Tamil Bayan Points

இஸ்லாத்தின் பார்வையில் அன்பளிப்பு

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

Last Updated on October 16, 2023 by Trichy Farook

இஸ்லாத்தின் பார்வையில் அன்பளிப்பு

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!

அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரையிலும் அன்பளிப்பு வாங்குவதும், வழங்குவதும் காலம் காலமாக நடைமுறையில் இருந்து ஒரு கலாச்சாரமாகும்.

நமது வீட்டில் நடைபெறுகின்ற மார்க்கம் அனுமதித்த, மார்க்கம் அனுமதிக்காத விஷேசங்களில், குழந்தை பிறப்பு முதற்கொண்டு, திருமணம், பெயர் சூட்டுவிழா, புதுமனை புகுவிழா என அனைத்து விதமான காரியங்களிலும் அன்பளிப்பு பரிமாறிக் கொள்வது ஒரு கட்டாயமான சம்பிரதாயமாக உள்ளது. இந்த அன்பளிப்பு குறித்த மார்க்கத்தின் வழிகாட்டுதல் என்ன என்பதையும் அதையொட்டி நம்மிடம் உள்ள தவறான நடைமுறைகளையும் இந்த உரையில் காண்போம்.

அன்பளிப்பின் நோக்கம்

நமது அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் பரிசுப் பொருட்களே அன்பளிப்பு எனப்படும். அன்பளிப்பின் மூலம் மக்களுக்கிடையே அன்பை அதிகரிப்பதும் சுமூக உறவு நீடிக்கச் செய்வதுமே நோக்கமாகும்.

இதன் காரணமாகத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சமைக்கும் குழம்பில் கூட சிறிது தண்ணீர் சேர்த்தாவது அருகிலிருப்பவர்களுக்கும் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தினார்கள்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«لَوْ دُعِيتُ إِلَى ذِرَاعٍ أَوْ كُرَاعٍ لَأَجَبْتُ، وَلَوْ أُهْدِيَ إِلَيَّ ذِرَاعٌ أَوْ كُرَاعٌ لَقَبِلْتُ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் சரி, நான் அதைப் பெற்றுக் கொள்வேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-2568 , முஸ்லிம் 5120

இந்த அன்பளிப்பு என்பது பணமாகவோ, விலை உயர்ந்த பொருளாகவோ இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உணவு, ஆடை, இன்னபிற பொருட்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அன்பை மையமாக வைத்துத் தரப்படும் பொருட்களில் அன்பு மட்டுமே கவனிக்கப்பட வேண்டுமே தவிர பொருட்களின் மதிப்பு கணிக்கப்படக் கூடாது. எதையுமே அற்பமாகக் கருதக்கூடாது.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  يَقُولُ: «يَا نِسَاءَ المُسْلِمَاتِ، لاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ فِرْسِنَ شَاةٍ»

‘முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அற்பமாகக் கருத வேண்டாம்‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-6017 

எதிர்பார்க்கப்படும் அன்பளிப்பு

நாமாக மனமுவந்து விரும்பிக் கொடுப்பது தான் அன்பளிப்பு ஆகும். இந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அன்பளிப்புகள் பரிமாறப்பட்டன. மேலும் அன்பளிப்பு என்பது தேவையுடையவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசத்தோடு கொடுப்பது தான்.

தற்போது நடைமுறையில் இருக்கும் அன்பளிப்பு என்பதோ, அன்பு புறந்தள்ளப்பட்டு, வட்டியில்லாக் கடனாகவும் வியாபாரத்தில் செய்யப்படும் முதலீடாகவும் மாறி விட்டது. கொடுக்கப்படும் அன்பளிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பே மிகுதியாக உள்ளது.

அதாவது, இன்று நாம் கொடுத்தால் நாளை நமக்குத் தருவார்கள் என்ற எண்ணமே பலரிடம் உள்ளது. தமக்கு வரும் அன்பளிப்புகளை மொய் என்ற பெயரில் எழுதி வைத்து, அதையே மீண்டும் திருப்பிச் செலுத்தும் வழக்கமும் உள்ளது.

இவ்வாறு திருப்பித் தருவார்கள் என்று எதிர்பார்த்து நாம் அன்பளிப்பு வழங்குவது தவறான நடவடிக்கையாகும். நபி (ஸல்) அவர்கள் அதைத் தடுத்துள்ளார்கள்.

 أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: سَمِعْتُ عُمَرَ، يَقُولُ
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْطِينِي العَطَاءَ، فَأَقُولُ: أَعْطِهِ مَنْ هُوَ أَفْقَرُ إِلَيْهِ مِنِّي، فَقَالَ: «خُذْهُ إِذَا جَاءَكَ مِنْ هَذَا المَالِ شَيْءٌ وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلاَ سَائِلٍ، فَخُذْهُ وَمَا لاَ فَلاَ تُتْبِعْهُ نَفْسَكَ»

நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னை விட ஏழைக்கு கொடுங்களேன் என்பேன், அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும்.

ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உம்முடைய மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)’ என்றார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: புகாரி-1473 

மேலும் கொடுத்த அன்பளிப்பைத் திரும்ப வாங்குவதும் கண்டிக்கத்தக்க செயலாகும். இத்தகைய செயலுக்கு நபி (ஸல்) அவர்கள் அருவருப்பான உதாரணத்தைக் கூறுகின்றார்கள்.

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«العَائِدُ فِي هِبَتِهِ كَالكَلْبِ يَقِيءُ ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ»

நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்:
தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி-2589 

பொதுவாக அன்பளிப்பைத் திரும்பப் பெறுவது கடுமையாகக் கண்டிக்கப்பட்டிருந்தாலும் தந்தை, தன் மகனுக்கு வழங்கிய அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு மட்டும் விதிவிலக்கு உள்ளது. அதாவது, மகனுக்குத் தந்தை வழங்கிய அன்பளிப்பை திருப்பி வாங்கிக் கொள்வதற்குத் தடையில்லை.

عَنْ ابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
 لَا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يُعْطِيَ عَطِيَّةً أَوْ يَهَبَ هِبَةً فَيَرْجِعَ فِيهَا إِلَّا الْوَالِدَ فِيمَا يُعْطِي وَلَدَهُ وَمَثَلُ الَّذِي يُعْطِي الْعَطِيَّةَ ثُمَّ يَرْجِعُ فِيهَا كَمَثَلِ الْكَلْبِ يَأْكُلُ فَإِذَا شَبِعَ قَاءَ ثُمَّ عَادَ فِي قَيْئِه

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்பளிப்பு ஒன்றை வழங்கிவிட்டு அதைத் திரும்பப் பெறுவது யாருக்கும் ஆகுமானதல்ல. தந்தை தன் பிள்ளைக்கு வழங்கியதைத் தவிர. கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவர் நாயைப் போன்றவராவார். நாய் வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு வாந்தி எடுக்கின்றது. பிறகு அந்த வாந்தியை மறுபடியும் உண்ணுகிறது.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அபூதாவூத்-3539 (3072)

அன்பளிப்பா? அபகரிப்பா?

விரும்பிக் கொடுப்பது தான் அன்பளிப்பு என்பதை மேலே கண்டோம். ஆனால் தற்காலத்தில் உடன்பிறப்புக்கள், சம்பந்தக்காரர்கள், மாமா, மச்சான், சின்னம்மா, பெரியம்மா போன்ற நெருங்கிய உறவுகளாக இருந்தால் விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்டாயம் அன்பளிப்பு கொடுத்தே ஆக வேண்டும் என்ற ஒரு நிலை நமது சமூகத்தில் உள்ளது.

எந்த ஒரு விஷேசமாக இருந்தாலும், “உங்க மாமா என்ன  செய்தார்கள்? உங்க தங்கச்சி என்ன கொண்டு வந்தார்கள்?” என்று புலனாய்வு விசாரணை செய்வதும், ‘‘உங்க தாய் மாமன் தானே! கொஞ்சம் பெரிய பொருளாகக் கேட்டால் என்ன?” என்ற உசுப்பி விடுவதும் நமது பார்வையில் அன்பளிப்பு என்பது எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டிவிடுகின்றது.

இன்னும் சொல்வதாக இருந்தால் தாய்மாமன் என்றால் இதைத் தான் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும், சின்னம்மாவாக இருந்தால் இன்ன பொருள் கொடுத்தாக வேண்டும் என்று உரிமையோடு கேட்டு வாங்கிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நபரால் அதைச் செய்ய இயலுமா? அவருடைய பொருளாதார நிலை என்ன? என்பதையெல்லாம் கவனிப்பதும் இல்லை. அதைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை.

இதுபோன்று கேட்கப்படும் பொருட்கள் சாமானியமானதாகவும் இருப்பதில்லை. மரக்கட்டில், மெத்தை, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், தங்கச் சங்கிலி, நெக்லெஸ், வளையல் என விலை உயர்ந்த பொருட்களாவே உள்ளன.

தங்களிடம் பணம் இருந்தாலும் இல்லா விட்டாலும் அன்பளிப்பு என்பது கட்டாயம் செய்ய வேண்டிய சமூக நிர்ப்பந்தமாக ஆகிவிட்டதால், தமது சக்தியை மீறி, கடன்பட்டாவது செய்ய வேண்டியதைச் செய்து விடுகின்றனர். வசதியற்ற நபர்களைக் கடும் சிரமத்திற்குள்ளாக்கும் அளவிற்கு அன்பளிப்பு என்பது ஒரு கவுரவப் பிரச்சனையாகப் பார்க்கப்படுகின்றது.

ஏகத்துவப் பிரச்சாரம் பட்டிதொட்டியெங்கும் பரவிய பின்னர் பல குடும்பத்தினர் இந்த நிர்ப்பந்த நிலையிலிருந்து விடுபட்டிருந்தாலும் இன்னும் பலர் நாள்தோறும் இந்த நிர்ப்பந்தத்தை சந்திக்கவே செய்கின்றர்.

இந்த அன்பளிப்பு தான் வரதட்சணைக் கொடுமையாகவும்  உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அன்பளிப்பு என்ற பெயரில் பெண் வீட்டாரிடமிருந்து, மாப்பிள்ளை வீட்டார் நகை, தொகை, சீர்வரிசை போன்றவற்றைப் பறித்துக் கொள்ளும் அவலமும் நடந்தேறுகின்றது.

அன்பளிப்பின் வரையறை

அன்பளிப்பு செய்யக் கூடாதா? அது மார்க்க அடிப்படையில் தவறா? என்ற கேள்விகள் மேற்கூறியவற்றைப் படிக்கும் போது நமக்கு எழலாம்.

அன்பளிப்பு தடை செய்யப்பட்டதல்ல. இதற்கு அனுமதி உள்ளது என்பதை ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸ்களிலிருந்து புரிந்து கொள்ள முடியும். ஆனால் நாம் குறிப்பிட விரும்புவதெல்லாம் தற்போது நடைமுறையில் உள்ள அன்பளிப்பு குறித்த தவறான எண்ணங்களும் செயல்பாடுகளும் பற்றித் தான் என்பதை இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.

அன்பளிப்பு கொடுப்பதும் வாங்குவதும் கட்டாயம் என்ற ஒரு நிலை உருவாகியிருப்பதால், பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பவர்கள், அன்பளிப்பு கொடுக்கவில்லை என்றால் ஊரார் என்ன சொல்வர்? உறவினர் என்ன சொல்வர் என்று விமர்சனத்திற்குப் பயந்தே பலவிதங்களிலும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒரு வகையில் இந்த சிரமத்திற்கு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருமே காரணமாக இருக்கிறோம். எனவே அன்பளிப்பு பெறுபவரும் கொடுப்பவரும் சில வரையறைகளைக் கவனத்தில் கொள்வது சிறந்தது.

  • அன்பளிப்பு என்பது கட்டாயம் அல்ல. விரும்பினால் செய்யும் ஒன்று தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
  • நாமாக வலியுறுத்திக் கேட்டு வாங்குவது அன்பளிப்பாக ஆகாது.
  • அன்பளிப்பு என்பது விலையுயர்ந்த பொருளாகவோ, பணமாகவோ தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது.
  • திருப்பிப் பெற வேண்டும் என்ற எண்ணமும், திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணமும் இருக்கக் கூடாது.
  • புகழ்ச்சிக்காகவோ, பகட்டுக்காகவோ அன்பளிப்புச் செய்யக்கூடாது. அன்பளிப்புச் செய்பவர் தமது சக்திக்கு மீறிய பொருட்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் தம்மிடம் இல்லாத ஒன்றை, இருப்பது போன்று காட்டிக் கொள்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
  • அன்பளிப்பு பெறுபவர்களும், கொடுப்பவரின் சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு, எந்த ஒன்றையும் அற்பமாகக் கருவிடக் கூடாது.

அன்பளிப்பாக மாறும் தர்மப் பொருள்

ஒருவருக்கு தர்மமாக ஒரு பொருள் கொடுக்கப்படுகிறது. அதை அவர் தமது நெருங்கிய உறவினருக்கு வழங்குகின்றார் என்றால் அப்பொருளை ஏற்றுக் கொள்வதற்குப் பலரும் தயக்கம் காட்டுகின்றனர். ஏனெனில் தர்மப் பொருளை நாம் எப்படி வாங்குவது என்று எண்ணுகின்றனர். இந்த எண்ணம் தவறானதாகும். ஒரு பொருள் நம்மிடமிருந்து இன்னொரு நபருக்கு மாறும் போது அதன் தன்மை மாறிவிடுகின்றது.

நபி (ஸல்) அவர்களுக்கு தர்மப் பொருள் ஆகுமானதல்ல. ஆனால் அதைத் தமது அடிமைப் பெண்ணிடமிருந்து பெறும் போது அன்பளிப்பு என்ற நிலையிலேயே பெறுகின்றார்கள்.

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
 وَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبُرْمَةٌ عَلَى النَّارِ، فَقُرِّبَ إِلَيْهِ خُبْزٌ وَأُدْمٌ مِنْ أُدْمِ البَيْتِ، فَقَالَ: «أَلَمْ أَرَ البُرْمَةَ»، فَقِيلَ: لَحْمٌ تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ، وَأَنْتَ لاَ تَأْكُلُ الصَّدَقَةَ، قَالَ: «هُوَ عَلَيْهَا صَدَقَةٌ، وَلَنَا هَدِيَّةٌ»

நெருப்பின் மேல் பாத்திரம் இருக்கும் நிலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் வைக்கப்பட்டது. உடனே அவர்கள், ‘நான் (நெருப்பின் மேல்) பாத்திரத்தைக் கண்டேனே (அது என்னவாயிற்று?)’’ என்று கேட்டார்கள். அதற்கு, ‘அது பரிராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி, தர்மப் பொருளைத் தாங்கள் உண்ண மாட்டீர்களே!’’ என்று செல்லப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அது பரிராவிற்குத் தான் தர்மம். நமக்கு அது அன்பளிப்பு!’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல்: புகாரி-5097 , 2577

லஞ்சமாக மாறும் அன்பளிப்பு

உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அல்லது சமூகத்தில் பெரும் பிரமுகர்களாக இருப்பவர்களிடம், பிறரின் உரிமையைப் பறித்து தமது காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அன்பளிப்பு வழங்கப்படுவதும் உண்டு. இத்தகைய அன்பளிப்பு ஒரு வகையில் லஞ்சம் ஆகும். இந்த நிலை உருவாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் ஸகாத் வசூலிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் அன்பளிப்பு வாங்கி வந்ததை மக்கள் மத்தியில் வன்மையாகக் கண்டித்தார்கள்.

عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ قَالَ :
اسْتَعْمَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا عَلَى صَدَقَاتِ بَنِي سُلَيْمٍ، يُدْعَى ابْنَ اللُّتَبِيَّةِ، فَلَمَّا جَاءَ حَاسَبَهُ، قَالَ : هَذَا مَالُكُمْ، وَهَذَا هَدِيَّةٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” فَهَلَّا جَلَسْتَ فِي بَيْتِ أَبِيكَ وَأُمِّكَ حَتَّى تَأْتِيَكَ هَدِيَّتُكَ إِنْ كُنْتَ صَادِقًا ؟ “. ثُمَّ خَطَبَنَا، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ : ” أَمَّا بَعْدُ، فَإِنِّي أَسْتَعْمِلُ الرَّجُلَ مِنْكُمْ عَلَى الْعَمَلِ مِمَّا وَلَّانِي اللَّهُ، فَيَأْتِي فَيَقُولُ : هَذَا مَالُكُمْ وَهَذَا هَدِيَّةٌ أُهْدِيَتْ لِي. أَفَلَا جَلَسَ فِي بَيْتِ أَبِيهِ وَأُمِّهِ حَتَّى تَأْتِيَهُ هَدِيَّتُهُ، وَاللَّهِ لَا يَأْخُذُ أَحَدٌ مِنْكُمْ شَيْئًا بِغَيْرِ حَقِّهِ إِلَّا لَقِيَ اللَّهَ يَحْمِلُهُ يَوْمَ الْقِيَامَةِ، فَلَأَعْرِفَنَّ أَحَدًا مِنْكُمْ لَقِيَ اللَّهَ يَحْمِلُ بَعِيرًا لَهُ رُغَاءٌ ، أَوْ بَقَرَةً لَهَا خُوَارٌ ، أَوْ شَاةً تَيْعَرُ ” ثُمَّ رَفَعَ يَدَهُ حَتَّى رُئِيَ بَيَاضُ إِبْطِهِ، يَقُولُ : ” اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ “. بَصْرَ عَيْنِي، وَسَمْعَ أُذُنِي.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் ஸதக்காகளை வசூலிக்கும் அதிகாரியாக இப்னுல் லுத்பிய்யா என்றழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்துக் கொண்டு) வந்தபோது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அவர், ‘இது உங்களுக்குரியது; இது (எனக்கு) அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறினார்.

அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘நீர் சொல்வது உண்மையானால் உம் தந்தை வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திரும்! உம்மிடம் அன்பளிப்புகள் வருகின்றனவா பார்ப்போம்’ என்று கூறினார்கள்.

பிறகு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘‘அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக்கிய ஒரு பணிக்காக உங்களில் ஒருவரை நான் அதிகாரியாக்க, அவர் சென்றுவிட்டு வந்து, ‘இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று சொல்கிறார். அவர் தம் தந்தை வீட்டில் அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திருந்தால் அவருக்கு அந்த அன்பளிப்புகள் வந்து சேருமா? 

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் எவரும் உரிமையின்றி (முறைகேடாக) எந்த ஒன்றை அடைந்து கொண்டாலும் மறுமை நாளில் அதை (தம் தோளில்) சுமந்த வண்ணமே அல்லாஹ்வை அவர் சந்திப்பார். இந்த வகையில் கனைத்துக் கொண்டிருக்கும் ஒட்டகத்தையோ, கத்திக் கொண்டிருக்கும் பசுவையோ ஆட்டையோ (தம் தோளில்) சுமந்து கொண்டு அல்லாஹ்வைச் சந்திக்கும் எவரையும் நான் உறுதியாக அறிவேன்’ என்று கூறினார்கள்.

பிறகு, தம் அக்குளின் வெண்மை தெரியும் அளவிற்குத் தம் இரண்டு கைகளையும் உயர்த்தி, ‘இறைவா! (உன் கட்டளையை) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?’ என்று நபியவர்கள் கூறியதை என் கண்ணால் கண்டேன்; என் காதால் கேட்டேன்.

அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி)
நூல்: புகாரி-6979 

வணக்கம் முதற்கொண்டு நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் எளிமையைப் போதிக்கும் மார்க்கத்தில் நாம் வாழ்கிறோம். நபி (ஸல்) அவர்களும் எளிமையையே தேர்ந்தெடுப்பவர்களாகவும், எளிமையைப் போதிப்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். எனவே நாமும் உலக விஷயங்களில் நமக்கு நாமே ஒரு நிர்ப்பந்தத்தை, நெருக்கடியை ஏற்படுத்தாமல், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி விடாமல் ஓர் எளிய, இன்பமான வாழ்க்கையை வாழ முயற்சிக்க வேண்டும்.

சிறந்த அன்பளிப்பு எது?

அன்பளிப்பு என்றவுடன் விலை உயர்ந்த பொருட்களின் மீது தான் நமது எண்ணங்கள் பாய்கின்றன. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் அன்பளிப்பு எப்படி இருந்தது என்றால் ஒருவருக்கு எது மிகவும் தேவையுடையதாக இருக்கிறதோ அதுவே வழங்கப்பட்டது. நபியவர்களின் காலத்தில் உணவு, உடை போன்ற பொருட்களே அதிகம் தேவைப்பட்டன. அத்தகைய பொருட்கள் தான் பகிரப்பட்டன.

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ

جَاءَتِ امْرَأَةٌ بِبُرْدَةٍ، قَالَ سَهْلٌ: هَلْ تَدْرِي مَا البُرْدَةُ؟ قَالَ: نَعَمْ، هِيَ الشَّمْلَةُ مَنْسُوجٌ فِي حَاشِيَتِهَا، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي نَسَجْتُ هَذِهِ بِيَدِي أَكْسُوكَهَا، فَأَخَذَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْتَاجًا إِلَيْهَا، فَخَرَجَ إِلَيْنَا وَإِنَّهَا لَإِزَارُهُ،

فَجَسَّهَا رَجُلٌ مِنَ القَوْمِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اكْسُنِيهَا، قَالَ: «نَعَمْ» فَجَلَسَ مَا شَاءَ اللَّهُ فِي المَجْلِسِ، ثُمَّ رَجَعَ فَطَوَاهَا، ثُمَّ أَرْسَلَ بِهَا إِلَيْهِ،

فَقَالَ لَهُ القَوْمُ: مَا أَحْسَنْتَ، سَأَلْتَهَا إِيَّاهُ، وَقَدْ عَرَفْتَ أَنَّهُ لاَ يَرُدُّ سَائِلًا، فَقَالَ الرَّجُلُ: وَاللَّهِ مَا سَأَلْتُهَا إِلَّا لِتَكُونَ كَفَنِي يَوْمَ أَمُوتُ. قَالَ سَهْلٌ: فَكَانَتْ كَفَنَهُ

ஒரு பெண்மணி ‘புர்தா’ (சால்வை) ஒன்றைக் கொண்டு வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் இதை என் கையால் நெய்தேன். இதைத் தாங்கள் அணிவதற்காக வழங்குகிறேன்’ என்றார்.

இவ்வாறு ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, ‘புர்தா’ என்றால் என்ன என்று தெரியுமா? எனக் கேட்டார்கள். (அங்கிருந்தவர்கள் ‘தெரியும்’ என்று சொல்ல,) ‘ஆம் அது கரை வைத்து நெய்யப்பட்ட போர்வை’ என ஸஹ்ல் (ரலி) கூறினார். (பின்னர் தொடர்ந்து அவர்கள் சொன்னார்கள்:)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அது தமக்குத் தேவையென்று கருதி அதை வாங்கினார்கள். பிறகு, அதை கீழங்கியாக அணிந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது மக்களில் ஒருவர் அதைத் தொட்டுப் பார்த்து (அதன் அழகை ரசித்தவராக) ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு இதை அணியக் கொடுங்கள்’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘சரி’ என்றார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் நாடிய (நேரம்)வரை அந்த அவையில் அமர்ந்திருந்துவிட்டு (தம் வீட்டுக்கு)த் திரும்பினார்கள். பிறகு அந்தச் சால்வையை மடித்து அந்த மனிதருக்குக் கொடுத்தனுப்பினார்கள்.

மக்கள், ‘நீ செய்தது சரியல்ல. நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கேட்பவரை (வெறுங்கையோடு) திருப்பி அனுப்புவதில்லை என்று தெரிந்துகொண்டே அவர்களிடம் (ஏன்) இதைக் கேட்டாய்’ என்றார்கள். அதற்கு அந்த மனிதர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதைக் கேட்டதெல்லாம் நான் இறக்கும் நாளில் என் (உடலில் அணிவிக்கப்படும்) கஃபனாக இது இருக்கட்டும் என்பதற்காகத்தான்’ என்றார். அவ்வாறே அது அவருக்குக் கஃபனாக ஆயிற்று.

அறிவிப்பவர்: அபூஹாஸிம் ஸலமா இப்னு தீனார்
நூல்: புகாரி-5810 , 2574, 2616

நாமோ தேவையுடையதை, தேவையுடைய நபர்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, எது ஆடம்பரமாக இருக்கிறது? எது நம் பெயர் கூறும் விதமாக இருக்கின்றது என்று யோசித்து பெருமைக்காக, பொருளின் பகட்டைக் காட்டுவதற்காக அன்பளிப்பு வழங்குகிறோம். இல்லாதவர்களுக்கு நாம் வழங்குவதில்லை.

இருப்பவர்களுக்கு மேலும் மேலும் பொருட்களை வழங்குகிறோம். நாம் கொடுக்கும் பொருள் இம்மையிலும் பயன் தந்து அதன் நன்மையை மறுமையிலும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கம் நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு இருப்பதில்லை. உணவு வழங்குவதும் அன்பளிப்புத் தான் என்பதே நமக்குத் தெரிவதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்பளிப்பை வலியுறுத்தும் போது உணவையே முற்படுத்தினார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«يَا نِسَاءَ المُسْلِمَاتِ، لاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا، وَلَوْ فِرْسِنَ شَاةٍ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம் பெண்களே ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-2566 

பசித்தவர்களுக்கு உணவளிப்பது இஸ்லாத்தில் சிறந்த செயலாகப் பார்க்கப்படுகின்றது.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا،
« أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الإِسْلاَمِ خَيْرٌ؟ قَالَ : تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ»

ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)
நூல்: புகாரி-12 

எனவே வறியவர்களுக்கும் தேவையுடையவர்களுக்கும் அவர்களது தேவையை உணர்ந்து பயனடையும் வகையில் கொடுக்கப்படும் அன்பளிப்பே சிறந்தது.

தடுக்கப்பட்ட அன்பளிப்பு

சில நபர்கள் வெள்ளி, தங்கத்தினாலான பாத்திரங்களை அன்பளிப்பாக வழங்குவார்கள். அது தடை செய்யப்பட்டதாகும்.

عَنِ ابْنِ أَبِي لَيْلَى، قَالَ
خَرَجْنَا مَعَ حُذَيْفَةَ، وَذَكَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ تَشْرَبُوا فِي آنِيَةِ الذَّهَبِ وَالفِضَّةِ، وَلاَ تَلْبَسُوا الحَرِيرَ وَالدِّيبَاجَ، فَإِنَّهَا لَهُمْ فِي الدُّنْيَا وَلَكُمْ فِي الآخِرَةِ»

நாங்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களுடன் புறப்பட்டோம். அவர்கள், ‘தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருகாதீர்கள். (ஆண்கள்) சாதாரண பட்டையும் அலங்காரப் பட்டையும் அணியாதீர்கள்.

ஏனெனில், அவை இம்மையில் (இறை மறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறை நம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அபீ லைலா
நூல்: புகாரி-5633 , 5634

தனது கவுவரத்த்தையும் மதிப்பையும் நிலைநாட்டுவதற்காகத் தனது தகுதிக்கு மீறிய அன்பளிப்புச் செய்வதற்காக வட்டிக்குக் கடன் வாங்கி செய்கின்றனர். இதுவும் தடை செய்யப்பட்டதாகும். வட்டி என்பது நிரந்த நரகில் தள்ளும் பாவமாகும்.

அன்பளிப்பு வழங்கத் தகுந்த நேரம்

அன்பளிப்பு வழங்கப்பட்டதற்கு, நாமும் பிரதி அன்பளிப்பு வழங்க வேண்டும் என்ற தவறான நிலைப்பாடு சமூகத்தில் நிலவுகின்றது. இதன் காரணமாகத் தான் திருமணம், புதுவீடு புகுதல் போன்ற காரியங்களில் அவர்கள் வழங்கியதைப் போன்று அல்லது அதை விட சற்று  அதிகமாக வழங்கி கடமை கழிந்தது என்று எண்ணுகின்றனர்.

இன்னும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் பெயர் எழுதப்பட்ட பணக் கவரை அல்லது பெயர் பொறிக்கப்பட்ட பாத்திரத்தை அன்பளிப்பாகக் கொடுத்து விட்டுக் கடனை நிறைவேற்றுகின்றனர். இதுதான் சமூகத்தின் பார்வையில் அன்பளிப்பாக உள்ளது.

ஆனால் உண்மையில் அன்பளிப்பு என்பது கொடுத்ததற்குப் பதிலாகக் கொடுப்பது கிடையாது. நமக்கு அன்பளிப்பு வழங்கியவருக்கு ஒரு இக்கட்டான நிலை வரும் போது, தேவை ஏற்படும் போது அவரது தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் அன்பளிப்பு வழங்க வேண்டும். அதுவே தகுந்த நேரத்தில் வழங்கப்படும் சரியான அன்பளிப்பாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தமக்கு அன்பளிப்பு வழங்கியவர்களுக்கு அவ்வாறே எதையேனும் கொடுத்து ஈடு செய்து வந்தார்கள்.

ஆடம்பரத்திற்காகவும் பகட்டுக்காகவும் செய்யாமல் நமது நெருங்கிய உறவுகளுக்குப் பொருளுதவி தேவைப்படும் போது அவர்களுக்கு நாம் உதவி செய்யலாம். அதற்குக் கூலி இருக்கின்றது.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) உடைய மனைவி ஸைனப் (ரலி) அறிவித்தார்.

كُنْتُ فِي المَسْجِدِ، فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «تَصَدَّقْنَ وَلَوْ مِنْ حُلِيِّكُنَّ» وَكَانَتْ زَيْنَبُ تُنْفِقُ عَلَى عَبْدِ اللَّهِ، وَأَيْتَامٍ فِي حَجْرِهَا، قَالَ: فَقَالَتْ لِعَبْدِ اللَّهِ: سَلْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَيْكَ وَعَلَى أَيْتَامٍ فِي حَجْرِي مِنَ الصَّدَقَةِ؟ فَقَالَ: سَلِي أَنْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَانْطَلَقْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدْتُ امْرَأَةً مِنَ الأَنْصَارِ عَلَى البَابِ، حَاجَتُهَا مِثْلُ حَاجَتِي، فَمَرَّ عَلَيْنَا بِلاَلٌ، فَقُلْنَا: سَلِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَى زَوْجِي، وَأَيْتَامٍ لِي فِي حَجْرِي؟ وَقُلْنَا: لاَ تُخْبِرْ بِنَا، فَدَخَلَ فَسَأَلَهُ، فَقَالَ: «مَنْ هُمَا؟» قَالَ: زَيْنَبُ، قَالَ: «أَيُّ الزَّيَانِبِ؟» قَالَ: امْرَأَةُ عَبْدِ اللَّهِ، قَالَ: «نَعَمْ، لَهَا أَجْرَانِ، أَجْرُ القَرَابَةِ وَأَجْرُ الصَّدَقَةِ»

நான் பள்ளிவாயிலில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்’ எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி)வுக்கும் மற்றும் என் அரவணைப்பிலுள்ள அனாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், ‘‘நான் உங்களுக்காகவும் என்னுடைய அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்காகவும் என்னுடைய பொருளைச் செலவழிப்பது ஸதாகாவாகுமா-? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள்’’ எனக் கூறினேன்.

அப்துல்லாஹ் (ரலி), ‘அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்’ எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி (ஸல்) அவர்கள் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரின் நோக்கமும் என்னுடைய நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் (ரலி) வந்தார். அவரிடம் நான், ‘‘என்னுடைய கணவருக்கும் என்னுடைய பராமரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கவேண்டாம்’’ எனக் கூறினோம்.

உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘அவ்விருவரும் யார்?’ எனக் கேட்டதற்கு அவர் ‘ஸைனப்’ எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் ‘எந்த ஸைனப்?’ எனக் கேட்டதும் பிலால் (ரலி), ‘அப்துல்லாஹ்வின் மனைவி’ எனக் கூறினார். உடனே நபி (ஸல்) ‘ஆம்! ஸைனபுக்கு இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததிற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது’ எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி-1466 

அன்பளிப்பு குறித்த தவறான நடைமுறையிலிருந்து விலகி, அன்பளிப்பின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து, நாமும் பயனடைந்து, பிறரையும் பயனடையச் செய்வோமாக! அப்படிப்பட்ட நன் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.