Tamil Bayan Points

நபித்தோழர்களை மதிப்பது நேர்வழி! அவர்களைப் பின்பற்றுவது வழிகேடு!

பயான் குறிப்புகள்: கொள்கை உறுதி

Last Updated on October 27, 2020 by

நபித்தோழர்களை மதிப்பது நேர்வழி! அவர்களைப் பின்பற்றுவது வழிகேடு!

இறைவனால் இறக்கியருளப்பட்ட வஹீச்செய்தியை மட்டுமே பின்பற்ற வேண்டும்; வஹீ அல்லாததை யார் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் வழிகேட்டின் பக்கம் சென்றுவிட்டார்கள் என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை.

இதை வல்ல இறைவன் தனது திருமறையில் தெளிவுபடுத்தியுள்ளான்.

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

(திருக்குர்ஆன்:6:106.)

அல்லாஹ் எதை வஹீச் செய்தியாக அருளியுள்ளானோ அந்த வஹீச் செய்தி மட்டும் தான் மார்க்கம் என்பதே இறைவனின் கட்டளை. ஆனால் இன்று தங்களையும் ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலரும், கப்ரு வணங்கிகளும் சஹாபாக்களையும் நாம் பின்பற்ற வேண்டும்; அவர்கள் சொல்லிய, செய்த அனைத்தும் மார்க்கம் என்று சொல்லி வருகின்றனர்.

அதற்கு அவர்கள் வைக்கும் பிரதானமான வாதம், “சஹாபாக்கள் சாதாரண ஆட்கள் இல்லை; அவர்கள் அல்லாஹ்வுடைய தூதரிடத்திலேயே பாடம் படித்தவர்கள்; அவர்களை விட மார்க்கத்தை நன்கு அறிந்தவர்கள் யாருமில்லை; எனவே அவர்களின் வழிகாட்டுதலும் அதுவும் மார்க்கமாகும்” என்பதுதான் அந்த வாதம். இது முற்றிலும் தவறு என்பதை திருக்குர்ஆனிலிருந்து நாம் அறிந்து கொள்கின்றோம்.

வல்ல இறைவன் ஆதம் (அலை) அவர்களை இந்தப் பூமிக்கு அனுப்பும் போது அவர்களிடம் சொல்லிய செய்தியை தனது திருமறையில் குறிப்பிட்டுள்ளான்.

அந்தச் செய்தி இதோ:

இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்’ என்று கூறினோம்.

(திருக்குர்ஆன்:2:38.)

ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இட்ட கட்டளை, “என்னிடமிருந்து நேர்வழி பெறும் அந்த நேர்வழியைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும்” என்பதுதான்.

இதன் பொருள் என்ன?

ஆதம் நபி தனது அறிவைக் கொண்டு சொல்லும் சொல்லோ, தனது சிந்தனையின் மூலம் யோசித்து செய்யும் செயலோ மார்க்கமல்ல; மாறாக அல்லாஹ்விடமிருந்து அறிவிக்கப்படும் வஹீச் செய்திதான் மார்க்கமாகும் என்பதுதான்.

சஹாபாக்கள் நபிகளாரிடம் பாடம் படித்ததால் அவர்கள் சொல்வது அனைத்துமே மார்க்கம் என்று சொல்வோர் ஆதம் நபிக்கு அல்லாஹ் இட்ட கட்டளை குறித்து சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடத்திலே நேரடியாகப்  பாடம் படித்தவர்கள்; அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் அல்லாஹ்தான் ஆதம் நபிக்கு கற்றுக் கொடுத்ததாகச் சொல்லிக் காட்டுகின்றான்.

அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான்.

(அல்குர்ஆன்:2:31.)

அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் அல்லாஹ் ஆதம் நபிக்கு கற்றுக் கொடுத்தான் என்பதன் பொருள், “அனைத்து பொருட்களின் பெயரை மட்டும் அறிந்து கொள்வதல்ல; அந்த பொருள் குறித்த முழுமையான அறிவைப் பெறுதல்” என்பதுதான். அப்படியானால் அனைத்து கல்வி  ஞானத்தையும் ஆதம் நபியவர்கள் தனது இறைவனிடமிருந்தே நேரடியாகக் கற்றுக் கொண்டார்கள்.

இறைவனிடம் நேரடியாகப் பாடம் படித்த ஆதம் (அலை) அவர்கள் கூட தன் விருப்பத்திற்கு மார்க்க சட்டத்தைச் சொல்லிவிடக்கூடாது; மாபெரும் அறிவு படைத்த அறிஞராக ஆதம் (அலை) அவர்கள் திகழ்ந்த போதும் கூட, “என்னிடத்திலிருந்து வரும் வஹீச் செய்தியை மட்டும் தான் நீங்கள் பின்பற்ற வேண்டும்” என அல்லாஹ் கட்டளையிடுகின்றான் என்றால், நபிகளாரிடம் பாடம் படித்த ஒரே காரணத்திற்காக சஹாபாக்கள் சொல்வது அனைத்தும் மார்க்கம் என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பித்அத் செய்த சஹாபாக்களின் மறுமை நிலை

சஹாபாக்கள் சொல்வதெல்லாம் மார்க்கம் என்று சொல்வோர், இஸ்லாத்தில் உள்ள புதிய பித்அத்களைப் புகுத்தியதற்காக மறுமையில் சஹாபாக்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த நபிகளாரின் எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளட்டும். பித்அத் செய்த சஹாபாக்களின் மறுமை நிலை குறித்து நபிகளார் செய்யும் முன்னறிவிப்பு இதோ:

நியாயத் தீர்ப்பு நாளில் மக்களெல்லாம் பதைபதைப்புடன் நிற்கும் போது நடக்கும் ஒரு நிகழ்ச்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

என் தோழர்களில் சிலர் இடது புறமாகப் பிடிக்கப்படுவார்கள். (அதாவது நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவார்கள்) அப்போது நான் “அவர்கள் என் தோழர்கள்! அவர்கள் என் தோழர்கள்! என்று கூறுவேன். அதற்கு இறைவன் “நீ அவர்களைப் பிரிந்தது முதல் வந்த வழியே அவர்கள் திரும்பிச் சென்று கொண்டே இருந்தனர் என்று கூறுவான். அப்போது நான் “அவர்களுடன் நான் இருந்த வரை அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். எப்போது என்னை நீ கைப்பற்றிக் கொண்டாயோ (அப்போது முதல்) நீயே அவர்களைக் கண்காணிப்பவனாவாய் என்று என் சகோதரர் ஈஸா கூறியது போல் நானும் கூறிவிடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி-3349, 3447

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் சில நபித்தோழர்கள் தவறான பாதைக்குச் சென்று விடுவார்கள் என்பது முன்னரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனால் அறிவிக்கப்பட்டு அவர்கள் அதனை நமக்கு அறிவித்துச் சென்று விட்டனர். இந்த நிலையில் நபித்தோழர்களின் கூற்றுகள் மார்க்க ஆதாரம் என்று சொல்ல முடியுமா?

நபித்தோழர்களில் சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத பித்அத்களை உருவாக்குவார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு முன்னறிவிப்புச் செய்துள்ளனர்.

நான் கவ்ஸர் எனும் தடாகத்தில் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். யார் என்னைக் கடந்து செல்கிறாரோ அவர் அதனை அருந்துவார். யார் அதனை அருந்துகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது. என்னிடம் சில கூட்டத்தினர் வருவார்கள். அவர்களை நானும் அறிவேன். அவர்களும் என்னை அறிவார்கள். பின்னர் எனக்கும் அவர்களுக்குமிடையே திரையிடப்படும்.

“அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவேன். ‘உமக்குப் பின்னால் அவர்கள் எதையெல்லாம் புதிதாக உருவாக்கி விட்டனர் என்பது உமக்குத் தெரியாது’ என்று கூறப்படும். “எனக்குப் பின் மார்க்கத்தை மாற்றியவர்களுக்குக் கேடு தான்; கேடு தான் என்று நான் கூறுவேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹ்ல் பின் ஸஅது (ரலி) அறிவிக்கிறார்.

இது பற்றி அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் போது “நியாயத் தீர்ப்பு நாளில் என் தோழர்களில் ஒரு கூட்டத்தினர் என்னிடம் வருவார்கள். அவர்கள் (கவ்ஸர்) தடாகத்தை விட்டும் தடுக்கப்படுவார்கள். அப்போது நான் “என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்; என் இறைவா! இவர்கள் என் தோழர்கள் எனக் கூறுவேன். “உமக்குப் பின்னால் அவர்கள் எதையெல்லாம் புதிதாக உருவாக்கி விட்டனர் என்ற அறிவு உமக்கு இல்லை. அவர்கள் வந்த வழியே பின்புறமாகத் திரும்பிச் சென்று விட்டனர் என்று இறைவன் கூறுவான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி-6585, 6586

இதே கருத்து புகாரி 4740, 6526, 6576, 6582, 7049 ஆகிய எண்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதையும், செய்ததையும் மட்டுமே நபித்தோழர்கள் செய்வார்கள். நபிவழியில் இல்லாத எந்த ஒன்றையும் நபித்தோழர்கள் செய்ய மாட்டார்கள் என்றெல்லாம் காரணம் கூறித் தான் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்கள் என்று வாதிட்டு வருகின்றனர். அவை அனைத்துமே ஆதாரமற்ற பொய்க்கூற்று என்பது இந்த நபிமொழிகள் மூலம் தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாததையும், செய்யாததையும் சில நபித்தோழர்கள் புதிதாக உருவாக்கி, அதன் காரணமாக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றால் இந்தக் கடும் எச்சரிக்கையில் இருந்து நாம் பெற வேண்டிய பாடம் என்ன?

நபித்தோழர்களின் சொற்களாக இருந்தாலும், செயல்களாக இருந்தாலும் அதற்கு குர்ஆனிலிருந்தும், நபிவழியில் இருந்தும் ஆதாரம் காட்டப்பட்டிருந்தால் மட்டுமே அதைப் பின்பற்ற வேண்டும். நபிவழியை ஆதாரமாகக் காட்டாமல் அவர்கள் செய்தவை எதுவாக இருந்தாலும் அவை பித்அத்தாக இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அதை மார்க்க ஆதாரமாகக் கருதக் கூடாது என்பது தான் இதிலிருந்து நாம் பெற வேண்டிய பாடம்.

நபித்தோழர்கள் நம்மை விடப் பல மடங்கு சிறந்தவர்கள் என்றாலும் அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையை நாம் மறந்து விடக் கூடாது. நபிகள் நாயகத்தின் தோழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் எது செய்தாலும் அது மார்க்க ஆதாரமாக ஆகிவிடாது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

சஹாபாக்களில் சிலர் இதுபோன்று பித்அத்களை உருவாக்கியதால் நானும் அந்த பித்அத்தைப் பின்பற்றுவேன் என்று சொல்வது வழிகேடுதான் என்பது இதன் மூலம் தெளிவாகிறதல்லவா?

சஹாபாக்களுக்கு மத்தியில் நடந்த போர்:

மார்க்கத்தில் இல்லாத பித்அத்தான காரியங்களை மட்டும் செய்யவில்லை; மாறாக நீங்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு காஃபிர்களாக ஆகிவிடாதீர்கள் என்ற நபிகளாரின் எச்சரிக்கைக்கு மாற்றமாகவும் சஹாபாக்கள் நடந்துள்ளார்கள் என்பதையும் வரலாற்றை நாம் ஆய்வு செய்யும் போது அறிந்து கொள்கின்றோம்.

ஒருவரை ஒருவர் வெட்டிக் கொலை செய்து காபிர்களாகி விடாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் எச்சரிக்கை செய்தார்கள்.

நூல் : புகாரி-121, 1739, 1741, 4403, 4405, 4406, 5550, 6166, 6868,

6869, 7077, 7078, 7080, 7447

ஆனால் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு நபித்தோழர்கள் தமக்கிடையே வாள் ஏந்தி போரிட்டு ஒருவரை ஒருவர் வெட்டிக் கொலை செய்யும் நிலைக்கு ஆளாயினர்.

ஆயிஷா (ரலி) தலைமையில் அணிவகுத்தவர்களும் நபித்தோழர்களே. சொர்க்கவாசிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நற்செய்தி கூறப்பட்டவர்களும் அவர்களில் இருந்தனர்.

அலி (ரலி) அவர்களின் தலைமையில் அணிவகுத்தவர்களும் நபித்தோழர்களே. சொர்க்கவாசிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நற்செய்தி கூறப்பட்டவர்கள் இந்த அணியிலும் இருந்தனர். தலைமை தாங்கிய இருவரும் சொர்க்கவாசிகள் என்று நற்செய்தி கூறப்பட்டவர்கள் தாம். அப்படி இருந்தும் ஒருவருக்கு எதிராக மற்றவர்கள் ஆயுதம் ஏந்தி போர் செய்தார்கள். (அவர்கள் அனைவரையும் அல்லாஹ் மன்னிப்பானாக!)

அவர்களை விமர்சனம் செய்வதற்காக இதனை நாம் எடுத்துக் காட்டவில்லை.

மனிதர்கள் என்ற முறையில் இத்தகைய பாரதூரமான காரியத்தையே அவர்கள் செய்திருக்கும் போது அவர்களின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆக முடியும் என்பதற்காகவே இதனை எடுத்துக் காட்டுகிறோம்.

இது போலவே முஆவியா (ரலி) தலைமையிலும், அலி (ரலி) தலைமையிலும் நபித்தோழர்கள் அணி திரண்டு போர் செய்தனர். ஒருவரை ஒருவர் கொலை செய்யும் நிலை ஏற்பட்டது. கொலை செய்தவர்களிலும் நபித்தோழர்கள் இருந்தனர். கொல்லப்பட்டவர்களிலும் நபித்தோழர்கள் இருந்தனர். அதன் பின்னர் நடந்த கர்பலா யுத்தத்திலும் இரண்டு அணியிலும் சில நபித்தோழர்கள் இருந்தனர்.

ஒரு முஸ்லிமுக்கு எதிராக இன்னொரு முஸ்லிம் ஆயுதம் தாங்கி கொலை செய்வது மிகப் பெரிய பாவச் செயல் என்ற நிலையிலும் நபித்தோழர்களிடம் இது நிகழ்ந்துள்ளது.

வஹீயைத் தவிர வேறு எதுவும் பாதுகாப்பானது இல்லை என்பதை அறிந்திட இது போதுமான சான்றாக அமைந்துள்ளது. பொதுவாக நபித்தோழர்களும் மனிதர்கள் தாம். அவர்களது சிந்தனையில், தீர்ப்புகளில் நிச்சயம் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை இந்த ஆதாரங்கள் விளக்குகின்றன.

நபிகளாரின் கட்டளைக்கு மாற்றமாக நடந்த நபித்தோழர்களின் செயல்பாடுகள்:

நபித்தோழர்களின் செயல்பாடுகளில் பல செயல்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாற்றமாக அமைந்திருந்தன.

அது குறித்த சிறு தொகுப்பை காணுங்கள்:

உற்ற தோழராக விளங்கிய உமர் (ரலி) அவர்கள் நபிவழிக்கு மாற்றமான பல செயல்களைச் செய்துள்ளார்கள்.

அல்லாஹ் அனுமதித்த தமத்துவு ஹஜ் முறைக்கு தடைவிதித்த உமர் (ரலி):

மூன்று விதத்தில் ஹஜ் செய்வதற்கு நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள்.

உம்ராவுக்கு இஹ்ராம் கட்டி, உம்ராவை முடித்து விட்டு இஹ்ராம் இல்லாத நிலையில் மக்காவில் தங்கிக் கொண்டு ஹஜ்ஜுடைய காலம் வந்ததும் மற்றொரு இஹ்ராம் கட்டி ஹஜ் செய்வது தமத்துவு ஹஜ் எனப்படுகிறது. இவ்வாறு ஹஜ் செய்வதை திருக்குர்ஆன் (2:196) அனுமதிக்கிறது. அனுமதிக்கப்பட்ட மூன்று விதமான ஹஜ்ஜின் வகைகளில் இந்த தமத்துவு ஹஜ்ஜு முறையும் ஒன்று. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இவ்வாறு செய்ய அனுமதித்துள்ளார்கள்.

ஆனால் உமர் (ரலி) அவர்களும், உஸ்மான் (ரலி) அவர்களும் தமத்துவு முறையில் ஹஜ் செய்வதற்கு தடை போட்டுள்ளனர்.

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) என்ற நபித்தோழர் தமத்துவு ஹஜ்ஜிற்கு தடை போட்ட செய்தியை கண்டிக்கின்றார்.

தமத்துவு ஹஜ் பற்றிய வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் இறங்கியது. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தமத்துவு முறையில் ஹஜ் செய்தோம். இதை ஹராமாக்கி அல்லது தடை செய்து எந்த வசனமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அருளப்படவில்லை. மனிதர்கள் தம் விருப்பம் போல் எதையோ (இதற்கு மாற்றமாக) கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல் : புகாரி, 1572, 4518

நபிகளாரின் மருமகனான அலி (ரலி) அவர்களும் தமத்துவு ஹஜ் செய்வதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் போட்ட தடையை மீறி, “நான் தமத்துவு முறையில் ஹஜ் செய்வேன்” என்று அறிவிப்புச் செய்துவிட்டு தமத்துவு முறையில் ஹஜ் செய்துள்ளார்கள். நீங்கள் போடும் தடையை நான் ஏற்க முடியாது என்று உஸ்மான் (ரலி) அவர்களிடத்திலேயே நேருக்கு நேராகச் சொல்லிவிட்டு தமத்துவு முறையில் ஹஜ் செய்து நபி வழியை நிலைநாட்டினார்கள் அலி (ரலி) அவர்கள்.

தமத்துவு முறையில் ஹஜ் செய்வதையும், ஹஜ் உம்ரா இரண்டையும் சேர்த்துச் செய்வதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் தடை செய்தார்கள். இதைக் கண்ட அலி (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டினார்கள். “எவரது சொல்லுக்காகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை நான் விட்டுவிடுபவனாக இல்லை என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மர்வான் பின் அல்ஹகம்,

நூல் : புகாரி, 1563

மற்றொரு அறிவிப்பில்,

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததைத் தடுப்பது தவிர உமது நோக்கம் வேறு இல்லை என்று உஸ்மான் (ரலி)யிடம் நேருக்கு நேராகச் சொல்லிவிட்டு இரண்டையும் சேர்த்துச் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

பார்க்க புகாரி : 1569

தந்தை சொல் கேட்காத மகன்:

நபிகளாரின் கட்டளை என்று வந்துவிடுமேயானால் தந்தை போட்ட கட்டளையையும் கூட மதிக்கமாட்டேன்; நபிகளாரின் கட்டளையைத்தான் மதித்து நடப்பேன் என்பதை தமத்துவு ஹஜ் விஷயத்தில் உமர் (ரலி) அவர்களின் மகன் இப்னு உமர் (ரலி) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ள செய்தி, சஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்களுக்கு மரண அடியாக அமைந்துள்ளது.

தமத்துவு முறையில் ஹஜ் செய்வது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு சிரியாவாசி கேட்டார். அது அனுமதிக்கப்பட்டது தான் என்று அவர்கள் விடையளித்தார்கள். உங்கள் தந்தை (உமர்) அவர்கள் அதைத் தடுத்திருக்கிறாரே அது பற்றிக் கூறுங்கள் என்று அவர் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “என் தந்தை ஒரு காரியத்தைத் தடுக்கிறார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் செய்துள்ளனர் என்றால் என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? என்பதற்கு நீ பதில் சொல் என்றார்கள். அதற்கு அந்த மனிதர் “அல்லாஹ்வின் தூதருடைய கட்டளையே பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமத்துவு முறையில் ஹஜ் செய்துள்ளார்கள் என்று பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸாலிம் பின் அப்துல்லாஹ்,

நூல் : திர்மிதி-753

தமத்துவு முறையில் ஹஜ் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்தது பரவலாகத் தெரிந்த நிலையில் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய நபித் தோழர்கள் இதற்கு தடை போட்டுள்ளார்கள் என்றால், நபியிடம் பாடம் படித்த நபித்தோழர்களுக்கு இது தெரியாதா? என்று கேட்டு நாமும் அல்லாஹ் அனுமதித்த தமத்துவு ஹஜ் முறைக்கு தடை போட்டால் அது சரி வருமா?

இப்படி அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

இதுதானே அல்லாஹ்வின் அதிகாரத்தை கையில் எடுப்பது?

இதை நாம் செய்யக்கூடாது.

ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்:

இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது’ என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்.

(திருக்குர்ஆன்:16:116.)

அல்லாஹ் அனுமதித்ததை ஹராமாக்கும் அதிகாரத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது; சஹாபாக்கள் செய்த இந்த தவறை அல்லாஹ் மன்னிப்பான்; ஆனால் இதே பாவத்தை நாம் செய்தால் நமது மறுமை நிலை என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்?

நபிகளார் அனுமதித்த, அனைவருக்கும் தெரிந்த,  அல்லாஹ் தனது திருமறையில் கூறியுள்ள, ஒரு வணக்க வழிபாட்டு முறையை, ஒரு நபிவழியை மிகச் சிறந்த நபித்தோழர்கள் தடை செய்திருப்பதைக் கண்ட பின்பும் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரமாகும் என்று கூறுவது எப்படிச் சரியான கருத்தாக இருக்க முடியும்?

பெற்றெடுத்த மகனான இப்னு உமர் (ரலி) அவர்களே  நபி வழிக்கு முரணான தனது தந்தையில் சொல்லைக் கேட்கவில்லை எனும் போது நாம் கேட்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?

தயம்மம் செய்யக்கூடாது என மறுத்த உமர் (ரலி):

தொழுகைக்காக உளூ செய்வதற்கு தண்ணீர் கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்துள்ள மார்க்கச் சட்டமாகும்; தூய மண்ணை வைத்து தயம்மம் செய்து தொழ வேண்டும் என்பது இறைவன் தனது திருமறையில் இட்டுள்ள கட்டளை.

இந்தச் சட்டத்தையும் உமர் (ரலி) அவர்கள் மறுத்துள்ளார்கள்.

மிகச் சிறந்த நபித்தோழரான உமர் (ரலி) அவர்கள் குளிப்புக்காக தயம்மும் செய்வதை அறியாமல் இருந்துள்ளார்கள்.

ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்தார். “எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்று அவர் கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் “(தண்ணீர் கிடைக்காவிட்டால்) நீ தொழக் கூடாது என்று விடையளித்தார்கள். அப்போது அம்மார் (ரலி) அவர்கள் “முஃமின்களின் தலைவரே! நானும், நீங்களும் ஒரு சிறு படையில் சென்றோம். நம் இருவருக்கும் குளிப்பு கடமையானது. நமக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது நீங்கள் தொழவில்லை. நானோ மண்ணில் புரண்டு விட்டு தொழுதேன்.

இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது, “உமது இரு கைகளால் தரையில் அடித்து வாயால் ஊதிவிட்டு கைகளால் முகத்திலும் முன் கைகளிலும் தடவிக் கொள்வது உமக்குப் போதுமே! என்று கூறினார்கள். இது உங்களுக்கு நினைவில்லையா? என்று உமர் (ரலி) அவர்களுக்கு நினைவுபடுத்தினார்கள். அப்போது உமர் ரலி) அவர்கள் “அம்மாரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள் என்று கூறினார்கள். “உங்களுக்கு விருப்பமில்லா விட்டால் இது பற்றி நான் அறிவிக்க மாட்டேன் என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்-553

கடமையான குளிப்புக்காகவும் தயம்மும் செய்யலாம் என்று திருக்குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தும் அந்தச் சட்டம் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை. அம்மார் அவர்கள் சுட்டிக் காட்டியதையும் உமர் (ரலி) அவர்கள் நம்பவில்லை என்பது மேற்கண்ட செய்தியில் இருந்து தெரிகிறது.

மிகச் சிறந்த நபித்தோழருக்கே இது பற்றிய சட்டம் தெரியவில்லை எனும் போது நபித்தோழரின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆக முடியும் என்பதை சலஃபுக் கும்பலும், சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர்.

தலாக் சட்டத்தில் நபி வழியை மாற்றி புதிய கட்டளை பிறப்பித்த உமர் (ரலி):

முத்தலாக் என்று மூன்று தலாக்கையும் ஒரே நேரத்தில் சொல்லி பெண்களை இஸ்லாம் கொடுமைப்படுத்துகின்றது என்பதுதான் தற்போது இஸ்லாம் குறித்து இஸ்லாத்தின் எதிரிகள் சுமத்தும் குற்றச்சாட்டு.

மூன்று தலாக்கையும் ஒரே நேரத்தில் விடுவது நபிகளரின் வழிகாட்டுதலுக்கு மாற்றமான செயல். மனைவியைப் பிடிக்காத கணவர்கள் தாமாகவே மனைவியை விவாகரத்து செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது போல் பெண்களுக்கும் விவாகரத்து உரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஆண்களைப் பொருத்த வரை இவ்வாறு மூன்று வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

முதல் தடவை விவாக ரத்து செய்து, மனைவிக்கு மூன்று மாதவிடாய் முடிவதற்குள் மனமாற்றம் ஏற்பட்டால் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மூன்று மாதவிடாய் கடந்து விட்டால் மனைவி சம்மதித்தால் மீண்டும் அவர்கள் தமக்கிடையே திருமணம் செய்து கொள்ளலாம்.

இரண்டாவது தடவை விவாகரத்து செய்தாலும் மேற்கண்ட அடிப்படையில் சேர்ந்து கொள்ளலாம்.

மூன்றாவது தடவை விவாகரத்து செய்தால் அதன் பின்னர் மனைவியுடன் சேரவோ, திருமணம் செய்யவோ அனுமதி இல்லை. விவாகரத்து செய்யப்பட்ட மனைவி மற்றொருவனை மணந்து அவனும் விவாகரத்து செய்திருந்தால் முதல் கணவன் அவளைத் திருமணம் செய்ய அனுமதி உண்டு.

ஒரு கணவன் முதல் தடவை விவாகரத்து செய்யும் போது முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் அது மூன்று தடவை தலாக் கூறியதாக ஆகாது. மூன்று தலாக் என்று கூறினாலும், மூவாயிரம் தலாக் என்று கூறினாலும் தனக்கு இஸ்லாம் வழங்கிய ஒரு வாய்ப்பைத் தான் அவன் பயன்படுத்தியுள்ளான். இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறை இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இது தான் நடைமுறை என்று தெரிந்திருந்தும் உமர் (ரலி) அவர்கள் அதை மீறி நபிவழிக்கு மாற்றமான சட்டத்தைக் கொண்டு வந்தார்கள் என்பதை ஹதீஸ் நூலில் நாம் காண்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி) அவர்களின் காலத்திலும், உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இரண்டு ஆண்டுகளும் மூன்று தலாக் எனறு கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. நிதானமாக முடிவு செய்யும் விஷயத்தில் மக்கள் அவசரப்படுகிறார்கள். எனவே மூன்று தலாக் என்று கூறுவதை மூன்று தலாக் என்றே சட்டமியற்றினால் என்ன? என்று கூறி அதை உமர் (ரலி) அவர்கள் சட்டமாகவும் ஆக்கினார்கள்.

நூல் : முஸ்லிம்-2689

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இது தான் என்று தெரியாமல் சுயமுடிவு எடுப்பதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி காட்டுதல் இது தான் என்று தெரிந்து கொண்டே அதை ரத்துச் செய்வது பாரதூரமானது என்பதில் சந்தேகம் இல்லை. உமர் (ரலி) போன்றவர்களிடமே சில நேரம் இது போன்ற முடிவுகள் வெளிப்பட்டது என்றால் இதை ஏற்று நபிவழியைப் புறக்கணிக்க முடியுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்தின் போது ஏற்பட்ட தடுமாற்றம்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பார்கள் என்று திருக்குர்ஆனிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தனது மரணம் பற்றி முன் அறிவிப்பு செய்திருந்தார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது உமர் (ரலி) உள்ளிட்ட பல நபித் தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்றும், மரணிக்க மாட்டார்கள்; உயித்தெழுவார்கள் என்றும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் தக்க ஆதாரங்களை எடுத்துக் காட்டி அவர்களின் தவறான நம்பிக்கையைப் புரிய வைக்கும் வரை நபித்தோழர்களால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பார்க்க: புகாரி-1242, 3670

நபிகளார் மரணித்துவிட்டார்கள் என்று யாரேனும் சொன்னால் அவர்களை வெட்டுவேன் என்று சொன்னவர்கள் உமர் (ரலி) அவர்கள்.

பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழும் போது நாம் எப்படி நிலை குலைந்து போவோமோ அது போல் நபித்தோழர்களும் நிலை குலையக் கூடியவர்களாக இருந்துள்ளனர் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

எனவே தான் தவறுகளுக்கு அறவே இடமில்லாத வஹீயை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று திருக்குர்ஆனும், நபிமொழிகளும் தெள்ளத் தெளிவாக அறிவிக்கின்றன.

பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுத்த உமர் (ரலி):

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்களும் ஐந்து நேரத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்து சென்றனர்.

புகாரி : 362, 86, 184, 362, 372, 578, 707, 807, 809, 814, 837, 850, 865, 867, 868, 873 ஆகிய எண்களில் இது பற்றிய ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் நபிகளாரின் இந்த கட்டளைக்கு மாற்றமாக உமர் (ரலி) அவர்கள் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை தடுத்துள்ளார்கள்.

உமர் (ரலி) அவர்களின் மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ் மற்றும் இஷாத் தொழுகைகளில் பள்ளியில் ஜமாஅத்தில் கலந்து கொள்வார். அவரிடம், “(உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும், இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்பெண்மணி, “அவர் என்னைத் தடுக்கக் முடியாது. ஏனெனில் “பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள்’ என்ற நபி (ஸல்) அவர்களின் சொல் (என்னைத் தடுப்பதை விட்டும்) அவரைத் தடுத்து விடும்‘’ என்று கூறினார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி-900

நபிவழிக்கு மாற்றமாக பள்ளிவாசலுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று உமர் (ரலி) அவர்கள் போட்ட கட்டளையை அவர்களது மனைவிகூட மதிக்கவில்லை; காரணம் இது அல்லாஹ்வுடைய தூதரின் வழிகாட்டுதலுக்கு எதிரான கட்டளை என்பதுதான்;

உமர் (ரலி) அவர்களின் நாவில் அல்லாஹ் பேசுவதாக நபிகளார் நற்சான்று பகர்ந்துள்ள நிலையில் உமர் (ரலி) அவர்கள் நபி வழிக்கு மாற்றமான பல கட்டளைகளைப் போட்டுள்ளார்கள்; அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களை சொர்க்கத்திற்குரியவர்கள் என்று நபிகளார் வாயிலாக அறிவிக்க வைத்துவிட்டான் என்ற போதிலும், உமர் (ரலி) அவர்கள் மார்க்கத்திற்கு முரணாக செய்த செயல்பாடுகளை நாம் செய்ய முடியுமா?

இது மார்க்க ஆதாரமாகுமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

உமர் (ரலி) அவர்கள் மார்க்கத்திற்கு முரணாக செய்த ஒரு சில செயல்பாடுகளை இங்கே சுட்டிக்காட்டியுள்ளோம். இதுபோல் ஏராளமான நபித்தோழர்கள் நபி வழிக்கு முரணான பல செயல்களை செய்துள்ளார்கள்; அதுவெல்லாம் மார்க்க ஆதாரம் ஆகாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அப்படியானால் உமர் (ரலி) அவர்களின் நாவில் அல்லாஹ் பேசுகின்றான் என்பதன் பொருள் என்ன என்ற சந்தேகம் நமக்கு எழலாம்.

உமர் (ரலி) அவர்கள் சில சட்டங்கள் குறித்து இப்படி இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று தனது கருத்தை தெரிவித்திருந்தார்கள்; அவர்கள் சொன்னது போல அல்லாஹ் ஒரு சில சட்டங்களை இறக்கி அருளினான்; அதனால் தான் உமர் (ரலி) அவர்கள் நாவில் அல்லாஹ் பேசுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களே தவிர உமர் (ரலி) அவர்கள் செய்யும் அத்தனையும் மார்க்க அங்கீகாரம் என்ற கருத்தில் அது சொல்லப்படவில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையை மற்ற நபித்தோழர்களும் விளங்கியதால் தான் நபிகளாரின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக உமர் (ரலி) அவர்கள் சொன்ன செய்திகளை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று கூறியுள்ளார்கள். நபிகளார் மரணிக்கவே மாட்டார்கள் என்று உமர் (ரலி) அவர்கள் சொன்ன நிலையில் அதை அபூபக்கர் (ரலி) அவர்கள் மறுத்தது ஏன்?

உமர் (ரலி) நாவில் அல்லாஹ் பேசுகின்றான் என்று சொல்லி அதை ஆமோதித்தார்களா? இல்லையே!

தமத்துவு ஹஜ் முறைக்கு தடைவிதித்த உமர் (ரலி) அவர்களது தடையை அவரது மகன் இப்னு உமர் (ரலி) கூட ஏற்கவில்லையே!

உமர் (ரலி) நாவில் அல்லாஹ் பேசுவதாகச் சொல்லி தமத்துவு ஹஜ் தடையை அனைவரும் ஆதரித்தார்களா? இல்லையே!

பள்ளிவாசலுக்கு பெண்கள் வரக்கூடாது என்று சொன்ன உமர் (ரலி) அவர்களின் கட்டளையை அவரது மனைவி கூட ஏற்கவில்லையே!

உமர் (ரலி) நாவில் அல்லாஹ் பேசுகின்றான்; அவர்கள் சொல்வது எல்லாம் வஹீச் செய்தி என்றிருக்குமேயானால் அதை அவர்கள் மனைவியும் ஏற்றிருப்பார்களே!

இதிலிருந்து அவர்கள் சொன்னதெல்லாம் மார்க்கமாக ஆகாது; வஹீச் செய்தி மட்டும் தான் மார்க்கமாக ஆகும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தயம்மம் செய்யலாம் என்ற நபி வழியை மறுத்த இப்னு மஸ்வூத் (ரலி):

நான் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) , அபூ மூஸா (ரலி) ஆகயோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் “ஒருவருக்கு குளிப்பு கடமையாகி தண்ணீர் கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூதிடம் கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் தண்ணீர் கிடைக்கும் வரை தொழக் கூடாது என்று விடையளித்தார்கள்.

தயம்மும் செய்வது போதும் என்று அம்மாருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்திக்கு உமது பதில் என்ன? என்று அபூ மூஸா (ரலி) திருப்பிக் கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அவர் சொன்னதைத் தான் உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லையே என்று விடையளித்தார்கள். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் “அம்மார் கூறுவதை விட்டு விடுவோம். இந்த (5:6.) வசனத்தை என்ன செய்யப் போகிறீர்? என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு என்ன பதில் சொல்வது என்று அறியாமல் “நாம் இதை அனுமதித்தால் ஒருவர் குளிர் அடிக்கும் போது கூட தயம்மும் செய்து தொழ ஆரம்பித்து விடுவார் என்று இப்னு மஸ்வூத் (ரலி) பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி-346, 347

உளுச் செய்வதற்கு தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் செய்து தொழலாம். அது போல் குளிப்பு கடமையாகி குளிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் குளிப்பதற்குப் பகரமாகவும் தயம்மும் செய்யலாம். இது இன்றைக்கு அனைத்து முஸ்லிம் அறிஞர்களும் தெரிந்து வைத்திருக்கின்ற சட்டமாகும்.

ஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் இதனை மறுக்கிறார்கள். அபூ மூஸா (ரலி), இப்னு மஸ்வூதுக்கு எதிராக ஒரு நபி மொழியையும், ஒரு திருக்குர்ஆன் வசனத்தையும் எடுத்துக் காட்டுகிறார்கள்.

தக்க ஆதாரங்கள் கிடைக்காத நேரத்தில் தவறான தீர்ப்பு அளிப்பது மனிதர்களின் பலவீனம் என்று எடுத்துக் கொள்ளலாம். இத்தகைய தவறுகள் நிகழாத மனிதர்களை நாம் காண முடியாது.

ஆனால் மேற்கண்ட செய்தியில் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் தக்க ஆதாரங்களை அபூ மூஸா (ரலி) எடுத்துக் காட்டிய பிறகு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தமது கருத்தை உடனே மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது தமது கருத்துக்கு ஆதரவான ஆதாரத்தை எடுத்துக் காட்டியிருக்க வேண்டும்.

ஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தக்க ஆதாரத்தை அறிந்த பின்பும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் அனுமதி அளித்தால் சாதாரண குளிருக்குப் பயந்து தயம்மும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்று கூறுகிறார்கள். அதாவது அல்லாஹ் அனுமதித்த ஒன்றை தவறான காரணம் கற்பித்து இப்னு மஸ்வூத் (ரலி) மறுக்கிறார்கள்.

சொந்த யூகத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கும் மனப்பான்மை தலை சிறந்த நபித்தோழரிடம் காணப்பட்டால் இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? இது போல இன்னும் எத்தனை தீர்ப்புகள் அவரால் அளிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாதா? நபித்தோழர்களின் நடவடிக்கைகளும் மார்க்க ஆதாரங்கள் என்று கூறுவது எந்த வகையில் ஏற்புடையதாகும்?

நபித்தோழர்களை நாம் இழிவுபடுத்துகின்றோமா?:

வஹீச் செய்தியை மட்டும் தான் நாம் பின்பற்ற வேண்டும்; அவையல்லாத இன்னபிற செய்திகளை பின்பற்றுவது வழிகேடு; அது சஹாபாக்களின் தனிப்பட்ட சொந்த கருத்தாக இருந்தாலும் அதையும் பின்பற்றக்கூடாது என்று நாம் சொல்லும் போது, சஹாபாக்கள் செய்த தவறுகளை நாம் இங்கே சுட்டிக்காட்டுகின்றோம்.

இதைப் போன்று நபித்தோழர்களிடத்தில் நிகழ்ந்த தவறுகளை நாம் சுட்டிக்காட்டும் போது நம்மை எதிர்க்கக்கூடியவர்கள் நமக்கு எதிராக மக்களை உசுப்பேத்தி விடும் வகையில் ஒரு தவறான அவதூறைப் பரப்புகின்றார்கள். அதாவது இவ்வாறு நபித்தோழர்களின் தவறுகளை வெளியே சொல்லி நாம் நபித்தோழர்களை இழிவுபடுத்துகின்றோம் என்பதுதான் அவர்களது அவதூறு.

இங்கு நாம் நபித்தோழர்களை இழிவுபடுத்தவில்லை. அவர்களது வழிகாட்டுதல்களும் மார்க்க ஆதாரம் என்று சொல்லும் போதுதான் அவர்களது தவறுகளை சுட்டிக்காட்டுகின்றோம்.

நபித்தோழர்களின் தியாகம்; அவர்களது அர்ப்பணிப்பு; அவர்கள் இந்த மார்க்கம் மேலோங்குவதற்குச் செய்த அருந்தொண்டுகள் எதையும் நாம் மறுக்கவில்லை; அதை மதிக்கின்றோம்; அவர்களை கண்ணியப்படுத்துகின்றோம்; ஆனால் அதற்காக அவர்களை மார்க்க ஆதாரமாக ஆக்கி அவர்களை பின்பற்ற முடியாது என்பதுதான் நமது வாதம்.

மேலும் இவற்றை புகாரி முஸ்லிம் உள்ளிட்ட அறிஞர்கள் தமது நூல்களில் பதிவு செய்துள்ளார்களே அவர்கள் நபித்தோழர்களை இழிவுபடுத்தி விட்டார்கள் என்று இவர்கள் கூறுவார்களா?

இதே நேரத்தில் ஒரு நபித்தோழர் நபிகளாரின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக சொன்ன செய்தியை மற்ற நபித்தோழர்கள் பின்பற்றாமல் புறக்கணித்துள்ளார்கள். அப்படியானால் ஒரு நபித்தோழரை மற்ற நபித்தோழர்கள் அனைவரும் இழிவுபடுத்திவிட்டார்கள் என்று இவர்கள் சொல்வார்களா?

நபிகளார் மரணிக்கவே இல்லை என்று உமர் (ரலி) சொன்ன செய்தியை அபூபக்கர் (ரலி) அவர்கள் மறுத்ததால் உமர் (ரலி) அவர்களை அபூபக்கர் இழிவுபடுத்திவிட்டார் என்று சொல்ல வருகின்றார்களா?

தமத்துவு ஹஜ்ஜிற்கு தடை விதித்தது குறித்து உமர் (ரலி) அவர்கள் சொன்ன சட்டத்தை அலி (ரலி) அவர்களும், இப்னு உமர் (ரலி)அவர்களும் ஏற்கவில்லை; அதனால் இப்னு உமர் (ரலி) அவர்களும், அலி (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களை இழிவுபடுத்திவிட்டார்கள் என்று அர்த்தமாகிவிடுமா? 

ஆக நாம் நபித்தோழர்களை இழிவுபடுத்தவில்லை; அல்லாஹ்வுடைய தூதரைக் கண்ணியப்படுத்துகின்றோம்.

அல்லாஹ்வின் வஹீச் செய்திக்கு கண்ணியமளிக்கின்றோம்.

எனவே சஹாபாக்களைப் பின்பற்றுவதும் மார்க்கம் என்ற அந்த வழிகேடான கொள்கையை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பாற்றி, வஹீச்செய்தியை மட்டுமே பின்பற்றி சுவனம் செல்லும் நன்மக்களாக வல்ல இறைவன் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.