Tamil Bayan Points

உயிர் காத்த இஸ்லாமியர்கள்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on November 7, 2019 by

உயிர் காத்த இஸ்லாமியர்கள்

“பத்துக்காசு முருக்கு பள்ளிவாசலை நொறுக்கு” என்கிற துவேச முழக்கத்துடன் செல்லும் விநாயகர் ஊர்வலத்தால் வருடா வருடம் நாடே ஒருவிதமான பரபரப்பிற்குத் தள்ளப்படுகின்றது. காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு குறித்து மிகவும் கவலையடையும் நிலை உண்டாகின்றது. விநாயகர் ஊர்வலத்தை மையமாக வைத்து தங்களின் அரசியல் ஆதாயத்தை அடைய பல தீய சக்திகள் முயற்சி செய்கின்றன.

விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் இஸ்லாமியர்களை குறிவைத்து கோசங்கள் எழுப்புவதும், பள்ளிவாசலின் முன்னால் நின்று குத்தாட்டம் போடுவதும், பள்ளிவாசல்களுக்குள் சாரய பாட்டில்களை செருப்புக்களை வீசுவதும் பல இடங்களில் வாடிக்கையான ஒன்றாகவே இருந்து வருகின்றது. இஸ்லாமியர்கள் வாழும் பகுதிக்குள் வம்படியாக விநாயகர் சிலையைக் கொண்டு சென்று அதில் மின்சாரம் தாக்கி இருவர் பலியாகி விட., உயிருக்கு போராடியவர்களை அங்கிருந்த இஸ்லாமியர்கள் மீட்டு ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடந்த வாரம் விநாயகர் ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது முஸ்லிம்கள் வசிக்கும் ஆதர்ஸ் அங்காடித்தெரு வழியாக ஊர்வலம் செல்ல முயன்ற நேரத்தில் லேசான மழை பெய்யத் துவங்கியது. தெருவுக்குள் நுழையும் போது உயரமான விநாயகர் சிலை அங்கிருந்த மின்சாரக் கம்பியில் உரசி விநாயகர் சிலை மற்றும் ஊர்வல வாகனத்தின் மீது மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில் ஊர்வலத்தின் சென்ற சிலரின் மீது மின்சாரம் பாய்ந்து அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள்.

சம்பவ இடத்தில் இருவர் மரணமடைந்து விட மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடியவர்களை அங்கிருந்த இஸ்லாமிய மக்கள் மீட்டு ஆட்டோவைப் பிடித்து அனுப்பி வைத்துள்ளனர். இஸ்லாமியர்கள் பகுதியில் ஊர்வலத்தைக் கொண்டு சென்று அவர்களுக்கு தொந்தரவு தர நினைத்தவர்கள், உயிருக்குப் போராடும் நிலையில் அவர்களை மீட்டு உயிர்காக்கும் சேவையைச் செய்துள்ள இஸ்லாமியர்களின் பங்கு அளப்பறியதாகும். பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் என்று சொல்கின்றது இஸ்லாம் மார்க்கம். தங்களுக்கு தீங்கு தருபவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் நலம் நாடுவதே இஸ்லாம் என்பதை இந்தச் சம்பவம் நிருபித்து விட்டது..

Source: unarvu ( 13/09/19.)