Tamil Bayan Points

தற்கொலையில் தமிழகம் முதலிடம்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on January 1, 2020 by

தற்கொலையில் தமிழகம் முதலிடம்

தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் தமிழகம் முதலிடம். மாநகரங்களில் சென்னை முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை தடுப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஸ்நேகா என்ற தனியார் அமைப்பு அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் எடுக்கப்பட்ட இந்தியாவில் தற்கொலைகள் சம்பந்தமான புள்ளி விவரங்களை வெளியிட்டது.

தற்கொலையில் முன்னணியில் இருக்கின்ற மாநிலங்கள் தமிழகம், மகாராஷ்ட்டிரா, மேற்கு வங்கம். ஆண்டுக்கு தமிழகத்தில் 16,927 பேரும், மகாராஷ்ட்டிராவில் 16,307 பேரும், மேற்கு வங்கத்தில் 14,310 பேரும் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. நாடு முழுவதும் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 2லட்சத்தை தாண்டுகிறது என்கிறது புள்ளி விபரம்.

பொருளாதார நெருக்கடி ,குடும்ப சூழல் பிரச்சினைகள், வேலை பார்க்கும் இடங்களில் இருக்கின்ற நெருக்கடி, மது பழக்க அடிமைகளின் தற்கொலை உள்ளிட்ட ஏராளமான காரணங்கள் தற்கொலையை நோக்கி மனிதர்களை திருப்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

படித்தவர்கள் படிக்காதவர்கள், சிறுவர்கள் பெரியவர்கள் என யாரும் விதிவிலக்கு இல்லை. அழுத்தமான மன நிலைக்கு இவர்கள் தள்ளப்படும்போது உடனே தற்கொலைக்கு முயன்றுவிடுகின்றனர். சென்னையில் ஆண்டு தோறும் 2,214 பேரும், பெங்களூரில் 1,966 பேரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். மன துக்கங்களை பகிர்ந்து கொள்ளவும் கடுமையான சூழ்நிலைகளில் ஆதரவாக யாரும் இல்லாத நிலையில் தற்கொலை முடிவை எடுத்து விடுவதாக தெரிவிக்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது கடந்த மூன்று ஆண்டு களில் நடந்த மாணவர்கள் தற்கொலை தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்

• 2014ம் ஆண்டில் தமிழகத்தில் நடந்த மாணவர்கள் தற்கொலை – 853

• 2015ம் ஆண்டில் தமிழகத்தில் நடந்த மாணவர்கள் தற்கொலை – 955

• 2016ம் ஆண்டில் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை -981 தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 2.68 மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர் கல்விக்காக வெளி மாநிலம் செல்லும் மாணவர்கள் இந்திய அளவில் தற்கொலைகள் அதிகம் நடந்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடம் வகிக்கிறது.

மாணவர்கள் தற்கொலைக் கான காரணங்கள் தேர்வுகளில் தோல்வியடைவதால் பெரும் பாலான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அறிக்கை சொல்கிறது . பெரும்பாலும் பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளின் தற்கொலைக்கான காரணம் மொழிப்பிரச்சனை , ஜாதி , ஆசிரியர் மட்டத்தில் பாகுபாடு காட்டுவது இவை முக்கிய காரணங்கள் ஆகும்.

இதில் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஆசிரியர்களோ, பெற்றோர்களோ திட்டிவிட்டார்கள் என்பதால் தற்கொலை செய்தவர்கள் ஏராளம். இதில் ஐஐடி கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடம் ஜாதி பாகுபாடு காட்டுழதால் தொடர் தற்கொலைகள் நடந்துவரும் நிலையில் தற்போது ஃபாத்திமா லத்தீஃப் என்ற மாணவியின் தற்கொலை என்பது மர்மமான முறையில் அவரது மரணம் பார்க்கப்படுகிறது மீடியாக்களில் அவரது தந்தை தன் மகளின் மரணத்தில் மர்மம் உள்ளது என ஆதாரங்களின் அடிப்படையில் கூறுகிறார் என்பது ஒருபுறம் இருந்தாலும் நாட்டில் இது போன்ற தற்கொலைகளை தடுக்க இஸ்லாம் சொல்லும் அறிவுரைகளை பேணி நடக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

தற்கொலையை தடுக்கும் இஸ்லாம் உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள்.

(அல்குர்ஆன் 4: 29)

நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுமையைக் கடை பிடியுங்கள். இன்னல்களைச் சகித்துக் கொள்ளுங்கள்.

(அல்குர்ஆன் : 3:200)

இஸ்லாம் எவ்வித சோதனைகளையும் எதிர் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறது. பிள்ளைகளிடம் சோதனைகளின் போதும் பிரச்சனைகளின் போதும் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை சொல்லித்தர வேண்டும். கல்வி என்பது அனைவருக்கும் சமம் ஆகும். கல்வி நிறுவனங்கள் அனைத்து மாணவர்களையும் சமமாக பார்க்க வேண்டும். குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே பயில வேண்டும்.

அவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று முதல் இடத்திற்கு தகுதிபெற வேண்டும் என்ற வெறி சிலருக்கு உள்ளது. இதில் மதத்தை திணிப்பதற்கு இடமில்லை. இதுபோன்ற தற்கொலை நிகழ்வுகள் நடைபெறாமல் அனைத்து மதத்தை சார்ந்த மாணவ மாணவிகள் எந்த அச்சுறுத்தல் இன்றி சக மாணவர்கள் போல் பயில்வதற்கு இனியாவது மத்திய மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும்.

Source: unarvu (22/11/19)