Tamil Bayan Points

தீண்டாமையைத் தகர்த்த இறைவேதம்

பயான் குறிப்புகள்: கொள்கை உறுதி

Last Updated on December 20, 2022 by

தீண்டாமையைத் தகர்த்த திருக்குர்ஆன்

சமூகத்தில் ஒரு மனிதன் சக மனிதர்கள் மூலம் சந்திக்கும் கொடுமைகளுள் மிகவும் கொடியது தீண்டாமை. இன்றைய காலத்திலும் நடக்கும் தீண்டாமை சம்பவங்கள் இதற்குப் போதுமான சாட்சிகளாக இருக்கின்றன.

சில நபர்கள், ஏதேனும் ஒரு வகையில் தங்களை மிகவும் உயர்வாக நினைக்கிறார்கள்; பிற மக்களை இழிவாகக் கருதுகிறார்கள். இதனால், அவர்களுக்கு எதிராகப் பல வகையில் அநீதி இழைக்கிறார்கள். இதுதான் தீண்டாமைக் கொடுமைக்கு மூல காரணம்.

இதன் விளைவாக, கட்டுப்பாடுகள் எனும் பெயரில் தாழ்ந்த குல மக்கள் மீது அடக்குமுறை பாய்ந்தது.

  • அவர்கள் உயர்குல மக்கள் வசிக்கும் இடங்களில் வசிக்கக் கூடாது.
  • ஊரின் ஒதுக்குப் புறமாக வசிக்க வேண்டும்.
  • ஊரின் பொதுக் கிணற்றிலுள்ள தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது.
  • உயர்சாதியினருக்கு முன் தலைகுனிந்து நடக்க வேண்டும்.
  • உயர்குலத்தவர் பயன்படுத்தும் வீட்டுப் பொருட்களைத் தொட்டுவிடக் கூடாது.
  • உயர்குலத்தவரின் வீட்டுக்குள் சென்றுவிடக் கூடாது.

இப்படிப் பல்வேறு விதங்களில் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் இன்றும் பல இடங்களில் துன்புறுத்தப்படுகிறார்கள்.

இத்தகைய, தீண்டாமையை ஒழிப்பதற்கு இஸ்லாம் மட்டுமே தகுந்த தீர்வை முன்வைக்கிறது. தகுந்த நடவடிக்கைகள் மூலம் உண்மையான சமத்துவத்தை ஏற்படுத்துகின்றது. சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் தீண்டாமை எனும் ஆலவிருட்சத்தின் அடிவேரையும் அதன் கிளைகளையும் முழுமையாக வெட்டி எறிகின்றது.

இந்தச் சீர்திருத்தம் ஏற்படுவதற்கு ஒரே ஒரு திருமறை வசனம் போதும். அதை அனைவரும் மனதார ஏற்றுக் கொண்டால் போதும். இதோ படைத்தவன் பேசுவதைக் கேளுங்கள்.

4:1   يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்:4:1.)

ஒரேயொரு ஆண், பெண்ணில் இருந்து தான் ஒட்டுமொத்த மனித இனமும் பல்கிப் பெருகியது என்று குர்ஆன் சொல்கிறது. இந்த வசனம் ஒட்டுமொத்த தீண்டமையையும் ஒழிக்கும் மாமருந்தாகத் திகழ்கிறது.

ஏனென்றால், தங்களை மேன்மையாகவும் அடுத்தவர்களை இழிவாகவும் இறைவன் படைத்திருப்பதாக சிலர் ஆழமாக நம்புகிறார்கள். கடவுளின் தலையிலிருந்து படைக்கப்பட்டவன் உயர்ஜாதி என்றும் கால் பகுதியிலிருந்து படைக்கப்பட்டவன் தாழ்ந்த ஜாதி என்றும் அவர்கள் நம்பும் வேத நூல்களும் சொல்கின்றன. இதுதான் தீண்டாமையின் தொடக்கம்.

இந்த மனநிலையில் மாற்றம் வந்தால் மட்டுமே தீண்டாமையை ஒழிப்பது சாத்தியமாகும். அப்போதுதான் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள். ஆகவே, ஓர் உலகளாவிய உண்மையை எடுத்துரைத்து மக்களிடமுள்ள குருட்டு நம்பிக்கையை முதலில் குர்ஆன் களைகிறது. தீண்டாமை எனும் ஆலவிருட்சத்தை முளையிலேயே முற்றாகக் கிள்ளி எறிந்து விடுகிறது.

மனிதர்கள் அனைவரும் ஒரே ஒரு தாய் தந்தையரின் தொடர்ச்சி என்பது மட்டுமல்ல! அவர்களைப் படைத்த இறைவனும் ஒருவன் தான் என்று குர்ஆன் பிரகடனம் செய்கிறது.

39:6   خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَاَنْزَلَ لَـكُمْ مِّنَ الْاَنْعَامِ ثَمٰنِيَةَ اَزْوَاجٍ‌ ؕ يَخْلُقُكُمْ فِىْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ خَلْقًا مِّنْۢ بَعْدِ خَلْقٍ فِىْ ظُلُمٰتٍ ثَلٰثٍ‌ ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ‌ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ ۚ فَاَ نّٰى تُصْرَفُوْنَ‏

உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத்தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?

(அல்குர்ஆன்:39:6.)

இந்த வசனம் தீண்டாமைக்கு எதிராக மற்றொரு சம்மட்டி அடியைக் கொடுக்கிறது. எப்படி?

தீண்டாமையின் பெயரில் மக்களைக் கூறுபோட்டவர்கள் ஒருகட்டத்தில் கடவுள்களையும் பிரித்துக் கொண்டார்கள். உயர்குல மக்களுக்குரிய தெய்வங்கள் வேறு; தாழ்ந்த குல மக்களுக்குரிய தெய்வங்கள் வேறு என்று பிரித்தார்கள்.

எந்தளவுக்கு என்றால் உயர்குலமென தம்பட்டம் அடிப்பவர்கள், தாழ்ந்த சாதியினரின் கோயிலுக்குச் செல்ல மாட்டார்கள், அவர்கள் வணங்கும் தெய்வங்களை வணங்க மாட்டார்கள், அந்த தெய்வங்களை திருவிழாக்களின் போது  தங்கள் பகுதிக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். இதற்காக இன்றளவும் பல கலவரங்கள் நடக்கின்றன. இதில் கொல்லப்படுவோரும் உள்ளனர்.

இதற்கெல்லாம் முக்கியக் காரணம், அவர்கள் நம்பும் பொய்யான வேத நூல்களும் அதன் அடிப்படையிலான கடவுள் கொள்கையும் தான்.

இதற்கு மாறாக, திருக்குர்ஆனின் அடிப்படையில் அமைந்த இஸ்லாம் மனிதனுக்கு ஏற்ற மார்க்கமாகத் திகழ்கிறது. அது கூறும் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனும் கோட்பாட்டில் மனிதர்களை ஒன்றிணைக்க முடியும். இதோ குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.

49:13   يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌ ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏

மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

(அல்குர்ஆன்:49:13.)

மனிதர்களிடம் இருக்கும் அனைத்து வித்தியாசங்களும் அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களை அறிந்து கொள்வதற்குத் தானே தவிர அதன் மூலம் பெருமை அடிப்பதற்கு, சண்டையிட்டு சீரழிந்து போவதற்கு அல்ல. இதை உணர்ந்து கொள்ளாத மக்கள் குலச் சண்டைகள், இன மோதல்கள் மூலம் சமூகத்தை நாசப்படுத்துகிறார்கள். இதுபோன்ற சீர்கேடுகளை விட்டும் சமூகத்தை மீட்டெடுப்பதற்கு ஒரே வழி குர்ஆனிய போதனகளை ஏற்று நடப்பதுதான். இதற்கு வரலாற்றில் நிறைய சான்றுகள் உள்ளன.

முஹம்மது நபியவர்களின் காலத்தில் குறைஷ் எனும் குலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை மிகவும் உயர்வாகக் கருதினார்கள்.

ஹஜ் எனும் வணக்கத்தில், மக்களெல்லாம் அரஃபா எனும் இடத்தில் தங்கும் போது இவர்கள் மட்டும் முஸ்தலிஃபா எனும் இடத்தில் தங்குவார்கள். இதன் மூலம் மற்ற குலத்தினரை இழிவாகக் கருதினார்கள். இதைத் திருக்குர்ஆன் மூலம் இறைவன் கண்டித்தான். இனிமேல் அனைவரும் ஒரே இடத்தில் தான் தங்க வேண்டும்; இதற்கு முன்பு மற்றவர்களிடம் பாகுபாடு காட்டியதற்காக மன்னிப்புக் கோர வேண்டும் என்று கட்டளையிட்டான்.

2:199   ثُمَّ اَفِيْضُوْا مِنْ حَيْثُ اَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

மக்கள் எங்கிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்து நீங்களும் புறப்படுங்கள்! அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்:2:199.)

(ஆரம்ப காலத்தில் ஹஜ்ஜின் போது) மக்கள் அரஃபாவிலிருந்து திரும்புவார்கள். ஆனால் குரைஷிகளோ எல்லாம் முடிந்த பின்னர் முஸ்தலிஃபாவிலிருந்து தான் திரும்புவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரி-1665

(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும் அவர்களின் கொள்கையைச் சாந்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கி விடுவார்கள். (ஹரம் – புனித எல்லையை விட்டு வெளியேற மாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) ‘உறுதிமிக்கவர்கள்’ எனப் பெயரிடப்பட்டு வந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கிவந்தார்கள். இஸ்லாம் வந்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு (துல்ஹஜ் ஒன்பதாவது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான் ‘மக்கள் அனைவரும் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்’ எனும் (திருக்குர்ஆன்-02:199வது) இறைவசனமாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி-4520

மேற்கூறிய இறைவசனம் இறங்கிய பிறகு, ஹஜ் எனும் முக்கியக் கடமையில் அனைவரையும் சமமாக நடத்தியதன் மூலம் இனவெறியை இஸ்லாம் ஒழித்துக் கட்டியது. இதிலும் அகில மக்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.

(நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) அரஃபா தினத்தில் எனது ஒட்டகம் காணாமல் போனது. அதைத் தேடிக் கொண்டு வந்த போது நபி (ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது நான், “இவர் குரைஷிக் குலத்தவராயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?” என்று எனக்குள் கூறிக் கொண்டேன்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்யிம்(ரலி)

நூல்: புகாரி-1664

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அரஃபாவை நோக்கி) சென்றார்கள். குறைஷிகள், அறியாமைக் காலத்தில் தாங்கள் செய்து கொண்டிருந்த அதே வழக்கப்படி நபி (ஸல்) அவர்களும் முஜ்தலிஃபாவில் உள்ள மஷ்அரில் ஹராமில் நிற்பார்கள்! அவர்களின் தங்குமிடமும் நிச்சயமாக அங்கு தான் அமையும் என்று உறுதியாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் (அதற்கு மாற்றமாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஜ்தலிஃபாவில் தங்காமல்) கடந்து சென்று அரஃபாவுக்குப் பக்கத்தில் வந்து விட்டார்கள். நமிராவில் அவர்களுக்குக் கூடாரம் அமைக்கப்பட்டுத் தயார் நிலையில் இருக்கக் கண்டு அங்கேயே தங்கினார்கள்.

(நூல்: முஸ்லிம்-2137)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறைஷி குலத்தைச் சார்ந்தவர்கள். ஆனால் அவர்கள் எந்தவொரு ஏற்றத்தாழ்வும் பாராமல் மக்களோடு மக்களாக ஒரே இடத்தில் தங்கினார்கள். அதுமட்டுமல்ல,  இனவெறிக்கு, குலவெறிக்கு எதிராக அழுத்தம் திருத்தமாக எச்சரிக்கை விடுத்தார்கள்.

குரைஷ் குலத்தின் உட்பிரிவான மக்ஸூமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷிக் குலத்தவருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. (தம் குலத்துப் பெண்ணுக்கு திருட்டுக் குற்றத்திற்காக கைகள் வெட்டப்படுவது அவர்களுக்கு இழிவாகத் தோன்றியது.)

இதுபற்றி நபிகள் நாயகத்திடம் யார் பேசுவது என்று ஆலோசனை செய்தனர். “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவைத் தவிர வேறு யார் நபிகள் நாயகத்திடம் பேச முடியும்?” என்று கருதினார்கள். உஸாமா நபி (ஸல்) அவர்களிடம் அது பற்றிப் பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் என்னிடம் நீர் பரிந்துரை செய்கின்றீரா?” என்று உஸாமாவிடம் கேட்டார்கள். உடனே மக்களைத் திரட்டி உரை  நிகழ்த்தினார்கள். 

“உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் தான் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்” என்று பிரகடனம் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: புகாரி-3475

சட்டம் எல்லோருக்கும் பொதுவானதே! எனது மகளாக இருப்பினும் ஒரே நீதி தான் என்பதன் மூலம் மக்கள் அனைவரும் சமம் என்று பகிரங்கமாக அறிவித்தார்கள். இனம், குலத்தின் பெயரால் மக்களிடம் பாரபட்சம் காட்டுவது சமூகத்தை அழித்துவிடும் என்பதோடு அது அறிவற்றவர்களின் அடையாளம் என்றும் கடுமையாக எச்சரித்தார்கள்.

“(தன்) இனத்தை ஆதரித்து, குருட்டு சிந்தனை என்ற கொடியின் கீழ் போரிட்டுக் கொல்லப்படுபவரின் மரணம் அறியாமைக் காலத்து மரணமே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ்

நூல்: முஸ்லிம்-3770 (3440)

நாங்கள் (பனூ முஸ்தலிக் எனும்) ஓர் அறப்போரில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரை (விளையாட்டாக)ப் புட்டத்தில் அடித்துவிட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி, “அன்சாரிகளே! (உதவிக்கு வாருங்கள்)” என்று அழைத்தார். அந்த முஹாஜிர், “முஹாஜிர்களே! (உதவிக்கு வாருங்கள்)” என்று அழைத்தார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து), “இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார்” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (இனமாச்சரியங்களைத் தூண்டுகின்ற) இக்கூப்பாடுகள் நாற்றம் வீசக்கூடியவை” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (5041)

தனது இனத்தைச் சேர்ந்தவன் என்ன தவறு செய்தாலும் எப்போதும் அவனுக்கு ஆதரவாகவே நிற்க வேண்டும் என்கிற இனவெறியை விட்டொழிக்க வேண்டும். அதுமட்டுமல்ல! அவர்களிடம் மற்றொரு மாற்றமும் வர வேண்டி இருக்கிறது.

இந்தியா போன்ற நாடுகளில் ஜாதியின் பெயரால் மக்கள் ஒதுக்கப்படுவதைப் போன்று அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் நிறவெறி தலைவிரித்து ஆடுகிறது. மனித இனத்திற்கு அப்பாற்பட்ட தனி இனத்தைப் போன்று கருப்பு நிற மக்களை வெள்ளையர்கள் கேவலமாக நடத்துகிறார்கள்.

இவ்வாறு நிறத்தின் பெயரால் பாகுபாடு பார்ப்பவர்களும் திருந்த வேண்டும். அவர்களுக்காகவும் முஹம்மது நபி (ஸ) அவர்கள் சமத்துவம் குறித்துப் பாடம் நடத்தியுள்ளார்கள்

அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்-5012

‘நான் அபூதர்(ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘ரபதா’ என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறிவிட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: ‘அபூதர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்!

உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும்.

அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்’ என அபூதர் கூறினார்.

அறிவிப்பவர்: மஃரூர், நூல்: புகாரி (30)

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!

நூல்கள்: நஸாயி (4192), திர்மிதி (1706)

அறிவியல் சிந்தனைகள் வளர்ந்து விட்ட இக்காலத்திலும் கூட இன வெறி, நிற வெறி பல நாடுகளில் இன்னும் சாகாமல் இருக்கிறது. ஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே முஹம்மது நபியவர்கள் அடிமைத்தனத்தை பூண்டோடு ஒழித்தார்கள்.

கருப்பு நிற அடிமை தலைவராக இருந்தாலும் கட்டுப்படு என்ற தமது கட்டளையை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள்.

கருப்பு நிற அடிமையாக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய தோழர் பிலால் (ரலி) அவர்களை தொழுகைக்கு மக்களை அழைக்கும் உன்னதமான பொறுப்பை கொடுத்தார்கள்.

இதன் மூலம் இறைவனின் அன்பையும் அருளையும் பெறுவதற்குரிய வணக்க வழிபாடுகளுக்கு உயர்ந்த குலத்தவராகக் கருதப்படும் நபர்கள்தான் தலைமையேற்க வேண்டும் என்கிற மரபை நபியவர்கள் மாற்றினார்கள். அதுபோன்று நெடுங்காலமாக மக்களிடம் குடி கொண்டிருந்த மொழி வெறியையும் மாய்த்தார்கள்.

அரபி மொழிதான் உயர்ந்த மொழி; அந்த மொழியைப் பேசத் தெரியாதவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள் என்று சொல்லுமளவுக்கு அரபிகள் மொழி வெறி முற்றியவர்களாக இருந்தார்கள். இந்த சிந்தனைப் போக்கும் தவறென முஹம்மது நபியவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

அரபிமொழியல்லாதவர்களை விட அரபி மொழி பேசுபவர்களுக்கு எந்தவொரு சிறப்பும் இல்லை. அரபி மொழி பேசுபவர்களைவிட அரபியல்லாதவர்களுக்கு எந்தவொரு சிறப்பும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: அஹ்மத்-22391)

இன்றும் கூட தங்கள் மொழியே தேவ மொழி; சொர்க்கத்தின் மொழி என்றெல்லாம் பெருமை பீற்றிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பிற மொழி பேசுவோரை ஏளனமாக நினைக்கிறார்கள். இத்தகைய ஆட்களுக்கும் குர்ஆன் அழகிய அறிவுரை வழங்கியுள்ளது.

வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளனவையே. திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன்:30:22.)

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.

(அல்குர்ஆன்:14:4.)

மனிதர்கள் பல மொழிகள் பேசுவது அவர்களைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கும் அவன் அனைத்து ஆற்றலும் கொண்டவன் என்பதற்கும் பெரும் சான்றாகும். அனைத்து சமுதாயத்திற்கும் அவர்களின் தாய்மொழியிலேயே தூதர்கள் வந்தார்கள். இதன் மூலம் எல்லா மொழியும் சமம் என்று குர்ஆன் எடுத்துச் சொல்கிறது.

இப்படி தீண்டாமைக்கு எதிராகப் பல கோணங்களில் இஸ்லாம் சாட்டையைச் சுழற்றுகிறது. சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், இனம், மொழி, நிறம், செல்வம் போன்ற வேறுபாடுகள் மூலம் பெருமை கொள்வதில் அர்த்தமில்லை.

ஒவ்வொரு நொடியும் நம்மை கவனித்துக் கொண்டிருக்கும் ஏக இறைவனுக்குப் பயந்து, நமது சிந்தனைகளையும் செயல்களையும் சீர்படுத்திக் கொள்வதில் தான் உயர்வு இருக்கிறது என்று குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபிமொழிகளும் விளக்குகின்றன.

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்.

(அல்குர்ஆன்:22:37.)

அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்-5012

அழியும் இந்த உலக வாழ்வுக்குப் பிறகு நிரந்தரமான வாழ்க்கை உள்ளது. அதில் சொர்க்கம் செல்பவர்களாக இருக்க வேண்டுமெனில் இங்கு ஓரிறைக் கொள்கையை ஏற்றவர்களாக இருப்பது கட்டாயம். இத்தகைய இஸ்லாம் தான் அனைத்துப் பிளவுகளையும் மோதல்களையும் தடுத்து நிறுத்துவதற்குரிய வழிமுறை என்பதைப் பிறமத சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

செல்வம், கல்வி, அதிகாரம், ஆட்சி என்று தேவையானவற்றை எல்லாம் அடைந்தாலும் கூட தாழ்த்தப்பட்ட மக்களாகக் கருதப்படுபவர்கள் சரி சமமாக மதிக்கப்படுவதில்லை. அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

காரணம் தீண்டாமை உணர்வு, ஆன்மீக நம்பிக்கையுடன் இரண்டறக் கலந்து வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளது. அந்த அர்த்தமற்ற ஆன்மீக சிந்தனையை விட்டு வெளியே வந்து, திருக்குர்ஆன் ஒளியில் இஸ்லாத்தில் பயணத்தைத் தொடரட்டும். மறுநொடியே தீண்டாமைக் கொடுமையை விட்டும் அவர்களுக்கு முழுப்பாதுகாப்பு கிடைக்கும்.