Tamil Bayan Points

குடியுரிமை மசோதா சொல்வது என்ன?

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on January 4, 2020 by

குடியுரிமை மசோதா சொல்வது என்ன?

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை மசோதா நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அந்த மசோதாவில் என்ன கூறப்பட்டுள்ளது? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த மசோதாவை பாஜக அரசு ஏன் கொண்டு வருகின்றது? இஸ்லாமியர்கள் இந்த மசோதாவை ஏன் எதிர்க்கின்றார்கள்?

இஸ்லாமியர்கள் அல்லாத நடுநிலை மக்களும் இந்த மசோதாவை ஏன் எதிர்க்கின்றர்கள்? என்பதை தெரிந்து கொண்டால்தான் பாஜகவின் பாசிச சிந்தனையையும் விசர்ச்சனத்தையும் இஸ்லாமியர்களின் மீதான அடக்குமுறையையும் உணர்ந்து கொள்ள முடியும்.

இந்தியா பாகிஸ்தான் வங்கதேச பிரிவினைகளுக்குப் பிறகு இந்த நாடுகளில் இருந்து அகதிகளாக வெளியேறிய மக்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். எனவே அன்றைய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு இந்திய மக்களின் குடியுரிமை மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடியுரிமையை உறுதி செய்வதற்காக 1955 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தச் சட்டத்தின் படி 11 ஆண்டுகளுக்கும் மேல் ஒருவர் இந்தியாவில் வசித்தால் அவரை இந்திய நாட்டின் குடிமகனாக அங்கீகரித்து அவருக்கு குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் எவ்விதமான மதப் பாகுபாடும் இன்றி புலம் பெயர் மக்களுக்கு குடியுரிமை வழங்குவதை இந்த மசோதா உறுதி செய்தது. இந்த நிலையில் 64 ஆண்டுகள் கழித்து இந்த மசோதாவில் திருத்தம் கொண்டு வருவதற்கு மத்திய பாஜக அரசு முடிவு செய்தது. இந்த திடீர் சட்டத் திருத்தத்திற்கு என்ன காரணம்? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு முன்னதாக அஸ்ஸாம் மாநிலத்தில் அமுல்படுத்தியிருந்த குடியுரிமைப் பதிவேட்டு முடிவுகள்தான் இந்தச் சட்டத் திருத்த மசோதாவைத் தூண்டியது எனலாம்.

அஸ்ஸாம் மாநிலத்திற்கு அருகாமை நாடான வங்கதேசத்தில் இருந்து முஸ்லிம்கள் இந்தியாவிற்குள் ஊடுருவுகின்றார்கள் என்ற குறிக்கோளை வைத்து அதில் அந்நியக் குடியேறிகளை கலையேடுக்கப் போகின்றோம் என்று கூறியே குடியுரிமைப் பதிவேட்டை அமுல்படுத்தினார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது ஒன்று அங்கே நடந்தது ஒன்று.

அதாவது இந்தக் குடியுரிமைப் பிரச்சினையில் முஸ்லிம்கள் அதிகமாக சிக்குவார்கள் என்று நினைத்த நிலையில் பாதிக்குப் பாதி ஹிந்து மக்களும் மற்ற முஸ்லிமல்லாத மக்களும் அதில் அதிக அளவில் குடியுரிமையை இழந்து நின்றார்கள். இது மத்திய பாஜக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டது.

2019 குடியுரிமைத் திருத்த மசோதாவின் படி அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வரும் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், கிருத்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்கின்றது. இந்த குடியுரிமைத் திருத்தத்தில் முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி 11 ஆண்டுகள் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு அது 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது . இந்த குடியுரிமை மசோதா திருத்தம் இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைக் கட்டுப்படுத்தாது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த குடியுரிமைத் திருத்த மசோதா நாடு முழுவதும் எதிர்க்கப்படுகின்றது. இந்த மசோதாவை எதிர்க்கும் நடுநிலையாளர்கள் இதுகுறித்து குறிப்பிடும் போது, இந்த மசோதா இந்தியாவின் மதச்சார்பின்மைத்த்துவத்திற்கு எதிரானதாகும் என்று கூறியுள்ளார்கள்.

இந்தியாவில் வாழும் மக்களை மதப் பாகுபாட்டின் அடிப்படையில் நடத்துவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை என்றும், ஆனால் இந்த சட்டத் திருத்தம் மதப் பாகுபாட்டினைத் தூண்டுகின்றது என்றும் எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவிக்கின்றார்கள். அதுமட்டுமின்றி இந்த மசோதா தாக்கல் செய்த பிறகு இந்தியா முழுவதும் குடியுரிமைப் பதிவேடு கணக்கெடுக்கப்படும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

அந்த அடிப்படையில் இந்தியா முழுவதும் குடியுரிமைப் பதிவேட்டைக் கொண்டு வந்தால் அதில் முஸ்லிம்களைத் திட்டமிட்டு பழிவாங்கும் நிகழ்வுகள் துவங்கி விடும். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் அல்லாத 6 மதத்தவர்களும் எவ்விதமான ஆவணங்களும் தாக்கல் செய்யா விட்டாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். ஆனால் எத்தனை ஆவணங்களைக் காட்டினாலு ம் முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்பதுதான் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் காணப்படும் வஞ்சக சூழ்ச்சியாகும்.

ஆக குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவெற்றப்பட்டுள்ள நிலையில் இனி முஸ்லிம்களை நோக்கி பல்வேறு இன்னல்களை மத்திய அரசு செய்யும். இஸ்லாமியர்களை மட்டுமே குறிவைத்து நிறைவேற்றப் பட்டுள்ள இந்தக் கொடூர குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறும் வரை ஜனநாயக ரீதியில் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்ற அந்தஸ்தை இழந்து விடும்.

Source: unarvu (20/12/2019)