Tamil Bayan Points

தேசிய குடியுரிமைச் சட்டம்: அவசியம் என்ன?

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on January 4, 2020 by

தேசிய குடியுரிமைச் சட்டம்: அவசியம் என்ன?

இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்து அதன் பின் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வங்கதேசம் ஆகிய மாநிலங்கள் பிரிந்து சென்ற பிறகு இந்தியாவில் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி 1950 ஆம் ஆண்டிற்கு முன்பதாக இந்தியாவில் பிறந்திருந்தி ருந்தாலோ அல்லது அதற்கு 1955 ஆம் ஆண்டுக்கு முன்பதாக இந்தியாவில் 5 வருடங்கள் குடியிருந்தாலோ அவர் இந்தியக் குடிமகனாகக் கருதப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் பாகிஸ்தான் நாட்டில் இருந்து வந்தவர்களுக்கு மேலும் சில ஷரத்துக்களின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் என்றும் இச்சட்டம் தெரிவித்தது. இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்த குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் அதிகமான வெளிநாட்டவர்கள் உள் நுழைந்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இதில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அஸ்ஸாமில் குடியுரிமை திருத்த வேலைகள் துவங்கியது.

அதற்கான முடிவுகள் சென்ற சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த முடிவுகளின் படி அஸ்ஸாமில் 19 லட்சம் மக்கள் தங்களின் குடியுரிமையை இழந்து நிற்கின்றார்கள். அவர்களால் தாங்கள் இந்தியர்கள் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் ஆவணங்ளையும் காட்ட முடியவில்லை. அதுமட்டுமின்றி பல இஸ்லாமியர்கள் பல ஆவணங்களைச் சமர்பித்தும் அவர்களைத் திட்டமிட்டே வெளியேற்றியுள்ளனர்.

குறிப்பாக முன்னாள் கார்கில் வீரர் சனாவுல்லாஹ் என்பவருக்கு இந்த அரசு வழங்கிய பல பதக்கங்கள் பட்டயங்கள் ஆகியவற்றை ஆதாரமாக காட்டியும் கூட அது அனைத்தும் நிராகரிக்கப்பட்டு அவர் கள்ளக்குடியேறி என்ற முத்திரை குத்தப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்ட அவல நிலை அஸ்ஸாமில் நீடிகின்றது. இவ்வாறு ஆவணங்கள் செலுத்தாத பலரும் தற்போது தற்காலிக தடுப்பு முகாம்களில் அடைக்க ப் பட்டுள்ளனர். அவர்களை அகதிகள் என்று கூறி நாட்டை விட்டு வெளியேற்றவும் முடியாது. ஆக மொத்தம் அஸ்ஸாமில் குடியுரிமைக் கணக்கில் மத்திய அரசு படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க இந்தியா முழுவதும் குடியுரிமைக் கணக்கை நடத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். நாடு தற்போது இருக்கும் நிலையில் இது அவசியமா? என்ற கேள்வி பலபுறமும் எழுந்து நிற்கின்றது. மலேசியா, சிங்கப்பூர், சவூதி, குவைத் போன்ற வளர்ந்த நாடுகளில் அந்நிய குடியேறிகள் குறித்து அவ்வப்போது தகவல் வெளியிட்டு பொது மன்னிப்பு வழங்குவார்கள். அது அந்த நாடுகளுக்குச் சாத்தியம். காரணம் மேற்கண்ட நாடுகளில் பிறந்த அனைத்துக் குடிமக்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்தியாவில் அதற்கு எந்த வகையிலும் சாத்தியமில்லை. காரணம் இந்தியாவில் யாருக்கும் அடையாள அட்டையும் இல்லை, இனி அடையாள அட்டையும் வழங்க முடியாது. தனி மனிதனின் அடையாளம் என்று கூறி வழங்கப்பட்ட ஆதார் கார்டுகளில் கூட பல்வேறு முறைகேடுகள் நிகழந்துள்ள செய்திகள் வெளிவராமல் இல்லை. அதுமட்டுமின்றி இந்தியாவின் அண்டை நாடுகளை ஒட்டியுள்ள மாநிலங்களாக இருக்கும் மிசோராம், மனிப்பூர், அஸ்ஸாம், மேற்குவங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் அண்டை நாடுகளின் எல்லைகளில் அமைந்துள்ளன.

பீகார் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய நாடுகள் நேபாளத்தின் அருகில் அமைந்துள்ளன. அது தவிர்த்து இந்தியாவில் உள்ள மற்ற அத்தனை மாநிலங்களையும் கடல் சூழ்ந்துள்ளது. எனவே அந்நிய நாட்டவர்கள் இந்தியாவிற்குள் கள்ளத்தனமாக குடியேற எந்த முகாந்திரமும் இல்லை. அதுமட்டுமின்றி இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளை விட இந்தியாவின் பொருளாதார நிலமை பின் தங்கி அல்லது சம அளவிலேயே உள்ளது. எனவே இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்குள் குடியேற விரும்ப மாட்டார்கள்.

அதுமட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் தங்களின் விரும்பமான மாநிலங்களில் தொழில்களை அமைத்துக் கொண்டு அங்கேயே பூர்வீகக் குடிமக்களாக மாறி விட்டார்கள். அவ்வாறு பூர்வீகமாக வாழ்ந்து வரும் மக்களிடம் குடியுரிமைச் சோதனை நடத்துவதற்கு எந்த அவசியமும் இல்லை. அதுமட்டுமின்றி இந்தியாவில் கள்ளக் குடியேறிகள் யாருமில்லை.

இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக இந்தியாவில் தங்கியிருந்தாலும் அவர்களின் தாய்நாடு இந்தியா என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே நாட்டின் முன்னேற்றத்திற்கான வழிகளைத் தேடுவதை விட்டு விட்டு தற்போதைய அரசாங்கம் தேவையற்ற செயல்களைச் செய்து கொண்டுள்ளது என்பதே நிதர்சனம்.

Source: unarvu (06/12/2019)