Tamil Bayan Points

உண்மையை மறைக்காத  உத்தமத் தூதர்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on September 30, 2023 by Trichy Farook

உண்மையை மறைக்காத  உத்தமத் தூதர்

முன்னுரை 

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் வாழ்கை, உலகத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கு ஓர் அழகிய எடுத்துக்காட்டு. நபிகளாரின் வாழ்கை ஏராளமான முன்மாதிரிகள் கொண்ட வாழ்கையாக அமைந்து இருந்தது. திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் அவர்களின் வாழ்கையில் நடந்த ஏராளமான நிகழ்வுகள் சொல்லப்பட்டிருந்தாலும் இந்த உரையில் நாம் அல்லாஹ்வின் தூதர் எந்த உண்மையும் மறைக்காத உத்தம தூதர் என்ற தலைப்பில் சில செய்திகளை காண்போம். 

மார்க்கத்தின் அடிப்படையை அறியாத மக்கள் பல்வேறு வகையான பாவங்களிலும் குற்றங்களிலும் வீழ்ந்து கிடக்கிறார்கள். மற்றொரு பக்கம், மார்க்கத்தை அறிந்துள்ள மக்கள் பலரும், அதன்படி வாழாமல் அலட்சியமாக இருக்கிறார்கள். இப்படி, உண்மையை ஒதுக்கித் தள்ளும் தீய குணம் முஃமின்களிடம் இருக்கக் கூடாது. சத்தியத்திற்கு ஏற்ப சீரிய முறையில் வாழ்வைத் திருத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் மறுமையில் கவலையின்றி இருக்க முடியும்.

وَمَنْ يَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ وَلَمْ يُصِرُّوْا عَلٰى مَا فَعَلُوْا وَهُمْ يَعْلَمُوْنَ‏

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 3:135)

فَمَنْ اٰمَنَ وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏

நம்பிக்கை கொண்டு, சீர்திருத்திக் கொள்வோருக்கு அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 6:48)

இவ்வசனங்களை விளக்கும் வகையில் நபிகளாரின் வாழ்வும், வாக்கும் இருந்தது. மார்க்க விசயமாக இருப்பினும், தமது விவகாரமாக இருப்பினும் எப்போதும் உண்மையின் உறைவிடமாக திகழ்ந்தார்கள், நபி (ஸல்) அவர்கள். ஆகவே தான், அல்லாஹ் தம்மைக் கண்டிக்கும் வசனங்களையும் கொஞ்சமும் மறைக்காமல் திரிக்காமல் மக்கள் மன்றத்தில் முன்வைத்தார்கள்.

உள்ளது உள்ளபடி சொல்லும் நற்குண செம்மல் 

لَيْسَ لَكَ مِنَ الْاَمْرِ شَىْءٌ اَوْ يَتُوْبَ عَلَيْهِمْ اَوْ يُعَذِّبَهُمْ فَاِنَّهُمْ ظٰلِمُوْنَ‏

(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம்.

(அல்குர்ஆன்: 3:128)

اِنَّكَ لَا تَهْدِىْ مَنْ اَحْبَبْتَ وَلٰـكِنَّ اللّٰهَ يَهْدِىْ مَنْ يَّشَآءُ‌ؕ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ‏

(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்.

(அல்குர்ஆன்: 28:56)

 يٰۤاَيُّهَا النَّبِىُّ لِمَ تُحَرِّمُ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَـكَ‌ۚ تَبْتَغِىْ مَرْضَاتَ اَزْوَاجِكَ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

நபியே! உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.

(அல்குர்ஆன்: 66:1)

عَبَسَ وَتَوَلّٰٓىۙ‏
 اَنْ جَآءَهُ الْاَعْمٰىؕ‏
 وَمَا يُدْرِيْكَ لَعَلَّهٗ يَزَّكّٰٓىۙ‏

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?

(அல்குர்ஆன்: 80:1-3)

எதையும் உள்ளது உள்ளபடி சொல்லும் நற்குண செம்மலாக நபிகளார் இருந்தார்கள் என்பதற்கு இவை மட்டுமல்ல, மேலும் நிறைய சான்றுகள் உள்ளன.

مَرَرْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَوْمٍ عَلَى رُءُوسِ النَّخْلِ، فَقَالَ: «مَا يَصْنَعُ هَؤُلَاءِ؟» فَقَالُوا: يُلَقِّحُونَهُ، يَجْعَلُونَ الذَّكَرَ فِي الْأُنْثَى فَيَلْقَحُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَظُنُّ يُغْنِي ذَلِكَ شَيْئًا» قَالَ فَأُخْبِرُوا بِذَلِكَ فَتَرَكُوهُ، فَأُخْبِرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ فَقَالَ: «إِنْ كَانَ يَنْفَعُهُمْ ذَلِكَ فَلْيَصْنَعُوهُ، فَإِنِّي إِنَّمَا ظَنَنْتُ ظَنًّا، فَلَا تُؤَاخِذُونِي بِالظَّنِّ، وَلَكِنْ إِذَا حَدَّثْتُكُمْ عَنِ اللهِ شَيْئًا، فَخُذُوا بِهِ، فَإِنِّي لَنْ أَكْذِبَ عَلَى اللهِ عَزَّ وَجَلَّ»

பேரீச்ச மரங்களின் உச்சியில் இருந்து கொண்டிருந்த (மதீனாவாசிகள்) சிலரைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது, “இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?’’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “பெண் மரங்களுடன் ஆண் மரங்களை இணைத்து ஒட்டுச் சேர்க்கை செய்து (பெண் மரங்களை) சூல் கொள்ளச் செய்கின்றனர்’’ என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதனால் பயனேதும் ஏற்படும் என்று நான் கருதவில்லை’’ என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைப் பற்றி (மதீனா விவசாயிகளிடம்) தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் ஒட்டுச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். (அந்த ஆண்டில் அவர்களுக்கு மகசூல் பாதிக்கப்பட்டது.)

இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, “அ(வ்வாறு செய்வ)தனால் அவர்களுக்குப் பயன் ஏற்படுமானால் அவ்வாறு செய்துகொள்ளட்டும். நான் எனது யூகத்தையே தெரிவித்தேன். யூகத்தை தெரிவித்ததை வைத்து என்மீது குற்றம் சாட்டாதீர்கள். ஆயினும், நான் உங்களிடம் அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். ஏனெனில், நான் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைக்க மாட்டேன்’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம்-4711 

மற்றொரு அறிவிப்பில் ( முஸ்லிம்-4712 ), “நான் ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே’’ என்று சொன்னதாக உள்ளது.

மற்றொரு அறிவிப்பில் ( முஸ்லிம்-4713 ), நபி (ஸல்) அவர்கள், “உங்கள் உலக விவகாரங்கள் பற்றி (என்னைவிட) நீங்களே நன்கு அறிந்தவர்கள்’’ என்று சொன்னதாக உள்ளது.

மகசூல் குறைந்தது பற்றி மக்கள் முறையிடும் போது, தம்மை குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என்று நபிகளார் தயங்கவில்லை. தமக்கு எல்லாம் தெரியும் என்று வாதிடவும் இல்லை. தூதுத்துவத்தைப் பின்பற்றும் முறை பற்றியும் தமது இயல்பு நிலை பற்றியும் பகிரங்கமாக விளக்குகிறார்கள்.

ஆனால், இன்றும் சிலர் தங்களுக்கு அசாதரண ஆற்றல் இருப்பதாக சுற்றித் திரிகிறார்கள். பார்வை பட்டால் பேய் ஓடிவிடும்; கை பட்டால் நோய் குணமாகி விடும்; போகும் இடம் பணம் கொட்டும் என்றெல்லாம் கதை விடுகிறார்கள். தாயத்து தகடு போன்றவை மூலமாக எதிர்காலத்தையே மாற்றிவிடுவதாக நடிக்கிறார்கள்.

இப்படி ஆன்மீகத்தின் பெயரால் ஊரை ஏமாற்றும் ஆசாமிகளைப் பார்க்கும்போது, நபிகளார் மனிதருள் மாணிக்கம் என்பதை என்றும் மறுக்க இயலாது.

மறதியை ஒப்புக்கொண்ட உத்தம தூதர்  

صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ إِبْرَاهِيمُ: لاَ أَدْرِي زَادَ أَوْ نَقَصَ – فَلَمَّا سَلَّمَ قِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، أَحَدَثَ فِي الصَّلاَةِ شَيْءٌ؟ قَالَ: «وَمَا ذَاكَ»، قَالُوا: صَلَّيْتَ كَذَا وَكَذَا، فَثَنَى رِجْلَيْهِ، وَاسْتَقْبَلَ القِبْلَةَ، وَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، فَلَمَّا أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ، قَالَ: «إِنَّهُ لَوْ حَدَثَ فِي الصَّلاَةِ شَيْءٌ لَنَبَّأْتُكُمْ بِهِ، وَلَكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ، أَنْسَى كَمَا تَنْسَوْنَ، فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي، وَإِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلاَتِهِ، فَلْيَتَحَرَّ الصَّوَابَ فَلْيُتِمَّ عَلَيْهِ، ثُمَّ لِيُسَلِّمْ، ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ»

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (லுஹ்ரையோ அஸ்ரையோ வழக்கத்திற்கு மாறாகத்) தொழுதார்கள். -(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நபியவர்கள் (அத்தொழுகையின் ரக்அத்தை) கூடுதலாக்கினார்களா அல்லது குறைத்துவிட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.-

(தொழுகையை முடிக்க) அவர்கள் சலாம் கொடுத்தபோது அவர்களிடம், “இந்தத் தொழுகையின்போது (தற்போதுள்ள தொழுகையின் ரக்அத்தை) மாற்றுகின்ற (இறை அறிவிப்பு) ஏதேனும் வந்ததா?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஏன் இவ்வாறு (வினவுகின்றீர்கள்?)’’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “நீங்கள் இப்படி இப்படித் தொழுதீர்கள் (அதனால் தான் கேட்கிறோம்)’’ என்றனர்.

உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகையின் இருப்பில் உட்கார்வது போன்று) தமது காலை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் (மீண்டும்) சலாம் கொடுத்தார்கள். இதன் பின்னர் எங்களை முன்னோக்கித் திரும்பியபோது, “ஓர் விஷயம்! தொழுகையில் ஏதேனும் மாற்றங்ககள் வருமானால், கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்துவிடுவேன். ஆயினும் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; நீங்கள் மறந்துவிடுவதைப் போன்று நானும் மறந்துவிடுகின்றேன்.

அவ்வாறு நான் (எதையேனும்) மறந்துவிடும்போது எனக்கு (அதை) நினைவூட்டுங்கள்; என்று கூறிவிட்டு, “உங்களில் ஒருவர் தமது தொழுகையில் (எதையேனும் கூடுதலாகச் செய்ததாகவோ குறைத்துவிட்டதாகவோ) சந்தேகிக்கும் போது சரியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் (தொழுகையைப்) பூர்த்தி செய்து சலாம் கொடுத்த பின்னர் (மறதிக்குரிய) இரண்டு சஜ்தாக்கள் செய்யட்டும்‘’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி-401 

சிலர் பொதுமக்கள் மத்தியில் தங்களைத் தனித்துவம் கொண்டவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். குறைகள், தவறுகள் ஏதுமில்லா மகான்களாகப் படம் காட்டுகிறார்கள். இந்த வியாதி காரணமாக, தாங்கள் மக்களுக்குத் தெரிவித்த மார்க்க தீர்ப்புகள், கருத்துகள் தவறானவை என்று தெரிந்தும் அதற்கு நியாயம் கற்பிக்கிறார்கள். அல்லது பெயர் கெட்டுவிடக் கூடாதென மௌனமாகி விடுகிறார்கள். இவர்கள் எல்லாம் நபிகளாரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

சரியான கருத்தை அங்கீகரித்த சத்திய தூதர் 

سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، يَقُولُ
حِينَ صَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا: يَا رَسُولَ اللهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ» قَالَ: فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ، حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?’’ என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்’’ என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.

இன்னொரு அறிவிப்பில், “அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில் (சேர்த்து) நோன்பு நோற்பேன்’’ என்று கூறியதாக உள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம்-2088 , 2089

பிறமதக் கலாச்சாரம் பற்றி தூதர் அவர்கள் கடுமையாக எச்சரித்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஆஷூரா நோன்பு பற்றி தோழர் ஒருவருக்கு சந்தேகம் எழுகிறது. அதிலுள்ள நியாயத்தை நபிகளார் ஏற்றுக் கொள்கிறார்கள். அல்லாஹ்வின் அனுமதிப்படி அந்த நோன்பின் சட்டத்தை மாற்றுகிறார்கள்.

இன்று நிலைமை என்ன? நபிகளாரின் காலத்திலேயே மார்க்கம் முழுமையான பிறகும், அதில் இல்லாத காரியங்களை பல முஸ்லிம்கள் செய்து வருகிறார்கள். அவர்களிடம் குர்ஆன் ஹதீஸை சுட்டிக் காட்டினால் செவியேற்க மறுக்கிறார்கள். அறிந்தாலும் பொய்யான காரணங்களைக் கற்பித்துக் கொண்டு ஷிர்க்கிலும் பித்அத்திலும் ஆட்டம் போடுகிறார்கள்.

ஒருவர் முஸ்லிமோ, காஃபிரோ, எவராக இருந்தாலும் அவருடைய கருத்து சரியாக இருக்கும் போது அதனை அங்கீகரிப்பதே சரியானது. அதுவே சத்தியத் தூதரின் வழிமுறையாக இருந்தது.

أَنَّ يَهُودِيًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّكُمْ تُنَدِّدُونَ، وَإِنَّكُمْ تُشْرِكُونَ تَقُولُونَ: مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ، وَتَقُولُونَ: وَالْكَعْبَةِ، ” فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادُوا أَنْ يَحْلِفُوا أَنْ يَقُولُوا: وَرَبِّ الْكَعْبَةِ، وَيَقُولُونَ: مَا شَاءَ اللَّهُ، ثُمَّ شِئْتَ

ஒரு யூதன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘‘நீங்கள் இணைக் கடவுள்களை ஏற்படுத்துகின்றீர்கள். நீங்கள் இணை கற்பிக்கின்றீர்கள். (அதாவது) நீங்கள் அல்லாஹ்வும் நீங்களும் நாடியது நடந்து (என்று இறைநாட்டத்திற்கு சமமாக மனித நாட்டத்தை இணைத்துக்) கூறுகின்றீர்கள்.

இன்னும் கஅபாவின் மீது சத்தியமாக என்றும் கூறுகின்றீர்கள்’’ என்று கூறினார். உடனே நபியவர்கள் (ஸஹாபாக்களாகிய) அவர்களுக்கு, சத்தியம் செய்யும் போது கஅபாவின் இரட்சகன் மீது சத்தியமாக என்று கூறவேண்டும் என்றும், அல்லாஹ் நாடினான், பிறகு நீங்கள் நாடியது நடந்தது என்ற கூறவேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: குதைலா (ரலி)
நூல்கள்: நஸாயீ-3773 (3713), அஹ்மத் (25845)

இவ்வாறு தூதர் வாழ்வில் சம்பவங்களை நிகழ்த்தி மார்க்கத்தை அணுகும் முறையை அல்லாஹ் நமக்கு புரிய வைக்கிறான். ஆகவே, ஆளைப் பார்த்து செய்தியை முடிவு செய்துவிட முடியாது. நல்ல நபரிடமும் தவறான கருத்து இருக்கும். கெட்ட மனிதனிடமும் சரியான தகவல் கிடைக்கும். எதிலும் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டு ஏற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை.

உண்மை எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்

ரமளானுடைய ஃபித்ரா பொருட்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் இருந்தது. இரவில் திருடன் ஒருவன் வந்து அதிலிருந்து எடுக்கிறான். அவர் அவனை பிடிக்கும் போது, இனிமேல் வர மாட்டேன் என்று கெஞ்சியதால் விட்டுவிடுகிறார்கள். இரவு சம்பவத்தை நபிகளாரிடம் தெரிவிக்கிறார்கள். திருடன் மீண்டும் வருகிறான். முதல் நாள் போலவே இரண்டு நாட்கள் கழிகிறது. இது குறித்து அந்த நபித்தோழரே விவரித்துள்ளார்கள்.

மூன்றாம் தடவை அவனுக்காகக் காத்திருந்தபோது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான்.  அவனைப் பிடித்து, “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன் (ஒவ்வொரு முறையும்) “இனிமேல் வரமாட்டேன்! என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்!’’ என்று கூறினேன். 

அதற்கவன், “என்னை விட்டுவிடும்! அல்லாஹ் உமக்குப் பயளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!’’ என்றான். அதற்கு நான், “அந்த வார்த்தைகள் என்ன?’’ என்று கேட்டேன். “நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்றான். அவனை நான் விட்டுவிட்டேன்.  விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் “நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?’’ என்று கேட்டார்கள்.  “அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனை விட்டுவிட்டேன்! என்றேன்.  

“அந்த வார்த்தைகள் என்ன?’’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.  “நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற(வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான்” எனத் தெரிவித்தேன்.

-நபித் தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல்படுத்துவ)தில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தனர்- அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும்  உம்மிடம் உண்மையைத்தான் சொல்லி இருக்கின்றான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள்.  “தெரியாது!’’ என்றேன். “அவன்தான் ஷைத்தான் (திருடன்)!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-2311 

முடியுரை: 

மேற்கண்ட சம்பவங்கள் அனைத்திலும் நபிகளாரின் நடவடிக்கையைக் கவனியுங்கள். அவை நமக்குச் சொல்லும் பாடம் ஒன்றுதான். உண்மை எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதனை மறைக்க கூடாது. எந்தவொரு பாகுபாடும் பாராமல், அதற்கேற்ப நம்மை சீர்திருத்திக் கொள்ள வேண்டும். இத்தகு நல்ல புரிதலை வல்ல இறைவன் நமக்கு வழங்குவானாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.