Tamil Bayan Points

ஜப்பானில் தலை விரித்தாடும் மூடநம்பிக்கை!

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on July 22, 2019 by

ஜப்பானில் தலை விரித்தாடும் மூடநம்பிக்கை!

ஜப்பான் நாடு பல புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு என்று சொல்லப்படுவதுண்டு; அங்குள்ள மக்கள் அவ்வளவு திறமைசாலிகளா? என்று பலரும் வியந்து போய் கேட்பர்; ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா? என்னதான் அதி அற்புத சிந்தனை சக்தி இருந்தாலும் தன்னைப் படைத்த கடவுளைப்பற்றியான சிந்தனையில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்; அத்தகைய தெளிவு இல்லாவிட்டால் அவர் எப்படிப்பட்ட அதிபுத்திசாலியாக இருந்தாலும் அவரது மூளை வேலை செய்யாது; இதற்கு நிதர்சனமான எடுத்துக்காட்டுத்தான் ஜப்பான் நாட்டு மக்கள்.

புதிய புதிய மூடநம்பிக்கைகள்:

ஆம்! எந்த அளவிற்கு புதிய புதிய கண்டுபிடிப்புக்களையெல்லாம் ஜப்பான் நாட்டு மக்கள் கண்டு பிடித்து இந்த உலகத்திற்கு அறிமுகப்டுத்தியுள்ளர்களோ அதே போல புதிய புதிய மூடநம்பிக்கைகளையும் உலகிற்கு இவர்கள் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

குழந்தைகள் நெற்றியில் மரசுத்தியால் அடி

ஜப்பானில் குழந்தைகளை கோவிலுக்கு அழைத்துச் சென்று நடத்தப்படும் ஒரு திருவிழா குறித்து பிபிசி செய்தி வெளியிட்டிருந்தது. அதாவது ஒரு பெரிய மர சுத்தியலை எடுத்து அதை சாயத்தில் முக்கிய பிறகு அதை வைத்து பச்சிளம் குழந்தைகளின் நெற்றியில் சாமியார் அடித்து விடுகின்றார்; அந்த பெரிய மர சுத்தியலில் உள்ள சாயம் குழந்தைகளின் நெற்றியில் படும் அளவுக்கு அழுத்தமாக அடிக்கப்படுகின்றது.

அதிர்ஷ்டம் கிடைக்குமாம்:

இவ்வாறு குழந்தைகளின் நெற்றியில் சுத்தியலை வைத்து அடிப்பதால் அந்த குழந்தைகளுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என்றும், அந்த குழந்தைகள் பிற்காலத்தில் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதற்கு இது வழிவகுக்கும் என்றும் நம்பப்படுவதாக அந்த செய்தி கூறுகின்றது. தங்களது மூளையை பல வழிகளில் சிந்தித்து புதுப்புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவர்களால் சுத்தியலை வைத்து குழந்தைகள் நெற்றியில் அடித்தால் அது ஆரோக்கியமா என்பது குறித்து சிந்திக்க மனமில்லாமல் போய்விட்டதே! அந்த இடத்தில் அவர்களது மூளை வேலை செய்யவில்லை பார்த்தீர்களா?

மூளையை மழுங்கடிக்கும் ஆன்மீக போதை:

இதுதான் ஆன்மீக போதை என்பது; இந்த ஆன்மீக போதை ஒருவரது மூளையை ஆக்கிரமித்துவிட்டால் அவருக்கு எது சரி எது தவறு என்பதெல்லாம் தெரியாமல் போய்விடுகின்றது. இதுதான் யதார்த்தம்;

பேய் பயத்தில் ஜப்பானியர்கள்:

இது மட்டுமல்ல; ஜப்பானில் பேய் பயம் அதிகம்; பேய் வந்து தங்களை பிடித்துக் கொள்ளும் என்று பயந்து பலர் பேய் பீதியில் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர். சாமானிய மக்கள் இப்படி இருந்தால் பரவாயில்லை; ஜப்பான் நாட்டுப் பிரதமரே பேய் பீதியில் இருந்துள்ளதாக தகவல்கள் வெளி வந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஜப்பானியர்களின் நிர்வாண குச்சி ஆட்டம்

அதுமட்டுமல்ல; ஜப்பானியர்களின் நிர்வாண குச்சி வைத்து விளையாடும் மூடநம்பிக்கை உலகப் பிரசித்தம். அதென்ன குச்சி வைத்து ஆடும் மூடநம்பிக்கை ஆட்டம் என்று கேட்கின்றீர்களா? ஜப்பானின் ஓக்கயாமா பகுதியில் 500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையான சைடைஜி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ’ஹடாகா மட்ஸுரி’ என்னும் நிர்வாண திருவிழா ஜப்பான் முழுவதும் மிகவும் பிரசித்தியான திருவிழாவாகும்.

நிர்வாணக் கோல திருவிழா:

இந்த நிர்வாணத் திருவிழாவில் பங்கேற்பவர்கள் சிறிய வெண்ணிர கோவணத்தை மட்டும் கட்டிக் கொண்டு முதலில் ரத்தத்தை உறைய வைக்கும் குளிர்ந்த நீரூற்றில் குளிக்க வேண்டும். இதன் மூலம் உடலும், உள்ளமும் புனிதம் அடையும் என்பது காலகாலமாக பின்பற்றப்படும் ஐதீகம் என்று கூறப்படுகிறது. குளித்து முடித்த பின்னர் பக்தர்கள் அனைவரும் கிணறு போன்ற ஒரு கூடத்தில் ஒன்று திரண்டு நிற்க வேண்டும்.

அந்தக் கூடத்துக்கு மேற்புறம் உள்ள ஜன்னல் மாடத்தில் இருந்து ஒரு சாமியார் அதிர்ஷ்ட குச்சிகளை அள்ளி பக்தர்களை நோக்கி தூக்கி வீசுவார். யார் அந்த குச்சிகளை பிடிக்கிறார்களோ, அவர்கள் அந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்புடன், எவ்வித துன்பமும் நெருங்காமல் இருப்பார்கள் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால நம்பிக்கையாக உள்ளது. ஒரு ஆண்டில் மட்டும் நிர்வாண திருவிழவில் பங்கேற்று சாமியார் வீசும் அதிர்ஷ்ட குச்சிகளை பிடிக்க சுமார் 9 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் திரள்வதாக சொல்லப்படுகின்றது.

அத்தனை பேரும் ஒரே கூடத்தில் நிற்க வேண்டியிருந்ததால் ஒருவர் மீது மற்றவர் இடித்துக் கொண்டும், மூச்சுத் திணறியபடியும் நின்றிருந்தாலும் அதிர்ஷ்ட குச்சியை பிடிக்கும் ஆர்வத்தில் இந்த அசவுகரியம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரிவதில்லையாம். மாடத்தில் இருந்து சாமியார் குச்சிகளை வீசத் தொடங்கியதும் சோற்றுப் பருக்கைக்கு பாயும் காக்கை கூட்டம் போல் அவர்கள் அனைவரும் கரங்களை விரித்தபடி குச்சிகளை பிடிக்க ஒருவர் மீது இன்னொருவர் முட்டி, மோதி போட்டி போடுகின்றனர்.

சாமியார் வீசும் குச்சியை பிடித்தால் அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்குமாம். அப்படியானால் அந்த ஆண்டு முழுவதும் இவர்கள் எந்த வேலைக்கும் செல்லமாட்டார்களா? பிறகு ஏன் தொழில்துறை நடத்துகின்றார்கள்? அந்தக் குச்சியின் மகிமைதான் காரணம் என்றால் இவர்கள் கண்டுபிடிக்கக்கூடிய கண்டுபிடிப்புகளில் மின்சாரப் பயன்பாட்டிற்கு பதிலாக அந்த குச்சியை பயன்படுத்தினால் அதனால் பலன் ஏதும் இருக்குமா என்று இவர்கள் சிந்தித்திருந்தால் இந்த மூடநம்பிக்கையை செய்வார்களா?

இப்படி குச்சியைப் பி டி க் க கோவணத்துடன் திரள்வதுதான் பகுத்தறிவா? மூளையை செலவழிக்கும் லட்சணமா? எவ்வளவோ புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித் தவர்களை கோவணத்தோடு நிறுத்திவிட்டதே இந்த பொய்யான ஆன்மீகம். ரத்தத்தை உறைய வைக்கும் குளிர்ந்த நீரூற்றில் குளித்தால் அதிர்ஷ்டம் வருமா? அல்லது ஜன்னி வருமா? என்று கூட இவர்கள் சிந்திக்க வேண்டாமா?

இதனால் துன்பங்கள் தீருமென்றால் நாட்டில் இராணுவம் எதற்கு? பீரங்கி எதற்கு? அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளை இந்தக் குச்சியை வைத்தே வீழ்த்திவிடலாமல்லவா? இதையெல்லாம் அவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். போலி ஆன்மீக நம்பிக்கையானது எப்படிப்பட்ட மூளைத் திறன் பெற்றவர்களையும் வீழ்த்திவிடும் என்பதற்கு ஜப்பானியர்கள் நல்ல சான்று.

ஏக இறைக் கொள்கையே ஒரே தீர்வு:

படைத்த இறைவன் ஒருவன் இருக்கின்றான்; அவனை மட்டுமே நாம் வணங்க வேண்டும்; அவனுக்கு இணையாக யாரையும்; எதையும் ஆக்கக் கூடாது; அவன்தான் அனைத்து பொருட்களின் மீதும் சக்தி பெற்றவன் என்ற இந்த உண்மையை ஒருவர் உளமாற ஏற்று அவர் அதை நம்புவாரேயானால், அவர் இதுபோன்ற மூடநம்பிக்கைகளில் விழமாட்டார்;

ஜப்பானியர்களுக்கு புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க செயலாற்றிய அவர்களது மூளையானது ஆன்மீக விஷயத்தில் செயலற்றுப் போவதற்கு அவர்கள் கொண்டுள்ள தவறான கடவுள் நம்பிக்கைதான் காரணமாக அமைந்துள்ளது. மக்கள் சிந்திக்க வேண்டும்; உண்மையான ஆன்மீக வழிகாட்டுதலின் பக்கம் வரவேண்டும். சிந்திப்பார்களா?

Source: unarvu ( 09/06/17 )