Tamil Bayan Points

14) தண்ணீர் வியாபாரம்

நூல்கள்: நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

Last Updated on March 5, 2022 by

தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை விற்பது கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் 2925

தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பிறர் பயன் படுத்துவதைத் தடுக்க வேண்டாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 2353, 2354, 6962

தண்ணீரை வியாபாரம் செய்யக் கூடாது என்றால் இன்றைய சூழலில் இதில் பல கேள்விகள் எழுகின்றன.

லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகத்திற்கு விலை நிர்ணயித்தல், தண்ணீரின் நிறம் மற்றும் சுவையை மேம்படுத்தி கிருமிகளை அழித்துத் தயாரிக்கப்படும் மினரல் வாட்டர் விற்பனை செய்தல் போன்றவை தண்ணீரை விற்பனை செய்த குற்றத்தில் சேருமா? என்பது தான் அந்தக் கேள்விகள்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இது தண்ணீரை விலைக்கு விற்பது போல் தோன்றினாலும் உண்மையில் இது தண்ணீர் வியாபாரமாகாது.

ஏனெனில் லாரியில் சுமந்து செல்லுதல், அதில் முதலீடு செய்தல் போன்ற காரணங்களுக்காகவே கட்டணம் வாங்கப்படுகின்றது. அது போல் சாதாரண தண்ணீரைச் சுத்தப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் தான் மினரல் வாட்டருக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. எனவே இது தண்ணீரை விற்ற குற்றத்தில் அடங்காது.

நம்மிடம் ஒரு கிணறு உள்ளது. அதில் நம் தேவைக்கு மேல் தண்ணீர் இருக்கின்றது. இதில் நாங்களும் இறைத்துக் கொள்கிறோம் என்று ஒருவர் கேட்கும் போது, அவரிடம் கட்டணம் கேட்டால் அது தண்ணீரை விற்பதில் அடங்கும். நம்மிடம் தண்ணீர் இறைத்துத் தருமாறு அவர் கேட்கும் போது, அதற்கு நாம் கட்டணம் கேட்டால் அது குற்றமாகாது. இறைத்துத் தருவதற்காகவே கட்டணம் கேட்கிறோம்.

இந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் இதில் குழப்பம் ஏற்படாது.