Tamil Bayan Points

15) துருவப் பிரதேசத்தில் தொழுகை

நூல்கள்: நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

Last Updated on March 5, 2022 by

துருவப் பிரதேசங்களில் ஆறு மாதம் பகலாகவும், ஆறு மாதம் இரவாகவும் இருப்பதால் ஒரு வருடத்திற்கு ஐந்து நேரத் தொழுகை போதுமல்லவா? ஏனைய பகுதிகளில் முப்பது வருடங்கள், அங்கே முப்பது நாட்களாகும். ஏறத்தாழ 300 வருடங்களுக்கு ஒருமுறை அவர்கள் நோன்பு நோற்றால் போதுமல்லவா? என்று சிலர் சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஜ்ஜால் பற்றிக் கூறும் போது அவன் பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்? என்று நபித் தோழர்கள் கேட்டனர். நாற்பது நாட்கள் அவன் தங்கியிருப்பான். அதில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், இன்னொரு நாள் ஒரு மாதம் போன்றும், மற்றும் ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் இருக்கும். ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போலவே இருக்கும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் ஒரு ஆண்டு போல இருக்கக் கூடிய அந்த ஒரு நாளுக்கு ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா? என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கூடாது! அதற்குரிய அளவை நீங்கள் கணித்துக் கொள்ளுங்கள்!” என்றார்கள்.

அறிவிப்பவர் : நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)

நூல் : முஸ்லிம் 5228

தஜ்ஜால் வருகையின் போது ஒரு வருடத்தில் ஒரு பகலும் ஒரு இரவும் ஏற்படும். அதாவது ஆறு மாதம் பகலாகவும், ஆறு மாதம் இரவாகவும் இருக்கும்.

இப்படி இருப்பதால் இதை ஒரு நாள் என்று கருதி மொத்தம் ஐந்து வேளை மட்டும் தொழுதால் போதுமா? அல்லது வழக்கமான நாட்களின் அளவுக்கேற்ப ஒவ்வொரு 24 மணி நேரத்தையும் ஒரு நாள் என்று கணக்கிட்டு அதற்குள்ளே ஐந்து வேளை தொழுகைக்கான நேரங்களையும் கனித்துக் கொள்ள வேண்டுமா?

இந்த கேள்விக்குத் தான் கணித்துக் கொள்ளுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) விடையளிக்கிறார்கள்.

துருவப் பிரதேசங்களில் வாழ்பவர்கள் ஏறக்குறைய இந்த நிலையில் தான் உள்ளனர்.

எனவே துருவப் பிரதேசங்களில் வாழ்வோர் நேரங்களைக் கணித்து மற்றப் பகுதிகளைப் போல் தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும்.

மஃரிபைத் தொழுது விட்டு மஃரிபுக்கும், இஷாவுக்கும் இடையே ஏனைய பகுதிகளில் எவ்வளவு நேரம் இருக்குமோ அவ்வளவு நேரம் கழிந்ததும் இஷா தொழ வேண்டும்.

இஷாவுக்கும், பஜ்ருக்கும் இடையில் எவ்வளவு நேரம் ஏனைய பகுதிகளில் இருக்குமோ அவ்வளவு நேரம் ஆனதும் பஜ்ரைத் தொழ வேண்டும்.

பஜ்ரிலிருந்து எவ்வளவு நேரம் கழித்து ஏனைய பகுதிகளில் லுஹர் நேரம் வருமோ அவ்வளவு நேரம் கழித்து லுஹரைத் தொழ வேண்டும்.

ஆறு மாதம், பகலாகவும், ஆறு மாதம் இரவாகவும் இருப்பதால் அதை ஒரு நாள் என்று கூற முடியாது. 360 வருடங்களுக்கு ஒரு முறை நோன்பு வைக்க வேண்டுமென்றால் என்ன ஏற்படும் தெரியுமா?

360 வருடங்களுக்குப் பிறகு ஆறு மாதம் பகலாக இருக்குமல்லவா? ஆறு மாதம் பகலாக இருக்கும் சமயங்களில் உண்ணாமல் பருகாமல் இருக்க வேண்டும். அந்த ஆறு மாதத்துக்கும் பச்சைத் தண்ணீரும் குடிக்கலாகாது. தப்பித் தவறி பிழைத்தாலும், அவர் இந்த ஆறுமாத பட்டினி கிடந்தது ஒரு நாள் நோன்பு தான். இது போல் 30 வருடங்கள் வைத்தால் தான் 30 நாட்களாகும். இது சரிப்படுமா?

ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு என்பதால் அது ஒரு நாள் என்று வாதிட்டால் இந்த ஒரு வருட காலத்தில் ஒரு நாளைக்குரிய மூன்று வேளை உணவு தான் அங்கு வாழ்வோர் உட்கொள்கிறார்களா? இரவாக இருந்தால் ஆறு மாதங்களில் அங்குள்ளோர் தூங்கிக் கொண்டு இருக்கிறார்களா? எந்தப் பெண்ணாவது கர்ப்பமடைந்தால் 300 வருடங்கள் கழித்துத் தான் பிரசவிப்பாளா? இதெல்லாம் எப்படி அட்ஜஸ்ட் செய்கிறார்களோ, கணித்துக் கொள்கிறார்களோ அப்படியே வணக்க வழிபாடுகள் விஷயத்திலும் கணித்துக் கொள்ள வேண்டும்.