Tamil Bayan Points

தத்துக்குழந்தைக்கு ஏன் சொத்துரிமை இல்லை?

கேள்வி-பதில்: குழந்தை வளர்ப்பு

Last Updated on November 22, 2016 by Trichy Farook

தத்துக்குழந்தைக்கு ஏன் சொத்துரிமை இல்லை?

இஸ்லாம் குழந்தையை எடுத்து வளர்ப்பதைத் தடை செய்யவில்லை. ஒருவர் இன்னொருவருடைய குழந்தையை எடுத்து வளர்ப்பதற்கு இஸ்லாத்தில் எந்தத் தடையுமில்லை.

அவ்வாறு எடுக்கப்பட்ட குழந்தையை வளர்ப்பவர் தன் குழந்தை என்று கூறிக் கொள்வதையே இஸ்லாம் தடை செய்துள்ளது. இன்றைக்கு நடைமுறையில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு தகப்பன் ஒருவன் இருக்க அதை வளர்த்தவன் அக்குழந்தைக்கு தானே தகப்பன் என்று கூறும் நிலை உள்ளது.

பொய்யான பேச்சுக்கள், போலிச் செயல்கள், போலி உறவுகள், தவறான நம்பிக்கைகள் இவற்றை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது. ஒருவன் ஒரு குழந்தையை எடுத்து வளர்த்தால் அதற்குரிய நன்மை அவனுக்கு உண்டு என்பது தனி விஷயம். ஆனால் இதற்காக அவன் அக்குழந்தைக்குத் தந்தையாகிவிட முடியாது.

அக்குழந்தை உருவாகுவதற்கு காரணமாக இருந்தவனே அக்குழந்தையின் தந்தையாக இருக்க முடியும். இதற்கு மாற்றமாக வளர்த்தவரை தந்தை என்று கூறுவது பொய்யாகும்.

ஒரு பிராணியை ஒருவன் வளர்த்தால் அப்பிராணிக்கு அவன் தந்தை என்று கூற முடியுமா? ஒரு செடியை ஒருவன் வளர்ப்பதால் அச்செடிக்கு அவன் தந்தை என்று கூற முடியுமா? தத்தெடுத்து வளர்ப்பவரை தந்தை என்று கூறுவது இது போன்றே அமைந்துள்ளது.

வளர்ப்பவரைப் பொறுப்பாளர் என்று கூறலாம். தந்தை என்று கூறுவது போலி உறவை ஏற்படுத்தும் செயலாகும்.

திருமணம் நெருங்கிப் பழகுதல் சொத்துரிமை போன்ற பல விஷயங்களில் இஸ்லாம் இரத்த பந்த உறவுகளுக்கும் அவ்வாறு இல்லாதவர்களுக்கும் வேறுபட்ட சட்டங்களை வழங்கியுள்ளது.

தத்தெடுத்தவரை தந்தை என்று கூறி போலியான உறவை ஏற்படுத்தினால் இறைவனுடைய சட்டங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றம் ஏற்படும். எனவே தான் இஸ்லாம் இவ்வாறு கூறுவதை தடைசெய்கின்றது.

ஒருவனுக்கு இரத்த பந்த உறவுகள் இருக்கும் போது யாரோ ஒருவர் பெற்றெடுத்த குழந்தைக்கு அத்தனை சொத்துக்களையும் வழங்குவது அந்த உறவுகளுக்குச் செய்யும் பெரிய அநியாயமாகும். எனவே தான் மகனுக்குரிய சொத்துரிமையை தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு இஸ்லாம் வழங்கவில்லை.

அதே நேரத்தில் மரணிப்பவர் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமாகாமல் தான் விரும்பியவருக்கு மரண சாசனம் செய்ய இஸ்லாம் அனுமதித்துள்ளது. ஒருவர் தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு தனது சொத்து சேர வேண்டும் என்று நினைத்தால் மூன்றில் ஒரு பங்கு அளவுக்குள் அக்குழந்தைக்கு வழங்கலாம்.