Tamil Bayan Points

43) சிறு வயது அல்லது இளம் வயது மரணம்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

Last Updated on October 29, 2023 by

ஒருவர் வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காமல் இளம் வயதில் மரணித்து விட்டால் அவர் நல்லவர் அல்ல என்று சிலர் நம்புகின்றனர்.

சிறு வயதில் ஒருவர் மரணித்தால் அவரது பெற்றோர்கள் கெட்டவர்கள் என்பதால் தான் பிள்ளையைப் பறிகொடுத்துள்ளனர் எனவும் பேசுகின்றனர்.

இறைவன் திட்டமிட்டபடி தான் ஒருவர் மரணிக்கிறார். ஒருவரது நற்செயல்கள் காரணமாக மரணம் தள்ளிப் போவதுமில்லை. அவரது தீய செயல்கள் காரணமாக மரணம் முன்கூட்டியே வருவதும் இல்லை. இது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 7:34

அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 10:49

எந்தச் சமுதாயமும் தனது காலக் கெடுவை முந்தாது; பிந்தாது.

திருக்குர்ஆன் 15:5

மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:61

மனிதர்களை அவர்கள் செய்தவற்றுக்காக அல்லாஹ் பிடிப்பதாக இருந்தால் பூமியின் மேல் எந்த உயிரினத்தையும் விட்டு வைத்திருக்க மாட்டான். மாறாகக் குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளான். அவர்களின் அவகாசம் வரும் போது அல்லாஹ் தனது அடியார்களைப் பார்ப்பவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 35:45

அவனே உங்களை மண்ணிலிருந்தும், பின்னர் விந்துத் துளியிலிருந்தும், பின்னர் கருவுற்ற சினை முட்டையிலிருந்தும் படைத்தான். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளியேற்றுகிறான். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். பின்னர் முதியோராக ஆகின்றீர்கள். இதற்கு முன்பே கைப்பற்றப்படுவோரும் உங்களில் உள்ளனர். குறிப்பிட்ட காலக் கெடுவை நீங்கள் அடைகின்றீர்கள். நீங்கள் விளங்குவதற்காக (இதைக் கூறுகிறான்)

திருக்குர்ஆன் 40:67

அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 63:11

ஒரு பெண்ணுடைய மூன்று குழந்தைகள் இறந்து விட்டால் அக்குழந்தைகள் அவரை நரகத்திலிருந்து காக்கும் தடையாக அமைவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி இரண்டு குழந்தைகள்? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு குழந்தைகளும் தான் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)

நூல்: புகாரி 102, 1250, 7310

சிறுவயதிலேயே ஒருவர் மரணிப்பது அவரது பெற்றோரின் தீய செயல்களின் காரணமாக இல்லை என்பதை இந்த நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணித்த போது, இவருக்குச் சொர்க்கத்தில் பாலுட்டும் அன்னை உண்டு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: பரா பின் ஆஸிப் (ரலி)

நூல்: புகாரி 1382, 3255, 6195

பால் குடிக்கும் பருவத்தில் இப்ராஹீம் மரணித்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள். பெற்றோரின் தவறுகள் காரணமாகவே குழந்தைகள் இறக்கிறார்கள் என்றால் இப்ராஹீம் நிச்சயம் குழந்தைப் பருவத்தில் மரணித்திருக்க முடியாது.

இளம் வயதில் அல்லது நடுத்தர வயதில் ஒருவர் மரணித்தால் அதற்குக் காரணம் அவரது தீய செயல்கள் கிடையாது. எத்தனையோ நன்மக்கள் இளம் வயதில் மரணம் அடைந்ததற்குச் சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான்கு புதல்விகளை அல்லாஹ் கொடுத்தான். நான்கு பேரும் மிகவும் இளம் வயதில் தான் மரணித்தார்கள். மூன்று புதல்விகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பே மரணித்து விட்டார்கள்.

ருகையா (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) மரணிப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டில் மரணித்தார்கள்.

ஸைனப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு மரணித்தார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து ஆறு மாதங்களில் மரணித்தார்கள்.

(புகாரி 4241)

நடுத்தர வயதைக் கூட அடையாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு புதல்விகளும் மரணித்திருப்பதால் இளமை மரணம் துர்மரணம் அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.