Tamil Bayan Points

5) நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள் 1

நூல்கள்: வரு முன் உரைத்த இஸ்லாம்

Last Updated on February 23, 2022 by

இஸ்லாம் இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் என்பதற்கு திருக்குர்ஆன் எவ்வாறு ஆதாரமாக உள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகளும் ஆதாரங்களாக அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

 

1 பாரசீகம் வெற்றி கொள்ளப்படும்

நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் மரணிக்கும் வேளையில் பாரசீகம் மிகப் பெரிய வல்லரசாகத் திகழ்ந்தது. இந்த வல்லரசை முஸ்ம்கள் வெற்றி கொள்வார்கள் என்றும், இந்த வெற்றி மிகவும் குறுகிய காலத்தில் கிட்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

பாரசீக மன்னன் கிஸ்ராவின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை உனக்கு நீண்ட ஆயுள் வழங்கப்பட்டால் நிச்சயம் காண்பாய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

நூல் : புகாரி-3595 

பாரசீகப் பேரரசு முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்படும் என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்கள் அந்த வெற்றியைத் தம் கண்களால் காண்பார் என்பதையும் கூறுகிறார்கள்.

பலநுறு வருடங்கள் காத்திருக்கத் தேவையில்லை. உன் வாழ்நாளிலேயே அதைக் காண்பாய் என்றும் அதீ பின் ஹாதிமிடம் தெரிவிக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு பாரசீகத்தை உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் முஸ்ம்கள் கைப்பற்றினார்கள். அதன் கருவூலங்களையும் தமதாக்கிக் கொண்டார்கள்.

பாரசீக மன்னன் கிஸ்ராவின் கருவூலங்களை வெற்றி கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் என்று அதீ பின் ஹாதம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல் : புகாரி-3595 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பும் மாற்றம் ஏதுமின்றி முழுமையாக நிறைவேறியது.

 

2 தமது மரணம் குறித்து அறிவித்த முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பதாம் வயதில் துவக்கிய இஸ்லாமியப் பிரச்சாரத்தை 63 வது வயதில் முடித்துவிட்டு மரணம் அடைந்தார்கள்.

மனிதன் தீராத நோய்க்கு ஆளாகும் போதும், படுத்த படுக்கையில் நாட்களைக் கழிக்கும் போதும் தனக்கு மரணம் நெருங்கி விட்டதை ஓரளவுக்கு ஊகித்து அறிந்து கொள்வான்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தள்ளாத வயதை அடைவதற்கு முன் திடகாத்திரத்துடன் இருக்கும் போதே தமக்கு மரணம் மிக விரைவில் வந்து விடும் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னறிவிப்புச் செய்தார்கள். அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு மரணத்தைத் தழுவினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு சுமார் நான்கு மாதங்களுக்கு முன் ஹஜ் செய்தனர். மதீனாவிருந்து மக்கா சென்று ஹஜ் செய்ய அன்றைக்கு நல்ல திடகாத்திரமும் உடல் வவும் இருக்க வேண்டும். அந்த நிலையில் அவர்கள் இருந்ததால் தான் ஹஜ் கடமையை மேற்கொண்டார்கள்.

நபிகள் நாயகத்தின் முதல் ஹஜ்ஜாகவும். கடைசி ஹஜ்ஜாகவும் திகழ்ந்த அந்த ஹஜ்ஜின் போது பின்வரும் வசனம் தமக்கு அருளப்பட்டதாகக் கூறினார்கள்.

 اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்.

(அல்குர்ஆன்5.3)

இன்றுடன் மார்க்கத்தை இறைவன் முழுமைப்படுத்தி விட்டான் என்றால் இனி மேல் இறைவனிடமிருந்து எந்தச் சட்ட திட்டமும் வராது. அதைப் பெற்று மக்கள் மன்றத்தில் வைக்கக் கூடிய தூதருக்கு இனி வேலையில்லை என்ற கருத்தும், மிக விரைவிலேயே அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிவார்கள் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

இந்த ஆண்டுக்குப் பின் இனி மேல் உங்களை நான் சந்திக்க முடியாமல் போகலாம் என்று தமது இறுதிப் பேருரையில் குறிப்பிட்டார்கள்.

நூல் : தப்ரானி அல்கபீர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (உஹத் போர் நடந்து) எட்டு ஆண்டுகள் கழிந்து உஹத் போரில் கொல்லப்ட்டவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். இது உயிரோடு உள்ளவர்களிடமும் இறந்தவர்களிடமும் விடைபெறுவது போல் அமைந்திருந்தது. பின்னர் மேடையில் ஏறினார்கள். ‘நான் உங்களுக்கு முன்னே செல்கிறேன். உங்களுக்கு நான் சாட்சியாக இருப்பேன். ஹவ்லுல் கவ்ஸர் எனும் தடாகத்தில் (மறுமையில்) உங்களைச் சந்திப்பேன்’ என்று உரை நிகழ்த்தினார்கள். அது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நான் கடைசியாகப் பார்த்ததாகும் என்று உக்பா பின் ஆமிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி-4042 

ஆண்டு தோறும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து (அது வரை அருளப்பட்ட) குர்ஆன் வசனங்களை ஓதச் செய்து வந்தனர். இந்த ஆண்டு இரண்டு தடவை என்னிடம் வந்தார்கள். என் மரணம் நெருங்கி விட்டதாகவே எண்ணுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) தமது மகள் ஃபாத்திமாவிடம் தெரிவித்தார்கள்.

நூல் : புகாரி-3624 , 6285

ஏமன் நாட்டின் ஆளுநராக முஆத் பின் ஜபலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். முஆது அவர்கள் குதிரையில் ஏறி அமர்ந்து வர அவருடன் நடந்தே வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி அனுப்பி வைத்தார்கள். அப்போது பல அறிவுரைகளைக் கூறிவிட்டு அடுத்த ஆண்டு நீ என்னைச் சந்திக்க மாட்டாய் என்றே நினைக்கிறேன் என்று கூறினார்கள்.

நூல்: அஹ்மத்-22052 (22404)

அவர்கள் அறிவித்த படியே அந்த ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.

 

3 தனி நபரைப் பற்றி நரகவாசி என்ற முன்னறிவிப்பு

நியாயத்திற்காகக் களம் இறங்கிப் போராடுவதற்கு நிகரான நன்மை வேறு எதிலும் கிடைக்காது. இவ்வாறு தன் உயிரைத் தியாகம் செய்ய போர்க்களத்திற்கு வந்த ஒருவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகவாசி என்று குறிப்பிட்டார்கள். அவர்கள் நரகவாசி என்று அடையாளம் காட்டிய அந்த நபர் கடைசியாக நரகில் செல்வதற்குரிய வழியைத் தேர்வு செய்து கொண்டார். இது பற்றிய நிகழ்ச்சி பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், இணை வைப்பவர்களும் போர்க்களத்தில் மோதினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது படையினரைச் சார்ந்து போரிட்டார்கள். இணை வைப்பவர்கள் தமது படையினரைச் சார்ந்து போரிட்டனர். நபித் தோழர்களில் ஒரு மனிதர் மட்டும் தனது படையினரைச் சாராமல் விரட்டிச் சென்று போரிட்டார். ‘இவரைப் போல் நம்மில் யாரும் வீரமிக்கவர் இல்லை’ என்று நபித்தோழர்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இவர் நரகவாசியாவார்’ என்று அவரைப் பற்றிக் கூறினார்கள். அங்கே சபையில் இருந்த ஒருவர் ‘நான் இவருடன் சேர்ந்து இவரைக் கண்கானிக்கிறேன்’ என்று புறப்பட்டார். அவர் ஓடினால் இவரும் ஓடுவார். இந்த நிலையில் அந்த அந்த மனிதருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. (வேதனை தாள முடியாமல்) தனது வாளைத் தரையில் ஊன்றி அதன் மீது தனது மார்பை அழுத்தி தற்கொலை செய்து விட்டார். அவரைக் கண்காணிக்க முன் வந்த அந்த மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன்’ எனக் கூறி நடந்ததை விளக்கினர்.

நூல் : புகாரி-2898 

தற்கொலை செய்பவர்கள் என்றென்றும் நரகில் கிடப்பார்கள் என்பது இஸ்லாத்தின் கொள்கை. இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை செய்திருந்தனர். இதன் அடிப்படையில் அந்த மனிதர் தற்கொலை செய்து கொண்டதன் மூலம் நரகவாசியாக மரணித்தார்.

போர்க்களத்தில் வீரதீரமாகப் போரிடும் ஒருவரைப் பற்றி நரகவாசி என்று எந்த மனிதராலும் கூற முடியாது. கடைசியில் அவர் தற்கொலை செய்து கொள்வார் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருந்ததால் இதை இறைவன் முன்பே அறிவித்துக் கொடுத்திருக்கிறான் என்பதால் தான் இவ்வாறு அறிவிக்க முடிந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரமாக அமைந்துள்ளது.

4 தமது மகளின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நான்கு பெண் குழந்தைகளை வழங்கியிருந்தான். ஸைனப், ருகையா, உம்மு குல்ஸும் ஆகிய மூவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே மரணித்து விட்டார்கள். கடைசி மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் மட்டும் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை உயிரோடு இருந்தார்கள்.

தமது குடும்பத்து உறுப்பினர்களில் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தான் முதலில் மரணிப்பார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

‘என் குடும்பத்தார்களில் (நான் மரணித்த பின்) என்னை முதலில் வந்து சேர்பவர் நீ தான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள்.

நூல் : புகாரி-3626 , 3716, 4434

நபிகள் நாயகத்தின் மனைவியரிலும், அவர்களின் உறவினர்களிலும் அதிக வயதுடைய பலர் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சுமார் 25 வயதுடையவராகத் தான் இருந்தார்கள். மரணத்தை நெருங்கிய வயதுடையவராக அவர்கள் இருக்கவில்லை.

அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தபடி ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் மரணித்து ஆறாவது மாதத்தில் மரணத்தைத் தழுவினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதை இச்செய்தியை இறைவன் அறிவித்துக் கொடுத்ததன் மூலம் மெய்ப்படுத்தினான்.

 

5 அம்மாரின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

ஆரம்ப கால முஸ்லிம்களில் யாஸிர், சுமய்யா தம்பதிகள் முக்கியமானவர்கள். சுமய்யா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக அவர்களது எஜமானனால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இஸ்லாத்திற்காக முதன் முதலில் உயிர் நீத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்கள்.

இவர்களின் தல்வரான அம்மார் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருக்கமான தோழராக இருந்தார்கள். மக்காவிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த அம்மார் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவராகத் திகழ்ந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் மதீனாவில் பள்ளிவாசல் ஒன்றை எழுப்பினார்கள். கூலி ஆட்கள் இன்றி தன்னார்வத் தொண்டர்களான நபித்தோழர்களே அப்பள்ளி வாசலைக் கட்டினார்கள். ஒவ்வொரு நபித்தோழரும் ஒவ்வொரு கல்லாகச் சுமந்து வந்தனர். அம்மார் (ரலி) அவர்கள் இரண்டிரண்டு கற்களாகச் சுமந்து வந்தார். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது தலையில் படிந்த புழுதியைத் துடைத்து விட்டனர். ‘பாவம் அம்மார் இவரை வரம்பு மீறிய கூட்டத்தினர் கொலை செய்வார்கள்’ என்று முன்னறிவிப்புச் செய்தார்கள்.

நூல் : புகாரி-2812 , 447

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் அபூபக்கர் (ரலி), அவர்களுக்குப் பின் உமர் (ரலி), அவர்களுக்குப் பின் உஸ்மான் (ரலி) ஆட்சி புரிந்தனர். உஸ்மான் (ரலி) கொல்லப்பட்ட பின் அலீ (ரலி) ஆட்சிப் பொறுப்பேற்றனர்.

இவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது சிரியாவின் ஆளுநராக இருந்த முஆவியா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் கட்டுப்பாட்டில் வராமல் சிரியாவைத் தனி நாடாக அறிவித்துக் கொண்டார்கள். இதன் காரணமாக அலீ (ரலி) அவர்களுக்கும், முஆவியா (ரலி) அவர்களுக்கும் இடையே பல்வேறு சண்டைகள் நிகழ்ந்தன. சிஃப்பீன் என்ற இடத்தில் இரு தரப்புப் படைகளும் மோதிக் கொண்ட யுத்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

கி.பி.657ஆம் ஆண்டு நடந்த இப்போரில் அம்மார் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் படையில் அங்கம் வகித்தனர். இப்போரில் அவர்கள் கொல்லப்பட்டனர்.

அலீ(ரலி) அவர்கள் அதிபராக இருக்கும் போது அவர்களுக்குக் கட்டுப்படாமல் முஆவியா (ரலி) அவர்கள் வரம்பு மீறினார்கள்.

வரம்பு மீறிய கூட்டம் அம்மாரைக் கொல்லும் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. அவர்கள் இறைவனின் தூதர் என்பது நிரூபணமானது.

6 ஸைனப் (ரலி) அவர்கள் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரில் ஸைனப் (ரலி) அவர்கள் முக்கியமானவர்கள். நபிகள் நாயகத்தின் மாமி மகளான ஸைனபை ஸைது எனும் அடிமைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள். ஸைது அவர்களுக்கும் ஸைனப் அவர்களுக்கும் மனக் கசப்பு ஏற்பட்டதால் ஸைத் அவர்கள் ஸைனபை விவாகரத்துச் செய்தார்கள்.

فَلَمَّا قَضٰى زَيْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنٰكَهَا

இதன் பின்னர் அல்லாஹ்வே ஸைனபை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தான்.

பார்க்க திருக்குர்ஆன் : 33:37

தமது மனைவியரில் யார் முதலில் மரணிப்பார்கள் என்பது பற்றிய பேச்சு வந்த போது ‘உங்களில் நீளமான கைகளை உடையவரே முதலில் மரணிப்பார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் ஒரு குச்சியின் மூலம் ஒவ்வொருவரின் கைகளையும் அளந்து பார்த்தனர். மற்றவர்களின் கைகளை விட ஸவ்தா (ரலி) அவர்களின் கைகளே நீளமாக இருந்தன. ஆனால் நபிகள் நாயகத்தின் மனைவியரில் ஸைனப் (ரலி) தான் முதலில் மரணித்தனர். ‘தாரளமாக வாரி வழங்குபவர்’ என்ற கருத்திலேயே ‘கைகள் நீளமானவர்’ என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியதை அவர்களின் மனைவியர் புரிந்து கொண்டார்கள்.

இந்த விபரம் புகாரி-1420 வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு அவர்களின் மனைவியரில் ஸைனப் அவர்கள் முதலில் மரணித்தார்கள்.

 

7 இரண்டு கலீஃபாக்களின் வீர மரணம் பற்றி முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் ஆட்சிப் பொறுப்பேற்ற அபூபக்ர் (ரலி) அவர்கள் இயற்கை மரணம் அடைந்தார்கள்.

அவர்களுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற உமர் (ரலி) அவர்கள் யூதன் ஒருவனால் கொல்லப்பட்டார்கள்.

அவர்களுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற உஸ்மான் (ரலி) அவர்கள் கலகக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
‘உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய இருவரும் இயற்கை மரணத்தைத் தழுவ மாட்டார்கள். கொல்லப்பட்டு வீர மரணம் தான் அடைவார்கள்’ என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரும் ஒரு முறை உஹத் மலை மீது ஏறினார்கள். அப்போது உஹத் மலை நடுங்கியது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உஹத் மலையே அசையாமல் நில். உன் மீது ஓர் இறைத் தூதரும், ஒரு (சித்தீக்) உண்மையாளரும், வீர மரணம் அடையும் இருவரும் உள்ளனர்’ என்று குறிப்பிட்டார்கள்.

நூல் புகாரி-3675 

உமர் (ரலி) அவர்களும், உஸ்மான் (ரலி) அவர்களும் இயற்கையாக மரணத்தைத் தழுவ மாட்டார்கள். எதிரிகளால் கொல்லப்பட்டே மரணிப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு இருவரும் எதிரிகளால் கொல்லப்பட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் தாம் என்பதை நிரூபிக்கும் சான்றாக இந்த முன்னறிவிப்பும் அமைந்துள்ளது.

 

8 ஒட்டகப் போர் பற்றி முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ (ரலி) அவர்களுக்குமிடையே போர் நடக்கும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு வழிகளில் முன்னறிவிப்புச் செய்தனர்.

உஸ்மான் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அரசின் தலை நகரமான மதீனா நகரில் கலகக்காரர்களால் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்பட்ட பின் இக்கொலைப் பழி அலீ (ரலி) அவர்கள் மீது விழுகிறது. தான் ஆட்சிக்கு வருவதற்காக அலீ தான் உஸ்மானைக் கொல்லத் திட்டம் தீட்டினார் என்று சில விஷமிகள் பிரச்சாரம் செய்தனர்.

மற்றும் சிலர் அலீ (ரலி) அவர்களுக்கு இக்கொலையில் தொடர்பு இல்லாவிட்டாலும் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்கிறார் என்றும் அவர்களைக் காப்பாற்ற முனைகிறார் என்றும் பிரச்சாரம் செய்தனர்.

உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்கு நியாயம் கேட்டு ஆயிஷா (ரலி) அவர்கள் படை திரட்டினார்கள். அலீ (ரலி) அவர்களுக்கும், ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் இடையே பெரிய அளவில் போர் மூண்டது. இப்போரில் ஆயிஷா (ரலி) அவர்கள் வீற்றிருந்த ஒட்டகத்தின் கால்கள் வெட்டப்பட்டன. அவர்கள் கீழே விழுந்ததும் அவர்களின் படையினர் நிலை குலைந்து தோற்றுப் போனார்கள். இதன் காரணமாக இப்போர் ஒட்டகப் போர்’ என்று குறிப்பிடப்படுகிறது.

ஒட்டகப் போருக்காக ஆயிஷா (ரலி) அவர்கள் புறப்பட்ட போது வழயில் ஒரு இடத்தில் தங்கினார்கள். அந்த இடத்தில் நாய்கள் குரைத்தன. இதைக் கண்ட ஆயிஷா (ரலி) அவர்கள் ‘இந்த இடத்தின் பெயரென்ன’ என்று கேட்டார்கள். அவர்களின் சகாக்கள் ஹவ்அப்’ என்று கூறினார்கள். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் திரும்பிச் செல்ல முற்பட்டனர். தோழர்கள் காரணம் கேட்ட போது ‘(என் மனைவியராகிய) உங்களில் ஒருவருக்கு எதிராக ஹவ்அப்’ என்ற இடத்தில் நாய்கள் குரைக்கும். அப்போது அவரது நிலை மோசமானதாக இருக்கும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நினைவு கூர்ந்தார்கள்.

நூல் : அஹ்மத்-24254 (24758)

ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின் படி தமது நிலை தவறு என்று புரிந்து கொண்டாலும் அவர்களின் சகாக்கள் செய்த நிர்பந்தத்தால் அவர்கள் போருக்குச் செல்லும் முடிவை மாற்றிக் கொள்ள முடியவில்லை.
தமது மனைவிக்கு மட்டுமின்றி மருமகன் அலீ (ரலி) அவர்களுக்கும் இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

‘அலீயே உனக்கும் என் மனைவி ஆயிஷாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் ‘உங்கள் மனைவிக்கும், எனக்கும் இடையே சண்டை ஏற்படுமா? அப்படி நடந்தால் என்னைவிட துர்பாக்கியசாலி இருக்க முடியாது’ என்று கூறினார்கள். ‘அந்தச் சம்பவம் நிகழும் போது ஆயிஷாவைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அஹ்மத்-27198 (25943)

இந்த இரண்டு முன்னறிவிப்புகளும் அப்படியே முழுமையாக நிறைவேறின. அலீ (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி)அவர்களைக் கன்னியமான முறையில் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள்.

 

9 ஹஸன் (ரலி) மூலம் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை

நான்காவது ஜனாதிபதியான அலீ (ரலி) அவர்கள் இப்னு முல்ஜிம் என்பவனால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பின் அவர்களின் மூத்த மகன் ஹஸன் (ரலி அவர்களை மக்கள் ஜனாதிபதியாக ஏற்றுக் கொண்டனர்.

‘இஸ்லாமிய அரசை இரண்டாகக் கூறு போட்டு விட்டார்’ என்று முஆவியா (ரலி) அவர்கள் மீது கோபமாக இருந்த மக்கள் முஆவியாவுக்கு எதிராகப் போர் செய்யுமாறு ஹஸன் (ரலி) அவர்களை வலியுறுத்தி வந்தனர். ஆரம்பத்தில் இதற்கு உடன்படாத ஹஸன் (ரலி) அவர்கள் வேறு வழியின்றி முஆவியா (ரலி) அவர்களுடன் போருக்குத் தயாரானார்கள்.

போருக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் ஹஸன் (ரலி) அவர்கள் தமது படையினருடன் தங்கினார்கள். அப்போது ஹஸன் (ரலி) அவர்களின் வலது கரமாக விளங்கிய கைஸ் என்பார் கொல்லப்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் ஹஸன் (ரலி) அவர்களின் படையினர் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது. ஹஸன் (ரலி) அவர்களும் காயமடைந்தனர்.

கட்டுப்பாடு அற்ற இந்தப் படையை வைத்துப் போர் செய்வதை விட முஆவியா (ரலி) அவர்களுடன் சமாதானம் செய்து கொள்வதே சிறந்தது என்று கருதி முஆவியா (ரலி) அவர்களுக்கு ஹஸன் (ரலி) அவர்கள் மடல் எழுதினார்கள்.

தமக்குத் தேவையான மாணியத்தைப் பெற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டு தமது கட்டுப்பாட்டில் இருந்த ஆட்சியை முஆவியா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். பிரிந்து கிடந்த இஸ்லாமிய அரசு ஒரே அரசாக இதன் மூலம் வலிமை பெற்றது. முஸ்லிம்கள் தமக்கிடையே இரத்தம் சிந்துவது இதன் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.

ஹிஜ்ரி 41ஆம் ஆண்டு ரபிய்யுல் அவ்வல் மாதம் பிறை 5ல் நடந்த இந்தச் சமாதான உடன்படிக்கை பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் மீது இருந்தார்கள். அவர்களின் அருகில் ஹஸன் (ரலி) அவர்கள் இருந்தனர். ‘எனது இந்தப் பேரப்பிள்ளை மூலமாக முஸ்லிம்களின் இருபெரும் அணிகளிடையே அல்லாஹ் சமாதானத்தை ஏற்படுத்துவான்’ என்று அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்:  புகாரி-2704

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்அறிவிப்புச் செய்தவாறு இது நிறைவேறியது.

 

10 வழிப்பறிக் கொள்ளைகள் தடுக்கப்படும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து வழிப்பறிக் கொள்ளை பற்றி முறையீடு செய்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் ‘ஹீரா என்ற ஊர் உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். ‘கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘கஃபாவை வலம் வருவதற்காக ஒரு பெண் ஹீரா எனும் ஊரிலிருந்து ஒட்டகத்தில் பயணம் செய்து வருவாள். அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்ச மாட்டாள். உன் வாழ்நாள் அதிகரித்தால் நீ இதைக் காண்பாய்’ என்று என்னிடம் கூறினார்கள். ‘வழிப்பறிக் கொள்ளை செய்வதில் வல்லவரான தய்யி கோத்திரத்தார் அப்போது எங்கே சென்றிருப்பார்கள்?’ என்று எனக்குள் நான் கூறிக் கொண்டேன் என்று அதீ பின் ஹாதிம் (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி-3595 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறும் போது ஹீரா என்ற ஊருக்கும், மக்காவுக்கும் இடையே வாழ்ந்த தய்யி எனும் கோத்திரத்தார் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். இந்தக் கூட்டம் ஒடுக்கப்படும் என்றும், ஹீரா முதல் மக்கா வரை உள்ள பகுதிகள் முஸ்லிம்களின் கைவசம் வரும் என்றும், மிகச் சீக்கிரத்தில் இது ஏற்படும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சியில் ஹீரா எனும் பகுதியும் தய்யி கூட்டத்தர் வாழ்ந்த பகுதியும் முஸ்லிம்கள் கைவசம் வந்தன. கொள்ளைக் கூட்டம் ஒடுக்கப்பட்டது. எவ்வித அச்சமுமின்றி தன்னந்தனியாக ஒரு பெண் ஹீராவிலிருந்து மக்கா வரை எவ்வித அச்சமுமின்றி வந்து செல்லும் உன்னதமான நிலை ஏற்பட்டது. அதீ பின் ஹாதிம் (ரலி) வாழ்நாளிலேயே இது நிறைவேறியது.