Tamil Bayan Points

சிறுவர் இமாமத் செய்யலாமா?

கேள்வி-பதில்: தொழுகை

Last Updated on July 12, 2021 by

சிறுவர் இமாமத் செய்யலாமா?

இமாமத் செய்பவரின் தகுதியை நபி (ஸல்) அவர்கள் சொல்லும் போது குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரும் அதை முதலில் ஓதக் கற்றுக்கொண்டவரும் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார். அவர்கள் அனைவருமே சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தால் அவர்களில் முதலில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்தவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்.

அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்தவர்களாய் இருந்தால் அவர்களில் வயதில் மூத்தவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும். ஒருவரது வீட்டிலோ அல்லது ஒருவருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்திலோ (அவருடைய அனுமதியின்றி) நீங்கள் தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒருவருடைய வீட்டில் “அவர் உங்களுக்கு அனுமதியளித்தால் தவிர‘ அல்லது “அவரது அனுமதியின்றி” அவரது விரிப்பின் மீது நீங்கள் அமராதீர்கள்.

நூல்: முஸ்லிம்-1193

குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்திருக்க வேண்டும் என்பது தான் இமாமத் செய்பவருக்கு இருக்க வேண்டிய முதல் தகுதியாகும். இதற்கு அடுத்து தான் பெரியவராக இருக்க வேண்டும் என்பதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே சிறுவராக இருந்தாலும் குர்ஆனை நன்கு தெரிந்தவராக இருப்பின் தாராளமாக பெரியவர்களுக்கு இமாமத் செய்யலாம் என்பது தான் ஹதீஸிலிருந்து கிடைக்கும் தீர்வாகும்.

இதைப் பின்வரும் நபிமொழி தெளிவாக எடுத்துரைக்கின்றது.

அம்ர் பின் சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், “மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?” என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், “அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத் தூதராக) அனுப்பியிருப்பதாக…. அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்…. கூறுகிறார்” என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள்.

உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், “அவரை அவருடைய குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)” என்று சொன்னார்கள்.

மக்கா வெற்றிச் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து  இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன்.

நபி (ஸல்) அவர்கள், “இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்‘ என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.

ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே,  (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன்.

நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின்புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், “உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணி) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.

நூல்: புகாரி-4302

அம்ர் பின் ஸலமா (ரலி) அவர்கள் சிறுவராக இருந்த போதும் குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்திருந்த காரணத்தினால் பெரியவர்கள் நிறைந்த ஜமாஅத்திற்கு இமாமத் செய்துள்ளார்கள். வஹீ அருளப்பட்ட காலத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதால் இது தவறாக இருந்தால் இதை நபி (ஸல்) அவர்கள் கண்டித்திருப்பார்கள். ஆனால் நபியவர்கள் கண்டிக்கவில்லை.

எனவே சிறுவர் குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருந்தால் பெரியவர்களுக்கு இமாமத் செய்யலாம் என்பதைத் தெளிவாக இந்த நபிமொழிகள் எடுத்துரைக்கின்றன.