Tamil Bayan Points

உயிர் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்கலாமா?

கேள்வி-பதில்: நம்பிக்கை தொடர்பானவை

Last Updated on November 22, 2016 by Trichy Farook

உயிர் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்கலாமா?

இஸ்லாத்தின் உயிர் மூச்சான கொள்கை ஏகத்துவக் கொள்கையாகும். இந்த ஏகத்துவக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கும் எந்தச் செயலுக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

இறந்தவர்களுக்காக நினைவுச் சின்னம் எழுப்புவது ஏகத்துவக் கொள்கைகயை குழி தோண்டி புதைக்கும் விதமாக தோற்றுவிக்கப்பட்ட பிறமதக் கலாச்சாரமாகும். நாளடைவில் அவற்றுக்கு புனிதத்தன்மை இருப்பதாகக் கருதி அவற்றை வணங்கும் நிலைக்கு மக்கள் சென்றுவிடுவர்.

இதனால் தான் நபிகள் நாயகம் தமக்கோ தமக்கு முன் வாழ்ந்து மறைந்த நல்லோர்களுக்கோ இது போன்று நினைவுச் சின்னங்கள் அமைக்க அனுமதி அளிக்கவில்லை. மாறாக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். தடை செய்துள்ளார்கள்.

யூதர்கள் தங்களில் ஒரு நல்லடியார் இறந்து விட்டால் அவர்களின் சமாதியில் கட்டடம் எழுப்பி அவர்களின் நினைவாக அவரது உருவத்தையும் பதித்து விடுவார்கள். இந்த செயலைச் செய்ததினால் யூதர்களை நபியவர்கள் சபித்துள்ளார்கள்.

அபிசீனிய நாட்டில் தாம் கண்ட “மரியா’ என்றழைக்கப்ட்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உம்மு சலமா அவர்கள் கூறினார்கள். அதில் தாம் கண்ட உருவப்படங்களைக் குறித்தும் உம்மு சலமா அவர்கள் குறிப்பிட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் எத்தகைய மக்கள் எனில், அவர்களிடையே நல்ல அடியார் “அல்லது நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டிவிடுவார்கள்; அதில் அந்த உருவங்களை வரைந்தும் விடுவார்கள். இத்தகையோர்தாம் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிகவும் மோசமானவர்கள்” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 434

ஒருவர் நல்லடியாராகவே இருந்தாலும் அவர் இறந்த பிறகு அவருக்காக கட்டடம் எழுப்புவது நினைவுச் சின்னம் அமைப்பது கூடாது என்று நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.

இணைவைப்பாளர்கள் நினைவுச் சின்னமாக ஒரு மரத்தை ஏற்படுத்தி அதற்கு புனிதத் தன்மை இருப்பதாக நம்பலானார்கள். முஸ்லிம்களும் அது போன்று தங்களுக்கும் ஒரு மரத்தை ஏற்படுத்தக் கோரிய போது நபியவர்கள் அதைக் கண்டித்துள்ளார்கள்.

மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து ஹுனைன் என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். அவ்வழியில் இணை வைப்பாளர்களுக்கு ஒரு மரம் இருந்தது. (புனிதம் கருதி) அங்கே அவர்கள் தங்குவார்கள். அதில் தங்களது ஆயுதங்களைத் தொங்க விடுவார்கள். அதற்கு தாது அன்வாத் என்று சொல்லப்படும். நாங்கள் பசுமையான பிரம்மாண்டமான ஒரு மரத்தைக் கடந்து சென்ற போது அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கும் ஒரு தாது அன்வாத்தை ஏற்படுத்துங்கள் என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுள்களை எற்படுத்தித் தருவீராக!” (7 : 138) என்று மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தினர்கள் கேட்டதைப் போன்று நீங்கள் கேட்டுள்ளீர்கள். எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக இவையெல்லாம் (நரகத்திற்கு அழைத்துச் செல்லும்) வழிகள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களின் வழியை ஒவ்வொன்றாக நீங்கள் கடைப்பிடிப்பீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ வாகித் (ரலி)

நூல் : அஹ்மத் (20892)

நினைவுத்தூண்கள் அமைக்கும் பிறமதக்கலாச்சாரத்தைப் பார்த்து நாமும் அது போன்று அமைக்கலாமே என்று கேட்பது மூஸாநபியின் சமுதாயம் மூஸாநபியிடம் கோரிக்கை .வைத்ததை போன்றாகும்.

இன்றைக்கு நடக்கும் இணைவைப்புக் காரியங்களில் அதிகமானவை இறந்தவர்கள் பெயரில் ஏற்படுத்திய நினைவுச் சின்னங்கள் பெயரால் தான் நடைபெறுகின்றன. நபியவர்கள் தடை செய்துள்ளதால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதி கிடையாது.