Tamil Bayan Points

16) குர்பானி மற்றும் ஸம்ஸம் நீர்

நூல்கள்: நபி வழியில் நம் ஹஜ்

Last Updated on April 15, 2023 by

குர்பானி கொடுத்தல்

ஹஜஜுப் பெருநாள் தினத்தில் வசதியுள்ளவர்கள் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.

ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் கொடுக்க வேண்டிய குர்பானி பற்றி மட்டும் நாம் விளக்குவோம்.

கிரான், தமத்துவ் அடிப்படையில் இஹ்ராம் கட்டியவர்கள் பத்தாம் நாளன்று குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் அறிந்துள்ளோம். இத்தகையவர்கள் குர்பானி கொடுக்க வசதியில்லா விட்டால் அதற்குப் பகரமாக வேறு பரிகாரம் செய்து கொள்ளலாம்.

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பப் பிராணியை (அறுங்கள்.) பப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பயிடுதல் உண்டு. உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பப் பிராணியை (பயிட வேண்டும்.) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச் சலுகையான)து மஸ்ஜிதுல் ஹராமில் யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன் 2:196)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்துள்ளனர். ஆயினும் அது கட்டாயமானதல்ல. ஒருவர் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுப்பதே அவசியமாகும். அல்லது ஏழு பேர் சேர்ந்து கூட்டாக ஒரு மாட்டை அல்லது ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கலாம்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். ஏழு நபர்கள் கூட்டாக ஒரு ஒட்டகத்தை அறுத்தோம். மாட்டையும் ஏழு நபர்கள் கூட்டாக அறுத்தோம்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2128, 2323

 

மினாவில் குர்பானி கொடுப்பதே நபிவழியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மினாவில் குர்பானி கொடுத்த ஹதீஸை முன்னரே எடுத்துக் காட்டியுள்ளோம்.

பெருநாள் தினத்தன்று குர்பானியைக் குர்பானி கொடுப்பவர் சாப்பிடலாம் என்பதைப் போல் ஹஜ்ஜில் குர்பானி கொடுப்பவரும் அதிலிருந்து சாப்பிடலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுபத்தி மூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்தார்கள். மீதியை அலீ (ரலி) அவர்கள் அறுத்தார்கள். தமது குர்பானியில் அலீ (ரலி) அவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட்டாக்கிக் கொண்டார்கள். பிறகு ஒவ்வொரு ஒட்டகத்திலிருந்தும் சிறிதளவு எடுத்து சமைக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிட்டார்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் போடப்பட்டு சமைக்கப்பட்டது. இருவரும் அதன் இறைச்சியைச் சாப்பிட்டார்கள். அதன் குழம்பை அருந்தினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137

எத்தகைய பிராணிகளைக் குர்பானி கொடுக்கலாம், எவ்வாறு அறுக்க வேண்டும் என்பது போன்ற விவரங்கள் பொதுவாகக் குர்பானியின் சட்டங்களைப் போன்றதாகும்.

தாங்களே குர்பானி கொடுக்காமல் மற்றவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தும் குர்பானியை நிறைவேற்றலாம்.

அரசாங்கத்தில் பணம் செலுத்தி விட்டால் அரசே நம் சார்பாகக் குர்பானி கொடுக்கும் நடைமுறை இருக்கிறது. அதில் தவறேதும் இல்லை. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் சார்பாக அலி (ரலி) அவர்களைக் குர்பானி கொடுக்க நியமணம் செய்துள்ளனர். மேலும், ஆயிஷா (ரலி) அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே குர்பானி கொடுத்துள்ளனர்.

 

ஸம்ஸம் நீர்

மக்காவில் ஸம்ஸம்என்று கூறப்படும் கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்று நீர் புனிதமானதாக அமைந்துள்ளது. வயிறு நிரம்ப அதை அருந்துவதும், தத்தமது ஊர்களுக்கு எடுத்துச் செல்வதும் விரும்பத்தக்கதாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் ஸம்ஸம்நீரை (மதீனாவுக்கு) எடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளனர்.

திர்மிதீ 886

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஸம்ஸம்) நீர் விநியோகிக்கப்படும் இடத்துக்கு வந்து தண்ணீர் கேட்டார்கள். (அதன் பொறுப்பில் இருந்த) அப்பாஸ் (ரலி) அவர்கள் (தமது மகன்) பழ்லு அவர்களிடம், நீ உன் தாயாரிடம் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காகத் தண்ணீர் கொண்டு வாஎன்றார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனையே குடிக்கத் தருவீராகஎன்றனர். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் இதில் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரேஎன்றார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதையே குடிக்கத் தருவீராகஎன்று (மீண்டும்) கேட்டார்கள். அதனை வாங்கி அருந்தினார்கள். பிறகு ஸம்ஸம்கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் தண்ணீர் இறைத்து, (விநியோகம் செய்யும் இடத்துக்குக் கொண்டு செல்லும்) அலுவலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் நல்லறம் ஒன்றில் ஈடுபட்டுள்ளீர்கள்என்று கூறிவிட்டு, மற்றவர்கள் உங்களுடன் போட்டியிட மாட்டார்கள் என்றிருந்தால் நானும் கிணற்றில் இறங்கி தோளில் தண்ணீரைச் சுமந்து செல்வேன்எனவும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1636

ஸம்ஸம் நீரைக் கிணற்றிலிருந்து நேரடியாக எடுத்து அருந்த வேண்டுமென்பதில்லை. அதை ஓரிடத்தில் திரட்டி விநியோகம் செய்யலாம் என்பதையும், ஸம்ஸம்நீர் புனிதமானது என்பதையும் இதிலிருந்து அறியலாம். குடிப்பதற்கு வேறு நல்ல தண்ணீர் தருவதாகக் கூறியும் கூட ஸம்ஸம்நீரை வேண்டிப் பெற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருந்தியதிலிருந்தும் இதனை நாம் அறியலாம்.

ஸம்ஸம் நீரை நின்று கொண்டு குடிக்க வேண்டும் என்றோ, தலையைத் திறந்து தான் குடிக்க வேண்டும் என்றோ எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸையும் நாம் காண முடியவில்லை.

இஹ்ராம் கட்டியவர்கள் தலையை மறைக்கக் கூடாது என்பதால் இஹ்ராம் கட்டியவர்கள் தலையை மறைக்காமல் இதை அருந்துவார்கள். இஹ்ராமிலிருந்து விடுபட்டவர்களும், தங்கள் சொந்த ஊரில் அருந்துபவர்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பது கிடையாது.

மேலும் இஹ்ராம் ஆடையை ஸம்ஸம் நீரில் கழுவி அதைக் கபனிடுவதற்காகப் பத்திரப்படுத்த வேண்டும் என்பதற்கும், குளிப்பாட்டும் போது ஸம்ஸம் நீரை ஊற்ற வேண்டும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. ஸம்ஸம் நீரைக் குடிப்பதற்குத் தான் ஹதீஸ்களில் ஆர்வமூட்டப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்திருந்தும், அதற்காக இஹ்ராம் கட்டியிருந்தும் அவர்கள் மரணித்த பின் இஹ்ராம் ஆடையால் கபனிடப்படவில்லை. தைக்கப்பட்ட சட்டையிலேயே அவர்கள் கபனிடப்பட்டதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.