Tamil Bayan Points

நகத்தை வெட்டி மண்ணில் புதைக்க வேண்டுமா?

கேள்வி-பதில்: மற்ற கேள்விகள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

நகத்தை வெட்டி மண்ணில் புதைக்க வேண்டுமா?

இது தொடர்பாக ஒரு நபிமொழி இடம் பெற்றுள்ளது.

முடி, நகம் இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி), நூல்கள் : தப்ரானீ-கபீர், பாகம் : 15, பக்கம் : 408,ஷுஅபுன் ஈமான்-பைஹகீ, பாகம் : 8, பக்கம் : 44, முஸன்னஃப் அபீ ஷைபா, பாகம் : 8, பக்கம் : 47, லுஃபாவுல் உகைலீ, பாகம் : 4, பக்கம் : 332, அல்காமில்-இப்னு அதீ, பாகம் : 4, பக்கம் :201.

இந்நூல்களில் லுஃபாவுல் உகைலீ, அல்காமில் ஆகிய நூல்களில் இடம்பெற்றிரும் செய்தியில் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் பின் அபீ ரவ்வாத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார். அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் என்பவர் பொய்யான செய்திகளை அறிவிப்பவர் என்ற இப்னுல் ஜனீத் கூறுகிறார். (ஆதாரம் : தன்ஸீஹு ஷரீஅத்துல் மர்ஃபூஆ, பாகம் : 1, பக்கம் : 73)

அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் உடைய ஹதீஸ்களை நான் உற்று நோக்கினேன். இவருடைய செய்திகளில் மறுக்கப்பட வேண்டிய செய்திகளைக் கண்டேன். எனவே இவருடைய செய்திகளை நான் எழுதிக் கொள்வதில்லை. இவர் என்னிடத்தில் உண் மையாளர் இல்லை என்று அபூஹாத்திம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம் : அல்ஜர்ஹு வத்தஃதீல், பாகம் : 5, பக்கம் : 104)

அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் இவர் தம் தந்தை வழியாக மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவித்துள்ளார். (இந்த செய்தியும் அவர் தந்தை வழியாகவே இடம்பெற்றுள்ளது) இச்செய்திகள் நம்பகமானவை அல்ல! உறுதியான செய்திகளில் உள்ள வையும் அல்ல! என்று உகைலீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம் : லுஅஃபாவுல் உகைலீ, பாகம் : 2, பக்கம் : 279)

அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் உடைய செய்தி களைப் போன்று எவரும் அறிவித்ததில்லை என்று இப்னுல் அதீ அவர் கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆதாரம் : அல்காமில்-இப்னு அதீ, பாகம் : 4, பக்கம் : 201)

அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் உடைய செய்தி கள் எந்த மதிப்பும் அற்றது என்று இப்னுல் ஜனீத் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம் : லிஸானுல் மீஸான், பாகம் :4, பக்கம் : 516)

இதே கருத்தில் வேறு அறிவிப்பாளர்கள் வழியாக இப்னு அதீ அவர்கள் அல்காமில் என்ற நூலில் (பாகம் : 6, பக்கம் : 457) ல் பதிவு செய்துள்ளார்கள்.

இந்த அறிவிப்பாளர் தொடரும் பலவீனமானதாகும். இதில் இடம் பெறும் ஈஸா பின் அப்துல்லாஹ் பின் சுலைமான் அல்குறைஷீ என்பவர் பலவீனமா னவர்.

இவரைப்பற்றி இதை பதிவு செய்த இமாம் இப்னு அதீ அவர்களே இவர் பலவீனமானவர் ஹதீஸை திருடுபவர் என்று குற்றம் சுமத்தியுள்ளார்கள். (அல்காமில், பாகம் : 6, பக்கம் : 454)

அல்காமில், லுஅஃபாவுல் உகைலீ ஆகிய நூல்கள் அல்லாவற்றில் இடம் பெற்றிருக்கும் செய்தியில் மூன்று குறைகள் இடம்பெற்றுள்ளனர்.

முதலாவது: அதன் அறிவிப்பாளர் வரிசை துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெறும் அப்துல் ஜப்பார் பின் வாயில் என்பவர் தம் தந்தை வழியாக அறிவித்துளார்கள். ஆனால் அவர் தம் தந்தையிடமிருந்து எதையும் செவி யுற்றதில்லை.

இரண்டாவது : இதில் இடம்பெறும் இன்னொரு அறிவிப்பாளர் கைஸ் பின் ரபீவு என்பவர் நினைவாற்றல் கோளறின் காரணமாக இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள்.

மூன்றாவது : முஹம்மத் பின் ஹஸன் என்பவர் இடம் பெற்றிருக்கிறார். இவரிடம் பலவீனம் உள்ளது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிட்டுள் ளார்கள்.

இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் பலவீனமானதாகும்.