Tamil Bayan Points

11) கத்னா செய்தல்

நூல்கள்: இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

Last Updated on December 12, 2019 by

ஆண்களின் பாலுறுப்பில் இருக்கும் தேவையற்ற தோல்பகுதியை அகற்றுவதற்குப் பெயர் தான் கத்னா என்பது. இவ்வாறு செய்வதால் பாலுறுப்பினுள் விந்தோ சிறுநீரோ தங்கும் நிலை ஏற்படாது. இதன் மூலம் பாலுறுப்பு சுத்தமாக வைத்துக்கொள்ளப்படுவதால் ஏராளமான நோய்கள் அண்டுவதில்லை.

இல்லறவாழ்வின் போது கணவன் தன் மனைவியை திருப்தியடையச் செய்வதற்கு கத்னா காரணமாக உள்ளது. அறிவுப்பூர்வமான இந்த வழிமுறை கடைபிடிக்குமாறு இஸ்லாம் ஆண்களுக்குக் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்

அறி : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (5889)

பெண்களுக்கு கத்னா செய்யலாமா?

சிலர் அறிவின்மையினால் பெண்களுக்கும் கத்னாவை செய்துவிடுகிறார்கள். அதாவது பெண்களின் இல்லற இன்பத்தை குறைப்பதற்காக அவர்களின் பாலுறுப்பில் இன்பத்தை உணரும் பகுதியின் முனையை வெட்டிவிடுவார்கள்.

இறைவன் அளித்த பாக்கியமான இல்லற இன்பத்தை முழுமையாக பெண்கள் அடையமுடியாத துர்பாக்கியமான நிலை ஏற்படுகிறது. இவ்வாறு செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை.

பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டும் என்றக் கருத்தில் சில ஹதீஸ்கள் வருகிறது. அவற்றை அறிவிப்பவர்கள் பலவீனமானவர்களாக இருப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

கத்னா செய்தல் ஆண்களுக்கு சுன்னத்தாகும். பெண்களுக்கு சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : சத்தாத் பின் அவ்ஸ் (ரலி),

நூல் : அஹ்மத் (19794)

இந்த ஹதீஸில் வரும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் பலவீனமானவர். இவர் அதிகமாக தவறிழைப்பவர் என்று இமாம் இப்னு ஹஜர் அவர்களும் இவர் வலிமையானவர் இல்லை என்று யஹ்யா பின் முயீன் அவர்களும் கூறியுள்ளார்கள்.

பைஹகீ இமாம் அவர்கள் தொகுத்த அஸ்ஸ‚னனுல் குப்ரா என்ற நூலில் இதே ஹதீஸ் இப்னு சவ்பான் என்பவர் வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு சவ்பான் பலவீனமானவர். மேலும் இச்செய்தயில் அல்வலீத் பின் வலீத் என்வரும் இடம்பெருகிறார். இவரும் பலவீனமானவர். இந்த ஹதீஸை இமாம் பைஹகீ அவர்கள் பதிவு செய்துவிட்டு இது பலவீனம் என்பதை அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஏழாவது நாள் அன்று கத்னா செய்வது நபிவழியா?

நபி (ஸல்) அவர்கள் ஹஸன் ஹுஸைன் ஆகிய இருவருக்கும் ஏழாவது நாள் அன்று கத்னா செய்தார்கள் என்று ஒரு ஹதீஸை இமாம் பைஹகீ அவர்கள் அஸ்ஸ‚னனுல் குப்ரா என்ற தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இச்செய்தியில் முஹம்மத் பின் அல்முதவக்கில் என்பவர் இடம்பெறுகிறார்கள். இவர் அதிகமாகத் தவறிழைப்பவர் என்று பல அறிஞர்கள் குறைகூறியுள்ளார்கள். இச்செய்தியை வலீத் பின் முஸ்லிம் என்ற அறிவிப்பாளரிடமிருந்து இவரைத் தவிர வேறுயாரும் அறிவிக்கவில்லை. எனவே இது பலவீனமான செய்தியாகும்.

எப்போது கத்னா செய்ய வேண்டும்?

குறிப்பிட்ட வயதிற்குள் கத்னா செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. கத்னா செய்வதினால் ஏற்படும் பல நன்மைகளை கவனித்துப் பார்க்கும் போது சீக்கிரமாக கத்னா செய்வது நல்லது என்று தெரிகிறது.

குழந்தைக்கு அளவிற்கு அதிகமாக நகம் வளரும் போது உடனே அதை அகற்றிவிடுகிறோம். ஆணுறுப்பின் முன்பகுதி தோலும் தேவையில்லாத ஒன்று தான். எனவே நகத்தை உடனடியாக அகற்றிவிடுவது போல் ஆணுறுப்பின் முன்தோலை அகற்றி சீக்கிரமாக கத்னா செய்வது உடலுக்கு ஆரோக்கியமானது.

கத்னா செய்தால் விழா எடுக்க வேண்டுமா?

கத்னா செய்வதற்காக பெரும் பொருட் செலவில் விருந்துகளை ஏற்பாடு செய்து கத்னா செய்யப்பட்டவர்களை பூமாலைகளால் அலங்கரித்து தெருக்களில் அழைத்து வரும் வழக்கம் தமிழகத்தில் இருக்கிறது. இதற்கு இஸ்லாத்தில் எள்ளவு கூட அனுமதியில்லை.

ஒரு நபிவழியை செய்வதற்கு இவ்வளவு ஆடம்பரங்களை செய்து பகிரங்கப்படுத்துவது குற்றமாகும். நகத்தை வெட்டுவதும் அக்குள் முடிகளை களைவதும் கத்னாவைப் போன்று ஒரு சாதாரண சுன்னத்தாகும். ஆனால் யாரும் நகத்தை வெட்டுவதற்கு விழாக் கொண்டாடுவதில்லை. முடிகளை களையும் போது அதை ஊருக்கெல்லாம் பகிரங்கப்படுத்துவதும் இல்லை. மறைக்க வேண்டிய விஷயத்தை பரப்புகின்ற அசிங்கத்தை செய்துகொண்டிருக்கிறார்கள்.

பெண் பருவ வயதை அடைந்து விட்டால் அதையும் ஊர் முழுவதும் பரப்புகிறார்கள். சடங்கு மஞ்சள் தண்ணீர் ஊத்துதல் என்று பலவிதமான மாற்றார்களின் வழிமுறைகளையும் கடைபிடிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். இதை செய்பவர்கள் நரகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே இதை விட்டும் நாம் அனைவரும் விலக வேண்டும்.