Tamil Bayan Points

சேட்டிலைட் இல்லாத செய்திப் பரிமாற்றம்

பயான் குறிப்புகள்: அறிவியல் உண்மைகள்

Last Updated on October 11, 2016 by Trichy Farook

வண்ணத்துப் பூச்சி

பால்கனி வழியாக நம் வீட்டு மாடத்தில் ஒரு பெண் வண்ணத்துப் பூச்சியைக் காற்று கொண்டு வந்து சேர்த்து விட்டால், கண்டு கொள்ள முடியாத ஒரு சமிக்ஞையை அது உடனே அனுப்புகின்றது. அதன் துணையான ஆண் வண்ணத்துப் பூச்சி எங்கோ தொலை தூரத்தில் பறந்து கொண்டிருந்த போதும் அதன் சமிக்ஞையைப் புரிந்து கொண்டு உடனடியாக அதற்கு மறுமொழியும் தந்து விடுகின்றது.

அந்தக் காதலர் இருவரையும் தடுமாறச் செய்வதற்காக நமது முயற்சியால் புதுப்புது வாசனைகளை உண்டாக்கினாலும் அந்த வண்ணத்துப் பூச்சிகளின் இந்தச் செய்திப் பரிமாற்றத்தை நம்மால் குலைக்கவே முடியாது. அறிவுத் திறன் குறைந்த இந்தச் சாதாரண படைப்புக்கு ஏதாவது வானொலி நிலையம் இருக்கின்றதா? அல்லது அந்த ஆண் வண்ணத்துப் பூச்சியிடம் அதன் துணை அனுப்பும் செய்திகளைப் பெறுவதற்கான ஏரியல் எதுவும் இருக்கின்றதா? அல்லது அவை ஒலி அலைகளை அதிர்வுறச் செய்த அந்த அதிர்வுகளின் மூலம் பதில்களைப் பெறுகின்றனவா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

தொலைபேசி, வானொலி ஆகியவை நமது அதிசயமான கண்டுபிடிப்புகள் தான். மிக விரைவான செய்திப் பரிமாற்றத்திற்கு அவை நமக்கு வழிகோலுவது உண்மை தான். ஆயினும் அந்தச் செய்திப் பரிமாற்றங்களுக்கு உரிய சாதனங்களும், குறிப்பிட்ட இடங்களும் நமக்குத் தேவைப் படுகின்றனவே!

எனவே இந்த வகையில் அவையெல்லாம் தேவைப்படாமல் தமது செய்திப் பரிமாற்றங்களை நடத்திக் கொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சிகள் நம்மை வென்று விட்டதாகவே சொல்ல வேண்டும்.

(குமுதம், 28.061984, அரசு பதில்கள், பக்கம்: 16)

 

டோசி

டோசி என்று ஒருவகை வண்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? ஆண் வண்டுக்கு மோகம் ஏறும் போது, பக்கத்தில் உள்ள கல்லைத் தட்டுமாம். சாதாரண மைக்கினால் கூட வாங்கிக் கொள்ள முடியாதபடி அவ்வளவு மென்மையாகத் தட்டுமாம். ஐந்து மைலுக்கு அப்பால் இருக்கும் பெண் வண்டுக்கு அது எட்டி, அது புரிந்து கொண்டு பறந்து வருமாம். (ஆதாரம்: இயான் மெஸ்ஸிடர் எழுதிய நூல்)