Tamil Bayan Points

ஊழலற்ற அரசியலுக்கு ஒரு முன்னோடி

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on September 30, 2023 by Trichy Farook

ஊழலற்ற அரசியலுக்கு ஒரு முன்னோடி

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

பணம் பத்தும் செய்யும், பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்ற பழமொழிக்கேற்ப இன்றைய அரசியல் தலைவர்கள் முதல் படிப்பறிவில்லாத பாமரர்கள் வரை இருக்கின்றனர். வேலியே பயிரை மேயும் கதையாக, மக்களின் பாதுகாவலர்களாக விளங்க வேண்டியவர்களே அவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அபாயம் இன்றைய சூழலில் ஏற்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள் முதல் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் அடிமட்ட ஊழியர்கள் வரை ஊழலும், லஞ்சமும் அவர்களை விட்டபாடில்லை. மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாவலர்களாக விளங்கும் காவல் துறையினர்களும் இதற்கு விதிவிலக்கில்லை. இதன் உச்சகட்டம் என்னவெனில் லஞ்ச ஒழிப்பு துறையினரே லஞ்சம் வாங்கும் அவலநிலை.

இதற்காகப் போர்க்கொடி தூக்கினால், ‘யார் தான் ஊழல் செய்யவில்லை. ஊழலில்லாத அரசியலா? ஊழலில்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று சொல்வதற்கு நன்றாக இருக்கும்; ஆனால் செயல்படுத்த இயலாது’ என்று இன்றைய அரசியல்வாதிகள் வசனம் பேசுகின்றனர்.

இந்த இடத்தில் அமர்ந்து பாருங்கள் என்றும், ஊழலில்லாத அரசியல்வாதி ஒருவரைக் காட்டுங்கள் என்றும் கூறி, தாங்கள் செய்யும் குற்றங்களுக்கு குற்றம் புரியும் தலைவர்களின் பட்டியலை ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஊழலற்ற அரசியலுக்கு முன்னோடியாக எந்த அரசியல்வாதியையும் தற்போது காணமுடிவதில்லை. ஊழலை ஒழிப்போம் என்று கூறுபவர்களின் மீதும் ஊழல் குற்றச்சாட்டு என்று கூறுமளவிற்கு ஊழலில் இந்தியா மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

ஒவ்வொருவரும் பிறரது ஊழலைக் காரணம் காட்டி அரசியல் செய்வதையே காண்கின்றோம். தன்னிடத்திலும் அந்தத் தவறை வைத்துக் கொண்டே பிறரை விமர்சனம் செய்வது தான் ஆச்சரியத்திலும் மிகப்பெரும் ஆச்சரியமாக இருக்கின்றது. ஊழலற்ற அரசியலை உருவாக்க ஒருவராலும் முடியாது என்று சித்தாந்தம் பேசுபவர்களுக்கு எதிராக ஊழலில்லா அரசை உருவாக்கிய உத்தமத் தலைவர் தான் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள். அவர்களின் அரசியல் முறையைப் பற்றியும், அவர்களின் அரசியல் வாழ்க்கையைப் பற்றியும் இந்த உரையில் சிலவற்றை காண்போம். 

அவர்கள் உண்டும் சுகிக்கவில்லை உடுத்தியும் மகிழவில்லை

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
«لَمْ يَأْكُلِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خِوَانٍ حَتَّى مَاتَ، وَمَا أَكَلَ خُبْزًا مُرَقَّقًا حَتَّى مَاتَ»

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறக்கும் வரை உணவு மேசையில் (அமர்ந்து) உணவருந்தியதில்லை. இறக்கும் வரை மிருதுவான ரொட்டியை அவர்கள் சாப்பிட்டதில்லை.

நூல்: புகாரி-6450 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
«كَانَ يَأْتِي عَلَيْنَا الشَّهْرُ مَا نُوقِدُ فِيهِ نَارًا، إِنَّمَا هُوَ التَّمْرُ وَالمَاءُ، إِلَّا أَنْ نُؤْتَى بِاللُّحَيْمِ»

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாராகிய நாங்கள் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்ற வைக்காமலேயே ஒரு மாத காலம்கூட எங்களுக்குக் கழிந்திருக்கிறது. அப்போதெல்லாம் (வெறும்) பேரீச்சம் பழமும் நீரும்தான் (எங்கள் உணவாகும்); (எப்போதாவது) சிறிது இறைச்சி எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் தவிர.

நூல்: புகாரி-6458 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«اللَّهُمَّ ارْزُقْ آلَ مُحَمَّدٍ قُوتًا»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘‘அல்லாஹ்வே! (பசித்திருக்கும்) முஹம்மதின் குடும்பத்தாருக்கு உணவு வழங்குவாயாக!’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

நூல்: புகாரி-6460 

சொத்தும் சேர்க்கவில்லை சொகுசாகவும் வாழவில்லை

أَنَّ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ، أَخْبَرَهُ:
أَنَّ أُنَاسًا مِنَ الأَنْصَارِ سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَسْأَلْهُ أَحَدٌ مِنْهُمْ إِلَّا أَعْطَاهُ حَتَّى نَفِدَ مَا عِنْدَهُ، فَقَالَ لَهُمْ حِينَ نَفِدَ كُلُّ شَيْءٍ أَنْفَقَ بِيَدَيْهِ: مَا يَكُنْ عِنْدِي مِنْ خَيْرٍ لاَ أَدَّخِرْهُ عَنْكُمْ

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவ்வாறு கேட்ட யாருக்குமே நபி (ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்துவிட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி (ஸல்) அவர்கள் “என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப்போவதில்லை’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-6470 

عَنْ عُقْبَةَ بْنِ الحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العَصْرَ، فَلَمَّا سَلَّمَ قَامَ سَرِيعًا دَخَلَ عَلَى بَعْضِ نِسَائِهِ، ثُمَّ خَرَجَ وَرَأَى مَا فِي وُجُوهِ القَوْمِ مِنْ تَعَجُّبِهِمْ لِسُرْعَتِهِ، فَقَالَ: «ذَكَرْتُ وَأَنَا فِي الصَّلاَةِ تِبْرًا عِنْدَنَا، فَكَرِهْتُ أَنْ يُمْسِيَ – أَوْ يَبِيتَ عِنْدَنَا – فَأَمَرْتُ بِقِسْمَتِهِ»

உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும் வேகமாக எழுந்து தமது துணைவியின் இல்லத்திற்குச் சென்று விட்டுத் திரும்பினார்கள். தமது விரைவைக் கண்டு மக்கள் வியப்படைவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “நான் தொழுது கொண்டிருக்கும்போது எங்களிடம் இருந்த தங்கக்கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது எங்களிடம் ஒரு மாலைப்பொழுதோ, ஓர் இரவுப் பொழுதோ இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைப் பகிர்ந்து வழங்குமாறு கட்டளையிட்டேன்’’  என விளக்கினார்கள்.

நூல்: புகாரி-1221 

 أَخْبَرَنِي جُبَيْرُ بْنُ مُطْعِمٍ
أَنَّهُ بَيْنَمَا هُوَ يَسِيرُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ النَّاسُ مَقْفَلَهُ مِنْ حُنَيْنٍ، فَعَلِقَهُ النَّاسُ يَسْأَلُونَهُ حَتَّى اضْطَرُّوهُ إِلَى سَمُرَةٍ، فَخَطِفَتْ رِدَاءَهُ، فَوَقَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَعْطُونِي رِدَائِي، لَوْ كَانَ لِي عَدَدُ هَذِهِ العِضَاهِ نَعَمًا لَقَسَمْتُهُ بَيْنَكُمْ، ثُمَّ لاَ تَجِدُونِي بَخِيلًا، وَلاَ كَذُوبًا، وَلاَ جَبَانًا»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹுனைன்’ போரிலிருந்து திரும்பி வந்த போது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து கொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்; ‘சமுரா’ என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளிவிட்டார்கள்.

நபியவர்களின் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது. ஆகவே நபி (ஸல்) அவர்கள் சற்று நின்று, ‘‘என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள்மரங்களின் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்களிடையே பங்கிட்டுவிட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காணமாட்டீர்கள்; பொய்யனாகவும் காணமாட்டீர்கள்; கோழையாகவும் காணமாட்டீர்கள்’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-2821

 قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لَوْ كَانَ لِي مِثْلُ أُحُدٍ ذَهَبًا، لَسَرَّنِي أَنْ لاَ تَمُرَّ عَلَيَّ ثَلاَثُ لَيَالٍ وَعِنْدِي مِنْهُ شَيْءٌ، إِلَّا شَيْئًا أَرْصُدُهُ لِدَيْنٍ»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என் மீது மூன்று நாட்கள் கழிவதுகூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து வைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர.

நூல்: புகாரி-6445 

வறுமையிலும் வாரி வழங்கிய மாமனிதர்

உணவு, உடை, இருப்பிடம், மருத்துவச் செலவுகள் உட்பட அனைத்தும் மக்கள் வரிப்பணமாகிய அரசு கருவூலத்திலிருந்து கோடி கோடியாக அரசியல்வாதிகளுக்கு செலவழிக்கப்படுகின்றது. இது தவிர லஞ்சம் மற்றும் ஊழலின் மூலமும் அவர்கள் சொத்துக்களை சேர்த்துக் கொண்டனர்.

மக்களின் நலன் காக்கத் தவறி தன்னலனையும், தன் குடும்பத்தினரின் நலனையும் மட்டுமே கவனத்தில் கொண்டு மக்களிடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியையும் மறந்த சுயநலவாதிகளாகவும், பச்சோந்திகளாகவுமே இன்றுள்ள அரசியல்வாதிகள் உள்ளனர். விதை விதைக்காமல் அவர்கள் அறுவடையை மட்டுமே செய்கின்றனர். இதில் படிக்காத முட்டாள்களும், படித்த பட்டதாரி அரசியல்வாதிகளும் அடங்குவர். இப்படிப்பட்ட அரசியல் தலைமை நாட்டு மக்களுக்குக் கிடைத்த சாபக்கேடு. அவர்கள் போடும் சட்ட திட்டங்களெல்லாம் சாமானிய மக்களின் மீது அடக்குமுறையாகவும், அவர்களின் அடிவயிற்றில் அடிக்கக் கூடியவையாகவுமே உள்ளன.

மக்களால் நான், மக்களுக்காகவே நான், ஊழலை ஒழிக்கவே மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கூறுவதற்கு இப்போதுள்ள அரசியல்வாதிகளில் எவருக்கும் அருகதை கிடையாது. அனைவருமே பசுத்தோல் போர்த்திய புலிகளாகவும், மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்ற அட்டைப் பூச்சிகளாகவுமே உள்ளனர்.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ அரசியல் தலைமை, ஆன்மீகத் தலைமை ஆகிய இரண்டு தலைமைகளிலிருந்தும் இவற்றைப் பயன்படுத்தி அவர்கள் எதையும் தமக்காகச் சேர்க்கவில்லை என்பதற்கு மேற்கண்ட வரலாற்றுக் குறிப்புகளே போதுமான சான்றாகும்.

கேட்டவருக்கெல்லாம் அரசுக் கருவூலத்திலிருந்து வாரி வாரி வழங்கிய மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்காகவோ தமது குடும்பத்திற்காகவோ அதிலிருந்து எந்த ஒன்றையும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்கு கீழ்க்கண்ட ஹதீஸ்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

 سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ
أَخَذَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ، فَجَعَلَهَا فِي فِيهِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كِخْ كِخْ، ارْمِ بِهَا، أَمَا عَلِمْتَ أَنَّا لَا نَأْكُلُ الصَّدَقَةَ؟»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபியவர்களின் பேரரான) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள், தர்மப் பேரீச்சம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சீ…சீ… கீழே போடு; நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா?’’ என்றார்கள்.

நூல்: முஸ்லிம்-1939 

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ، قَالَ
«إِنِّي لَأَنْقَلِبُ إِلَى أَهْلِي فَأَجِدُ التَّمْرَةَ سَاقِطَةً عَلَى فِرَاشِي، ثُمَّ أَرْفَعُهَا لِآكُلَهَا، ثُمَّ أَخْشَى أَنْ تَكُونَ صَدَقَةً فَأُلْقِيهَا»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் என் வீட்டாரிடம் திரும்பிச்செல்லும் போது எனது படுக்கையின் மீது பேரீச்சம் பழம் கிடப்பதைப் பார்த்து, அதை உண்பதற்காக எடுப்பதுண்டு. பின்னர் அது தர்மப் பொருளாக இருக்குமோ என்று நான் அஞ்சி, உடனே அதைப் போட்டுவிடுகின்றேன்.

நூல்: முஸ்லிம்-1940 

أَنَّ فَاطِمَةَ عَلَيْهَا السَّلاَمُ اشْتَكَتْ مَا تَلْقَى مِنَ الرَّحَى مِمَّا تَطْحَنُ، فَبَلَغَهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِسَبْيٍ، فَأَتَتْهُ تَسْأَلُهُ خَادِمًا، فَلَمْ تُوَافِقْهُ، فَذَكَرَتْ لِعَائِشَةَ، فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَتْ ذَلِكَ عَائِشَةُ لَهُ، فَأَتَانَا، وَقَدْ دَخَلْنَا مَضَاجِعَنَا، فَذَهَبْنَا لِنَقُومَ، فَقَالَ: «عَلَى مَكَانِكُمَا». حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى صَدْرِي، فَقَالَ: «أَلاَ أَدُلُّكُمَا عَلَى خَيْرٍ مِمَّا سَأَلْتُمَاهُ، إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا فَكَبِّرَا اللَّهَ أَرْبَعًا وَثَلاَثِينَ، وَاحْمَدَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، فَإِنَّ ذَلِكَ خَيْرٌ لَكُمَا مِمَّا سَأَلْتُمَاهُ»

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் துணைவியாரான) ஃபாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் (அவர்களை நபியவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கிருக்கின்றார்கள்) என்னும் செய்தி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு எட்டியது.

உடனே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. ஆகவே, ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினார்கள். பின்னர், நபி (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள்  விஷயத்தைச் சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்று விட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம். நபி (ஸல்) அவர்கள், “(எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள்’’ என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களுடைய பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவிற்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்கள்).

பின்னர், ‘‘நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள்  படுக்கைக்குச் செல்லும் போது, ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் பெரியவன்’ என்று முப்பத்து நான்கு முறையும், ‘அல்ஹம்து லில்லாஹ்- புகழனைத்தும் அல்லாஹ்விற்கே’ என்று முப்பத்து மூன்று முறையும், ‘சுப்ஹானல்லாஹ்- அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்’ என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்ததாகும்’’ என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி-3113 

 عَنْ عَائِشَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لاَ نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ»

அது மட்டுமின்றி உலகம் உள்ளளவும் ஒரு காலத்திலும், ஒரு அரசாங்கத்திலும் தமது வழித்தோன்றல்கள் எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்றும் பிரகடனம் செய்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி-6727 

மேலும் நபிகளாரின் மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தும் தமது அற்பமான சொத்துக்களையும் நபி (ஸல்) அவர்கள் பொது உடைமையாக்கினார்கள் என்பது நபிகளாரின் அப்பழுக்கற்ற வாழ்க்கைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபியவர்களின் மறைவுக்குப் பிறகு, கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்திருந்த மதீனா மற்றும் ஃபதக் சொத்திலிருந்தும், கைபரின் ஐந்தில் ஒரு பகுதி நிதியில் மீதியிருந்ததிலிருந்தும் தமக்குச் சேர வேண்டிய வாரிசுமையைத் கேட்டார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (‘நபிமார்களான) எங்கள் சொத்துக்களுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவை ஆகும். இந்தச் செல்வத்திலிருந்தே முஹம்மதின் குடும்பத்தினர் சாப்பிடுவார்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

(எனவே,) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தர்மச் சொத்தில் நான் எந்தச் சிறு மாற்றத்தையும் செய்யமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் எந்த நிலையில் அந்தச் சொத்துகள் இருந்து வந்தனவோ, அதே நிலையில் அவை நீடிக்கும். அதில் (அந்தச் சொத்துக்களைப் பங்கிடும் விஷயத்தில்) நபி (ஸல்) அவர்கள் செயல்பட்டபடியே நானும் செயல்படுவேன்’’ என்று (ஃபாத்திமா அவர்களுக்கு) பதில் கூறினார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அவற்றில் எதையும் ஒப்படைக்க அபூபக்ர் (ரலி) அவர்கள் மறுத்துவிட்டார்கள். இதனால் அபூபக்ர் (ரலி) மீது மனவருத்தம் கொண்டு இறக்கும் வரையில் அவர்களுடன் ஃபாத்திமா (ரலி) அவர்கள் பேசவில்லை.

நபி (ஸல்) அவர்கள் இறந்த பின், ஆறுமாத காலம் ஃபாத்திமா (ரலி) அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள். ஃபாத்திமா (ரலி) இறந்த போது, அவர்களின் கணவர் அலீ (ரலி) அவர்கள், (இறப்பதற்கு முன் ஃபாத்திமா அவர்கள் கேட்டுக் கொண்டிருந்ததற்கிணங்க) இரவிலேயே அவர்களை அடக்கம் செய்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களுக்குக் கூட இது குறித்துத் தெரிவிக்கவில்லை. அலீ (ரலி) அவர்களே ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள்.

நூல்: புகாரி-4240 

அல்லாஹ்வின் தூதர் மட்டுமல்ல! அவர்கள் உருவாக்கிய நபித்தோழர்கள் கூட மிகவும் நேர்மையாக மக்களிடம் நடந்துள்ளார்கள் என்பதற்குக் கீழ்க்கண்ட செய்திகள் சிறந்த உதாரணங்களாகும்.

 عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمْ قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
لَوْ قَدْ جَاءَ مَالُ الْبَحْرَيْنِ قَدْ أَعْطَيْتُكَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا . فَلَمْ يَجِئْ مَالُ الْبَحْرَيْنِ حَتَّى قُبِضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَلَمَّا جَاءَ مَالُ الْبَحْرَيْنِ أَمَرَ أَبُو بَكْرٍ فَنَادَى : مَنْ كَانَ لَهُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِدَةٌ ، أَوْ دَيْنٌ فَلْيَأْتِنَا ، فَأَتَيْتُهُ فَقُلْتُ : إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِي كَذَا وَكَذَا ، فَحَثَى لِي حَثْيَةً ، فَعَدَدْتُهَا ، فَإِذَا هِيَ خَمْسُمِائَةٍ ، وَقَالَ : خُذْ مِثْلَيْهَا

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘‘பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருட்கள் வந்தால் உமக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்!” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் இறக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வரவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வந்தபோது, ‘‘நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்!’’ என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்.

நான் அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்கள் எனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள்! என்றேன்.  அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு நாணயங்கள் இருந்தன. இது போல் இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக்கொள்வீராக! என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி-2296 

 أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ، فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ، فَأَعْطَانِي ثُمَّ قَالَ: «يَا حَكِيمُ، إِنَّ هَذَا المَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، اليَدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى»، قَالَ حَكِيمٌ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ لاَ أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا، فَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَدْعُو حَكِيمًا إِلَى العَطَاءِ، فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ مِنْهُ، ثُمَّ إِنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ دَعَاهُ لِيُعْطِيَهُ فَأَبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا، فَقَالَ عُمَرُ: إِنِّي أُشْهِدُكُمْ يَا مَعْشَرَ المُسْلِمِينَ عَلَى حَكِيمٍ، أَنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ مِنْ هَذَا الفَيْءِ فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ، فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنَ النَّاسِ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تُوُفِّيَ

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ‘‘ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக்கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது’’ என்று கூறினார்கள்.

அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும்வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்’’ எனக் கூறினேன்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் அதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் ‘‘முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!’’ எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்: புகாரி-1472 

வாரிசுகளுக்கு விட்டுச் சென்றது என்ன?

உலக மகா வல்லரசின் அதிபராக இருந்த நிலையில் மரணித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அற்பமான கடனைக் கூட நிறைவேற்ற முடியாத நிலையில் தான் மரணித்தார்கள்

 عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
«تُوُفِّيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدِرْعُهُ مَرْهُونَةٌ عِنْدَ يَهُودِيٍّ بِثَلاَثِينَ»

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
முப்பது ‘ஸாவு’ வாற்கோதுமைக்குப் பகரமாகத் தமது இரும்புக் கவசம் யூதர் ஒருவரிடம் அடைமானம் வைக்கப்பட்டிருந்த நிலையில் தான் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

நூல்: புகாரி-4467 

மரணிக்கும் போது அவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களின் பட்டியல்

عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ خَتَنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخِي جُوَيْرِيَةَ بِنْتِ الحَارِثِ، قَالَ
«مَا تَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ مَوْتِهِ دِرْهَمًا وَلاَ دِينَارًا وَلاَ عَبْدًا وَلاَ أَمَةً وَلاَ شَيْئًا، إِلَّا بَغْلَتَهُ  البَيْضَاءَ، وَسِلاَحَهُ وَأَرْضًا جَعَلَهَا صَدَقَةً»

அல்லாஹ்வின் தூதருடைய துணைவியார் ஜுவைரிய்யா பின்த்து ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மரணத்தின் போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கிவிட்டிருந்த ஒரு  நிலத்தையும் தவிர.       

நூல்: புகாரி-2739 

 عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
«لَقَدْ تُوُفِّيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا فِي رَفِّي مِنْ شَيْءٍ يَأْكُلُهُ ذُو كَبِدٍ، إِلَّا شَطْرُ شَعِيرٍ فِي رَفٍّ لِي،

நபிகளாரின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் (வீட்டு) நிலைப் பேழையிலிருந்த சிறிது வாற்கோதுமையைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக்கூடிய பொருள் எதுவும் என் (வீட்டு) நிலைப்பேழையில் இல்லாத நிலையில்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

நூல்: புகாரி-6451 

உண்மையான அரசியல் தலைவர்கள் யாரெனில் மக்கள் அவர்களை நேசிப்பார்கள். அவர்களுக்காக மனதாரப் பிரார்த்திப்பார்கள்.

 سَمِعْتُ عَوْفَ بْنَ مَالِكٍ الْأَشْجَعِيَّ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
«خِيَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُحِبُّونَهُمْ وَيُحِبُّونَكُمْ، وَتُصَلُّونَ عَلَيْهِمْ وَيُصَلُّونَ عَلَيْكُمْ، وَشِرَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُبْغِضُونَهُمْ وَيُبْغِضُونَكُمْ، وَتَلْعَنُونَهُمْ وَيَلْعَنُونَكُمْ»،

அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள். அவர்களும் உங்களை நேசிப்பார்கள். நீங்கள் அவர்களுக்காகப் பிரார்த்திப்பீர்கள். அவர்களும் உங்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள். அவர்களும் உங்களை வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள். அவர்களும் உங்களைச் சபிப்பார்கள்’’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்-3779 

எனவே உத்தம நபியின் உண்மை அரசியலே ஊழலற்ற அரசியலுக்கு வழிவகுக்கும் என்று கூறி என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன். 

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.