை வைத்தால் பறவைகளுக்கு இறைவன் உணவளிப்பது போன்று நீங்கள் உணவளிக்கப்படுவீர்கள்! பறவைகள் காலையில் வயிறு காலியாக (கூட்டை விட்டு) இரையை தேடி வெளியே செல்கிறது. மாலையில் வயிறு நிரம்ப (கூட்டை) வந்தடைகிறது.

ஆதாரம்: திர்மிதீ-2344 (2266)

இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று சொல்லித் தருகின்ற இஸ்லாம் அதே நேரத்தில், வெறுமனே நம்பிக்கை மட்டும் வைத்து விட்டு சோம்பேறிகளாகவும், உழைக்காமலும், வியாபாரத்தில், தொழில் துறையில் ஈடுபடாமலும் இருந்து, இறைவன் தருவான் என்று முயற்சி செய்யாமல் சும்மா இருந்து விடக் கூடாது. ஏனென்றால் நம்மால் இயன்ற அளவுக்கு முயற்சி செய்வதையும், சம்பாதிப்பதையும், பொருளாதாரத்தை திரட்டுவதையும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
 فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன்: 62:9,10)

வெள்ளிக்கிழமையன்று சிறிதுநேரம் வியாபாரம் செய்யக் கூடாது என்றும், தொழுகைக்காக விரைந்து வந்து விட வேண்டும் என்றும் சொல்லும் இறைவன், தொழுகை முடிந்ததும் பூமியில் அலைந்து, திரிந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள் என்று ஊக்குவிக்கின்றான்.

இதைப் போன்று குர்ஆனில் பல்வேறு இடங்களில் தொழுகையைப் பேணுமாறு கட்டளையிடும் இறைவன் ஜகாத் எனும் பொருளாதார தர்மத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும்,  ஏழைகளுக்கு தர்மம் செய்து நரக நெருப்பிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்களும்  கட்டளையிடுகின்றார்கள்.

இதன் மூலம் ஜகாத் கொடுக்கவோ, தர்மத்தை நிறைவேற்றவோ உழைப்பது மூலம் பொருளாதாரம் அவசியம் என்பதும், உழைத்தால் தான் இறைவனிடத்தில் நன்மைகளை அதிகமாகப் பெற முடியும் என்று கூறி உழைப்பின் அவசியத்தை இறைவன் வலியுறுத்துகிறார்கள்.

கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்

மனிதன் எவ்வளவு தூரம் தேடி அலைந்தாலும், அதற்காக எவ்வளவு நாட்களைச் செலவழித்தாலும், எத்தனை முயற்சி எடுத்தாலும் ஒரு மனிதனுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும். இதை ஒரு மனிதன் விளங்கி வைத்துக் கொண்டால் அடுத்தவர்களின் பொருளாதாரத்திற்கோ, பிறரை ஏமாற்றி பிழைப்பு நடத்துவதற்கோ மனிதன் ஆசைப்படவே மாட்டான்.

இதை நபி (ஸல்) அவர்கள் அற்புதமான முறையில் நமக்கு விளக்கித் தருகிறார்கள்.

جَاءَ سَائِلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا تَمْرَةٌ عَائِرَةٌ، فَأَعْطَاهُ إِيَّاهَا، وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذْهَا لَوْ لَمْ تَأْتِهَا لَأَتَتْكَ»

ஒரு யாசகர் நபி (ஸல்) அவர்களிடம் உதவி கேட்டு வந்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அங்கே சிதறிக் கிடந்த ஒரு சில பேரீச்சம் பழங்களை எடுத்துக் கொள்! என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், பேரிச்சம் பழம் (என்ற இந்த உணவைத் தேடி) நீ வந்திரா விட்டாலும் உன்னைத் தேடி அது வந்திருக்கும் என்று கூறினார்கள்.

ஆதாரம்: இப்னு ஹிப்பான்-3240 

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மற்றொரு செய்தியிலே தெளிவுபடுத்தும் போது,

إِنَّ الرِّزْقَ لَيَطْلُبُ الْعَبْدَ كَمَا يَطْلُبُهُ أَجَلُهُ

(மனிதனுக்கு என்று இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட) உணவென்பது, அவனது மரணம் அவனைத் தேடுவது போன்று தேடுகிறது. இறுதியாக அவனுக்கென்று (கடைசி) கடைசியாக எந்த உணவு இறைவனால் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அது அவனை அடையும் வரை மனிதன் மரணிக்கமாட்டான்.

ஆதாரம்: இப்னு ஹிப்பான்-3238 

விதியை வெல்ல முடியாது

மனிதர்கள் தங்களுடைய உணவைத் தேடி கடுமையான சிரமத்திற்கு மத்தியில் அலைந்து கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலம் தமக்குக் கிடைக்க வேண்டிய உணவு கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சமும், பயமும் கலந்த உணர்வுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் உலகத்தைப் படைப்பதற்கு முன்பே இறைவன் உலக மக்கள் அனைவரின் விதியையும் எழுதி விட்டான்.

 رُفِعَتِ الأَقْلَامُ وَجَفَّتْ الصُّحُفُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேனாக்கள் (எழுதுவதை விட்டும்) உயர்த்தப்பட்டு விட்டன. (எழுதப்பட்ட) ஏடுகளும் காய்ந்து விட்டன.

ஆதாரம்: திர்மிதீ-2516 (2440)

நம்முடைய உணவுக்கான பொறுப்பும், அதிகாரமும் நம்மைப் படைத்த இறைவனிடத்தில் தான் உள்ளது என்பதையும் அதில் இறைவனால் உறுதி செய்யப்பட்டதை யாராலும் தடுக்க முடியாது என்றும் இறைவனால் தடுக்கப்பட்டதை யாராலும் கொடுக்க முடியாது என்பதையும் உணர்த்தும் வகையில் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பிறகு பின்வரும் துஆவை ஓதுமாறு கூறியுள்ளார்கள்.

 أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ مَكْتُوبَةٍ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ، وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الجَدِّ مِنْكَ الجَدُّ

முஃகீரா (ரலி) அவர்கள், முஆவியா (ரலி) அவர்களுக்கு என்னை எழுதச் சொன்ன கடிதத்தில் பின்வரும் தகவலையும் குறிப்பிட்டிருந்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் பின்வருமாறு கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.

லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லாஷரீக்கலஹு, லஹுல் முல்(க்)கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம! லா மானிஅ லிமா அஃதைத்த, வலா முஃத்திய லிமா மனஃத்த, வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்கல் ஜத்

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் ஏகன். அவனுக்கு நிகர் எவருமில்லை (எதுவுமில்லை). ஆட்சியதிகாரம் அவனுக்குரியது. புகழனைத்தும் அவனுக்கே உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவன் இல்லை. எச்செல்வம் உடையவருக்கும் அவரது செல்வம் உன்னிடம் எந்தப் பயனுமளிக்க முடியாது.

ஆதாரம்: புகாரி-844 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இன்னும் நம்முடைய அனைத்துக் காரியங்களும் வாழ்வு முதல் மரணம் வரை கருவைறையில் இருக்கும் போதே எழுதப்பட்டு விட்டது என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள்.

உண்மையே பேசுபவரும், உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَبْعَثُ اللَّهُ إِلَيْهِ مَلَكًا بِأَرْبَعِ كَلِمَاتٍ، فَيُكْتَبُ عَمَلُهُ، وَأَجَلُهُ، وَرِزْقُهُ، وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ،

நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறீர்கள். பிறகு அவ்வாறே (40 நாள்களில்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறி விடுகிறது. பிறகு, அவ்வாறே (இன்னொரு நாற்பது நாள்களில் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப்பிண்டமாக மாறி விடுகிறது. பிறகு, அல்லாஹ் அதனிடம் ஒரு வானவரை நான்கு கட்டளைகளைத் தந்து அனுப்புகிறான். (அதன்படி) அதன் செயல்பாடு (எப்படியிருக்கும் என்று)ம், அதன் ஆயுளும், அதன் உணவும் (பிற வாழ்வாதாரங்களும் எவ்வளவு என்றும்) எழுதப்படுகின்றன.

அக்குழந்தை துர்பாக்கியசாலியா நற்பாக்கியசாலியா என்பதும் எழுதப்படுகிறது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படுகிறது. இதனால் தான், மனிதன் நரகவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான். இறுதியில், அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளி இருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்து விடுவான்.

ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்த வண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் தான் இருக்கும். அப்போது, (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள அவன் நரகவாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்து விடுவான்.

இதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.
ஆதாரம்: புகாரி-3332 

எனவே நம்முடைய உணவுக்குப் பொறுப்பு இறைவன் தான் என்று ஆழமாக நம்பி, மார்க்கம் காட்டித் தந்ததன் அடிப்படையில் நியாயமாகத் தொழில் செய்து நம்முடைய உணவு போன்ற அனைத்து செயல்பாடுகளும் இறைவனால் ஏற்கனவே எழுதி தீர்மானிக்கப்பட்டு அதனடிப்படையிலேயே எல்லாம் நடைபெறுகிறது என்ற யதார்த்தத்தை நாம் விளங்கி நல்ல மனிதர்களாக வாழ்ந்து மரணிப்போமாக!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.