Tamil Bayan Points

தடுமாற்றம்! தடம் மாற்றும்!!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

Last Updated on October 16, 2023 by Trichy Farook

தடுமாற்றம்! தடம் மாற்றும்!!

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

உலகில் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் ஏதோ ஒரு வேளையில் தன்னை அறிந்தோ, அறியாமலோ பாவமான காரியங்களில் தடுமாறி விழுந்து விடுவதைப் பார்க்கின்றோம். சிலர் செய்கின்ற பாவம் வெளியே தெரிந்து விட்டால் அவர் பாவி என்றும், பலர் செய்கின்ற பாவம் வெளியே தெரியாததன் காரணத்தினால் அவர் நல்லவர் என்றும் மக்களால் பெயர் சூட்டப்படுகின்றார்.

எது எப்படியோ மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பாவம் செய்வதின் மூலமாகவோ அல்லது இன்ன பிற பாவமான காரியங்களில் மூழ்கிக் கிடப்பதன் மூலமாகவோ அல்லது பாவத்திற்குத் துணைபுரிவதன் மூலமாகவோ இறைக் கட்டளையிளிருந்தும், இறைவனுக்கு அஞ்சுவதிலிருந்தும் தடுமாறி விட்டால், மனிதன் தடம் தெரியாமல் போய் விடுவான் என்பதே கண்கூடாகப் பார்த்து வருகின்ற நிதர்சனமான உண்மை.

தடுமாற்றம் என்பது மனிதர்களாகப் பிறந்த அத்தனை பேருடைய வாழ்க்கையிலும் ஏற்படக் கூடியது தான். ஏனென்றால் இறைவன் மனிதனைப் படைக்கும் போதே தடுமாறக்கூடியவனாகவும், பதறக்கூடியவனாகவும், பலவீனமான ஒரு படைப்பாகவுமே படைத்திருக்கின்றான்.

ஆனால் பலவீனமான மனிதர்களாகிய நாம் எந்தச் சூழலில் தடுமாற்றம் ஏற்படுகின்றதோ அந்தச் சூழலில் சுதாரித்து, இறைவனுக்குப் பயந்து தடுமாற்றத்தைத் தவிடுபொடியாக்கக்கூடிய ஒரு தந்திரத்தை கற்றுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இறைவன் திருமறையில் மனிதனின் குணநலன்களைப் பற்றிப் பேசும் போது,

وَخُلِقَ الْإِنْسَانُ ضَعِيفًا

மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.

(அல்குர்ஆன்: 4:28)

خَلَقَ الْإِنْسَانَ مِنْ نُطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُبِينٌ

மனிதனை விந்துத் துளியால் அவன் படைத்தான். அவனோ பகிரங்கமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 16:4)

خُلِقَ الْإِنْسَانُ مِنْ عَجَلٍ

மனிதன் அவசரக்காரனாகப் படைக்கப்பட்டுள்ளான்.

(அல்குர்ஆன்: 21:37)

لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي كَبَدٍ

மனிதனைக் கஷ்டப்படுபவனாகவே நாம் படைத்துள்ளோம்.

(அல்குர்ஆன்: 90:4)

மனிதர்களின் குணநலன்களைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக இறைவன் பிரித்துக் காட்டுகின்றான். மனிதன் பலவீனமானவனாகவும், வீண்தர்க்கம் செய்பவனாகவும், அவசரக்காரனாகவும், தேவை இல்லாத காரியத்தில் ஈடுபட்டு கஷ்டப்படுபவனாகவுமே மனிதனை இறைவன் படைத்திருக்கின்றான் என்று அற்புதமான வார்த்தைப் பிரயோகங்களில் பயன்படுத்துகின்றான்.

இப்படிப்பட்ட பலவீனமான குணநலன்களைக் கொண்ட மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் தடுமாறுவதும், அற்பத்திலும் அற்பமான ஷைத்தானின் வலையில் சுலபமான முறையில் விழுந்து விடுவதும், அதிகமான தவறுகளைத் தங்களுடைய வாழ்க்கையில் செய்வதும் இயல்பு தான்.

ஆனால் உண்மையான இறையச்சவாதிகள், அல்லாஹ்விற்குப் பயந்து தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்பவர்கள், இறைக்கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் எத்தனை பெரிய தடுமாற்றம் வந்தாலும், தனக்கு ஏற்பட்ட தடுமாற்றத்தைத் தடம் தெரியாமல் பந்தாடி விடுவார்கள்.

தடுமாற்றம் எதனால் ஏற்படும் என்பதைப் பற்றியும் தடுமாற்றத்தின் விளைவைப் பற்றியும் அதிலிருந்து நம்மை நாம் எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும். அதற்கு இஸ்லாம் காட்டும் வழிமுறைகளைப் பற்றியும் இந்த உரையில் காண்போம்…

மனோஇச்சை ஒரு மரணப்படுகுழி:

இன்றைக்கு மிகப்பெரும் மனிதர்களாக, மக்களிடத்தில் நன்மதிப்பு பெற்றவர்களாக இருந்தாலும் சரி, சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி! தடுமாறி விழுவதில் முதல் இடத்தில் இருப்பது தன்னுடைய மன இச்சையைப் பின்பற்றுவதன் காரணத்தினால் தான். இந்த விஷயத்தில் ஒருவர் நெருப்பாக இருந்து விட்டால், இறைவனின் பேருதவியால் தடுமாற்றத்தைத் தடம் தெரியாமல் அழித்து விடமுடியும்.

மனோஇச்சைப்படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்பவனைப் பற்றி அல்லாஹ் கடுமையான முறையில் விமர்சிக்கின்றான்.

أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلَىٰ عِلْمٍ وَخَتَمَ عَلَىٰ سَمْعِهِ وَقَلْبِهِ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِ غِشَاوَةً فَمَنْ يَهْدِيهِ مِنْ بَعْدِ اللَّهِ ۚ أَفَلَا تَذَكَّرُونَ

தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக்கிக் கொண்டவனைப் பார்த்தீரா? தெரிந்தே அவனை அல்லாஹ் வழிகெடுத்தான். அவனது செவியிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டான்.

அவனது பார்வையின் மீது மூடியை அமைத்தான். அல்லாஹ்வுக்குப் பின் அவனுக்கு வழிகாட்டுபவன் யார்? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

(அல்குர்ஆன்: 45:23)

மன இச்சைக்குக் கட்டுப்பட்டு, தடுமாறி வீழ்பவர்கள் செவியிலும், உள்ளங்களிலும் அல்லாஹ் முத்திரை குத்திவிட்டான் என்றும், பார்வையில் மூடியை ஏற்ப்படுத்தி விட்டான் என்றும் இறைவன் வன்மையாகக் கண்டிக்கின்றான்.

நம் வாழ்க்கையைத் தடம் தெரியாமல் அழிப்பதற்கும், நம்முடைய கண்ணியத்தை இழப்பதற்கும், நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்வதற்கும் இந்த மன இச்சை உச்சக்கட்டத்தில் இருக்கின்றது என்பதை ஒவ்வொருவரும் நம்முடைய உள்ளத்தில் ஆழப்பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இறைவன் குறிப்பிடுகின்றான்;

وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ

யார் தமது இறைவன் முன்னே நிற்பது பற்றி அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டாரோ சொர்க்கமே (அவரது) தங்குமிடம்.

(அல்குர்ஆன்: 79:40,41)

மன இச்சை என்ற கேடுகெட்ட தடுமாற்றத்திலே தவறி விழுந்து விடாமல், தன்னை விலக்கிக் கொள்வோருக்கு உறுதியாக சொர்க்கம் உண்டு என்று அல்லாஹ் உத்தரவாதம் வழங்குகின்றான். இப்படிப்பட்ட ஒரு அற்புதமான வாய்ப்பை மனோ இச்சைக்குக் கட்டுப்படாமல் வாழ்வோருக்கு அல்லாஹ் வழங்குகின்றான்.

மேலும் இறைவன் குறிப்பிடும் போது,

يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍؕ‏

அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருவதைத் தவிர, செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது.

(அல்குர்ஆன்: 26:88,89)

கேவலமான, அருவருக்கத்தக்க, நடித்த, இரட்டை வேடம் போட்ட உள்ளங்களுக்கு நாளை மறுமையில் எந்த வேலையும் இல்லை என்றும், தூய்மையான உள்ளத்திற்கே ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்றும் இறைவன் தெள்ளத்தெளிவான முறையில் விளக்குகின்றான்.

தடுமாற்றம் தடம் மாற்றும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தன்னுடைய உடலாலும், உழைப்பாலும், மூர்க்கத்தனமான எதிரிகளை விட்டு நபி (ஸல்) அவர்களைக் காப்பாற்றியதாலும் அண்ணலாரின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் முன்னணி வகிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சொல்லக்கூடிய மார்க்கம் சரியான மார்க்கம்தான் என்றும், அவர் சொல்லி வருகின்ற சத்தியத்தை யாரெல்லாம் எதிர்க்கின்றார்களோ, யாரெல்லாம் முஹம்மதை சித்ரவதை செய்கின்றார்களோ அவர்களை நான் சும்மா விட மாட்டேன் என்று சொல்லி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பாதுகாப்பு அரணாக இருந்தவர் அபூதாலிப் அவர்கள்.

ஆனால் அவருக்கு ஏற்பட்ட தடுமாற்றம் அவரைத் தடம் தெரியாமல் அழித்து விட்டது என்பதை வரலாறு நமக்குப் பாடம் புகட்டுகின்றது.

أَنَّهُ لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الوَفَاةُ جَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدَ عِنْدَهُ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ، وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي أُمَيَّةَ بْنِ المُغِيرَةِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي طَالِبٍ: ” يَا عَمِّ، قُلْ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، كَلِمَةً أَشْهَدُ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ ” فَقَالَ أَبُو جَهْلٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ: يَا أَبَا طَالِبٍ أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ؟ فَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْرِضُهَا عَلَيْهِ، وَيَعُودَانِ بِتِلْكَ المَقَالَةِ حَتَّى قَالَ أَبُو طَالِبٍ آخِرَ مَا كَلَّمَهُمْ: هُوَ عَلَى مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ، وَأَبَى أَنْ يَقُولَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا وَاللَّهِ لَأَسْتَغْفِرَنَّ لَكَ مَا لَمْ أُنْهَ عَنْكَ» فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى فِيهِ: {مَا كَانَ لِلنَّبِيِّ} [التوبة: 113] الآيَةَ

முசய்யிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபியவர்களின் பெரிய தந்தை) அபூதாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூஜஹ்ல் பின் ஹிஷாம், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், “எனது பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனச் சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சியம் கூறுவேன்’’ எனக் கூறினார்கள்.

அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், “அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகின்றீரா?’’ எனக் கேட்டனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூதாலிப் கடைசியாக, “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே (மரணிக்கின்றேன்)’’என்று கூறியதோடு “லாஇலாஹ இல்லல்லாஹ்’  எனக் கூறவும் மறுத்துவிட்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்’’ என்று கூறினார்கள். அப்போது “இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதன்று’’ எனும் (அல்குர்ஆன்: 9:13) ஆவது வசனத்தை அல்லாஹ் அருளினான்.

ஆதாரம்: புகாரி-1360 

இந்தச் செய்தியை நன்றாக ஆழமாகப் படித்துப் பாருங்கள்! உண்மையான மார்க்கம் எதுவென்று தெரிந்த பிறகும் கூட குடும்ப கௌரவத்தினால் ஏற்பட்ட தடுமாற்றம் உண்மையான மார்க்கத்தை தூக்கி எறிய வைக்கின்றது.

இத்தனை நாட்கள் நபி (ஸல்) அவர்களுக்குத் தோளுக்குத் தோளாக இருந்து, எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக் கேடயமாக இருந்த அபூதாலிப் இறுதிக்கட்டத்தில் தெரிந்தே தடுமாறுகின்றார். தடுமாற்றத்தின் விளைவு என்னவென்றால் அல்லாஹ்வின் தூதரை இறைவன் கண்டித்து விட்டு, அபூதாலிப் நரகவாசிதான் என்று உறுதியாகச் சொல்கின்றான்.

தெரிந்து கொண்டே தடுமாறுவதன் காரணத்தினால் சத்தியத்தை விட்டு வெளியேற்றுகின்ற அளவுக்கு அந்தத் தடுமாற்றம் நம்மைத் தள்ளி சீரழித்து விடுகின்றது.

போர்க்களத்தில் தடுமாற்றம்

ஒரு நபித்தோழர் போர்க்களத்தில் கலந்து கொண்டு வீர தீரமாகப் போர் புரிகின்றார். அன்றைய தினம் அவர் போரிட்டதைப் போல வேறெவரும் போரிடவில்லை என்று பெயர் வாங்குகின்ற அளவுக்குக் கடுமையான முறையில் தியாகம் செய்து போர் புரிகின்றார். இறுதியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரைப் பற்றி சொன்ன வார்த்தை குழுமியிருந்த அத்தனை நபர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இதோ, அந்த செய்தி;

நபி (ஸல்) அவர்களும் இணைவைப்போரும் (கைபர் போர்களத்தில்) சந்தித்துப் போரிட்டனர். நபியவர்கள் தம் படையினர் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்குவிட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார்.

(அவரின் துணிச்சலான போரைக் கண்ட) நபித்தோழர்கள், ‘‘இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை” என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘அவரோ நரகவாசியாவார்” என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர், ‘நான் அவருடன் இருக்கிறேன்’ (என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார்.

அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரண்டு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்.

(இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, ‘தாங்கள் இறைத்தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள். அவர், ‘சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி ‘அவர் நரகவாசி’ என்று கூறிறீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர்.

நான் (மக்களிடம்), ‘உங்களுக்காக (அவரின் நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்’ என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரண்டு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்” என்று கூறினார்.

ஆதாரம்: புகாரி-2898 

கடுமையான முறையில் போர்புரிந்த ஒரு நபித்தோழர் போர்க்களத்தில் தனக்கு ஏற்பட்ட காயத்தின் வேதனை தாங்க முடியாமல், சிறு தடுமாற்றத்தின் காரணத்தினால் தன்னைத்தானே குத்திக்கொண்டு கொண்டு செத்து மடிகின்றார். இறுதிக்கட்ட அவரது தடுமாற்றம், தன்னைத்தானே மாய்த்துக் கொள்வதற்கு முன்னால் அந்தத் தோழர் செய்த எல்லா தியாகத்தையும் குழிதோண்டி புதைக்கின்றது.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்;

மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் செய்து வருகின்ற காரியங்களைப் பற்றி  குறிப்பிடும்போது,

இறைத்தூதர்(ஸல்) அவர்கள்,

إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ الْجَنَّةِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ وَهُوَ مِنْ أَهْلِ النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ النَّارِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ وَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ

…‘மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்” என்றார்கள்.

ஆதாரம்: புகாரி-2898 

ஒரு மனிதரின் வெளிப்படையான அமலை வைத்தோ அல்லது கெட்ட செயலை வைத்தோ நல்லவர் – கெட்டவர் என்று நாம் தீர்மானித்து விட முடியாது. இறைவனிடத்தில் எப்படிப்பட்ட நன்மதிப்பையோ, கெட்ட மதிப்பையோ பெற்றிருக்கின்றார் என்று நம்மில் யாரும் அறிய முடியாது.

போர்வையால் தடுமாற்றம்

அல்லாஹ்வின் பாதையில் கடுமையான முறையில் ஒரு நபித்தோழர் போர் புரிகின்றார். இறுதியாகத் தனக்கு ஏற்பட்ட தடுமாற்றத்தின் காரணத்தில் தடம் தெரியாமல் வெகு தொலைவிற்குச் சென்று விட்ட சம்பவத்தை நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خَيْبَرَ، فَفَتَحَ اللهُ عَلَيْنَا فَلَمْ نَغْنَمْ ذَهَبًا وَلَا وَرِقًا، غَنِمْنَا الْمَتَاعَ وَالطَّعَامَ وَالثِّيَابَ، ثُمَّ انْطَلَقْنَا إِلَى الْوَادِي، وَمَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدٌ لَهُ، وَهَبَهُ لَهُ رَجُلٌ مِنْ جُذَامٍ يُدْعَى رِفَاعَةَ بْنَ زَيْدٍ مِنْ بَنِي الضُّبَيْبِ، فَلَمَّا نَزَلْنَا الْوَادِيَ، قَامَ عَبْدُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحُلُّ رَحْلَهُ، فَرُمِيَ بِسَهْمٍ، فَكَانَ فِيهِ حَتْفُهُ، فَقُلْنَا: هَنِيئًا لَهُ الشَّهَادَةُ يَا رَسُولَ اللهِ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَلَّا وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، إِنَّ الشِّمْلَةَ لَتَلْتَهِبُ عَلَيْهِ نَارًا أَخَذَهَا مِنَ الْغَنَائِمِ يَوْمَ خَيْبَرَ لَمْ تُصِبْهَا الْمَقَاسِمُ»، قَالَ: فَفَزِعَ النَّاسُ، فَجَاءَ رَجُلٌ بِشِرَاكٍ أَوْ شِرَاكَيْنِ فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَصَبْتُ يَوْمَ خَيْبَرَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «شِرَاكٌ مِنْ نَارٍ أَوْ شِرَاكَانِ مِنْ نَارٍ»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (வாதில் குரா) பள்ளத்தாக்கில் இறங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அந்த அடிமை எழுந்து அவர்களது சிவிகையை (ஒட்டகத்திலிருந்து) இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது (எங்கிருந்தோ வந்த) ஓர் அம்பால் அவர் தாக்கப்பட்டார். அதுவே அவரது இறப்புக்குக் காரணமாக அமைந்தது. அப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு இறைவழியில் உயிர்த் தியாகம் செய்யும் பேறு கிடைத்துவிட்டது. வாழ்த்துகள்!’’ என்று கூறினோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கைபர் போரில் கிடைத்த போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே அவர் எடுத்துக்கொண்ட போர்வை அவருக்கு நரக நெருப்பாக எரிந்துகொண்டிருக்கிறது’’ என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) மக்கள் திடுக்குற்றனர்.

அப்போது ஒரு மனிதர் ‘ஒரு செருப்பு வாரை’ அல்லது ‘இரண்டு செருப்பு வார்களை’க் கொண்டு வந்து “(இதை) நான் கைபர் போரின்போது எடுத்துக் கொண்டேன்’’ என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இது சாதாரண செருப்பு வார் அன்று; இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இதுவே) ‘நரகத்தின் செருப்பு வார்’ அல்லது ‘நரகத்தின் இரு செருப்பு வார்கள்’ ஆகும்’’ என்று கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி-183 (ஹதீஸ் சுருக்கம்)

இவரோ இறைவழியில் தியாகம் செய்த தியாகி! இவர் செய்த பிழை என்ன? போர்ச் செல்வங்கள் பங்கிடுவதற்கு முன்பே ஒரு போர்வையை எடுத்துக் கொள்கின்றார். இதன் காரணத்தினால் நரக நெருப்பிலே எரிந்து கொண்டிருக்கின்றார்.

கொஞ்சம் சிந்தியுங்கள்! இறை தியாகிக்கே தடுமாற்றம் ஏற்பட்ட காரணத்தினால் நரகம் கிடைக்கின்றது என்று சொன்னால் நாமெல்லாம் எம்மாத்திரம். இறைவழியில் போரிட்டவர்களின் கால் தூசுக்குச் சமமாவோமா? நமக்கு ஏற்படும் தடுமாற்றம் நாம் செய்த தியாகத்தை சுக்கு நூறாக நொறுக்கி விடும் என்பதற்கு இந்தச் செய்தி அற்புதமான சான்று.

தடம்புரளாமல் இருக்க, கேட்க வேண்டிய துஆ

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் கீழ்க்கண்ட துஆவை அதிகமதிகம் கேட்போம். தடம்புரண்டு விடுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுவோம்!

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

«إِنَّ قُلُوبَ بَنِي آدَمَ كُلَّهَا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ، كَقَلْبٍ وَاحِدٍ، يُصَرِّفُهُ حَيْثُ يَشَاءُ» ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆதமின் மக்களின் (மனிதர்களின்) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரேயோர் உள்ளத்தைப் போன்று உள்ளன. அதைத் தான் நாடிய முறையில் அவன் மாற்றுகிறான்’’ என்று கூறி விட்டு, “இறைவா! உள்ளங்களைத் திருப்புகின்றவனே! எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிவதற்குத் திருப்புவாயாக!’’ என்று பிரார்த்தித்தார்கள்.

ஆதாரம்: முஸ்லிம்-5161

இறைவன் விடுக்கும் எச்சரிக்கை

فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ

அவர்கள் தடம் புரண்ட போது அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தடம் புரளச் செய்து விட்டான்.

(அல்குர்ஆன்: 61:5)

சத்தியத்தை விட்டு நாமாகத் தடம் புரண்டு விட்டால், அல்லாஹ்வே நம்முடைய உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடுவான் என்றும், எக்காரணம் கொண்டும் எந்த ஒரு காரியத்திலும் தடம் புரண்டு விட்டால் தடம் தெரியாமல் அழிந்து விடுவோம் என்றும் இறைவன் பகிரங்க எச்சரிக்கை செய்கின்றான்.

இன்ஷா அல்லாஹ், இனிவரும் காலங்களில், எல்லாக் காரியங்களிலும் நம்மை நாம் சீர்த்திருத்திக் கொண்டு தடுமாற்றம் ஏற்படும்போது, இறைவனின் கட்டளைகளை ஆழமாகப் பற்றிப் பிடித்தவர்களாக, தடுமாற்றத்தைத் தடம் தெரியாமல் அழித்து விடுவதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.