Tamil Bayan Points

ஏழைகளே உங்களைத்தான்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

Last Updated on October 15, 2023 by Trichy Farook

ஏழைகளே உங்களைத்தான்!

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

ஏழைகளைப் பற்றி அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதிகமாக சிறப்பித்து கூறி இருக்கிறார்கள். அவ்வாறு சிறப்பித்து கூறப்பட்ட சில செய்திகளை இந்த உரையில் காண்போம்…

இறைவன் இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்களைப் படைத்திருக்கின்றான். இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களில் சிலருக்கு சிலரை விட அந்தஸ்துகளையும், வசதி வாய்ப்புகளையும் வழங்கி இறைவன் மேன்மைப்படுத்தியிருப்பதைப் பார்க்கின்றோம்.

சிலரை செல்வச் செழிப்புள்ளவர்களாகவும், சிலரை பொருளாதாரத்தில் பலவீனமானவர்களாகவும் படைத்திருக்கின்றான். சில மனிதர்களை அழகில் உயர்ந்தவர்களாகவும், சிலரை அழகு குறைந்தவர்களாகவும் படைத்திருக்கின்றான். சில மனிதர்களை சமூக அந்தஸ்தில் உயர்ந்தவர்களாகவும், சிலரை அந்தஸ்து குறைவானவர்களாகவும் படைத்திருக்கின்றான்.

இவ்வாறு ஏற்றத் தாழ்வுகளோடு இறைவன் படைத்திருப்பதற்கு மிக முக்கியக் காரணம், உலகம் சீராக இயங்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒருவரை ஒருவர் மட்டம் தட்டுவதற்காகவோ, நான் உயர்ந்தவன்; நீ தாழ்ந்தவன் என்று அடையாளப்படுத்துவதற்காகவோ அல்ல.

اَللّٰهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ؕ وَفَرِحُوْا بِالْحَيٰوةِ الدُّنْيَا ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَا فِى الْاٰخِرَةِ اِلَّا مَتَاعٌ‏

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை.

(அல்குர்ஆன்: 13:26)

இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம்தான் என்று இறைவன் கூறுகின்றான். ஆனால் இன்றைக்கு சமூகத்தில் பணவசதி படைத்தவர்களில்  பெரும்பாலானோர் தம்மைவிட சமூக அந்தஸ்தில் குறைந்த, பொருளாதார வசதி குறைந்த, ஏழைகளைப் பார்த்து ஏளனமாக, கேவலமாகப் பார்க்கின்றனர்.

ஏழைகளைப் போற்றும் இஸ்லாம்

நபி (ஸல்) அவர்கள் காலகட்டத்தில் வாழ்ந்த பொருளாதாரத்திலும், அந்தஸ்துக்களிலும் உயர்ந்த இடத்தில் இருந்த பெரும்பாலானோர் நபி (ஸல்) அவர்களோடு நெருக்கத்தில் இருந்த ஏழைகளைப் பார்த்து பொறாமை கொண்டு, எங்களை விட தகுதி குறைந்தவர்களுக்கு இவ்வளவு மிகப்பெரிய அந்தஸ்தா? என்று விழிதூக்கிப் பார்த்தனர். அவர்களின் எண்ணங்களைக் குழிதோண்டிப் புதைக்கும் விதமாக திருக்குர்ஆனில் அல்லாஹ் கடுமையான முறையில் எச்சரிக்கை செய்து வசனம் இறக்குகின்றான்.

وَلَا تَطْرُدِ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ‌ ؕ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَىْءٍ وَّمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِمْ مِّنْ شَىْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُوْنَ مِنَ الظّٰلِمِيْنَ
وَكَذٰلِكَ فَتَـنَّا بَعْضَهُمْ بِبَـعْضٍ لِّيَـقُوْلُـوْۤا اَهٰٓؤُلَآءِ مَنَّ اللّٰهُ عَلَيْهِمْ مِّنْۢ بَيْنِنَا ؕ اَلَـيْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِالشّٰكِرِيْنَ‏

தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!

‘நம்மில் இ(ந்த அற்பமான)வர்களுக்குத் தானா அல்லாஹ் அருள் புரிய வேண்டும்?’ என்று அவர்கள் கூறுவதற்காக அவர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துவோரை அல்லாஹ் நன்கறிந்தவன் அல்லவா?

(அல்குர்ஆன்: 6:52,53)

யாரை அற்பமாக நினைத்தார்களோ அப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ் மகத்தான கண்ணியத்தைக் கொடுத்து, விரட்டாதே! விரட்டினால் கடும் குற்றம் செய்தவராவீர்! என்று தன்னுடைய தூதரை கடுமையாக எச்சரிக்கின்றான்.

மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
…بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ…

ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். (ஹதீஸ் சுருக்கம்)

ஆதாரம்: முஸ்லிம்-5010 

ஒரு மனிதரைப் பார்த்து இவனெல்லாம் ஒரு ஆளா? என்று நினைத்து கேவலப்படுத்துவதே ஒருவன் தீமை செய்கின்றான் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையான முறையில் எச்சரிக்கை செய்கின்றார்கள். யாராக இருந்தாலும் அவனுடைய அந்தஸ்தை வைத்தும், தகுதி தராதரத்தை வைத்தும் உள்ளத்தளவில் கூட கேவலமாக நினைத்து விடக் கூடாது.

ஏழைகளுக்கு கண்ணியம் சேர்த்த நபிகளார்

பள்ளிவாசலைச் சுத்தம் செய்யக்கூடிய ஒரு பெண்மணியின் இறப்புச் செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்காமல் தோழர்கள் அடக்கம் செய்து விட்டார்கள். அவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள்  விசாரித்து விட்டு அடக்கம் செய்யப்பட்ட செய்தியை கேள்விப்பட்டவுடன் மீண்டும் அந்தப் பெண்மணிக்காக ஜனாஸா தொழுகை நடத்தி கண்ணியப்படுத்தியிருக்கின்றார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ أَسْوَدَ رَجُلًا – أَوِ امْرَأَةً – كَانَ يَكُونُ فِي المَسْجِدِ يَقُمُّ المَسْجِدَ، فَمَاتَ وَلَمْ يَعْلَمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَوْتِهِ، فَذَكَرَهُ ذَاتَ يَوْمٍ فَقَالَ: «مَا فَعَلَ ذَلِكَ الإِنْسَانُ؟» قَالُوا: مَاتَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ  «أَفَلاَ آذَنْتُمُونِي؟» فَقَالُوا: إِنَّهُ كَانَ كَذَا وَكَذَا – قِصَّتُهُ – قَالَ: فَحَقَرُوا شَأْنَهُ، قَالَ: «فَدُلُّونِي عَلَى قَبْرِهِ» فَأَتَى قَبْرَهُ فَصَلَّى عَلَيْهِ

பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த கரு நிறமுடைய ஓர் ஆணோ பெண்ணோ இறந்துவிட்டார். அவர் இறந்துவிட்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாமலிருந்தது. ஒருநாள் திடீரென்று அவர் பற்றி நினைவு வந்ததும் நபி (ஸல்) அவர்கள்,  “அவர் என்ன ஆனார்?’’ எனக் கேட்டார்கள். அதற்கு (தோழர்கள்) “அல்லாஹ்வின் தூதரே! அவர் இறந்து விட்டார்!’’ என்றதும் “எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?’’ எனக் கேட்டார்கள்.

தோழர்கள், “அவரைப் பற்றி அந்தஸ்துக் குறைவாகக் கருதி, அவர் இன்னின்னவாறெல்லாம் இருந்தார்’’ எனக் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் “அவரது அடக்கத்தலத்தை (கப்று) எனக்குக் காட்டுங்கள்’’ என்று கூறி, அங்கு வந்து (ஜனாஸாத் தொழுகை) தொழுதார்கள்.

ஆதாரம்: புகாரி-1337 

மக்களெல்லாம் யாரைப் பற்றி அற்பமாகக் கருதினார்களோ அப்படிப்பட்ட ஒருவருக்கு மீண்டும் ஜனாஸா தொழுகை நடத்தி தன்னுடைய பிரார்த்தனை அந்தப் பெண்மணிக்குப் போய் சேர வேண்டும் என்பதற்காகவும், அற்பமாகக் கருதியவர்களுக்கு ஒரு பாடமாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இத்தகைய செயலைச் செய்து காட்டியிருக்கின்றார்கள்.

தகுதியால் உயர்ந்தவர்கள்

இன்றைக்கு நம்மில் பெரும்பாலானோர் குறைந்த அந்தஸ்தில் இருக்கின்ற மனிதர்களைப் பார்த்தாலோ, மிஸ்கீன்களைப் பார்த்தாலோ, ஏழைகளைப் பார்த்தாலோ தரக்குறைவாக மதிப்பிடுவதையும், அவர்களைப் பார்த்து முகம் சுளிப்பதையும் பார்க்கின்றோம்.

இன்னும் ஒருபடி மேலாகப் போய் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தாலோ, வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தினாலோ அருவருப்பாக நினைத்து சுத்தம் செய்வதையும் பார்க்கின்றோம்.

ஆனால், இது போன்ற மனிதர்களுக்கு இஸ்லாம் மகத்துவமிக்க கண்ணியத்தை வழங்கி சிறப்பிக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«رُبَّ أَشْعَثَ، مَدْفُوعٍ بِالْأَبْوَابِ لَوْ أَقْسَمَ عَلَى اللهِ لَأَبَرَّهُ»

(புழுதி படிந்த) பரட்டைத் தலை கொண்ட, வீட்டுவாசல்களில் தடுத்து நிறுத்தப்படக்கூடிய எத்தனையோ பேர், (அல்லாஹ்விடம் தகுதியால் உயர்ந்தவர்கள் ஆவர்.) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை மெய்யாக்குவான்.

ஆதாரம்: முஸ்லிம்-5116 

நாம் யாரை அந்தஸ்தில் குறைவானவர்களாகக் கருதுகிறோமோ அவர்கள் இறைவனின் பார்வையில் தகுதியால் உயர்ந்தவர்கள் என்று கூறி ஏழைகளுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது.

ஏழைகளே மேலானவர்கள்

இன்றைக்கு சமூகத்தில் பணக்காரர்களாக இருந்தால் அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும், கண்ணியமும் வழங்கி சிறப்பிக்கின்றார்கள். அதே நேரத்தில் ஒரு ஏழையாக இருந்தால் அவரை இழிவாகவும், மட்டமாகவும் கருதி அவமதிப்பதைப் பார்க்கின்றோம். இந்த செயல்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மிகத் தெளிவாக நமக்கு விளக்குகின்றார்கள்.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

عَنْ سَهْلٍ قَالَ :
 مَرَّ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ : ” مَا تَقُولُونَ فِي هَذَا ؟ “. قَالُوا : حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ يُشَفَّعَ، وَإِنْ قَالَ أَنْ يُسْتَمَعَ. قَالَ : ثُمَّ سَكَتَ، فَمَرَّ رَجُلٌ مِنْ فُقَرَاءِ الْمُسْلِمِينَ، فَقَالَ : ” مَا تَقُولُونَ فِي هَذَا ؟ “. قَالُوا : حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ لَا يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ لَا يُشَفَّعَ، وَإِنْ قَالَ أَنْ لَا يُسْتَمَعَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” هَذَا خَيْرٌ مِنْ مِلْءِ الْأَرْضِ مِثْلَ هَذَا “.

ஒரு (பணக்கார) மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), “இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். தோழர்கள், “இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்’’ என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்தார்கள்.

பிறகு, நபி (ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார்.  அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?’’ என்று கேட்டார்கள். தோழர்கள், “இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்’’ என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்’’ எனக் கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி-5091 

இந்தச் செய்தியை நன்றாகப் படித்துப் பாருங்கள்! மக்களால் இழிவாகவும், தரக்குறைவாகவும் கருதப்படுகின்ற ஏழைகளுக்கு அல்லாஹ்வின் தூதர் மகத்தான கண்ணியத்தை வழங்குகின்றார்கள். வசதி படைத்த எத்தனையோ பேர் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும், அவர்கள் அனைவரையும் விட மக்களால் மட்டமாகக் கருதப்படுகின்ற ஒரு ஏழை சிறந்தவர் என்று கூறி ஏழைகளை மகத்துவப்படுத்துகின்றார்கள்.

ஐநூறு வருடங்களுக்கு முன்பு சொர்க்கம் செல்ல வேண்டுமா?

இந்த உலகத்தில் சுகபோகத்தை அனுபவிக்காத, கஷ்டப்படுகின்ற, இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற உண்மையான ஏழைகளுக்கு மறுமையில் பணக்காரர்களுக்கு முன்பே சொர்க்கத்திற்குள் நுழையச் செய்கின்ற அற்புதமான ஒரு வாய்ப்பை வழங்கி கண்ணியப்படுத்துகின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
«يَدْخُلُ الْفُقَرَاءُ الْجَنَّةَ قَبْلَ الْأَغْنِيَاءِ بِخَمْسِمِائَةِ عَامٍ نِصْفِ يَوْمٍ

பணக்காரர்களுக்கு ஐநூறு வருடங்களுக்கு முன்பாக ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள். (ஐநூறு வருடங்கள் என்பது மறுமையினுடைய) பாதி நாளாகும்”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ-2353 (2276), 2353

இந்த உலகத்தில் நல்ல முறையிலும், சுகபோகத்திலும் வாழ்ந்த பணக்காரர்களை விட ஐநூறு வருடங்களுக்கு முன்பாகவே, இந்த உலகத்தில் சிரமப்பட்ட, பொருளாதாரத்தில் பலவீனமான நிலையில் உள்ள ஏழைகளை சுவர்க்கத்தில் நுழையச் செய்கின்ற பிரம்மாண்டமான பரிசை இறைவன் வழங்குகின்றான்.

ஏழ்மை அதிகரிக்க ஆசைப்படுங்கள்:

ஏழைகளை மட்டமாகவும், இழிவாகவும் கருதுபவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணஅடி கொடுக்கும் விதமாக அற்புதமான முறையில் ஒரு அறிவிப்பை அறிவிக்கின்றார்கள்.

ஃபழாலா பின் உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى بِالنَّاسِ يَخِرُّ رِجَالٌ مِنْ قَامَتِهِمْ فِي الصَّلَاةِ مِنَ الخَصَاصَةِ وَهُمْ أَصْحَابُ الصُّفَّةِ حَتَّى تَقُولَ الْأَعْرَابُ هَؤُلَاءِ مَجَانِينُ أَوْ مَجَانُونَ، فَإِذَا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ إِلَيْهِمْ، فَقَالَ: «لَوْ تَعْلَمُونَ مَا لَكُمْ عِنْدَ اللَّهِ لَأَحْبَبْتُمْ أَنْ تَزْدَادُوا فَاقَةً وَحَاجَةً» قَالَ فَضَالَةُ: «وَأَنَا يَوْمَئِذٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தும் போது தொழுகையில் அவர்களோடு நின்ற ஆண்களில் சிலர் பசியின் காரணமாக (மயங்கி) விழுந்து விடுவார்கள். அவர்கள் தான் திண்ணை ஸஹாபாக்கள். அவர்கள் (மயங்கி விழுவதைப் பார்க்கும் கிராமவாசிகளில் சிலர் அவர்களின் நிலையை அறியாமல்) “இவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள்” என்று கூறுவார்கள்.

நபியவர்கள் தொழுகை நடத்தி முடித்து விட்டால் அவர்களை நோக்கித் திரும்பி ‘‘அல்லாஹ்விடம் உங்களுக்குக் கிடைக்கவிருப்பதை நீங்கள் அறிந்தீர்கள் என்றால் உங்களுடைய ஏழ்மை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்” என்று கூறுவார்கள்.

நூல்: திர்மிதீ-2368 (2291)

மயங்கி விழுந்து கீழே கிடக்கின்ற ஏழைகளைப் பார்த்து பைத்தியக்காரர்கள் என்று சிலர் கூறும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டிக்கின்றார்கள். மேலும் ஒரு முக்கியமான உபதேசமாக, உங்களுக்கு மறுமையில் கிடைக்கவிருப்பதை நீங்கள் அறிந்தால் ஏழ்மை அதிகரிக்க விரும்புவீர்கள் என்று ஏழ்மையின் முக்கியத்துவத்தைப் பற்றி தெள்ளத் தெளிவாகப் பறைசாற்றுகிறார்கள்.

இறைவனிடத்தில் ஏழைகளுக்கு தனிச்சிறப்பாக ஏராளமான விஷயங்களைப் பற்றி இஸ்லாம் மார்க்கம் கற்றுத் தருகின்றது. ஏழைகள் இந்த உலகத்தில் ஏற்படுகின்ற கஷ்டங்கள், சிரமங்கள், நோய்கள், துன்பம், கவலை போன்றவற்றுக்காக வருத்தப்படாமல் நம்மை விட பாக்கியம் பொருந்தியவர்கள் இந்த உலகத்திலும், மறுமையில் இறைவனிடத்திலும் இல்லை என்று மகிழ்ச்சி பெருக நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமாக!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.