Tamil Bayan Points

05) எழுதப்பட்ட ஸலாம்

நூல்கள்: நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

Last Updated on March 5, 2022 by

எழுதப்பட்ட ஸலாமுக்கு பதில் கூற வேண்டுமா?

எழுதப்பட்ட ஸலாம் இரு வகைகளில் உள்ளன. ஒருவர் மற்றவருக்கு எழுதும் கடிதங்களில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று எழுதுவது ஒரு வகை.

யாரும், யாருக்காகவும் எழுதாமல் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதைச் சுவர் போன்றவற்றில் எழுதி வைப்பது இன்னொரு வகை.

முதல் வகையிலான எழுதப்பட்ட ஸலாமுக்கு அவசியம் பதில் சொல்ல வேண்டும். அதாவது பதில் எழுதி அனுப்ப வேண்டும். ஏனெனில் பேசுவதன் இன்னொரு வடிவமே எழுத்தாகும்.

அறிவு கெட்டவனே” என்று ஒருவன் மற்றவனை நேரில் திட்டினாலும், கடிதத்தில் எழுதி அனுப்பினாலும் இரண்டும் சமமாகவே எடுத்துக் கொள்ளப்படும். எழுதி அனுப்பியதால் அவர் திட்டவில்லை என யாரும் எடுத்துக் கொள்ள மாட்டோம்.

இந்த அடிப்படையில் உங்களுக்கு ஸலாம் கூறி ஒருவர் கடிதம் எழுதினால் அவருக்கு இரு வழிகளில் பதில் கூறலாம். அவர் எழுதியது போலவே நீங்களும் பதில் ஸலாம் எழுதி அனுப்பலாம். அல்லது அதைப் படித்ததும் வஅலைஹிஸ்ஸலாம் (அவர் மீது ஸலாம் உண்டாகட்டும்) என்று வாயால் கூறலாம்.

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஜிப்ரீல் ஸலாம் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய போது, வஅலைஹிஸ்ஸலாம் என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள்.

புகாரி : 3217, 3768, 6201, 6249, 6253

ஆயிஷா (ரலி) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை நேரில் காணாததால் அவர் மீது ஸலாம் உண்டாகட்டும் என்றார்கள். கடிதம் மூலம் பதில் எழுத வாய்ப்பில்லாதவர்கள் இவ்வாறு கூறிக் கொள்ளலாம்.

சுவற்றில் எழுதி தொங்கவிடப்பட்ட ஸலாமுக்கு பதில் கூற வேண்டியதில்லை. ஏனெனில் அங்கே ஸலாம் கூறியவரும் இல்லை. கூறப்பட்டவரும் இல்லை.

அஸ்ஸலாமு அலைக்கும்” என்று ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்யப்பட்டதைக் கேட்டால் அதற்கும் பதில் ஸலாம் கூற வேண்டியதில்லை. ஏனெனில் அங்கே கூறியவரும் இல்லை. கூறப்பட்டவரும் இல்லை.

ஒரு நண்பர் உங்களுக்காகப் பேசி அனுப்பும் கேஸட்டில் ஸலாம் கூறியிருந்தால் அதற்குப் பதில் கூற வேண்டும்.

இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றை வானொலி, தொலைக் காட்சியில் நேரடி, ஒலி, ஒளிபரப்பு செய்யும் போது அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினால் அனைவருக்காகவும் ஒரு முஸ்லிம் ஸலாம் கூறுகிறார் என்பது தெரிவதால் அதைக் கேட்பவர் பதில் கூற வேண்டும்.