Tamil Bayan Points

தொழுபவருக்கு குறுக்கே செல்லலாமா?

கேள்வி-பதில்: தொழுகை

Last Updated on February 9, 2017 by Trichy Farook

தொழுபவருக்கு குறுக்கே செல்லலாமா?

ஃபைசல்

பதில்

தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்வது பாவமான காரியம். ஒருவர் தொழுவதற்கு எவ்வளவு இடம் தேவைப்படுமோ அந்த இடத்துக்குள் குறுக்கே செல்வது கூடாது.

தொழுபவருக்குக் குறுக்கே சொல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்கு பதில் நாற்பது (நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள்) நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தேன்றும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஜுஹைம் (ரலி)

நூல்கள் : புகாரீ (510), முஸ்லிம் (785?

நாம் தனியாகத் தொழுது கொண்டிருக்கும் போது பிறர் குறுக்கே செல்வதைத் தவிர்ப்பதற்காக நமக்கு முன்னால் ஏதாவது தடுப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பு வைத்த பிறகும் யாராவது குறுக்கே வந்தால் அவரை குறுக்கே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தலாம்.

உங்களில் எவரேனும் தமக்கு முன்னால் தடுப்பு வைத்துக் கொண்டு தொழும் போது, யாராவது குறுக்கே செல்ல முயன்றால் அவரைத் தடுக்க வேண்டும். அதை அவர் எதிர்த்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் நிச்சயம் ஷைத்தானாவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),

நூல் : புகாரி (509)