Tamil Bayan Points

இஸ்லாமிய சட்டத்தை மெய்ப்பிக்கும் நீதிமன்ற தீர்ப்பு

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on November 4, 2019 by

இஸ்லாமிய சட்டத்தை மெய்ப்பிக்கும் நீதிமன்ற தீர்ப்பு

பெண்களின் ஆடை விஷயத்தில் இஸ்லாம் வலியுறுத்துகின்ற கட்டுப்பாடுகளை விமர்சனம் செய்பவர்களை, அவர்கள் வாயாலேயே அதை ஆதரித்து பேச வைக்கின்ற அற்புதத்தை இறைவன் அவ்வப்போது நிகழ்த்துவதை நாம் காண்கிறோம். சில ஆண்டுகள் முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையானது, ஒரு பரபரப்பு தீர்ப்பொன்றை வெளியிட்டிருந்தது. அந்த தீர்ப்பின்படி,கோவில்களுக்குள் நுழைபவர்கள், அரைகுறை ஆடைகளை அணிவதற்கு தடை என்கிற பரபரப்பு தீர்ப்பை கூறியிருந்தார் நீதிபதி எஸ்.வைத்தியநாதன்.

இதனை மறந்து விட்டவர்கள் தற்போதும் ஊடகங்களில் அமர்ந்து கொண்டு இஸ்லாம் தான் பெண்களை ஆடை எனும் பெயரால் கட்டுப்படுத்துகிறது என்பதாக தொடர்ந்து பேசி வருகின்றனர். இதற்கு அந்த நீதிபதி கூறிய விளக்கம் தான் இன்னும் கவனிக்கத்தக்கது. அதாவது, கோவிலுக்குள் செல்லும் போது சுத்தம் சுகாதாரத்தை பேண வேண்டும், அதோடு, ஒழுக்கத்தையும் (கவனிக்க: ஒழுக்கம்!) பேண வேண்டும். அதனால் தான் இந்த ஆடை கட்டுப்பாடு என்று விளக்கமளிக்கிறார் நீதிபதி. இந்த தீர்ப்பிலிருந்து, கோவிலுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்ட ஆடைகள் தான் ஒழுக்கமானது என்றும், தடை செய்யப்பட்ட ஒழுக்கமற்றவை எனவும் நிரூபணமாகின்றது.

கோவிலுக்குள் அணிந்து வர தடை செய்யப்பட்ட (அதாவது ஒழுக்கமற்ற ஆடைகள்) எவை எவை என்பதையும் அதே தீர்ப்பில் அவர் கூறியிருக்கிறார். அதன்படி, அரை டவுசர், ஷார்ட்ஸ், மினி ஸ்கார்ட், மிடி, கையில்லாத மேலாடை, இடுப்புக்கு கீழ் நிற்கும் ஜீன்ஸ், இடுப்புக்கு மேல் நிற்கும் டி ஷர்ட், லெக்கின்ஸ் போன்றவை கோவிலுக்குள் அணிந்து வர தடை!! ஆடை கட்டுப்பாடு என்பது கிறுத்தவ, இஸ்லாமிய மத வழிபாட்டு தலங்களில் பேணப்பட்டு தான் வருகின்றது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் மட்டும் சிறு திருத்தத்தை நாம் சுட்டிக்காட்ட வேண்டி யுள்ளது. பெண்களைப் பொறுத்த வரை, கணவர் அல்லது, திருமணம் செய்யக் கூடாத இதர இரத்த பந்தங்களிடம் தான் ஆடைகளில் கட்டுப் பாட்டை பேண வேண்டி யதில்லை. அது அல்லாமல், வேறு எவர் முன்னிலையில் அவர்கள் செல்வதாக இருந்தாலும், வீட்டை விட்டு அவர்கள் எங்கே வெளியே சென்றாலும் அவர்கள் முகமும், முன் கையையும் தவிர வேறு எதையுமே வெளிக்காட்டக் கூடாது என்கிற ஒழுக்க மாண்பினை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

அதே கட்டுப்பாடு தான் பள்ளிவாசலுக்கும். பள்ளிவாசலுகென்று பிரத்தியேக ஆடை கட்டுப்பாடு எதையும் இஸ்லாம் பெண்களிடம் விதிக்கவில்லை. இவர்கள் கோவிலுக்குள் (கோவிலுக்குள்ளாவது..!) பேணுங்கள் என்று கூறியிருக்கும் ஆடை கட்டுப் பாட்டை விடவும் அதிகமான கட்டுப் பாட்டினை இஸ்லாம் 1400 ஆண்டுகளாக எல்லா இடங்களிலும் பேண சொல்கின்றது ! எப்படியோ, பெண்களின் ஆடை விஷயத்தில் நீதிமன்றமே தலையிட்டு, பல கட்டுப்பாடுகள் விதித்து, இது தான் ஒழுக்கமானது என்கிற தீர்ப்பினையும் வழங்கியது நிச்சயம் பாராட்டுதலுக்குரியது தான்.

Source: unarvu (02/08/19)