Tamil Bayan Points

12) ஒற்றைப்படையாகக் கொடுத்தல்

நூல்கள்: கொள்கை விளக்கம்

Last Updated on December 11, 2019 by

எதையெடுத்தாலும் ஒற்றை எண்ணிக்கையில் தான் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களிடம் பரவலாகக் காணப்படுகின்றது.

இது சரியா?

6410- حَدَّثَنَا عَلِيُّ بْنُعَبْدِ اللهِ ، حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَفِظْنَاهُ مِنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ رِوَايَةً قَالَ
لِلَّهِ تِسْعَةٌ وَتِسْعُونَ اسْمًا مِئَةٌ إِلاَّ وَاحِدًا لاَ يَحْفَظُهَا أَحَدٌ إِلاَّ دَخَلَ الْجَنَّةَ وَهْوَ وَتْرٌ يُحِبُّ الْوَتْرَ.

‘இறைவன் ஒற்றையானவன், ஒற்றையை அவன் விரும்புகிறான்’ என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6410

1253- حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي مَالِكٌ ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أُمِّ عَطِيَّةَ الأَنْصَارِيَّةِ ، رَضِيَ اللَّهُ عَنْهَا

، قَالَتْ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم حِينَ تُوُفِّيَتِ ابْنَتُهُ فَقَالَ اغْسِلْنَهَا ثَلاَثًا ، أَوْ خَمْسًا ، أَوْ أَكْثَرَ مَنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ بِمَاءٍ وَسِدْرٍ وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا ، أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ فَأَعْطَانَا حِقْوَهُ فَقَالَ أَشْعِرْنَهَا إِيَّاهُ تَعْنِي إِزَارَهُ.

ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு தடவை குளிப்பாட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர்.

நூல்: புகாரி 1253, 1254, 1257, 1259, 1261, 1263,

953- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ قَالَ : حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ : أَخْبَرَنَا عُبَيْدُ اللهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ ، عَنْ أَنَسٍ ، قَالَ :
كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : لاَ يَغْدُو يَوْمَ الْفِطْرِ حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ.
وَقَالَ مُرَجَّى بْنُ رَجَاءٍ ، حَدَّثَنِي عُبَيْدُ اللهِ ، قَالَ : حَدَّثَنِي أَنَسٌ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَيَأْكُلُهُنَّ وِتْرًا.

பெருநாளின் போது ஒற்றை எண்ணிக்கையில் பேரீச்சம் பழங்களை நபிகள் நாயகம் (ஸல்) சாப்பிடுவார்கள்

நூல்: புகாரி 953

ஒற்றை எண்ணிக்கையின் முக்கியத்துவத்தை இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.

எதையெடுத்தாலும் ஒற்றை எண்ணிக்கையில் தான் செய்ய வேண்டும் என்று இதற்கு அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது.

ஏனெனில் 33 தடவை ஸுப்ஹானல்லாஹ், 33 தடவை அல்ஹம்துலில்லாஹ் கூறுமாறு போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹு அக்பர் என்று 34 தடவை கூறுமாறு கற்றுத் தந்துள்ளனர்.

ஒரு பிரச்சினைக்கு சாட்சி கூறுபவர்கள் இருவர் என்று குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 100 என்று ஹதீஸ்கள் கூறுகின்றன.

எல்லாவற்றையும் ஜோடியாகப் படைத்ததாகக் குர்ஆன் கூறுகிறது.

மஃரிபைத் தவிர மற்ற தொழுகைகள் இரட்டை ரக்அத்களையே கொண்டுள்ளன.

இது போல் இன்னும் அனேகம் உள்ளன.

ஒற்றையாகவும், இரட்டையாகவும் பல காரியங்கள் குர்ஆன் ஹதீஸ்களில் கூறப்படுகின்றன.

எவற்றை ஒற்றையாகச் செய்ய வேண்டும் என்றோ, இரட்டையாகச் செய்ய வேண்டுமென்றோ ஆதாரம் கிடைக்கின்றதோ அவற்றை அவ்வாறு செய்ய வேண்டும். மற்ற விஷயங்களில் நம் வசதி போல் செய்து கொள்ளலாம் என்று விளங்க வேண்டும்.

ஒரு பொருளின் விலை இரண்டு ரூபாய் என்று வியாபாரி கூறினால் ஒற்றையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மூன்று ரூபாய் கொடுக்க முடியாது.

100 ரூபாய் என்று பேசிய பிறகு ஒரு ரூபாயை ஒட்டுவது ஏமாளித்தனமாகும்.

இது போன்ற மூட நம்பிக்கைகளுக்குச் சான்றாக அந்த ஹதீஸை எடுத்துக் கொள்ளக் கூடாது.

இரட்டையாகவும் பல காரியங்கள் மார்க்கத்தில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொண்டு மேற்கண்ட ஹதீஸை ஆராயும் போது அதன் பொருள் தெளிவாகும்.

‘இறைவன் (வித்ராக) ஒற்றையாக இருக்கிறான். ஒற்றையாக இருப்பதையே விரும்பவும் செய்கிறான்’ என்று பொருள் கொள்வது உசிதமாகும்.

பொதுவாக மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் தனித்திருப்பதை விரும்புவதில்லை. துணையுடனிருப்பதையே விரும்புகின்றனர். தனிமை போரடிக்கக் கூடியதாகத் தான் பெரும்பாலும் அமையும்.

ஆனால் படைத்த இறைவன் தனித்தவனாக இருப்பதுடன் தனித்தவனாக இருப்பதை விரும்பவும் செய்கிறான். தனக்குப் போரடிக்காமலிருக்க வேண்டுமென்பதற்காக மனைவி, மக்கள், சுற்றம் எதுவும் வேண்டும் என்று விரும்புவதில்லை. தனிமை அவனுக்குப் போரடிப்பதில்லை. அவனுக்கே அது தான் விருப்பமானது.

இவ்வாறு பொருள் கொள்ள ஏற்றதாக அந்த ஹதீஸ் இருப்பதுடன் பொருத்தமானதாகவும் அமைகின்றது.

மற்றவர்களின் செயல்களும் ஒற்றையாக இருப்பதை அவன் விரும்புகிறான் என்று பொருள் கொண்டால் ஒற்றையில்லாத பல விஷயங்களை அவன் மார்க்கமாக ஆக்கியிருக்க மாட்டான்.

கண்கள், காதுகள், கால்கள் என்று எத்தனையோ இரட்டைகள் அவன் படைப்பில் உள்ளன. இரட்டையாக எத்தனையோ மார்க்க அனுஷ்டானங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் ஒற்றையாக இறைவன் ஆக்கவில்லை.

* அவன் ஒற்றையானவன் (தான்,) ஒற்றையாக இருப்பதையே விரும்புகிறான்.

* அவன் ஒற்றையானவன். (மற்றவர்களின் செயல்களும்) ஒற்றையாக இருப்பதையே விரும்புகிறான்.

இப்படி இரண்டு விதமான பொருளுக்கும் அந்த ஹதீஸ் இடம் தந்தாலும் முதலாவது பொருளே சரியானதாக நமக்குத் தோன்றுகிறது. அவ்வாறு பொருள் கொள்ளும் போது முரண்பாடு ஏற்படுவதில்லை.