Tamil Bayan Points

11) கனவுகள் இறைவனின் கட்டளையாகுமா?

நூல்கள்: தர்கா வழிபாடு

Last Updated on December 12, 2019 by

அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி தேட வேண்டும் என்பதை ஏற்காதவர்கள் தங்கள் தரப்பில் மற்றொரு வாதத்தையும் முன் வைக்கின்றனர்.

அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்றால் மகான்கள் எங்கள் கனவில் வந்து தர்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்களே! மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு காரியத்துக்கு மகான்கள் அழைப்பார்களா? என இவர்கள் கேட்கின்றனர்.

கனவுகள் பற்றி இவர்கள் சரியான முறையில் அறியாததே இந்த வாதத்துக்குக் காரணம்.

‘யார் கனவில் என்னைக் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வர மாட்டான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 110, 6197,

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வடிவத்தில் தவிர மற்ற எவருடைய வடிவத்திலும் எவருடைய பெயரைக் கூறிக் கொண்டும் ஷைத்தான் கனவில் வருவான் என்பது இந்த ஹதீஸின் கருத்தாகும்.

கனவில் வரக்கூடியவர் ‘நான் தான் அப்துல் காதிர் ஜிலானி’ என்று கூறுவதால் அவர் அப்துல் காதிர் ஜிலானியாக மாட்டார். ஷைத்தானே கனவில் வந்து ‘நான் தான் அப்துல் காதிர் ஜிலானி’ எனக் கூறலாம்.

மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு செயலுக்கு – தர்காவில் பிரார்த்தனை செய்யும் செயலுக்கு – அழைப்பு விடுப்பதிலிருந்து வந்தவன் ஷைத்தான் தான் என்பது உறுதியாகின்றது.

கனவில் ஒருவரை நாம் பார்த்து அடையாளம் காண்பது என்றால் அவரை நேரடியாக நாம் பார்த்திருக்க வேண்டும். நாம் நேரில் சந்தித்திராத ஒருவரை கனவில் பார்த்து இன்னார் என்று கண்டு பிடிக்க முடியாது.

கனவில் அப்துல் காதிர் ஜிலானியைப் பார்த்ததாகக் கூறுவோர் அவர் காலத்தில் வாழவில்லை. அவரை நேரடியாகப் பார்த்ததுமில்லை. பிறகு எப்படி இவர் தான் அப்துல் காதிர் ஜிலானி என்று கண்டு பிடித்தார்கள்?

கனவில் ஒருவர் வருகிறார் என்றால் அவரே வருகிறார் என்று பொருள் இல்லை. உதாரணமாக என்னை நீங்கள் கனவில் காண்கிறீர்கள். நீங்கள் என்னைக் கனவில் காண்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. நான் நேற்றிரவு உங்கள் கனவில் வந்தேனே என்று என்னால் உங்களிடம் கூற முடியாது. கனவில் என்னை யாராவது கண்டாலும் நான் எதையாவது கூறுவதாகக் கண்டாலும் அதற்கும், எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

ஒரு மகானையே கனவில் கண்டால் கூட அந்த மகானுக்கு இன்னார் கனவில் நாம் வருகிறோம் என்பது தெரியாது. நல்ல நோக்கத்திற்காகவும், சோதித்துப் பார்ப்பதற்காகவும் கனவுகளில் பலவிதமான காட்சிகளை அல்லாஹ் காட்டுவான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டதால் மார்க்க சம்மந்தமான எந்த உத்தரவும் கனவில் வராது. மார்க்கத்தின் கட்டளைகளுக்கு எதிரான எந்த உத்தரவும் அல்லாஹ்விடமிருந்து கனவில் வராது.

எனவே ஒரு மகானையே கனவில் கண்டாலும் அவர் என்ன கூறினாலும் அவர் மகானுமல்ல, அவர் கூறுவது மார்க்கமும் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதைப் போல் கனவு கண்டால் காலையில் எழுந்தவுடன் கிணற்றில் விழுந்து சாக மாட்டோம். பெரும் தொகையை ஒருவருக்கு கொடுப்பதைப் போல் நாம் கனவு கண்டால் விழித்தவுடன் அத்தொகையை அவரிடம் கொடுத்து விட மாட்டோம்.

உலக விஷயங்களில் மட்டும் மிகவும் விழிப்போடு தான் இருக்கிறோம். கனவில் கண்டதையெல்லாம் செய்ய முடியுமா என்று கேள்வி கேட்டு கனவில் காண்பதை நடைமுறைப்படுத்தாமல் தவிர்த்து வருகிறோம்.

ஆனால் மார்க்க விஷயத்தில் தான் கனவைக் காரணம் காட்டி நாசமாகிறோம்.

நபிமார்களின் கனவுகள் தான் முழுக்க முழுக்க வஹீயாகும். இதன் காரணமாகத் தான் மகனை அறுப்பதாகக் கனவு கண்ட இப்ராஹீம் நபி அவர்கள் அதை நடைமுறைப்படுத்தத் தயாரானார்கள். மற்ற எவரது கனவும் நடைமுறைப்படுத்த வேண்டியவை அல்ல.

நமக்கு எதிர்காலத்தில் நடக்கக் கூடிய சில பயன்களை முன்கூட்டியே சில நேரத்தில் கனவு மூலம் அறிவிக்கப்படலாம். ஆனால் மார்க்கக் கட்டளைகள் ஒன்று கூட கனவில் வராது. இதைப் புரிந்து கொள்ள பின்வரும் நபிமொழி உதவுகிறது.

நற்செய்தி கூறக்கூடியவை தவிர, வஹியில் எதுவும் மிச்சமாக இருக்கவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நற்செய்தி கூறக்கூடியவை என்றால் என்ன என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்ல கனவுகள் என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6990,

நற்செய்திகள் தான் கனவில் வர முடியுமே தவிர மார்க்கத்தின் எந்தச் சட்டமும் கனவில் வராது.