Tamil Bayan Points

35) தாயத்தை தொங்க விடக்கூடாது.

நூல்கள்: இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

Last Updated on March 12, 2023 by Trichy Farook

குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் போகும் போது பெற்றோர்கள் அவர்களை தர்ஹாக்களுக்கு அழைத்துச் சென்று தாயத்து என்றக் கருப்புக் கயிறை வாங்கி குழந்தைகளின் மேல் மாட்டிவிடுகிறார்கள். அல்லாஹ்வின் மீது வைக்கவேண்டிய நம்பிக்கையை அற்பக் கயிற்றின் மீதும் இறந்தவர்கள் மீதும் வைத்துவிடுகிறார்கள். இவ்வாறு செய்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டிருக்கிறது.

கயிறுக்கோ இரும்பு வளையத்திற்கோ நோயை அகற்றும் சக்தி இருக்கிறது என்று ஒருவன் நம்பினால் அவன் அல்லாஹ்விற்கு இணை கற்பித்தவனாகிவிடுகிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் (பத்து பேரைக் கொண்ட) சிறிய குழு ஒன்று வந்தது. ஒன்பது பேர்களிடத்தில் உறுதிப்பிரமானம் வாங்கினார்கள். ஒருவரிடத்தில் மாத்திரம் (பைஅத்) செய்யவில்லை. அப்போது மக்கள் அல்லாஹ்வின் தூதரே ஒன்பது நபர்களிடத்தில் (பைஅத்) உறுதிப்பிரமானம் வாங்கினீர்கள். இவரை விட்டுவிட்டீர்களே என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவர் மீது தாயத்து உள்ளது என்று கூறினார்கள். உடனே (தாயத்து அணிந்திருந்தவர்) தன் கையை (ஆடைக்குள்) விட்டு தாயத்தை அகற்றினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் பைஅத் செய்துவிட்டு எவன் தாயத்தை தொங்கவிடுகிறானோ அவன் இணைவைத்துவிட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி), நூல் : அஹ்மத்-17422 (16781) 

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பிரயாணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி,”எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப் படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகின்ற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்” என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.

அறிவிப்பவர் : அபூபஷீர் (ரலி), நூல் : புகாரி-3005