Tamil Bayan Points

குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை

பயான் குறிப்புகள்: கொள்கை உறுதி

Last Updated on August 18, 2020 by

குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை

கடவுளின் இலக்கணம்

கடவுளே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்பது நாத்திகக் கொள்கையாகும். உலகில் இது ஏற்பாரும் ஏறிட்டுப் பார்ப்பாரும் இல்லாத ஒரு நாதியற்றக் கொள்கையாகும்.

காரணம், எந்த ஒரு பொருளும் தான்தோன்றி கிடையாது. உதாரணத்திற்கு மனிதன் மணி பார்ப்பதற்காகக் கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தை எடுத்துக் கொள்வோம். இது தானாகத் தோன்றியது என்றால் கிராமத்தில் வாழ்கின்ற, எழுதப் படிக்கத் தெரியாத ஒரு பாமரன் கூட அதைக் கேட்டு வாய்விட்டுச் சிரிப்பான்.

அப்படியிருக்கும் போது, இந்தப் பிரபஞ்சம், அதிலுள்ள கோள்கள், நாம் வாழும் இந்த பூமி, அதிலுள்ள உயிரினங்கள், அவற்றுக்கான வாழ்க்கை வசதிகள் இவை எல்லாமே தானாக வந்து விட்டது என்று கூறினால் அது எவ்வளவு நகைப்புக்குரியது? அந்த நகைப்பிற்குரிய ஒரு கேலிக்கூத்தைத் தான் நாத்திகக் கொள்கை போதிக்கின்றது. அதனால் அதை விளக்க வேண்டிய அவசியம் தேவையில்லை.

உலகில் 99 சதவிகித மக்கள் தங்களைப் படைத்த ஓர் அரிய சக்தி, அற்புத ஆற்றல் இருக்கின்றது என்றே நம்புகின்றார்கள். அப்படி ஒரு சக்தி இருக்கின்றது, அதாவது, கடவுள் இருக்கின்றான் என்றால் எத்தனை கடவுள்கள்?

ஒரு கடவுளா? பல கடவுள்களா?

ஒரு நிறுவனத்தில் பல முதலாளிகள் இருந்து ஆதிக்கம் செலுத்தினால் அந்த நிறுவனம் உருப்படாது, அது செயலிழந்து போய்விடும் என்பதை  ஒவ்வொரும் அறிந்து வைத்திருக்கின்றோம்.

பல மூர்த்திகள் (முதலாளிகள்) இருந்தால் அது பல கீர்த்தியில் இருக்கும். அதாவது அலங்கோல நிலையில் அது இருக்கும். ஒரு மூர்த்தி இருந்தால் அது ஒரு கீர்த்தியில் (கட்டுப்பாட்டில்) இருக்கும். அது போல் தான் இந்த உலகத்திற்குப் பல கடவுள்கள் இருந்தால் அது செயலிழந்து சீர்கெட்டுப் போய் விடும். அதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது.

21:22 لَوْ كَانَ فِيْهِمَاۤ اٰلِهَةٌ اِلَّا اللّٰهُ لَـفَسَدَتَا‌ۚ فَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُوْنَ‏

அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.

(அல்குர்ஆன்:21:22.)

கடவுள் என்றால் அவன் எல்லாவற்றுக்கும் ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும். எப்போது அவனுக்கு ஒரு துணைக் கடவுள் தேவைப்படுகின்றதோ அப்போதே அவன் கடவுள் என்ற தகுதியை இழந்து விடுவான்.

இரண்டு கடவுள்களில் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டியும் ஏற்பட்டு விடும். உலகில் பல கடவுள் கொள்கையைப் போதிக்கும் மதங்களில் கடவுள்களுக்கு இடையே சண்டை நடந்ததாகப் புராணங்களை எழுதி வைத்திருப்பதைப் பார்க்கிறோம். கடவுளே சண்டையிட்டால் அவன் எப்படி இந்தப் பிரபஞ்சத்தைப் பரிபாலணம் செய்வான்? எனவே இந்த அடிப்படையில் உலகத்தில் ஒரு கடவுள் தான் இருந்தாக வேண்டும் என்பது நிரூபணமாகின்றது.

கற்சிலையும் கடவுள் இல்லை!

பொற்சிலையும் கடவுள் இல்லை!

ஒரு கடவுள் தான் இருக்க முடியும். சரி! அது ஒரு சிலையாக இருக்க முடியுமா? என்றால் அதுவும் கடவுளாக இருக்க முடியாது. காரணம் கடவுள் என்பவன் தன்னையும் தற்காத்துக் கொண்டு மற்றவர்களையும் காக்க வேண்டும். சிலைகளுக்கு அந்த சக்தி அறவே கிடையாது. சிலைத் திருட்டு இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். தன்னை திருடுபவரைத் தடுக்க முடியாத சிலை எப்படிக் கடவுளாக முடியும்? சிலையைக் காப்பதற்கும் கட்த்தப்பட்ட சிலையை மீட்பதற்கும் காவல் துறை தான் வரவேண்டியதிருக்கின்றது என்றால் இந்தச் சிலை எப்படிக் கடவுளாக முடியும்? மனித குலத்தை நோக்கி இதை இந்தக் குர்ஆன் சிந்திக்கச் சொல்கின்றது.

22:73 يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ؕ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ‌ ؕ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ‌ ؕ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ‏

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈ யைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன்:22:73.)

ஈயைப் படைப்பது ஒரு பக்கமிருக்கட்டும். ஈ பறித்துக் கொள்கின்ற எள்முனை அளவிலான பொருளைக் கூட தடுக்க முடியாதவை, மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை விட்டும் எப்படித் தடுக்கும் என்று சிந்திக்கச் சொல்கின்றது. இது தொடர்பாகத் திருக்குர்ஆன், சிலை வணக்கத்தை எதிர்த்துப் போராடிய பகுத்தறிவு நாயகர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாற்றைக் கூறுகின்றது.

இதற்கு முன் இப்ராஹீமுக்கு அவரது நேர்வழியைக் கொடுத்தோம். அவரைப் பற்றி அறிந்தவராக இருந்தோம். “நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?’’ என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்டபோது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்’’ என்று அவர்கள் கூறினர். “நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்’’ என்று அவர் கூறினார். “நீர் உண்மையைத்தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?’’ என்று அவர்கள் கேட்டனர்.

“அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்’’ என்று அவர் கூறினார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்’’ (என்றும் கூறினார்)

அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார். “நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்’’ என்று அவர்கள் கூறினர். “ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்’’ எனக் கூறினர். “அவரை மக்கள் பார்வைக்குக் கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்’’ என்றனர்.

“இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?’’ என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசுபவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!’’ என்று அவர் கூறினார்.

உடனே விழிப்படைந்து “நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்’’ என்று தமக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!’’ என்றனர். “அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும், தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?’’ என்று கேட்டார். “அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?’’ (என்றும் கேட்டார்.)

(அல்குர்ஆன்:21:51-67.)

சிலைகளுக்கு சக்தியில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகின்ற சுவையான வரலாறாகும். சிலை மட்டுமல்ல! சிலையைப் போன்ற வடிக்கப்படுகின்ற எந்தப் பொருளுக்கும் கற்பனைப் படங்களுக்கும் எவ்வித சக்தியும் இல்லை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

சிலைகளுக்கு ஒரு சக்தி இருக்கின்றது என்று நம்பியதன் விளைவு மக்கள் கல், மண் போன்றவற்றிலிருந்து சிலைகளை வடிக்கின்றனர். வசதி உள்ளவர்கள் தங்கத்திலிருந்தும் வெண்கலத்திலிருந்தும் மொத்தத்தில் ஐம்பொன்னிலிருந்தும் சிலைகளை வடிக்கின்றனர். எந்த மூலத்திலிருந்து சிலைகள் வடிக்கப்பட்டிருந்தாலும் அவற்றிற்கு எந்த சக்தியும் கிடையாது என்பதைத் திருக்குர்ஆனின் மேற்கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

சூரியன் சந்திரன் கடவுளாக முடியுமா?

மக்களில் ஒரு சாரார் சூரியன், சந்திரனை கடவுளாக வழிபடுகின்றனர். அவை கடவுளாக இருக்க முடியுமா? இதோ திருக்குர்ஆன் அதுபற்றிக் குறிப்பிடுகின்றது.

இரவு அவரை மூடிக்கொண்டபோது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு “இதுவே என் இறைவன்’’ எனக் கூறினார். அது மறைந்தபோது “மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன்’’ என்றார்.

சந்திரன் உதிப்பதை அவர் கண்டபோது “இதுவே என் இறைவன்’’ என்றார். அது மறைந்தபோது “என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டாவிட்டால் வழிகெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகி விடுவேன்’’ என்றார்.

சூரியன் உதிப்பதை அவர் கண்டபோது “இதுவே என் இறைவன்! இதுவே மிகப் பெரியது’’ என்றார். அது மறைந்தபோது “என் சமுதாயமே! நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டு நான் விலகிக் கொண்டவன்’’ எனக் கூறினார்.

“வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவனாக என் முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணை கற்பித்தவனல்லன்’’

(அல்குர்ஆன்:6:76-79.)

வானில் நீந்துகின்ற பிரம்மாண்டமான சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்ற எந்த ஒரு கோளும் கடவுளாக முடியாது. காரணம் அவை மறையக்கூடியவை. எனவே அவை கடவுள்களாக இருக்க முடியாது என திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது. அதனால் பிரம்மாண்டமான சூரியனைப் படைத்த அந்த ஒரு பிரம்மாண்டமான கடவுளையே வணங்குமாறு திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது.

இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!

(அல்குர்ஆன்:41:37.)

இது போன்று பஞ்சபூதங்கள் என்று கூறப்படும் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எதுவும் கடவுளாக இருக்க முடியாது. காரணம் இவற்றிற்கு சில  குறிப்பிட்ட பணிகளைத் தவிர வேறு எந்த ஆற்றலும் இல்லை.  மரம், செடி கொடிகளுக்கும் எந்த ஆற்றலும் இல்லை. அவையும் கடவுளாக ஆக முடியாது.

காளை, பசு மாடுகள் கடவுளாக முடியுமா?

யூத சமுதாயம் நகைகளிலிருந்து வார்த்து வடிக்கப்பட்ட செயற்கையான காளை மாட்டைக் கடவுளாக வணங்கினர். அவர்களை நோக்கி அவர்களது இறைத்தூதர் கண்டித்த கண்டனத்தை திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது.

மூஸாவுடைய சமூகத்தார் அவருக்குப் பின் அவர்களது நகைகளால் காளைக் கன்றின் வடிவத்தை (கடவுளாக) கற்பனை செய்து கொண்டனர். அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. அது அவர்களிடம் பேசாது என்பதையும், அவர்களுக்கு எந்த வழியையும் காட்டாது என்பதையும் அவர்கள் அறிய வேண்டாமா? அவர்கள் இதைக் கற்பனை செய்து அநீதி இழைத்தோரானார்கள்.

(அல்குர்ஆன்:7:148.)

கடவுள் என்றால் பேச வேண்டாமா? என்று திருக்குர்ஆன் கேட்கின்றது. இது போன்று தான் பசுவும் கடவுளாக முடியாது. அது மட்டுமல்லாமல், அவை கடவுள் என்றால் அவை அறுக்கப்படும் போது தங்களை ஏன் தற்காத்துக் கொள்ள முடியவில்லை என்று மக்கள் சிந்திப்பதில்லை. காளை, பசு மட்டுமல்ல! ஊர்வன, பறப்பன, மிதப்பன போன்ற எந்த ஒரு பிராணியும் கடவுளாக முடியாது என்பதை இதிலிருந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் கடவுளாக முடியுமா?

அஃறிணை பொருட்கள் எவையும் கடவுளாக இருக்க முடியாது என்பதை மேற்கண்ட விளக்கங்களிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். இப்போது எஞ்சியிருப்பவன் மனிதன் மட்டும் தான்! இந்த மனிதன் கடவுளாக முடியுமா? அவனும் கடவுளாக முடியாது. ஏன்? திருக்குர்ஆன் மட்டும் தான் கடவுளுக்குரிய இலக்கணங்களை மிகத் துல்லியமாக குறிப்பிடுகின்றது. அந்தத் தன்மையைப் பெற்றவர் தான் கடவுளாக இருக்க முடியும். அந்தத் தன்மைகளைப் பெறாதவர்கள் ஒரு போதும் கடவுளாக முடியாது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் மனிதனுக்குரிய பலவீனங்கள் கடவுளுக்கு இருக்கக்கூடாது. கடவுளைத் தேர்வு செய்யும் விஷயத்தில் மக்கள் இதைக் கவனிப்பதுமில்லை; கண்டு கொள்வதுமில்லை. மனிதன், தான் வாங்குகின்ற பொன் நகைகள் முதல் மண் பாண்டம் வரை அத்தனையையும் சோதித்துப் பார்த்து தான் வாங்குகின்றான்.

தங்கத்தை உரசிப் பார்க்க உரைக்கல்லை வைத்திருக்கும் மனிதன் கடவுளைத் தேர்வு செய்வதற்கு எந்த உரைக்கல்லையும் பயன்படுத்துவதில்லை. திருக்குர்ஆன் கடவுளைத் தேர்வு செய்வதற்கு ஓர் உரைக்கல்லைத் தருகின்றது. அதாவது கடவுளுக்குரிய இலக்கணங்களை அது குறிப்பிடுகின்றது. அது கற்பனை அடிப்படையில் அமைந்தது அல்ல. அந்த உரைக்கல் ஒவ்வொன்றாகப் பார்த்தோம் என்றால் இது தான் கடவுளைத் தேர்வு செய்வதற்கு சரியான அளவுகோல் என்று மனிதனின் அறிவு ஒப்புக்கொண்டு விடும். ஒப்புக் கொள்வதுடன் நிற்காமல் கடவுளைத் தேர்வு செய்வதற்கு இதைத் தாண்டி வேறெதுமில்லை; இது தான் சரியான அளவுகோல் என்ற இறுதியான, உடைக்க முடியாத, உறுதியான முடிவுக்கு வந்து விடும். வேதம் கூறும் வேதியியல் பரிசோதனைக் கூடத்திற்குள் நுழைவோம். கடவுளுக்குரிய இலக்கணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

பிறப்பில்லாதவன்

ஒரு தந்தைக்கும் தாய்க்கும் பிறந்தவன் ஒருபோதும் கடவுளாக இருக்க முடியாது. காரணம் கடவுள் என்றால் அவனுக்கும் ஆதிக்கம் செலுத்துபவன் எவனும் இருக்கக் கூடாது. அவனை விட அந்தஸ்தில், தரத்தில் மேலானவர்கள் இருக்கக் கூடாது. கடவுளுக்குப் பெற்றோர்கள் இருந்தால் அவர்கள் தான் கடவுளை விட ஆதிக்கம் பெற்றவர்கள். கடவுளை விட அவர்கள் தான் மேலானவர்கள்.

(கடவுளாகிய) அவன் (யாருக்கும்) பிறக்கவில்லை.

(அல்குர்ஆன்:112:3.)

மனைவி, மக்கள் இல்லாத மகத்தான நாயன்

அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்?

(அல்குர்ஆன்:6:101.)

எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திடவில்லை.

(அல்குர்ஆன்:72:3.)

“அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்’’ எனக் கூறுகின்றனர். அவ்வாறில்லை! அவன் தூயவன். வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன.

(அல்குர்ஆன்:2:116.)

முக்கடவுள் கொள்கை முற்றிலும் பொய்யே!

கிறிஸ்தவ சமுதாயம் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று மூன்று கடவுள் கொள்கையைக் கொண்டிருக்கின்றார்கள். அந்தக் கொள்கை ஒரு பொய்யான கொள்கை என்று திருக்குர்ஆன் ஆணித்தரமாக அடித்துச் சொல்கின்றது.

வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

(அல்குர்ஆன்:4:171.)

ஏசு கிறிஸ்து இறைவனின் மகனா?

“உஸைர் அல்லாஹ்வின் மகன்’’ என்று யூதர்கள் கூறுகின்றனர். “மஸீஹ் (இயேசு கிறிஸ்து) அல்லாஹ்வின் மகன்’’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

(அல்குர்ஆன்:9:30.)

ஒரு கடவுள் தான்! இருகடவுள் அல்ல!

“இரண்டு கடவுள்களைக் கற்பனை செய்யாதீர்கள்! அவன் ஒரே ஒரு கடவுளே! எனவே எனக்கே பயப்படுங்கள்!’’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

(அல்குர்ஆன்:16:51.)

சத்தியக் கடவுளுக்கு சந்ததிகள் இல்லை

“அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்’’ என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் எந்தச் சான்றும் இல்லை. அவன் தூயவன். அவன் தேவைகளற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா?

அல்குர்ஆன் 10:68

பிள்ளைகள் யாருக்கு தேவை? வயது முதிர்ந்த தள்ளாத பருவத்தில் தன்னை தாங்கிப் பிடிப்பதற்காகவும், தான் தேடி வைத்த செல்வத்தை அடுத்தவர் அள்ளிச் சென்றுவிடாமல் தன் பிள்ளையையே அதற்கு வாரிசாக்க வேண்டும் என்பதற்காகவும், தன்னை ஒரு மலடன் என்று உலகம் சொல்லி விடக்கூடாது என்பதற்காகவும் ஒருவனுக்குப் பிள்ளை அவசியம் தேவை. இது மனிதனுக்குரிய பலவீனம். இந்த பலவீனம் கடவுளுக்கு இருந்தால் அவன் கடவுள் கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக உலகிற்கு திருக்குர்ஆன் பிரகடனப்படுத்துகின்றது.

இன்று கடவுள் என்றால் தங்களைப் போன்றே கடவுளுக்கு மனைவி, மக்கள் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்கின்றார்கள். கடவுளுக்கு மனைவி இருந்தால் மனைவியும் கடவுளாகி விடுவார். பிள்ளைகளும் கடவுளாகி விடுவார்கள். அதாவது பல கடவுளர்கள் உருவாகி விடுகின்றார்கள். கடவுளுக்குரிய இலக்கணத்தில் ஒன்று அவனுக்கு நிகரோ, இணையோ இருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

“அல்லாஹ் ஒருவன்’’ என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) அவன் பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

(அல்குர்ஆன்:112:1-4.)

எப்போது மனைவி, மக்கள் என்று கடவுளுக்கு ஆகிவிடுகின்றார்களோ அப்போது கடவுளுக்கு நிகரும் இணையும் ஏற்பட்டு விடுகின்றது. அதனால் தான் இந்தியாவில் கடவுள் பற்றிக் காது கொடுத்துக் கேட்க முடியாத அளவுக்கு ஆபாசக் கதைகளெல்லாம் உலா வருகின்றன. கடவுளின் மான உறுப்பு கூட ஒரு பெரிய பரிமாணத்தில் வரையப்பட்டும் வடிக்கப்பட்டும் வழிபாடு செய்யப்படுகின்றது. ஒரு பக்கம் கடவுளுக்கு இணை ஏற்பட்டு விடுகின்றது. இன்னொரு பக்கம் காமம் என்ற தேவை ஏற்பட்டு விடுகின்றது. காமம் ஏற்பட்டதும் அதைத் தணிக்க மனைவி தேவைப்படுகின்றது. பிறரிடம் தேவை ஏற்படுபவன் ஒருபோதும் கடவுளாக முடியாது. இது அத்தனையையும் மேற்கண்ட அத்தியாயம் அழகாக விளக்கிவிடுகின்றது.

காக்க ஒரு கடவுள்; ஆக்க ஒரு கடவுளா?

கடவுள் நம்பிக்கை கொண்ட மக்கள், ஆக்க ஒரு கடவுள், காக்க ஒரு கடவுள், அழிக்க ஒரு கடவுள் என்று கடவுளின் அதிகாரத்தை முதலமைச்சர் சக அமைச்சர்களுக்கு துறைகளைப் பிரித்துக் கொடுப்பது போன்று பிரித்துக் கொடுக்கின்றார்கள். ஆனால் இறைவனின் அதிகாரம் பங்கிடுவதற்கும் பகிர்வதற்கும் உரிய அதிகாரம் இல்லை. ஆக்கல் என்ற படைக்கும் அதிகாரம் அவன் வசமே இருக்கின்றது.

வானம், பூமியை படைத்தவன்

நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி வானங்களைப் படைத்தான். உங்களைச் சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான். வானிலிருந்து தண்ணீரை இறக்கினோம். அதில் மதிப்புமிக்க ஒவ்வொரு (தாவர) வகையையும் முளைக்கச் செய்தோம்.

இது அல்லாஹ் படைத்தது! அவனன்றி மற்றவர்கள் படைத்தவற்றை எனக்குக் காட்டுங்கள்! எனினும் அநீதி இழைத்தோர் தெளிவான வழிகேட்டில் உள்ளனர்.

(அல்குர்ஆன்:31:10,11.)

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன்.

(அல்குர்ஆன்:7:54.)

மனிதர்களை படைத்தவன்

உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான்.

(அல்குர்ஆன்:39:6.)

மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்.

(அல்குர்ஆன்:2:21.)

காக்கும் கடவுள் அவன் தான்

“இதிலிருந்து அவன் எங்களைக் காப்பாற்றினால் நன்றி செலுத்துவோராக இருப்போம்’’ என்று பணிவாகவும், இரகசியமாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்தனை செய்யும்போது “தரை மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?’’ என்று கேட்பீராக!

“இதிலிருந்தும், ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்’’ என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன்:6:63,64.)

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

(அல்குர்ஆன்:31:32.)

அழிக்க ஒரு கடவுள்

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்.

(அல்குர்ஆன்:30:40.)

நாமே உயிர்ப்பிக்கிறோம். மரணிக்கச் செய்கிறோம். நம்மிடமே மீளுதல் உண்டு.

(அல்குர்ஆன்:50:43.)

இறப்பே இல்லாதவன்; என்றும் இருப்பவன்

கடவுளாக என்பவன் எப்போதும், என்றும், என்றென்றும் இருப்பவனாக, நித்திய ஜீவனாக இருக்க வேண்டும். அவன் சாகக்கூடாது. பிறப்பில்லாதவனைப் போன்று அவன் இறப்பும் இல்லாதவன்.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.

(அல்குர்ஆன்:2.255.)

உணவில்லாதவன்; உறக்கமில்லாதவன்.

கடவுள் பசி, தாகமில்லாதவனாக இருக்க வேண்டும். அவ்வாறு பசி, தாகம் போன்ற பலவீனங்கள் இருந்தால் அவன் கடவுள் கிடையாது.

“வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை’’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்:6:14.)

மறதி இல்லாதவன்; களைப்பில்லாதவன்.

உமது இறைவன் மறப்பவனாக இல்லை.

(அல்குர்ஆன்:19:64.)

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.

(அல்குர்ஆன்:50:38.)

தேவையுள்ளவன் தேவனல்லன்!

அல்லாஹ் தேவைகளற்றவன்.

(அல்குர்ஆன்:112:2.)

இயற்கைத் தேவை இல்லாதவன்!

கடவுள் என்றால் அவனுக்கு சிறுநீர், மலம் கழித்தல் போன்ற இயற்கைத் தேவைகள் இருக்கக் கூடாது. கிறிஸ்தவர்கள் ஈஸா என்ற ஏசுவையும் மர்யம் என்ற மேரியையும் கடவுளாக வணங்குகின்றனர். அவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்.

மர்யமின் மகன் மஸீஹ் (இயேசு கிறிஸ்து) தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர்.

(அல்குர்ஆன்:5:75.)

உணவு உண்ணுபவர்கள் என்றால் கண்டிப்பாக அவர்கள் மலம் ஜலம் கழித்தே ஆக வேண்டும்.

ஏசுவும் அவர்களது தாயாரும் மலம், ஜலம் கழிப்பவர்களாக இருந்தனர். அதனால் மலம், ஜலம் என்ற இயற்கைத் தேவையை நிறைவேற்றுபவர்கள் ஒரு போதும் கடவுளாக இருக்கமுடியாது என்று திருக்குர்ஆன் கடவுள் பற்றிய இலக்கணத்தை வரையறுத்துச் சொல்கின்றது.

கடவுள் மனிதானாக அவதாரம் எடுப்பாரா?

கடவுள் தான் ஏசுவாகப் பிறந்து வந்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றார்கள். மற்ற சமுதாய மக்களும் கடவுள் பல்வேறு பிராணிகள் வடிவத்தில் உருவமெடுப்பார், அவதாரம் எடுப்பார் என்று நம்புகின்றார்கள்.

அவனைப் போல் எதுவும் இல்லை.

(அல்குர்ஆன்:42:11.)

கடவுளுக்கு ஒப்பு, உவமை அறவே கிடையாது. அதனால் கடவுள் எந்த மனிதரின் தோற்றத்திலும் ஊர்வன, பறப்பன, மிதப்பனவற்றில் எவரிலும் எவற்றிலும் அவதாரமெடுக்க மாட்டார், வடிவமெடுக்கமாட்டார்.

தூணிலும் இல்லை; துரும்பிலும் இல்லை

இவ்வளவு வல்லமையும் மாட்சிமையும் பொருந்திய இறைவன் எங்கே இருக்கின்றான் என்று கேட்டால் மக்கள் ‘அவன் தூணிலும் துரும்பிலும் இருக்கின்றான்’ என்று பதிலளிக்கின்றார்கள்.  அவர்கள் அவ்வாறே நம்பியிருக்கின்றார்கள்.

ஆனால் திருக்குர்ஆன் இதை அபத்தமான, ஆபத்தான கொள்கை என்று குறிப்பிடுகின்றது. காரணம், இது அவனது தனித்தன்மையை கேலிக் கூத்தாக்கி விடுகின்றது. காணும் பொருளெல்லாம் கடவுள் என்றால் அவற்றிற்கு ஏன் அழிவு ஏற்படுகின்றது? என்ற பல்வேறு விதமான கேள்விகள் எழுகின்றன.

இந்த அபத்தத்திற்கும் அர்த்தமற்ற உளறலுக்கும் நேர்மாற்றமாக, படைத்த இறைவன் வானத்திற்கு மேல் அர்ஷில் அமர்ந்திருக்கின்றான், அங்கிருந்து அவன் ஆட்சி செலுத்துகின்றான் என்று திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

(அல்குர்ஆன்:7:54.)

அவனது இருக்கை, வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும்.

(அல்குர்ஆன்:2:255.)

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

(அல்குர்ஆன்:13:2.)

அந்த இறைவன் நமக்கு மேல் அமைந்திருக்கும் வானங்களுக்கு மேல் இருக்கின்றான்.

வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும். அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல்மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா?

(அல்குர்ஆன்:67:16,17.)

இறைவனுக்கு இணையில்லை; நிகரில்லை

அவனுக்கு நிகராக யாருமில்லை.

(அல்குர்ஆன்:112:4.)

அவனுக்கு நிகரானவன் இல்லை.

(அல்குர்ஆன்:6:163.)

ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.

(அல்குர்ஆன்:17:111.)

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை.

(அல்குர்ஆன்:25:2.)

இவை அனைத்தும் திருக்குர்ஆன் கூறுகின்ற கடவுள் தொடர்பான இலக்கணங்கள். இந்த இலக்கணங்கள் உரைகற்களும் இரசாயனப் பரிசோதனைகளும் ஆகும்.

நீங்கள் கடவுள் என்று நம்பக்கூடியவர்களை, நம்பக்கூடியவைகளை இவற்றுடன் உரசிப் பாருங்கள். இந்த இலக்கணங்களின் படி கல்லையோ களிமண்ணையோ கடவுளாக்க முடியாது. அதுபோல் மனிதனையும் நீங்கள் கடவுளாக்க முடியாது என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த இலக்கணங்களுக்குட்படாதவர்களை கடவுளின் பட்டியலிருந்து தூக்கி விடுங்கள் என்பது திருக்குர்ஆன் விடுக்கும் அறிவார்ந்த கட்டளையாகும்.

இந்தத் திருக்குர்ஆனை உலக மக்களிடம் சமர்ப்பிக்க வந்த சத்தியத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் கடவுள் கிடையாது திருக்குர்ஆன் அகில உலக மக்களுக்கு பகிரங்கமாகப் பிரகடனப் படுத்துகின்றது.

தனக்கே நன்மை, தீமை செய்ய இயலாத தூதர்

“அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்:7:188.)

திருக்குர்ஆன் கூறக்கூடிய இந்த அளவுகோலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒவ்வொருவரும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய ஓர் அளவுகோலாகும். முஹம்மது நபி அவர்கள் உஹத் போர்க்களத்தில் தாக்கப்பட்டு இரத்தம் சிந்தினார்கள். இந்தத் தீமை தனக்கு வராமல் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் தன்னை தற்காத்துக் கொள்ள முடியவில்லை எனும் போது அவர்கள் மற்றவர்களுக்கு எப்படி தீமையைத் தடுக்க முடியும் என்று ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும்படி இந்தத் திருக்குர்ஆனின் அளவுகோல் அமைந்திருக்கின்றது.

கடவுள் என்றால், ஒருவனுக்கு நன்மையையும் தீமையையும் அளிக்கும் ஆற்றல் கொண்டவன். ஒருவரை, ஒரு பொருளைக் கடவுளாக ஏற்க வேண்டுமென்றால் இந்த அளவுகோலை வைத்தும் அளந்து பாருங்கள். இதற்கு ஒத்துவரவில்லை என்றால் அத்தகையவர்களை, அத்தகையவற்றை கடவுள் பட்டியலிலிருந்து தூக்கி எறிந்து விடுங்கள்.

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்!

(அல்குர்ஆன்:10:106.)

இறந்தவர்கள் கடவுளர்களா?

மக்கள் இறந்து போன பெரியார்களை, நல்ல மனிதர்களை வணங்குகின்றனர். முஸ்லிம்களும் சமாதி கட்டி, தர்ஹாக்கள் எழுப்பி இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர். மனிதன் உயிருடன் இருக்கும் போதே கடவுள் கிடையாது எனும் போது இறந்த பின்பு எப்படிக் கடவுளாவான் என திருக்குர்ஆன் சிந்திக்கச் சொல்கின்றது.

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

(அல்குர்ஆன்:46:5.)

கண்களால் கடவுளை காணமுடியுமா?

இப்போது அப்படிப்பட்ட ஆற்றல்மிகு அந்தக் கடவுளை நமது கண்களால் காண முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது.

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான்.

(அல்குர்ஆன்:6:103.)

இந்த உலகத்தில் நிச்சயமாக யாரும் அந்த இறைவனைக் காண முடியாது. இறந்த பின்னர் ஒரு வாழ்க்கையிருக்கின்றது; இறந்த பின் ஓர் உலகம் இருக்கிறது. அங்கு தான் அந்த இறைவனைப் பார்க்க முடியும் என்று திருக்குர்ஆன் அகில உலகிற்கும் அறிவிக்கின்றது.

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

(அல்குர்ஆன்:75:22,23.)

அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் அவர்களின் காணிக்கை ஸலாம் என்பதாகும்.

(அல்குர்ஆன்:33:44.)

உண்மையான, உங்களையும் இந்த உலகத்தையும் படைத்த ஓர் இறைவனைக் காண வேண்டுமானால் மேற்கண்ட இலக்கணங்களின் அடிப்படையிலேயே கடவுளை நம்பி வணங்க வேண்டும். அப்படி வணங்குபவருக்கு இறந்தபிறகு அமையவிருக்கும் மறுமை வாழ்க்கையில் நிரந்தர சுவனத்தைப் பரிசாகத் தருகின்றான்.

திருக்குர்ஆன் கூறும் இந்த இலக்கணங்களின் அடிப்படையில் கடவுளை வணங்காமல், தங்கள் விருப்பத்திற்குக் கடவுளை உருவாக்கி வணங்கினால் அதுதான் இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயலாகும். இவ்வாறு இணை கற்பிப்பவர்களுக்கு அந்த ஓரிறைவன் மறுமையில் நிரந்தர நரகத்தைக் கூலியாகத் தருகின்றான்.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம்.

(அல்குர்ஆன்:5:72.)

மனிதப் பலவீனங்கள் கொண்டவன் கடவுளாக இருக்க முடியாது என்ற ஒரு கண்ணோட்டத்தை மட்டும் மையப்படுத்தி குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை என்ற இந்த ஆக்கம் தரப்பட்டிருக்கின்றது.

இறைவனுக்கென்று தனிப்பண்புகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை நீங்கள் திருக்குர்ஆனைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.