Tamil Bayan Points

சாதிக் கொடுமையினால் அடித்து கொல்லப்பட்ட தலித்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on January 4, 2020 by

பஞ்சாபில் துன்புறுத்தப்பட்ட தலித்

சட்டங்களும் விழிப்புணர்வு திட்டங்கள் பலவும் நம் தேசத்தில் அமலில் இருந்தும் இந்தியாவில் தீண்டாமை கொடுமைகளை மட்டும் ஒழித்து விட இயலவில்லை. இன்னும் சொல்வதானால், தற்போதைய பாஜக ஆட்சியின் கீழே, மக்கள் சாதிய பிளவுகளால் மேலும் பிளவுண்ட சமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர். மேல் சாதியினர் தங்களை உயர்வாய் கருதுவதும், கீழ் சாதியினராக அறியப்பட்டவர்களை அவர்கள் இழிவாக கருதுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்பதற்கு சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த கோர சம்பவம் ஒன்றே சான்றாக இருக்கிறது.

அங்குள்ள சங்ரூர் மாவட்டத்தை சார்ந்த தலித் சமூகத்தை சார்ந்த ஒருவர், அதே பகுதியை சேர்ந்த மேல் சாதி வகுப்பினரால் சொல்லணா துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கிறார். அடித்து கொடுமை செய்ததோடு, கயிறால் கட்டி வைத்து தாக்கப்பட்டதாகவும், சிறுநீர் பருக வைத்து துன்புறுத்தியத்தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக அப்பகுதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நபர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அவரது மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டங்களில் இறங்கியிருக்கின்றனர். பிறப்பால் அனைவரும் சமம் எனும் தத்துவார்த்த கோட்பாடு ஒன்றே தீண்டாமையை வேரறுக்கும் ஒற்றை ஆயுதமாக இருக்க முடியும் என்பதையே இது போன்ற நிகழ்வுகள் நமக்கு அனுதினமும் உணர்த்துகின்றன.

Sourece: unarvu ( 29/11/2019)