Tamil Bayan Points

03) காலில் விழுவது எழுந்து நிற்பது

நூல்கள்: கொள்கை விளக்கம்

Last Updated on February 24, 2022 by

காலில் விழலாமா?

ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது, அவர்களின் கால்களைக் கழுவி, கழுவப்பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ் நாளில் ஒருக்காலும் தமது கால்களில் விழுந்து மக்கள் கும்பிடுவதை விரும்பவில்லை. அறியாத சிலர் அவ்வாறு செய்ய முயன்ற போது கடுமையாக அதைத் தடுக்காமலும் இருந்ததில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்!

2140- حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ ، عَنْ شَرِيكٍ ، عَنْ حُصَيْنٍ ، عَنِ الشَّعْبِيِّ ، عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ ، قَالَ :
أَتَيْتُ الْحِيرَةَ فَرَأَيْتُهُمْ يَسْجُدُونَ لِمَرْزُبَانٍ لَهُمْ فَقُلْتُ : رَسُولُ اللهِ أَحَقُّ أَنْ يُسْجَدَ لَهُ ، قَالَ : فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم ، فَقُلْتُ : إِنِّي أَتَيْتُ الْحِيرَةَ فَرَأَيْتُهُمْ يَسْجُدُونَ لِمَرْزُبَانٍ لَهُمْ فَأَنْتَ يَا رَسُولَ اللهِ أَحَقُّ أَنْ نَسْجُدَ لَكَ ، قَالَ : أَرَأَيْتَ لَوْ مَرَرْتَ بِقَبْرِي أَكُنْتَ تَسْجُدُ لَهُ ؟ قَالَ : قُلْتُ : لاَ ، قَالَ : فَلاَ تَفْعَلُوا ، لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لأَمَرْتُ النِّسَاءَ أَنْ يَسْجُدْنَ لِأَزْوَاجِهِنَّ لِمَا جَعَلَ اللَّهُ لَهُمْ عَلَيْهِنَّ مِنَ الْحَقِّ.

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். ‘இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்’ என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்’ என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?’ எனக் கேட்டார்கள். ‘மாட்டேன்’ என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)

நூல்: அபூதாவூத் 1828

தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது ‘எந்த மனிதரும் எந்த மனிதரின் காலும் விழக் கூடாது’ என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள்.

காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.

உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

‘உங்கள் கால்களில் நாங்கள் விழுகிறோமே’ என்று மக்கள் கேட்கும் போது தமது மரணத்திற்குப் பிறகு தனது அடக்கத்தலத்தில் விழுந்து பணிவார்களோ என்று அஞ்சி அதையும் தடுக்கிறார்கள். ‘எனது மரணத்திற்குப் பின் எனது அடக்கத்தலத்தில் கும்பிடாதீர்கள்’ என்று வாழும் போதே எச்சரித்துச் சென்றனர். எனவே தமது கால் விழுமாறு மக்களுக்கு வழி காட்டுவோர் கயவர்களாவர்.

எழுந்து நின்று மரியாதை செய்தல்

வயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.

மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். ஆனால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதி இல்லை.

எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் கட்டளை பிறப்பித்தார்கள்.

2979 – حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ حَدَّثَنَا قَبِيصَةُ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ عَنْ أَبِى مِجْلَزٍ قَالَ
خَرَجَ مُعَاوِيَةُ فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ وَابْنُ صَفْوَانَ حِينَ رَأَوْهُ. فَقَالَ اجْلِسَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَنْ سَرَّهُ أَنْ يَتَمَثَّلَ لَهُ الرِّجَالُ قِيَامًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ». وَفِى الْبَابِ عَنْ أَبِى أُمَامَةَ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ.

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் ‘அமருங்கள்’ என்றனர். ‘தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார்கள்.

நூல்கள்: திர்மிதீ 2769 அபூதாவூத் 4552

மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழ வேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றதை இந்த வரலாற்றிருந்து நாம் அறிகிறோம்.

12526 – حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ  أَنَسٍ قَالَ:

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقْبِلُ وَمَا عَلَى الْأَرْضِ شَخْصٌ أَحَبَّ إِلَيْنَا مِنْهُ، فَمَا نَقُومُ لَهُ لِمَا نَعْلَمُ مِنْ كَرَاهِيَتِهِ لِذَلِكَ»

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678

தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாகவுள்ளது.

953 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ

قَالَتِ اشْتَكَى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَدَخَلَ عَلَيْهِ نَاسٌ مِنْ أَصْحَابِهِ يَعُودُونَهُ فَصَلَّى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- جَالِسًا فَصَلَّوْا بِصَلاَتِهِ قِيَامًا فَأَشَارَ إِلَيْهِمْ أَنِ اجْلِسُوا . فَجَلَسُوا فَلَمَّا انْصَرَفَ قَالَ « إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا رَفَعَ فَارْفَعُوا وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا ».

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் ‘பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே! அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனி மேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 701

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக புகாரி 689, 732, 733, 805, 1114, 688 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம். யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார்ந்து தொழ அனுமதி உண்டு.

அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள். அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை.

ஆனாலும் முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோற்றமளிக்கின்றது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

வரவேற்பதற்காகவும், அன்பை வெளிப்படுத்துவதற்காகவும் ஒருவருக்காக மற்றவர் எழலாம். மரியாதைக்காகத் தான் எழக் கூடாது.

பெற்ற மகள் தம்மைத் தேடி வந்த போது வாசல் வரை சென்று நபிகள் நாயகம் (ஸல்) வரவேற்றுள்ளனர். (திர்மிதீ 3807)

நம் வீட்டுக்கு ஒருவர் வரும் போது நாம் எழலாம். அது போல் அவர் வீட்டுக்கு நாம் போகும் போது அவர் எழ வேண்டும். இதற்குப் பெயர் தான் வரவேற்பு.

ஒருவர் நம்மிடம் வரும் போது நாம் எழுந்து வரவேற்கிறோம். ஆனால் அவரிடம் நாம் சென்றால் அவர் எழுந்து வரவேற்பதில்லை என்றால் மரியாதை நிமித்தமாகவே அவருக்கு நாம் எழுந்துள்ளோம் என்பது பொருள். இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. எழுந்து நிற்பது இரு தரப்புக்கும் பொதுவாக இருந்தால் மட்டுமே அது வரவேற்பில் அடங்கும்.