Tamil Bayan Points

கொலையை விட குழப்பம் கொடியது!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

Last Updated on October 16, 2023 by Trichy Farook

கொலையை விட குழப்பம் கொடியது!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

ஒரு தனிமனிதனின் வாழ்க்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் நிலையும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சில நேரங்களில் சரியானதையும் தவறானதையும் பிரித்தறிய முடியாத அளவுக்குக் குழப்பங்கள் ஏற்படலாம்; அதனால் மக்களைத் தடுமாற்றமும் பதட்டமும் பற்றிப் பிடித்துக் கொள்ளும்.

இத்தகைய சூழ்நிலை பற்றியும் அப்போது கையாள வேண்டிய முறை பற்றியும் இஸ்லாம் விளக்கியுள்ளது. அவற்றை நம்பிக்கையாளர்கள் அறிந்து செயல்படுவது மிகவும் அவசியம். ஆகையால், குழப்பம் தொடர்பான சில செய்திகளை இப்போது இந்த உரையில் காண்போம்..

குழப்பம் விளைவிக்காதீர்!

மார்க்க விஷயமாக இருந்தாலும் சரி, உலக விஷயமாக இருந்தாலும் சரி! அதில் உண்மைக்கு எதிராக நடப்பதும், களம் காண்பதும் குழப்பம் செய்வதில் அடங்கும். மறுமை வெற்றியை விரும்பும் மக்கள் குழப்பமெனும் இழிகுணத்தை விட்டும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ

நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா?

(அல்குர்ஆன்: 47:22)

وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا ۚ إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ

பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதைச் சீர்கெடுக்காதீர்கள். அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள், நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.

(அல்குர்ஆன்: 7:56)

 تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِيْنَ لَا يُرِيْدُوْنَ عُلُوًّا فِى الْاَرْضِ وَلَا فَسَادًا‌ ؕ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ

பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.

(அல்குர்ஆன்: 28:83)

குழப்பத்திற்கு எதிரான பிரச்சாரம்

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; அவன் சொன்னபடியே வாழ வேண்டுமென எடுத்துரைத்த நபிமார்கள், தமது சமூகத்தில் இருந்த தீமைகளையும் எதிர்த்தார்கள். அதன்படி மக்களை பரிதவிக்கச் செய்யும் குழப்பத்திற்கு எதிராகவும் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். சமூகத்தைச் சீரழிக்காமல் வாழுமாறு போதித்தார்கள். இதன் மூலம் குழப்பம் என்பது தவிர்க்க வேண்டிய சமூகத்தீமை என்பதை எளிதாக அறியலாம்.

وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَـكُمْ خُلَفَآءَ مِنْۢ بَعْدِ عَادٍ وَّبَوَّاَكُمْ فِى الْاَرْضِ تَـتَّخِذُوْنَ مِنْ سُهُوْلِهَا قُصُوْرًا وَّتَـنْحِتُوْنَ الْجِبَالَ بُيُوْتًا‌ ۚ فَاذْكُرُوْۤا اٰ لَۤاءَ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ

“ஆது சமுதாயத்துக்குப் பின்னர் (ஸமூது கூட்டமான) உங்களை வழித்தோன்றல்களாக அவன் ஆக்கியதை எண்ணிப் பாருங்கள்! பூமியில் அவன் உங்களை வசிக்கச் செய்தான். அதன் மென்மையான பகுதிகளில் மாளிகைகளைக் கட்டுகிறீர்கள்! மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்கள்! எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்! பூமியில் குழப்பம் செய்து திரியாதீர்கள்!’’

(அல்குர்ஆன்: 7:74)

 وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًا‌ ؕ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ‌ ؕ قَدْ جَآءَتْكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ‌ فَاَوْفُوا الْكَيْلَ وَالْمِيْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَآءَهُمْ وَلَا تُفْسِدُوْا فِى الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا‌ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْ

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் சான்று வந்துள்ளது.

எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது’’ என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன்: 7:85)

وَإِذِ اسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ ۖ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا ۖ قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ ۖ كُلُوا وَاشْرَبُوا مِنْ رِزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ

மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது “உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!’ என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்து கொண்டனர்.

“அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள்! பருகுங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!’ (என்று அவர்களுக்கு மூஸா நபி மூலம் அறிவுரை கூறினோம்).

(அல்குர்ஆன்: 2:60)

கொலையை விடக் கொடியது

எல்லா விதமான தீமைகளையும் இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. அவற்றில் வீழ்ந்து விடாமல் இருக்குமாறு அறிவுரை வழங்குகிறது. அந்த வரிசையில் குழப்பம் செய்யும் பண்பு கொலையை விடவும் கொடிய குற்றமென அல்லாஹ் குர்ஆனில் எச்சரிக்கிறான்.

يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِيهِ ۖ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ ۖ وَصَدٌّ عَنْ سَبِيلِ اللَّهِ وَكُفْرٌ بِهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِ مِنْهُ أَكْبَرُ عِنْدَ اللَّهِ ۚ وَالْفِتْنَةُ أَكْبَرُ مِنَ الْقَتْلِ ۗ وَلَا يَزَالُونَ يُقَاتِلُونَكُمْ حَتَّىٰ يَرُدُّوكُمْ عَنْ دِينِكُمْ إِنِ اسْتَطَاعُوا ۚ وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَٰئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ۖ وَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ

புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். “அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதைவிடப் பெரியது.

கொலையை விட கலகம் மிகப் பெரியது’ எனக் கூறுவீராக! அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏகஇறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 2:217)

وَاقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ أَخْرَجُوكُمْ ۚ وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ ۚ وَلَا تُقَاتِلُوهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ حَتَّىٰ يُقَاتِلُوكُمْ فِيهِ ۖ فَإِنْ قَاتَلُوكُمْ فَاقْتُلُوهُمْ ۗ كَذَٰلِكَ جَزَاءُ الْكَافِرِينَ

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது.

மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏகஇறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.

(அல்குர்ஆன்: 2:191)

ஒருவரைக் கொல்வது ஒட்டுமொத்த சமுதாயத்தையே கொலை செய்வதைப் போன்று என திருக்குர்ஆன் நமக்குப் பாடம் நடத்துகிறது. இப்படியிருக்க இத்தகைய கொலையை விட குழப்பம் கொடியது என்று சொல்வதிலிருந்து அப்பாவத்தின் கொடூரத்தைப் புரிய முடிகிறது.

குழப்பத்தை அல்லாஹ் விரும்ப மாட்டான்

உண்மைக்கு மாற்றமான நடவடிக்கைகள் மூலம் சீர்குலைவு ஏற்படுத்துவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அதற்கு ஆயிரம் காரணங்களை கூறிக் கொண்டாலும் குழப்பவாதிகளை அல்லாஹ் விரும்ப மாட்டான்; அவர்களின் அட்டூழியத்தை அல்லாஹ் மேலோங்க விடமாட்டான். இதோ அவனது அறிவிப்பைப் பாருங்கள்.

وَإِذَا تَوَلَّىٰ سَعَىٰ فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ

அவன் உம்மை விட்டுப் புறப்பட்டதும் இம்மண்ணில் குழப்பம் விளைவிக்கவும், பயிர்களையும், உயிர்களையும் அழிக்கவும் முயல்கிறான். அல்லாஹ் குழப்பத்தை விரும்ப மாட்டான்.

(அல்குர்ஆன்: 2:205)

وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ ۖ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا ۖ وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ ۖ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ

அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் காரூனிடம் கூறினர்).

(அல்குர்ஆன்: 28:77)

فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُمْ بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ

அவர்கள் (தங்கள் வித்தையைப்) போட்ட போது “நீங்கள் கொண்டு வந்திருப்பது சூனியமாகும். அல்லாஹ் அதை ஒழிப்பான். குழப்பவாதிகளின் செயலை அல்லாஹ் மேலோங்கச் செய்வதில்லை’’ என்று மூஸா கூறினார்.

(அல்குர்ஆன்: 10:81)

கடும் தண்டனைக்குரிய குற்றம்

இஸ்லாம் என்பது பிறர் நலன் நாடும் மார்க்கம். அது பொதுநலனுக்குப் பங்கம் விளைப்பதை பொறுத்துக் கொள்ளாது. சமூக அமைதியைக் கெடுக்கும் செயல்களை ஆதரிக்காது. அதற்கும் மேலாக, தான்தோன்றித் தனமாக வரம்பு மீறிக் குழப்பம் செய்து திரிபவர்களுக்கு இஸ்லாமிய ஆட்சி இருந்தால் கடும் தண்டனை கிடைக்கும்.

مِنْ أَجْلِ ذَٰلِكَ كَتَبْنَا عَلَىٰ بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا ۚ وَلَقَدْ جَاءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِنْهُمْ بَعْدَ ذَٰلِكَ فِي الْأَرْضِ لَمُسْرِفُونَ

“கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்’ என்றும்,

“ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர்.

(அல்குர்ஆன்: 5:32)

கொலையாளிக்கு மரண தண்டனையை நிர்ணயித்துள்ளது மார்க்கம். அதே தீர்ப்புதான் பூமியில் குழப்பத்தை நாடும் ஆசாமிகளுக்கும் எனும் போது அந்தக் குற்றத்தின் வீரியத்தைப் புரிய முடிகிறது.

மறுமையில் அழிவைத் தரும் குழப்பம்

படைத்தவனின் சாபம் என்பது சாதாரணமானது அல்ல. அதை அடைந்தோருக்கு ஈருலகிலும் கேடுதான் கிடைக்கும். இத்தகையை கேவலம் குழப்பவாதிகளுக்குக் காத்திருக்கிறது. பொய்யை மூலதனமாகக் கொண்டு திரியும் தந்திரக்காரர்கள் மறுமையில் வசமாக மாட்டிக் கொள்வார்கள். அவர்கள் பெரும் இழப்பைச் சந்திப்பார்கள். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனைகள் காத்திருக்கின்றன.

وَالَّذِينَ يَنْقُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ ۙ أُولَٰئِكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوءُ الدَّارِ

அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுத்த பின் அதை முறிப்போருக்கும், இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதைத் துண்டிப்போருக்கும், பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கும் சாபம் உள்ளது. அவர்களுக்கு அவ்வுலகில் கேடு உண்டு.

(அல்குர்ஆன்: 13:25)

الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ زِدْنَاهُمْ عَذَابًا فَوْقَ الْعَذَابِ بِمَا كَانُوا يُفْسِدُونَ

(நம்மை) மறுத்து, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர் குழப்பம் செய்து வந்ததன் காரணமாக வேதனைக்கு மேல் வேதனையை அவர்களுக்கு அதிகமாக்குவோம்.

(அல்குர்ஆன்: 16:88)

أَمْ نَجْعَلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَالْمُفْسِدِينَ فِي الْأَرْضِ أَمْ نَجْعَلُ الْمُتَّقِينَ كَالْفُجَّارِ

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைப் பூமியில் குழப்பம் செய்வோரைப் போல் ஆக்குவோமா? அல்லது (நம்மை) அஞ்சுவோரைக் குற்றம் புரிந்தோரைப் போல் ஆக்குவோமா?

(அல்குர்ஆன்: 38:28)

الَّذِينَ يَنْقُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ ۚ أُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ

அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை உறுதிப்படுத்திய பின் முறிக்கின்றனர். இணைக்கப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டதை (உறவை) முறிக்கின்றனர். பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். அவர்களே நட்டமடைந்தவர்கள்.

(அல்குர்ஆன்: 2:27)

குழப்புவது ஷைத்தானின் ஆயுதம்

பூமியில் குழப்பம் விளைவிப்பது பெருங்குற்றம் என்பதை இன்னொரு கோணத்திலும் புரிந்து கொள்ளலாம். இப்லீஸ், மனித இனத்தை வழிகெடுக்க ஒவ்வொரு நிமிடமும் துடித்துக் கொண்டிக்கிறான்; தனது அடியாட்களை அங்கும் இங்குமாக ஓயாமல் அனுப்பிக் கொண்டிருக்கிறான். அதற்கு அவனது வகையறாக்கள் கையாளும் முக்கிய ஆயுதம் மக்களிடம் குழப்பத்தை விதைப்பதாகும்.

إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ، ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ، فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً، يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ: فَعَلْتُ كَذَا وَكَذَا، فَيَقُولُ: مَا صَنَعْتَ شَيْئًا، قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ: مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ، قَالَ: فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ: نِعْمَ أَنْتَ ” قَالَ الْأَعْمَشُ: أُرَاهُ قَالَ: «فَيَلْتَزِمُهُ

இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்த) அனுப்புகிறான். அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து “நான் இன்னின்னவாறு செய்தேன்” என்று கூறுவான்.

அப்போது இப்லீஸ், “(சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை” என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, “நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை” என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச்செய்து, “நீதான் சரி(யான ஆள்)” என்று (பாராட்டிக்) கூறுவான். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம்-5419 , 5418

ஷைத்தான்களின் சூழ்ச்சிக்குப் பலியானவர்களே கெட்ட நோக்கத்துடன் சுற்றித் திரிகிறார்கள்; குழப்பத்தைப் பரப்புகிறார்கள். அதில் மூழ்கித் திளைக்கிறார்கள். இந்த ஆட்கள் இனியாவது ஷைத்தான்களின் வலையில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளட்டும்.

குழப்புவது வழிகெட்டவர்களின் பண்பு

நமக்கு முன்னால் வாழ்ந்த வழிகேடர்களின் பண்புகளை அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்கிறான். அவனது கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளானவர்களின் வரலாறு கூறப்பட்டுள்ளது. குழப்பம் செய்யும் கேவலமான பண்பு அவர்களிடம் சர்வ சாதாரணமாக இருந்துள்ளது. அதனால் அழிவில் சிக்கிக் கொண்டார்கள். அந்தப் பண்பு முஃமின்களான நம்மிடம் புகுந்துவிடாதபடி கவனத்தோடு வாழவேண்டும்.

وَقَالَتِ الْيَهُودُ يَدُ اللَّهِ مَغْلُولَةٌ ۚ غُلَّتْ أَيْدِيهِمْ وَلُعِنُوا بِمَا قَالُوا ۘ بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنْفِقُ كَيْفَ يَشَاءُ ۚ وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِنْهُمْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ طُغْيَانًا وَكُفْرًا ۚ وَأَلْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ ۚ كُلَّمَا أَوْقَدُوا نَارًا لِلْحَرْبِ أَطْفَأَهَا اللَّهُ ۚ وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا ۚ وَاللَّهُ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ

“அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது’’ என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்.

உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டது, அவர்களில் பெரும்பாலோருக்கு (இறை) மறுப்பையும் வரம்பு மீறலையும் அதிகப்படுத்தி விட்டது. கியாமத் நாள் வரை அவர்களிடையே பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விட்டோம். அவர்கள் போர் (எனும்) தீயை மூட்டும் போதெல்லாம் அதை அல்லாஹ் அணைத்து விடுகிறான். அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.

(அல்குர்ஆன்: 5:64)

إِرَمَ ذَاتِ الْعِمَادِ
الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ
وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ
وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ
الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ
فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ
فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ

ஆது, தூண்களையுடைய இரம் சமுதாயங்களை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? உலகில் அவர்களைப் போல் (யாரும்) படைக்கப்படவில்லை. மலையடிவாரத்தில் பாறையைக் குடைந்(து வாழ்ந்)த ஸமூது சமுதாயத்தையும், படைகளுடைய ஃபிர்அவ்னையும் (எப்படி ஆக்கினான்?) அவர்கள் உலகில் வரம்பு மீறிக் கொண்டிருந்தனர். அதில் குழப்பத்தை அதிகமாக்கினார்கள். எனவே உமது இறைவன் வேதனையின் சாட்டையைச் சுழற்றினான்.

(அல்குர்ஆன்: 89:7-13)

وَلَا تَقْعُدُوا بِكُلِّ صِرَاطٍ تُوعِدُونَ وَتَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ مَنْ آمَنَ بِهِ وَتَبْغُونَهَا عِوَجًا ۚ وَاذْكُرُوا إِذْ كُنْتُمْ قَلِيلًا فَكَثَّرَكُمْ ۖ وَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِينَ

“ஒவ்வொரு பாதையிலும் (மக்களை) மிரட்டுவதற்காக அமராதீர்கள்! அல்லாஹ்வின் பாதையைக் கோணலாகச் சித்தரித்து, நம்பிக்கை கொண்டோரை அதை விட்டும் தடுக்காதீர்கள்!

நீங்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததையும், உங்களை அவன் அதிகமாக்கியதையும் எண்ணிப் பாருங்கள்! ‘குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது’ என்பதைக் கவனியுங்கள்!’’

(அல்குர்ஆன்: 7:86)

இவ்வாறான சதிகாரர்கள் நபிகளாரின் காலத்திலும் இருந்தார்கள். இவர்கள் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நயவஞ்சகமாகப் பெரும் நெருக்கடி கொடுத்தார்கள். சமூக நலனைக் கெடுப்பதே இந்த வேடதாரிகளின் முக்கிய வேலையாக இருந்தது. இதைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் அறியலாம்.

لَوْ خَرَجُوا فِيكُمْ مَا زَادُوكُمْ إِلَّا خَبَالًا وَلَأَوْضَعُوا خِلَالَكُمْ يَبْغُونَكُمُ الْفِتْنَةَ وَفِيكُمْ سَمَّاعُونَ لَهُمْ ۗ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ
لَقَدِ ابْتَغَوُا الْفِتْنَةَ مِنْ قَبْلُ وَقَلَّبُوا لَكَ الْأُمُورَ حَتَّىٰ جَاءَ الْحَقُّ وَظَهَرَ أَمْرُ اللَّهِ وَهُمْ كَارِهُونَ

அவர்கள் உங்களுடன் புறப்பட்டிருந்தால் சீரழிவைத் தவிர (எதையும்) உங்களுக்கு அதிகமாக்கியிருக்க மாட்டார்கள். குழப்பம் விளைவிக்க எண்ணி, உங்களிடையே கோள் மூட்டியிருப்பார்கள். உங்களில் அவர்களின் ஒற்றர்களும் உள்ளனர்.

அநீதி இழைத்தவர்களை அல்லாஹ் அறிந்தவன். (முஹம்மதே!) முன்னரும் அவர்கள் குழப்பம் விளைவிக்க எண்ணினார்கள். பிரச்சனைகளை உம்மிடம் திசை திருப்பினார்கள். முடிவில் உண்மை தெரிந்தது. அவர்கள் வெறுத்த போதும் அல்லாஹ்வின் காரியம் மேலோங்கியது.

(அல்குர்ஆன்: 9:47,48)

سَتَجِدُونَ آخَرِينَ يُرِيدُونَ أَنْ يَأْمَنُوكُمْ وَيَأْمَنُوا قَوْمَهُمْ كُلَّ مَا رُدُّوا إِلَى الْفِتْنَةِ أُرْكِسُوا فِيهَا ۚ فَإِنْ لَمْ يَعْتَزِلُوكُمْ وَيُلْقُوا إِلَيْكُمُ السَّلَمَ وَيَكُفُّوا أَيْدِيَهُمْ فَخُذُوهُمْ وَاقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ ۚ وَأُولَٰئِكُمْ جَعَلْنَا لَكُمْ عَلَيْهِمْ سُلْطَانًا مُبِينًا

வேறு சிலரையும் காண்பீர்கள். அவர்கள் உங்களிடமும் அபயம் பெற்று, தமது சமுதாயத்தினரிடமும் அபயம் பெறுவதை விரும்புகின்றனர். கலகம் செய்ய அவர்கள் அழைக்கப்படும் போதெல்லாம் அதில் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.

அவர்கள் உங்களை விட்டு விலகிக் கொள்ளாமலும், உங்களிடம் சமாதானத்துக்கு வராமலும், தமது கைகளைக் கட்டுக்குள் வைக்காமலும் இருந்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்டவுடன் கொல்லுங்கள்! அவர்களுக்கு எதிராக (போரிட) தெளிவான சான்றை ஏற்படுத்தியுள்ளோம்.

(அல்குர்ஆன்: 4:91)

குழப்பவாதிகளிடம் எச்சரிக்கை

தங்களது சுயநலத்திற்காக, உலக ஆதாயத்திற்காக மற்றவர்களின் நிம்மதியைக் கெடுக்கும் கயவர்கள் எக்காலத்திலும் எச்சமூகத்திலும் இருக்கவே செய்வார்கள். மார்க்கம், அரசியல், பொருளாதாரம், ஒழுக்கம் போன்ற ஏதேனும் ஒருவடிவில் நாசத்தைத் தூவுவார்கள். இதை மனதில் கொண்டு சுதாரிப்போடு இருக்க வேண்டும்.

وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْضِ مَا أَنْزَلَ اللَّهُ إِلَيْكَ ۖ فَإِنْ تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَنْ يُصِيبَهُمْ بِبَعْضِ ذُنُوبِهِمْ ۗ وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக!

அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர்.

(அல்குர்ஆன்: 5:49)

وَوَاعَدْنَا مُوسَىٰ ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً ۚ وَقَالَ مُوسَىٰ لِأَخِيهِ هَارُونَ اخْلُفْنِي فِي قَوْمِي وَأَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِيلَ الْمُفْسِدِينَ

மூஸாவுக்கு முப்பது இரவுகளை வாக்களித்தோம். அதை (மேலும்) பத்து (இரவுகள்) மூலம் முழுமையாக்கினோம். எனவே அவரது இறைவன் நிர்ணயித்த காலம் நாற்பது இரவுகளாக முழுமையடைந்தது. “என் சமுதாயத்திற்கு நீர் எனக்குப் பகரமாக இருந்து சீர்திருத்துவீராக! குழப்பவாதிகளின் பாதையைப் பின்பற்றிவிடாதீர்!’’ என்று தம் சகோதரர் ஹாரூனிடம் மூஸா (ஏற்கனவே) கூறியிருந்தார்.

(அல்குர்ஆன்: 7:142)

إِنَّ الدُّنْيَا حُلْوَةٌ خَضِرَةٌ، وَإِنَّ اللهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا، فَيَنْظُرُ كَيْفَ تَعْمَلُونَ، فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ، فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِي إِسْرَائِيلَ كَانَتْ فِي النِّسَاءِ»

‘‘இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான். ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிலிருந்தும் பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்கள் விஷயத்தில் தான் ஏற்பட்டது’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம்-5292 

குழப்பத்தைப் பற்றிய முன்னறிவிப்பு

சத்திய மார்க்கம், இஸ்லாமிய ஆட்சி, சமூக ஒழுக்கம் ஆகிய சம்பந்தமாக எதிர்காலத்தில் ஏற்படும் சில குழப்பங்களை நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அவை உருவெடுக்கும் இடங்களின் சில பெயர்களையும் குறிப்பிட்டார்கள். இப்படியான நெருக்கடிகள் கியாமத் நாள் வரை தொடரும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

«يُقْبَضُ العِلْمُ، وَيَظْهَرُ الجَهْلُ وَالفِتَنُ، وَيَكْثُرُ الهَرْجُ» قِيلَ يَا رَسُولَ اللَّهِ، وَمَا الهَرْجُ؟ فَقَالَ: «هَكَذَا بِيَدِهِ فَحَرَّفَهَا، كَأَنَّهُ يُرِيدُ القَتْلَ»

‘(ஒரு காலத்தில்) கல்வி பறிக்கப்பட்டு விடும். அறியாமையும் குழப்பங்களும் பரவிவிடும். கொந்தளிப்பு மிகுந்து விடும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! கொந்தளிப்பு என்றால் என்ன?’ என வினவப்பட்டதற்கு, தம் கையால் கொலை செய்வதைப் போல் நபி (ஸல்) பாவனை செய்து காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-85 

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ العِلْمُ، وَتَكْثُرَ الزَّلاَزِلُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَتَظْهَرَ الفِتَنُ، وَيَكْثُرَ الهَرْجُ – وَهُوَ القَتْلُ القَتْلُ – حَتَّى يَكْثُرَ فِيكُمُ المَالُ فَيَفِيضَ»

‘கல்வி பறிக்கப்படும் வரை – பூகம்பங்கள் அதிகமாகும் வரை – காலம் சுருங்கும் வரை – குழப்பங்கள் தோன்றும் வரை – கொலை செய்தல் அதிகமாகும் வரை- – உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை – கியாம நாள் ஏற்படாது என்று  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: புகாரி-1036 

قَالَ حُذَيْفَةُ بْنُ الْيَمَانِ
…وَهُوَ يُحَدِّثُ مَجْلِسًا أَنَا فِيهِ عَنِ الْفِتَنِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَهُوَ يَعُدُّ الْفِتَنَ: «مِنْهُنَّ ثَلَاثٌ لَا يَكَدْنَ يَذَرْنَ شَيْئًا، وَمِنْهُنَّ فِتَنٌ كَرِيَاحِ الصَّيْفِ مِنْهَا صِغَارٌ وَمِنْهَا كِبَارٌ» قَالَ حُذَيْفَةُ: فَذَهَبَ أُولَئِكَ الرَّهْطُ كُلُّهُمْ غَيْرِي

…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அவையில் குழப்பங்கள் குறித்துப் பேசினார்கள். அங்கு நானும் இருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நிகழப்போகும்) குழப்பங்களை எண்ணிக் கணக்கிட்டபடி, “அவற்றில் மூன்று குழப்பங்கள் உள்ளன. அவை எதையுமே விட்டு வைக்காது.

அவற்றில் இன்னும் சில குழப்பங்கள் உள்ளன. அவை கோடைகால (வெப்பக்)காற்றைப் போன்றவையாகும். அவற்றில் சிறிய குழப்பங்களும் உள்ளன; பெரிய குழப்பங்களும் உள்ளன” என்று கூறினார்கள். (இந்தச் செய்தியைச் செவியுற்ற) அக்குழுவினரில் என்னைத் தவிர மற்ற அனைவரும் (இறந்து) போய்விட்டனர்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)
நூல்: முஸ்லிம்-5541 

நபியின் காலத்திற்குப் பின்பு மார்க்கம் தொடர்பாகவும் அரசியல் சார்பாகவும் பல்வேறு கொந்தளிப்புகள் நிகழ்ந்தன. இதன் வெளிப்பாடாக பல கூட்டத்தினர் அசத்தியக் கோட்பாட்டில் வீழ்ந்தனர். அடிப்படையை மறந்து அடித்துக் கொண்டனர். வெட்டி மாய்த்துக் கொண்ட சம்பவங்களும் உள்ளன. அவற்றின் தாக்கம் இன்றளவும் பல இடங்களில் இருப்பதை மறுக்க இயலாது. இதுபோன்ற சமயங்களில் மார்க்கம் கூறும் வழிமுறைகளை அறிவது கட்டாயம்.

குழப்பத்தைத் தடுப்பவர்களே நல்லோர்

சமூகத்தில் குழப்பம் வெடிக்கும் போது கைகட்டி வேடிக்கை பார்ப்பது அழகல்ல. அதுபற்றிய அறிவும் தெளிவும் பெற்றவர்களுக்கு அதைத் தடுக்கும் பொறுப்பு உள்ளது. குறைந்தபட்சம் அது பரவும் வாசல்களையாவது அடைக்க வேண்டும். இதன் மூலம் அல்லாஹ்விடம் நற்பெயரும் உயர்ந்த அந்தஸ்தும் கிடைக்கும்.

فَلَوْلَا كَانَ مِنَ الْقُرُونِ مِنْ قَبْلِكُمْ أُولُو بَقِيَّةٍ يَنْهَوْنَ عَنِ الْفَسَادِ فِي الْأَرْضِ إِلَّا قَلِيلًا مِمَّنْ أَنْجَيْنَا مِنْهُمْ ۗ وَاتَّبَعَ الَّذِينَ ظَلَمُوا مَا أُتْرِفُوا فِيهِ وَكَانُوا مُجْرِمِينَ

நாம் காப்பாற்றிய சிலரைத் தவிர உங்களுக்கு முன் சென்ற தலைமுறையினரில் பூமியில் குழப்பம் செய்வதைத் தடுக்கும் நல்லோர் இருந்திருக்கக் கூடாதா? அநீதி இழைத்தோர் சொகுசு வாழ்க்கையில் மூழ்கினார்கள். அவர்கள் குற்றவாளிகளாகவும் இருந்தனர்.

(அல்குர்ஆன்: 11:116)

 وَالَّذِينَ آمَنُوا وَلَمْ يُهَاجِرُوا مَا لَكُمْ مِنْ وَلَايَتِهِمْ مِنْ شَيْءٍ حَتَّىٰ يُهَاجِرُوا ۚ وَإِنِ اسْتَنْصَرُوكُمْ فِي الدِّينِ فَعَلَيْكُمُ النَّصْرُ إِلَّا عَلَىٰ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
وَالَّذِينَ كَفَرُوا بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۚ إِلَّا تَفْعَلُوهُ تَكُنْ فِتْنَةٌ فِي الْأَرْضِ وَفَسَادٌ كَبِيرٌ

நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யாதோர், ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமான நட்பும் இல்லை. மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுதல் உங்களுக்குக் கடமை. நீங்கள் உடன்படிக்கை செய்த சமுதாயத்திற்கு எதிராக தவிர.

நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். இதை நீங்கள் செய்யாவிட்டால் பூமியில் கலகமும், பெரும் சீரழிவும் ஏற்படும். (ஏக இறைவனை) மறுப்போர், ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள்.

(அல்குர்ஆன்: 8:72,73)

குழப்பத்தை விட்டும் ஒதுங்குவோம்

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«يُوشِكُ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ المُسْلِمِ غَنَمٌ يَتْبَعُ بِهَا شَعَفَ الجِبَالِ وَمَوَاقِعَ القَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الفِتَنِ»

‘ஒரு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அன்று முஸ்லிமின் செல்வங்களில் ஆடுதான் சிறந்தது. குழப்பங்களிலிருந்து மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஆட்டைக் கூட்டிக் கொண்டு அவன் மலைகளின் உச்சியிலும் மழை பெய்யும் இடங்களிலும் சென்று வாழ்வான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி)
நூல்: புகாரி-19 , 3300

 أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«سَتَكُونُ فِتَنٌ القَاعِدُ فِيهَا خَيْرٌ مِنَ القَائِمِ ، وَالقَائِمُ فِيهَا خَيْرٌ مِنَ المَاشِي، وَالمَاشِي فِيهَا خَيْرٌ مِنَ السَّاعِي، وَمَنْ يُشْرِفْ لَهَا تَسْتَشْرِفْهُ، وَمَنْ وَجَدَ مَلْجَأً أَوْ مَعَاذًا فَلْيَعُذْ بِهِ»

‘விரைவில் நிறையக் குழப்பங்கள் தோன்றும். (அந்த நேரத்தில்) அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனை விடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடந்து சென்று விடுபவனை விடச் சிறந்தவன் ஆவான். அப்போது நடந்து சென்று விடுபவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடச் சிறந்தவன் ஆவான். அதை அடைகிறவரை அது வீழ்த்தி அழித்துவிட முனையும்.

அப்போது, புகலிடத்தையோ, அபயம் தரும் இடத்தையோ பெறுகிறவர் அதைக் கொண்டு பாதுகாப்பு பெறட்டும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-3601 , 7081, 7082, 7083

حَدَّثَنِي عَامِرُ بْنُ سَعْدٍ، قَالَ
كَانَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ فِي إِبِلِهِ، فَجَاءَهُ ابْنُهُ عُمَرُ، فَلَمَّا رَآهُ سَعْدٌ قَالَ: أَعُوذُ بِاللهِ مِنْ شَرِّ هَذَا الرَّاكِبِ، فَنَزَلَ فَقَالَ لَهُ: أَنَزَلْتَ فِي إِبِلِكَ وَغَنَمِكَ، وَتَرَكْتَ النَّاسَ يَتَنَازَعُونَ الْمُلْكَ بَيْنَهُمْ؟ فَضَرَبَ سَعْدٌ فِي صَدْرِهِ، فَقَالَ: اسْكُتْ، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ اللهَ يُحِبُّ الْعَبْدَ التَّقِيَّ، الْغَنِيَّ، الْخَفِيَّ»

ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தம் ஒட்டகங்களுக்கிடையே இருந்தார்கள். அப்போது அவர்களுடைய புதல்வர் உமர் பின் சஅத் அவர்கள் வந்தார்கள். அவரை சஅத் (ரலி) அவர்கள் கண்டபோது, “வாகனத்தில் வரும் இந்த மனிதரின் தீமையிலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்”  என்று கூறினார்கள்.

அவர் (வாகனத்திலிருந்து) இறங்கி, “நீங்கள் உங்களுடைய ஒட்டகங்களுக்கும் ஆடுகளுக்குமிடையே தங்கிவிட்டீர்கள்; ஆட்சியதிகாரத்திற்காக மக்களைத் தம்மிடையே சண்டையிட்டுக் கொள்ள விட்டுவிட்டீர்கள்” என்று (குறை) கூறினார்.

உடனே, சஅத் (ரலி) அவர்கள் அவரது நெஞ்சில் அடித்து, “பேசாமல் இரு! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் இறையச்சமுள்ள, போதுமென்ற மனமுடைய, (குழப்பங்களிலிருந்து) ஒதுங்கி வாழ்கின்ற அடியானை நேசிக்கின்றான்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

நூல்: முஸ்லிம்-5673 

குழப்பத்தில் வீழாமல் நன்மைக்கு விரைவோம்

நமது மறுமைக்கான பயணத்தில் சுணக்கம் வருவதற்கு முன்பாகவே நம்மால் முடிந்தளவு நன்மைகளை அள்ளிக் கொள்ள வேண்டும். குறிப்பாக, குழப்பங்கள் வரும் போது அதில் மூழ்காமல் நல்லறங்களில் கவனம் செலுத்துவது தான் உகந்தது.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا، يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-186 

குழப்பங்களை விட்டும் பாதுகாப்புக் கோருவோம்

தினமும் பல்வேறு கோரிக்கைகளை படைத்தவனிடம் முன்வைக்கிறோம். அதில் ஒன்றாக, இறைவா! குழப்பங்களை விட்டும் பாதுகாப்பாயாக! என்று கேட்கும் பழக்கத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றுள் சிறியது பெரியது என்று அனைத்தை விட்டும் காக்குமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.

بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَائِطٍ لِبَنِي النَّجَّارِ، عَلَى بَغْلَةٍ لَهُ وَنَحْنُ مَعَهُ، إِذْ حَادَتْ بِهِ فَكَادَتْ تُلْقِيهِ، وَإِذَا أَقْبُرٌ سِتَّةٌ أَوْ خَمْسَةٌ أَوْ أَرْبَعَةٌ – قَالَ: كَذَا كَانَ يَقُولُ الْجُرَيْرِيُّ – فَقَالَ: «مَنْ يَعْرِفُ أَصْحَابَ هَذِهِ الْأَقْبُرِ؟» فَقَالَ رَجُلٌ: أَنَا، قَالَ: فَمَتَى مَاتَ هَؤُلَاءِ؟ ” قَالَ: مَاتُوا فِي الْإِشْرَاكِ، فَقَالَ: «إِنَّ هَذِهِ الْأُمَّةَ تُبْتَلَى فِي قُبُورِهَا، فَلَوْلَا أَنْ لَا تَدَافَنُوا، لَدَعَوْتُ اللهَ أَنْ يُسْمِعَكُمْ مِنْ عَذَابِ الْقَبْرِ الَّذِي أَسْمَعُ مِنْهُ» ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ، فَقَالَ: «تَعَوَّذُوا بِاللهِ مِنْ عَذَابِ النَّارِ» قَالُوا: نَعُوذُ بِاللهِ مِنْ عَذَابِ النَّارِ، فَقَالَ: «تَعَوَّذُوا بِاللهِ مِنْ عَذَابِ الْقَبْرِ» قَالُوا: نَعُوذُ بِاللهِ مِنْ عَذَابِ الْقَبْرِ، قَالَ: «تَعَوَّذُوا بِاللهِ مِنَ الْفِتَنِ، مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ» قَالُوا: نَعُوذُ بِاللهِ مِنَ الْفِتَنِ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، قَالَ: «تَعَوَّذُوا بِاللهِ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ» قَالُوا: نَعُوذُ بِاللهِ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ

நபி (ஸல்) அவர்கள் பனுந் நஜ்ஜார் குலத்தாருக்குச் சொந்தமான தோட்டமொன்றில் தமது கோவேறு கழுதையின் மீதிருந்தார்கள். அப்போது அவர்களுடன் நாங்களும் இருந்தோம். அப்போது அவர்களது கோவேறு கழுதை அவர்களைத் தூக்கியெறியும் அளவுக்கு வெருண்டோடியது. அங்கு ஆறு அல்லது ஐந்து அல்லது நான்கு மண்ணறைகள் இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களைப் பற்றி யார் அறிவார்?” என்று கேட்டார்கள். ஒரு மனிதர், “நான் (அறிவேன்)” என்றார்.

நபி (ஸல்) அவர்கள், “இவர்கள் எப்போது இறந்தார்கள்?” என்று கேட்டார்கள். அவர், “இணைவைப்பு (கோலோச்சியிருந்த அறியாமை) காலத்தில் இறந்தனர்” என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தச் சமுதாயம் மண்ணறைகளில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் (இறந்தவர்களைப்) புதைக்காமல் விட்டுவிடுவீர்கள் என்ற அச்சம் மட்டும் எனக்கில்லையாயின், நான் செவியுறும் மண்ணறையின் வேதனையை உங்களுக்கும் கேட்கச் செய்யும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்து இருப்பேன்” என்று கூறினார்கள்.

பிறகு எங்களை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி, “நரக நெருப்பின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்றார்கள். மக்கள், “நரக நெருப்பின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்’’ என்று கூறினர். பிறகு “மண்ணறையின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்றார்கள். மக்கள், “மண்ணறையின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்’’ என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “குழப்பங்களில் வெளிப்படையானவை மறைமுகமானவை அனைத்திலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “குழப்பங்களில் வெளிப்படையானவை மறைமுகமானவை அனைத்திலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்’’ என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்றார்கள். மக்கள், “தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்’’ என்று கூறினர்.

இதன் அறிவிப்பாளரான அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், “இதை நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்கவில்லை. மாறாக, ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களே எனக்கு இதை அறிவித்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)
நூல்: முஸ்லிம்-5502 

سَأَلُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَحْفَوْهُ بِالْمَسْأَلَةِ، فَصَعِدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ المِنْبَرَ فَقَالَ: «لاَ تَسْأَلُونِي عَنْ شَيْءٍ إِلَّا بَيَّنْتُ لَكُمْ» فَجَعَلْتُ أَنْظُرُ يَمِينًا وَشِمَالًا، فَإِذَا كُلُّ رَجُلٍ لاَفٌّ رَأْسَهُ فِي ثَوْبِهِ يَبْكِي، فَأَنْشَأَ رَجُلٌ، كَانَ إِذَا لاَحَى يُدْعَى إِلَى غَيْرِ أَبِيهِ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ مَنْ أَبِي؟ فَقَالَ: «أَبُوكَ حُذَافَةُ» ثُمَّ أَنْشَأَ عُمَرُ فَقَالَ: رَضِينَا بِاللَّهِ رَبًّا، وَبِالإِسْلاَمِ دِينًا، وَبِمُحَمَّدٍ رَسُولًا، نَعُوذُ بِاللَّهِ مِنْ سُوءِ الفِتَنِ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا رَأَيْتُ فِي الخَيْرِ وَالشَّرِّ كَاليَوْمِ قَطُّ، إِنَّهُ صُوِّرَتْ لِي الجَنَّةُ وَالنَّارُ، حَتَّى رَأَيْتُهُمَا دُونَ الحَائِطِ

நபித்தோழர்கள் (சிலர்) நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களுக்குப் பிடிக்காத) சில விஷயங்கள் குறித்து வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் சொற்பொழிவு மேடையின் மீதேறி, ‘(இன்று) நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப்பற்றி நான் உங்களுக்குத் தெளிவுபடுத்தாமல் இருக்கப் போவதில்லை’ என்று (கோபத்துடன்) கூறினார்கள்.

உடனே நான் வலப் பக்கமும் இடப்பக்கமும் திரும்பிப் பார்க்கத் தலைப்பட்டபோது அங்கிருந்த ஒவ்வொருவரும் தம் ஆடையால் தலையைச் சுற்றிப் போர்த்தியவாறு அழுதுகொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் பேசத் தொடங்கினார். அம்மனிதர் (பிறருடன்) சண்டை சச்சரவு செய்யும்போது அவரின் தந்தையல்லாத மற்றொருவரின் மகன் என அழைக்கப்பட்டு வந்தார். எனவே அவர், ‘அல்லாஹ்வின் நபியே! என் தந்தை யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தந்தை ஹுதாஃபா’ என்றார்கள்.

பிறகு உமர் (ரலி) அவர்கள் ‘நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். குழப்பங்களின் தீங்கிலிருந்து (எங்களை) பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் கோருகிறோம்’ என்று கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘நன்மையிலும் தீமையிலும் இன்றைய தினத்தைப் போன்று எந்த நாளையும் ஒருபோதும் நான் கண்டதில்லை. எனக்கு (இன்று) சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. அவற்றை (மிஹ்ராபின்) இந்தச் சுவருக்கு அப்பால் கண்டேன்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி-7089 

முஃமின்களாக இருக்கும் நமக்கு சமூக அக்கறை இருப்பது அவசியம். ஆகவே சமூகத்திற்குத் தீங்கு தரும் குழப்பத்தை விட்டும் நாம் அறவே நீங்கியிருக்க வேண்டும். சமுதாயத்தைச் சீர்படுத்துவது யார், சீர்குலைப்பது யார் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான் என்பதை மறந்து விடக்கூடாது.

وَمِنْهُمْ مَنْ يُؤْمِنُ بِهِ وَمِنْهُمْ مَنْ لَا يُؤْمِنُ بِهِ ۚ وَرَبُّكَ أَعْلَمُ بِالْمُفْسِدِينَ

அவர்களில் இதை (குர்ஆனை) நம்புவோரும் உள்ளனர். இதை நம்பாதோரும் உள்ளனர். குழப்பம் செய்வோரை உமது இறைவன் மிக அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 10:40)

وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ
أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَٰكِنْ لَا يَشْعُرُونَ

‘பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!’ என்று அவர்களிடம் கூறப்படும் போது ‘நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே’ எனக் கூறுகின்றனர். கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 2:11,12)

எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சி நமது சிந்தனைகளையும் செயல்களையும் நல்ல முறையில் அமைத்துக் கொள்வோமாக!  மார்க்கம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் கிளம்பும் போது அதற்கு மார்க்கமே அழகிய தீர்வை வழங்கியுள்ளது. இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரமான வஹீயின்படி தகுந்த நிலைபாடு எடுக்க வேண்டும். அதுதான் சரியானது.

உலக ரீதியான பிரச்சனைகள் இருந்தால் உரிய சான்றுகள் அடிப்படையில் அதற்குரிய தீர்வை எட்ட வேண்டும். இத்தகைய பக்குவத்தைத் தந்து ஈருலகிலும் வெற்றி பெறும் பாக்கியத்தை வல்ல ரஹ்மான் நமக்கு அருள்வானாக!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.