Tamil Bayan Points

06) குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா?

நூல்கள்: இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

Last Updated on February 24, 2022 by

குழந்தை பிறந்த உடன் குழந்தையின் வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் சொல்ல வேண்டும் என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு செய்வது நபிவழி என்றும் நம்புகிறார்கள். இந்தக் கருத்தில் சில ஹதீஸ்கள் இருப்பதால் அவற்றை அடிப்படையாகக்கொண்டு இதை செய்துவருகிறார்கள். ஆனால் அந்த ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாக இருக்கிறது.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களை பெற்றெடுத்த போது நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களின் காதில் பாங்கு சொன்னார்கள் என்று ஒரு ஹதீஸ் (திர்மிதியில் 1436) வது இலக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

இது ஆஸிம் பின் உபைதுல்லாஹ் என்பவர் வழியாக வருகிறது. இவர் பலவீனமானவர் என்று இப்னு முயீன் என்ற அறிஞரும் எதற்கும் தகுதியில்லாதவர் என்று இமாம் அஹ்மத் அவர்களும் இவரது தகவல் மறுக்கப்பட வேண்டியது என்று இமாம் புகாரி அவர்களும் இவரை ஆதாரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று இப்னு சஃத் அவர்களும் கூறியுள்ளார்கள்.

மேலும் இதேச் செய்தி இமாம் பைஹகீ அவர்கள் எழுதிய ஷ‚ஃபுல் ஈமான் என்ற நூலிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதை காசிம் பின் முதய்யப் என்பவரும் முஹம்மத் பின் யூனுஸ் என்பவரும் அறிவிக்கிறார்கள். இவ்விருவரும் பலவீனமானவர்கள் என்று இமாம்கள் கூறியுள்ளார்கள். எனவே இதை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதால் குழந்தையின் காதில் பாங்கும் இகாமத் சொல்வதென்பது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத அனாச்சாரமாகும்.