Tamil Bayan Points

தொடர்ந்து விரல் அசைக்க ஆதாரம் உண்டா?

கேள்வி-பதில்: தொழுகை

Last Updated on February 6, 2017 by Trichy Farook

தொடர்ந்து விரல் அசைக்க ஆதாரம் உண்டா

எம்.ஏ.ஷரஃப்

பதில்

விரலசைத்தல் தொடர்பாக வரும் செய்தியை முழுமையாகப் படித்தால் இதற்கு ஆதாரம் இருப்பதை தெளிவாக அறியலாம்.

 

أخبرنا سويد بن نصر قال أنبأنا عبد الله بن المبارك عن زائدة قال حدثنا عاصم بن كليب قال حدثني أبي أن وائل بن حجر أخبره قال قلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه فقام فكبر ورفع يديه حتى حاذتا بأذنيه ثم وضع يده اليمنى على كفه اليسرى والرسغ والساعد فلما أراد أن يركع رفع يديه مثلها قال ووضع يديه على ركبتيه ثم لما رفع رأسه رفع يديه مثلها ثم سجد فجعل كفيه بحذاء أذنيه ثم قعد وافترش رجله اليسرى ووضع كفه اليسرى على فخذه وركبته اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض اثنتين من أصابعه وحلق حلقة ثم رفع إصبعه فرأيته يحركها يدعو بها – سنن النسائي 879

வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவ்வாறு தொழுவார்கள் என்று அவர்களின் தொழுகையைப் பார்க்கப் போகிறேன் என்று (எனக்குள்) நான் சொல்லிக் கொண்டேன். பின்னர், அவர்களை நான் பார்த்தேன். அப்போது அவர்கள், எழுந்து நின்று “தக்பீர்’ கூறினார்கள். (அப்போது) தம் காதுகளுக்கு நேராகக் கைகளை உயர்த்தினார்கள். பின்னர் தம் வலக் கையை இடது முன் கை, மணிக்கட்டு, முழங்கை (ஆகிய மூன்றின்) மீதும் வைத்தார்கள். அவர்கள் “ருகூஉ’ செய்ய விரும்பியபோது, முன்பு போன்றே (தம் காதுகளுக்கு நேராகக்) கைகளை உயர்த்தினார்கள். (பின்னர்) தம் கைகளை மூட்டுக் கால்களின் மீது வைத்தார்கள். பின்னர் தமது தலையை (“ருகூஉ’விலிருந்து) நிமிர்த்தியபோது, முன்பு போன்றே (தம் காதுகளுக்கு நேராகத்) தம் கைகளை உயர்த்தினார்கள். பின்னர் “சஜ்தா’ செய்தார்கள். அப்போது தம் உள்ளங்கைகளைக் காதுகளுக்கு நேராக (தரையில்) வைத்தார்கள். பின்னர் (சஜ்தாவிலிருந்து எழுந்து) அமர்ந்தார்கள். அப்போது இடக் காலை விரித்து வைத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது வலது கையின் இரண்டு விரல்களை மடக்கினார்கள். (நடுவிரலையும் கட்டை விரலையும் இணைத்து) வளையம் போல் அமைத்தார்கள். பின்னர் ஆட்காட்டி விரலை அசைத்ததை நான் பார்த்தேன்.

நஸாயீ (870)

இந்தச் செய்தி தொழுகையில் விரலசைப்பதைப் பற்றி மட்டும் பேசவில்லை. தொழுகையில் உள்ள பல நிலைகளைப் பற்றியும் பேசுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரலசைத்தார்கள் என்று இறந்த காலத்தில் உள்ளதைப் போன்று தான் மற்ற நிலைகளைக் குறித்தும் இறந்த காலத்தில் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிலையில் நிற்கும்போது வலது கையை இடது கையின் மீது வைத்தார்கள் என்று தான் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. வைத்துக்கொண்டே இருந்தார்கள் என்று கூறப்படவில்லை. விரலசைத்தார்கள் என்ற வாசகத்தை நீங்கள் புரிந்து கொண்டதைப் போன்று இதைப் புரிந்தால் நீங்கள் நிலையில் வலது கையை இடது கையின் மீது வைத்துவிட்டு அந்த நிலையில் இருக்கும் போதே கைகளை கீழே விட்டுவிட வேண்டும்.

மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ருகூவில் இருக்கும் போது கைகளை முட்டுக்கால்களின் மீது வைத்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. முட்டுக்கால்களின் மீது வைத்துக்கொண்டே இருந்தார்கள் என்று கூறப்படவில்லை. விரலசைத்தார்கள் என்ற வாசகத்தை நீங்கள் புரிந்து கொண்டதைப் போன்று இதை புரிந்தால் நீங்கள் ருகூவில் முட்டியின் மீது கையை வைத்துவிட்டு அந்த நிலையில் இருக்கும் போதே கைகளை கீழே தொங்கவிட்டுவிட வேண்டும்.

மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சஜ்தாவில் தம் உள்ளங்கைகளை காதுகளுக்கு நேராக வைத்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. வைத்துக்கொண்டே இருந்தார்கள் எனக் கூறப்படவில்லை. விரலசைத்தார்கள் என்ற வாசகத்தை நீங்கள் புரிந்து கொண்டதைப் போன்று இதை புரிந்தால் நீங்கள் சஜ்தாவில் காதுகளுக்கு நேராக கைகளை வைத்துவிட்டு சஜ்தாவில் இருக்கும் போதே கைளை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்தில் தமது வலது கையை வலது தொடையின் மீதும் இடது கையை இடது தொடையின் மீதும் வைத்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. வைத்துக்கொண்டே இருந்தார்கள் எனக் கூறப்படவில்லை. விரலசைத்தார்கள் என்ற வாசகத்தை நீங்கள் புரிந்து கொண்டதைப் போன்று இதைப் புரிந்தால் தொடையின் மீது கையை வைத்துவிட்டு அந்த நிலையில் இருக்கும்போதே கைகளைக் கீழே விட்டுவிட வேண்டும்.

ஆனால் இவ்வாறு யாரும் புரிந்து கொள்ள மாட்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நிலையில் ஒரு செயலைச் செய்தால் அந்த நிலையிலிருந்து வேறு நிலைக்கு மாறுகின்ற வரை அந்தச் செயலைத் தொடர வேண்டும் என்று புரிந்து கொள்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரலசைத்தார்கள் என்பதையும் இவ்வாறே புரிந்துகொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் விரலை அசைத்தார்கள் என்றால் அந்த அமர்வு முழுவதிலும் விரலை அசைத்தார்கள் என்ற அர்த்தம் அதனுள் அடங்கியுள்ளது.