Tamil Bayan Points

நாடாளுமன்றத்தில் ஒலித்த தவ்ஹீத் விளக்கமும் தக்பீர் முழக்கமும்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on January 21, 2020 by

நாடாளுமன்றத்தில் ஒலித்த தவ்ஹீத் விளக்கமும் தக்பீர் முழக்கமும்

நாடாளுமன்றத் தேர்தலில் மிருக பலத்துடன் மோடி ஆட்சிக்கு வந்திருக்கின்றார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த மாத்திரத்தில் இந்துத்துவாவினரின் வெறியாட்டமும் வேட்டையும் இந்தியாவில் தலைவிரித்தாடுகின்றது. மோடியின் 2.0 ஆட்சியின் ஆரம்பமே இப்படி அட்டகாசமாக இருக்கின்றது என்றால் இனி எப்படியிருக்கும் என்று எடை போட்டுக் கொள்ளுங்கள்.

மிருகத்தனம்: 1

ரமளான் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை. ஒரு தனியார் மருத்துவமனையில் 29 வயது நிரம்பிய காஸிம் தோள்பட்டையில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்து, கடுமையான காயத்துடன் கிடத்தப்பட்டு, மருந்து ஏறிக் கொண்டிருக்கின்றது. அவருக்குத் துணையாக வந்த அவரது உறவினர் வெள்ளிக்கிழமை என்பதால் ஜுமுஆ தொழுகைக்கு விரைந்து செல்கின்றார்.

அதைப் பார்த்துப் பரவசப்பட்ட காஸிம், ‘என் தோள் பட்டையில் பாய்ந்த தோட்டாவின் வலியை விட ஜுமுஆ தொழாமல் முடங்கிக் கிடப்பது பெரிய வலியாக உள்ளது’ என்று கூறிய போது அவரது வார்த்தைகளில் அந்த வலியை உணர முடிந்தது. இது எங்கு நடந்தது? மோடியின் கைக்கூலியான நிதீஷ் ஆளுகின்ற பீகாரில் தான்! காஸிமுக்கு ஏன் இந்தத் துப்பாக்கிச் சூடு? பத்திரிக்கைச் செய்தி நடந்த நிகழ்வை விவரிக்கின்றது.

குளிர் காலத்தில் கம்பளி உறைகள் தைப்பது, கோடை காலத்தில் ஏதாவது சிறு சிறு தொழில்கள் செய்வது, இப்படித் தான் காஸிமின் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கின்றது. இந்தக் கோடையில் சொந்த பந்தங்களிடம் கடனை வாங்கி, 25 ஆயிரத்துக்கு ஒரு மொபட், கூடவே 800 ரூபாய்க்கு ஓர் ஒலிபெருக்கி எடுத்துக் கொடுத்துக் கொண்டு டிடர்ஜெண்ட் பவுடர் வியாபாரத்தைத் தொடங்கி அது கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. காஸிமின் டிடர்ஜெண்ட் பவுடர் கிராம மக்களிடம் அங்கீகாரத்தைப் பெற்றது.

கும்பி என்ற கிராமத்தில் ஒரு கடை முன்பு தனது மொபட்டை நிறுத்தி வைத்திருந்தார். இது காஸிமின் சொந்தக் கிராமமான கஞ்சான் பூரிலிருந்து 10 கிலோமீட்டர் தூரம். மைக்கில் தனது டிடர்ஜெண்ட் பவுடரின் விளம்பரத்தை ஓட விட்டு, விற்பனை செய்து கொண்டிருந்தபோது, சினிமா பட வில்லனைப் போன்று அங்கு நின்று கொண்டிருந்த ராஜீவ் யாதவ் என்பவன், மைக்கை அணைக்கச் சொல்கின்றான். பெயரைக் கேட்கின்றான்.

காஸிம் என்று சொன்னது தான் தாமதம்! ‘நீ பாகிஸ்தானுக்குப் போ’ என்று கத்துகிறான். அத்துடன் நில்லாமல், தன் இடுப்பிலிருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து காஸிமை நோக்கிச் சுடவும் செய்கின்றான். துப்பாக்கித் தோட்டா தோள்பட்டையில் பாய்கின்றது. உடனே இரத்தம் பீறிட்டு ஆறாய் ஓடுகின்றது. பீறிட்டு வழிகின்ற இரத்தத்தைப் பார்த்து யாருக்கும் ஈவு இரக்கம் பிறக்கவில்லை.

வீதியில் வியாபாரம் செய்ய வந்த ஒருவனை வெறித்தனமாகச் சுடுகின்றான். சூழ நின்ற கூட்டம் வெறிக்க வெறிக்க வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தது. கற்பாறையில் கூட ஈரம் சுரக்கும். ஆனால் சுற்றிச் சூழ நின்ற மக்களின் இதயங்கள் கற்பாறையை விடவும் கடினமாகி விட்டதால் ஈவு இரக்கம் பிறக்கவில்லை. இரத்தம் வழிகின்றது; நேரமும் கழிகின்றது.

அடிபட்டு இரத்த வெள்ளத்தில் மிதக்கும் ஒருவருக்கு, தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் மரண வாசலை நோக்கி எடுத்து வைக்கும் அடியாகும். பீறிட்டு வழியும் இரத்த வெள்ளத்தில் சுயநினைவற்றுக் கிடக்கும் காஸிமுக்கு நொடிகள் அல்ல! நிமிடங்கள் அல்ல! பல மணி நேரங்கள் கழிகின்றன.

முதலுதவி செய்வதற்குக் கூட ஒரு நாதியும் இல்லாத போது ஒரு பெண்மணி காயத்திற்குக் கட்டுப்போட வருகின்றார். துடைக்க ஒருவர் துண்டைக் கொண்டு வருகின்றார். அதன் பின்னர் கிராம அலுவலர் அலுவலகம், காவல் நிலையம் என கொண்டு செல்லப்படுகின்றார். ஆனால் உயிர் காப்பதற்காக உரிய சிகிச்சைக்கு, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு இதுவரை எடுத்துச் செல்லப்படவில்லை என்பது வேதனையிலும் வேதனை!

கொடுமையிலும் கொடுமை! இப்போது துப்பாக்கிச் சூடு செய்தி காட்டுத் தீயாய் பரவி காஸிமின் குடும்பத்தினரின் காதுகளில் கசிகின்றது. அவர்கள் அடித்துப் புரண்டு ஓடோடி வந்து அவரை அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். மனிதநேயம் மிக்க (?) அந்த மருத்துவமனை ஊழியர்களோ தலைநகர் பாட்னா மருத்துவமனைக்குக் கொண்டு போகச் சொல்கின்றனர். உயிர் காக்கும் உயர் பணியில் உன்னத இந்தியாவின் உச்சக்கட்ட நடவடிக்கையைக் கண்டு நீங்கள் மெச்சாமல் இருக்க முடியாது.

இதற்கு மேல் தாங்காது என்று குடும்பத்தார் மருத்துவமனையில் கோரிக்கை விடுக்க, இறுதியாக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றார். அதன் பின்னர் அபாயக்கட்டத்தைத் தாண்டிவிடுகின்றார். அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய மருத்துவமனைக்குக் காவல் துறையினர் வருகின்றனர். முஸ்லிம் என்று சொன்னதால் தான் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது என்பதை காவிக்கறை படிந்த காவல் துறை ஏற்கவில்லை.

டிடர்ஜெண்ட் விற்பனையில் ஏற்பட்ட வாய்த் தகராறு காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடந்தது என்று காவித்துறை கதை எழுதியது. ஏட்டு முதல் எஸ்பி வரை இதையே உடைந்த ரிக்கார்ட் மாதிரி இன்றுவரை ஒப்புவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மருத்துவமனைக்குச் சென்ற நிருபர்கள் தான் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றார்கள். மோடி 2.0 ஆட்சி மகிமையை அவர்கள் இதன் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்கள். காஸிமின் புகார் மீது ஒருவாறாக, வேண்டாவெறுப்பாகக் காவல்துறை நடவடிக்கை எடுத்து, ரவுடி ராஜீவ் யாதவ் மீது கொலை முயற்சி இன்னும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்கின்றது.

துப்பாக்கிச் சூட்டின் போது குடிபோதையில் இருந்த அவன், கள்ளச் சாராய சாம்ராஜ்ய சக்கரவர்த்தி என்றும், பல்வேறு குற்றங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி என்றும் காவல் துறை அவனது வாழ்க்கைச் சரித்திரத்தை வாசித்துக் காட்டியது. ஆனால் காஸிமின் கதியும் கதையும் படிப்போரைக் கண்கலங்க வைக்கின்றது.

வியாபாரம் பாதித்தது மட்டுமல்லாமல் உயிரைக் காப்பதற்காக வேண்டி நகை நட்டுக்களை விற்றும் அடகுக்கு வைத்தும் ஒன்றரை லட்சம் அளவுக்குள்ள மருத்துவமனைச் செலவைச் சந்தித்தனர். ஊர் மக்கள் 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கினர்.

ராஜீவ் யாதவ் போன்ற ரவுடிகள் சூடேற்றப்பட்டதற்கு இப்போதைய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கும் ஒரு காரணமாகும். ‘நாங்கள் இறந்து விட்டால் எங்கள் மூதாதையர்கள் வழியில் எங்களை எரியூட்டி விடுவார்கள். ஆனால் முஸ்லிம்கள் இறந்தால் அவர்களுக்குப் பெரிய கப்ருஸ்தான் வேண்டும்’ என்று முஸ்லிம் விரோதத் தீயை தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது விசிறி விட்டிருந்தார். பீகாரில் பெகுசாரை நாடாளுமன்றத் தொகுதியில் தான் இவர் நின்று போட்டியிட்டு வென்றார். அந்தத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் இந்தக் கொடுமை நிகழ்ந்துள்ளது.

அந்தத் தொகுதியில் மதவெறியை அனல் தெறிக்க விட்டிருந்தார். எரியும் இந்தச் சூழல் தான் துப்பாக்கிச் சூட்டிற்கு அஸ்திவாரமிட்டிருந்தது. இதில் இந்தச் சம்பவம் நடந்த நாள் மிக முக்கியமானது. தேர்தல் முடிவு வெளியான மூன்றாம் நாள் அது. அதில் தான் இந்தக் கண்மூடித்தனமான காரியம் நடந்தேறியது.

அதாவது மோடி 2.0 ஆட்சியின் போக்கு எப்படி இருக்கும் என்பதற்குக் கட்டியம் கூறியது. இந்த அராஜகம், அக்கிரமம் பீகாரில் நடந்தேறியது என்றால் டெல்லி அருகே குருகாவன் பகுதியில் இன்னொரு அராஜகம் நடந்தது.

மிருகத்தனம்: 2

தலையில் தொப்பி அணிந்து கொண்டு, பள்ளியில் தொழுது விட்டுத் தன் பாட்டுக்கு வீட்டிற்கு வருகின்றான் 25 வயது நிரம்பிய அப்பாவி இளைஞன் ஆலம். அவனை இடை மறிக்கின்றது பைக்கிலும் நடந்தும் வந்த ரவுடிக் கும்பல். தொப்பியைக் கழற்றச் சொல்கின்றனர். இந்தப் பகுதியில் தொப்பி போடுவதற்கு அனுமதியில்லை என்று காட்டுக் கூச்சலிடுகின்றனர்.

ஆலம் மறுக்கவே தலையில் அடிக்கின்றனர். ஜெய்ஸ்ரீராம், பாரத் மாதா கீ ஜே என கோஷம் எழுப்பச் சொல்கின்றனர். கோஷம் எழுப்பவில்லை என்றால் பன்றி இறைச்சியை வாயில் திணிப்போம் என்றும் மிரட்டுகின்றனர். வழக்கம் போல் சுற்றி நின்றவர்கள் வேடிக்கையே பார்க்கின்றனர். ஆலத்தைக் காக்க முன்வரவில்லை. கையறு நிலையில் நின்ற ஆலமுக்குக் கண்ணீர் விட்டு அழத் தான் முடிந்ததது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த மிருகத்தனம் நடந்தது மே 25! தேர்தல் முடிவுகள் வெளி வந்த மூன்றாம் நாள்!

மிருகத்தனம்: 3

ஜார்கண்ட் மாநிலம், சரைகேலா மாவட்டம், கடம்தியா கிராமத்தைச் சார்ந்த 24 வயது இளைஞன் தப்ரேஸ் அன்சாரி. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த அவன் புனேவில் பிழைப்புக்காகச் சென்றவன் மணம் முடிக்க ஊருக்கு வருகின்றான். 19 வயது ஷஹிஷ்தா பர்வேஸை ஏப்ரல் 27 அன்று மணமும் முடிக்கின்றான். புனேவுக்குக் குடும்பத்தை அழைத்துச் செல்வதற்காக ஜூன் 24 தேதியில் டிரைனில் டிக்கட்டும் முன்பதிவு செய்கின்றான்.

இந்நிலையில் ஜூன் 17 அன்று தகிதி என்ற கிராமத்தில் அவனைப் பிடித்துத் திருடன் என்று முத்திரை குத்துகின்றார்கள். பெயர் என்னவென்று கேட்கின்றார்கள். முஸ்லிம் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தர்ம அடி விழுகின்றது. மின்கம்பத்தில் கட்டி சக்கையாகப் பிழிந்து எடுத்திருக்கின்றார்கள், அஹிம்சை நாட்டின் அரக்கர்கள். இது போதாது என்று அருகில் உள்ள புல்லுக்காட்டில் போட்டுப் புரட்டி எடுக்கின்றார்கள்.

‘ஜெய்ஸ்ரீராம்! ஜெய் ஹனுமான்’ என்று சொல்லச் சொல்லி அவனைக் குதறி எடுத்திருக்கின்றார்கள். இறுதியில் இரத்த வாராக சரைகேலா காவல்துறையில் கொண்டு ஒப்படைக்கின்றார்கள். காவல்துறை மனிதாபிமான (?) அடிப்படையில் முதலுதவி செய்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யவில்லை. மாறாக, இந்தச் சம்பவத்தின் முதல் குற்றவாளி பாபா மண்டலை காவல் நிலையத்தில் வைத்து அழகு பார்த்திருக்கின்றது.

தப்ரேஸின் மாமியார் ஷெஹ்னாஸ் பேகம் காவல் நிலையம் சென்ற போது உள்ளே செல்லவிடாமல் மறிக்கின்றார்கள். ‘அப் தக் ஏ மர்கயா நஹீ – இன்னும் அவன் சாகவில்லை’ என்று உள்ளே இருந்த பயங்கரவாதிகளின் தலைவன் பாபா மண்டல் கத்தியிருக்கின்றான் என்றால் இந்த நாட்டின் சட்ட ஒழுங்கை என்ன சொல்வது? பேய் நாடாண்டால் பிணந்தின்னும் சாத்திரம் என்று சொல்வார்கள். மோடி நாடாண்டால் மணமகன் பிணமாவது சாத்திரம் என்றாகி விட்டது. ஆம்!

காவித்துறையின் ஏவல் துறையாக மாறி விட்ட காவல்துறை, தப்ரேஸுக்கு சிகிச்சை அளிப்பதற்குப் பதில் சிறைவாசத்தை அளித்தது. அவன் இஸ்லாம் என்ற விசுவாசத்தைக் கொண்டிருப்பதால் அவன் சுவாசத்தைப் பறித்தது. மருத்துவமனையில் அனுமதியுங்கள், மருமகனைக் காப்பாற்றுங்கள் என்று ஷெஹ்னாஸ் பேகம் காவல்துறையிடம் எழுப்பிய கெஞ்சல் எடுபடவில்லை.

காவல்நிலையத்தில் அவரைப் பார்க்கச் சென்ற அவருடைய சகோதரரைக் காவல்துறையினர் பார்க்க விடாமல் தடுத்ததுடன் விரட்டியடித்துள்ளனர். இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த தப்ரேஸ் அன்சாரி உடல்நிலை பலவீனமடையத் தொடங்கியது. இதைக்கண்ட காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். கடைசியில் ஜூன் 23ந்தேதி தப்ரேஸின் உயிர் பிரிந்தது.

இந்தப் படுகொலைக்குப் காரணமானவர்கள் இந்துத்துவ பயங்கரவாதிகள் என்பது ஒரு புறமிருக்க, அவர்களுக்குத் துணையாக நின்று வேடிக்கை பார்த்த காவல்துறையினரும், காவி பயங்கரவாதிகளால் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி உயிருக்குப் போராடிய தப்ரேஸ் அன்சாரிக்கு சிகிச்சை வழங்காமல் சிறைக்கு அனுப்பிய நீதிமன்றமும் இதில் குற்றவாளிகள் தான். தான் பிணக்கோலமாவோம், தன் மனைவி விதவையாவாள் என்று தெரிந்திருந்தால் ஏப்ரல் 17 அன்று மணக்கோலம் பூண்டிருக்கமாட்டான் தப்ரேஸ்.

மோடியின் 2.0 ஆட்சியின் மிருகத்தனத்திற்கு இது மூன்றாவது எடுத்துக்காட்டாகும்.
இதில் வேதனை என்னவென்றால் நிழல் நேசமணியின் உடல்நிலை பாதிப்பை உலக அளவில் டிரண்டாக்கிய சமூக வலைத்தளங்கள் கூட, கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் துவைக்கப்பட்ட தப்ரேஸுக்கு, அவன் முஸ்லிம் என்பதால் பாரபட்சம் காட்டியது தான்.

மிருகத்தனம்: 4

டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியைச் சேர்ந்தவர் மவுலவி மூமின். இவர் அங்குள்ள மதரஸா ஒன்றில் குழந்தைகளுக்குக் குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுத்து வருகின்றார். கடந்த ஜூன் 21ஆம் தேதி மாலை அந்தப் பகுதியில் மவுலவி மூமின் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்தப் பக்கமாக காரில் வந்த மூன்று பேர் அவரைப் பார்த்ததும் காரை நிறுத்தி அவரிடம் வம்பிழுக்கும் நோக்கில் பேச்சுக் கொடுத்து அந்த மூன்று பேரும் மவுலவியைத் தாக்கத் துவங்கினார்கள்.

அவரைப் பிடித்து வைத்து “ஜெய்ஸ்ரீராம்” என்று சொல் என்று மீண்டும் தாக்கியுள்ளனர். ஆனால் அவர் ஜெய்ஸ்ரீராம் சொல்ல மறுக்கவே தங்களின் காரைக் கொண்டு மூமினை இடித்துள்ளனர். இதனால் காயமடைந்த மூமினை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். காயங்களுடன் மூமின் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மிருகத்தனம்: 5

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மதரஸா ஒன்றில் ஹபீஸ் மோஹத் ஷாருக் ஹால்டர் என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் சௌத் பார்கனாஸ் மாவட்டத்தில் இருந்து ஹூக்ளிக்கு ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது ரயிலில் இருந்த ஒரு கும்பல் ஹபீஸை ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்லச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். ஆனால் ஹபீஸ் அவ்வாறு சொல்ல மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் பார்க் சர்க்கஸ் என்ற ரயில் நிலையத்தில், ரயில் சென்று கொண்டிருந்தபோது ஹபீஸைக் கீழே தூக்கி வீசியுள்ளனர். நல்ல வேளையாக ஹபீஸ் அங்கிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டார்.

அப்பாவி இஸ்லாமியர்களைப் பிடித்து அடித்து ஜெய்ஸ்ரீராம் சொல்லச் சொல்லி வதம் செய்யும் கொடூரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் படுகொலைகள் இன்று நேற்றல்ல! முப்பது ஆண்டுகளுக்கு முன் பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்காக அத்வானி ரத யாத்திரை சென்ற போது, இந்த ஜெய்ஸ்ரீராம் கோஷம் தான் மூவாயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்தது.

மோடியின் சப்பைக்கட்டு.

தப்ரேஸ் அன்சாரியின் படுகொலை பற்றி பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார். இந்தச் சம்பவம் அவர் மனதைப் பெரிதும் வருத்துவதாகக் குறிப்பிட்டு இருக்கிறார். கூடவே, இந்த ஒரு கொலைக்காக ஜார்கண்ட்டையே இழித்துப் பேசுவது தவறு என்றும், கொலை எங்கே நடந்தாலும், அது கேரளாவோ மேற்கு வங்கமோ, தவறுதான் என்றும் சேர்த்துப் பேசியிருக்கிறார்.

அதாவது கேரளம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் பாஜக தொண்டர்கள் கொல்லப்படுவதையும், தப்ரேஸ் படுகொலையையும் சேர்த்துப் பேசியிருக்கிறார். இந்தியாவில் அனுதினமும் கொலைகள் நடக்கின்றன. தேசிய குற்றவியல் கழக அறிக்கையின் படி ஆண்டுக்குக் கிட்டத்தட்ட முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் பதிவாகின்றன. நான்கரை லட்சம் வன்முறை வழக்குகள் பதிவாகின்றன.

ஆனால் தப்ரேஸ் விஷயத்தில் பிரச்சினை அவர் கொலையுண்டார் என்பதல்ல. அவர் ஒரு இந்துவாக இருந்து, பைக் திருடினார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தால் கூட்டத்தினர் நாலு போடு போட்டுக் காவலரிடம் ஒப்படைத்திருப்பார்கள். அவர் முஸ்லிம் என்று தெரிய வரவே ‘தண்டனை’ வேறு மாதிரி மாறி விட்டது. அங்கே குற்றம் அவர் பைக் திருடினாரா இல்லையா என்பதல்ல! அவர் முஸ்லிமாக இருந்தது தான் குற்றம் என்றாகி விட்டது.

அதனால்தான் ராமர், அனுமர் பெயர்களைப் போற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி இருக்கிறார். இந்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமே பாஜகவின் பிரச்சாரத்தின் விளைவுதான் என்பதை அவர்களே மறுக்க மாட்டார்கள். வேறு எந்த இயக்கமும் இந்தியாவில் இந்த கோஷத்தைப் பயன்படுத்துவதில்லை.

ஆகவே, உண்மையில் ராமர் பெயரை ஒரு கொலை செய்யப் பயன்படுத்தியது குறித்து ராம பக்தரான பிரதமருக்குக் கோபம்தான் வந்திருக்க வேண்டும். ‘ராமர் பெயரை வன்முறைக்குப் பயன்படுத்துவது குறித்து வருந்துகிறேன்’ என்றாவது சொல்லியிருக்க வேண்டும்.

ஆனால் பிரதமருக்கு ஒரு மனிதன் கொலையுண்டிருக்கிறான் என்ற அளவில் மட்டும்தான் தெரிய வருகிறது. அதையும் கூட ‘எங்க ஆளு சாகும் போது யாரும் பேசலையே!’ என்ற அளவில் ஒப்பிட்டு, சாதாரண பாஜக தொண்டன் செய்யும் வேலையை ஒரு நாட்டின் பிரதமரும் செய்திருப்பது மிகவும் கொடுமையான விஷயம்.

நாடாளுமன்றத்தில் தக்பீர் முழக்கம்

வீதிகளில் முஸ்லிம்களைத் தாக்குவதற்கும் கொலை செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்த ஜெய்ஸ்ரீராம் கோஷம், மோடி 2.0 ஆட்சிக்கு வந்ததும் இப்போது நாடாளுமன்றத்திலும் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டது. அஸாதுத்தின் உவைஸி பதவிப் பிரமாணம் ஏற்க வரும் போது ஜெய்ஸ்ரீராம், பாரத் மாதா கீ ஜே என்ற கோஷங்களை பாஜக எம்பிக்கள் முழங்கினர்.

‘நன்றாகக் கத்துங்கள்’ என்று சைகை செய்து கொண்டே வந்த அவர், பதவியேற்கும் போது அதற்குப் பதிலடியாக, தக்பீர் முழக்கமிட்டு நாடாளுமன்றத்தை அதிர வைத்தார். அதுபோல் சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஷஃபீகுர் ரஹ்மான் அவர்கள் பதவியேற்கும் போதும் ஜெய்ஸ்ரீராம், வந்தே மாதரம் கோஷத்தை முழங்கினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வந்தே மாதரம் இஸ்லாத்திற்கு எதிரானது என்ற தவ்ஹீது விளக்கத்தைக் கொடுத்து சங்கிகளுக்கு சாட்டையடி கொடுத்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி எம்பிக்கள் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என அல்லாஹ்வின் திருப்பெயரைக் கொண்டு பதவியேற்ற அற்புதமும் அரங்கேறியது. இந்த அடிப்படையில் நாடாளுமன்ற வரலாற்றில் தக்பீர் முழக்கமும் தவ்ஹீது விளக்கமும் முதன்முறையாகப் பதிவாகியிருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளும் அதே வேளையில் இதுவரை சாலைகளில் ஒலித்த ஜெய்ஸ்ரீராம் இப்போது நாடாளுமன்றத்தில் ஒலிக்க ஆரம்பித்து விட்டது என்பதை நாம் அறிய முடிகின்றது.

மோடி சாம்ராஜ்யத்தின் ஜெய்ஸ்ரீராம் முழக்கம் தெரிவிப்பது ஒன்றே ஒன்று தான். நாம் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என்பது தான். மோடியின் கடந்த ஆட்சியில் பசுவின் பெயரால் முஸ்லிம்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர்.
இந்தியாவில் மாடுகளின் பெயரால் நடத்தப்படும் கொலைவெறித் தாக்குதல்கள் குறித்து சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, ஜார்கண்டில் மட்டும் மார்ச் 16, 2018 முதல் ஜூன் 17, 2019 வரை மொத்தம் 11 பேர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதன் மூலம் நாம் நம்முடைய அடையாளத்தை இழக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். இதைத் தான் அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகின்றான்.

“அவர்கள் இறை மறுப்பாளர்களாக ஆனது போல் நீங்களும் இறை மறுப்பாளர்களாக ஆகி, அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்’’ என்று அவர்கள் விரும்புகின்றனர்.

(அல்குர்ஆன்:4:89)

முஸ்லிம் என்ற அடையாளத்தை விட்டுவிட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் மோடிக் கும்பலுக்கு, ‘ஈட்டி முனையில் நிறுத்தினாலும் ஈமானை இழக்கமாட்டோம்’ என்பது தான் ஒவ்வொரு முஸ்லிமின் பதிலாக இருக்கும் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

“நமது இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனையன்றி வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டோம். (அவ்வாறு செய்தால்) வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம்’’ என்று அவர்கள் கூறியபோது அவர்களது உள்ளங்களை உறுதிப்படுத்தினோம்.

(அல்குர்ஆன்:18:14)