Tamil Bayan Points

நாய்களால் ஏற்படும் நோய்கள்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on July 15, 2019 by

நாய்களால் ஏற்படும் நோய்கள்

மனிதன் வளர்க்கும் செல்லப்பிராணிகளில் நாய்க்கு ஒரு முக்கிய இடமுண்டு. நாய்களுக்கு அழகழகான செல்லப்பெயர்கள் சூட்டி தன் படுக்கையறைக்குப் பக்கத்திலேயே இடமும் அளித்து அவ்வப்போது கட்டியணைத்து கொஞ்சி குழாவும் நடைமுறை ஏழை – பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரிடத்திலும் அதிகரித்துள்ளது. தான் வாக்கிங் செல்கிறாரோ இல்லையோ தன் செல்ல நாய்க்குட்டியை ஜாக்கிங் அழைத்து செல்வோரை சென்னை போன்ற பெருநகரங்களில் கணிசமாக பார்க்க முடிகிறது.

இன்னும் ஒருபடி மேலே சென்று நண்பரின் திருமண அன்பளிப்பாக கூட சில வகை நாய்களை பரிசாக அளிக்கின்றனர். அந்த அளவு நாயும் மனிதனும் இரண்டற கலந்திருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் இஸ்லாத்தின் பார்வை வேறு. வேட்டையாடுவதற்கும், பாதுகாப்புக்காகவும் மட்டும் நாய்களை வளர்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளது. இது போன்ற தேவைகளின்றி செல்லப் பிராணியாக நாய்களை வளர்ப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.  உரிய தேவைகளின்றி நாய் வளர்த்தால் அவர் ஈடுபட்ட நன்மைகளில் பெரும் பகுதி பறிபோய் விடும் என்று இஸ்லாம் எச்சரிக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் நாய் வைத்திருக்கின்றாரோ அவரது நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (நன்மைகள்) குறைந்து போய் விடும்; விவசாயப் பண்ணையையோ, கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 2322

அவசியத் தேவையின்றி வீட்டில் நாய் வளர்த்தால் அவரது வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்கிற எச்சரிக்கையை எடுத்துக்கூறி முஸ்லிம்கள் நாயை செல்லப்பிராணியாக வளர்க்கலாகாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நாயும், உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர் : அபூ தல்ஹா (ரலி)

நூல் : புகாரி 3225

ஒருவரின் வீட்டிற்குள் வானவர் வரமாட்டார் என்றால் இறைவனின் அருளும், கிருபையும் அவனை விட்டும் தடுக்கப்படும் என்று பொருள். வீட்டிற்குள் வரும் வானவர் இறைவனின் அருளையும், கிருபையையும் சுமந்தே வருகிறார். அவரது வருகை தடைபட்டால் அதன் மூலம் இறைவனின் மன்னிப்பு, அருள், கிருபை அனைத்துமே தடைபடும். நாய் வளர்த்தால் இத்தகைய இழப்பு ஏற்படும் என்று இஸ்லாம் முஸ்லிம்களுக்கு அறிவுரை வழங்குவதோடு நாயின் எச்சில் குறித்தும் போதித்துள்ளது.

நாயின் எச்சில் கடுமையான அசுத்தம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே அதனுடைய எச்சில் நம்மீது படாமல் பார்த்துக் கொள்வதில் மிகுந்த கவனம் தேவை என்று இஸ்லாம் உலகுக்கு எடுத்துரைத்துள்ளது.

அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக் கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள் என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 473

நாயை செல்லப்பிராணியாக வளர்ப்பதற்கும் அதனுடன் முத்தமழை பொழிந்து கொஞ்சி விளையாடுவதற்கும் இஸ்லாம் தடை விதித்திருப்பதற்கு ஆன்மிகரீதியில் பல காரணங்கள் நபிகள் காலத்திலேயே சொல்லப்பட்டு விட்டது என்பதை இதுவரை பார்த்தோம். இன்றைய மருத்துவ உலகில் நாய் வளர்த்தல் குறித்து நவீன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தெரிவிக்கப்படும் கருத்துக்கள் இஸ்லாத்தின் மேற்கண்ட தடையே சரியானது என்று உண்மைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

நாய் வளர்ப்போருக்கு ரேபிஸ் எனும் ஒருவித நோய் தாக்கும்   அபாயம் இருப்பதை அண்மைய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அந்த ஆய்வின் விபரம் பின்வருமாறு:

ரேபிஸ் என்றால் என்ன?

ரேபிஸ் என்பது ஒரு கொடிய வைரஸ் நோய். மரணத்தைத் தேடித்தரும் இந்நோயை அதிகம் பரப்புவது நாய்களே. இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய், மனிதனைக் கடிப்பதால் மனிதன் பாதிப்புக்கு உள்ளாகிறான்.

விளைவு…

தனி அறையில், தனிக்கூண்டில் மரணத்தைத் தழுவும் நிலை வரை செல்கிறது. நாய் கடித்தால் தான் ரேபிஸ் தொற்றும் என்பது இல்லை. பாதிக்கப்பட்ட நாயின் உமிழ்நீர் பட்டாலும், நகத்தால் பிராண்டினாலும் வரலாம். நம் உடலில் சிறுகீறல் இருந்து அதில் உமிழ்நீர் பட்டாலும் ரேபிஸ் வைரஸ் தாக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், பசியின்மை, வாந்தி, தண்ணீர் விழுங்க சிரமம் மற்றும் இரண்டாம் நிலையில் நரம்பு சம்பந்தப்பட்ட அறிகுறிகள், பக்கவாதம், உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்றவை ஏற்படும். ‘கோமா’ நிலைக்கு வந்து இறப்பு ஏற்படும் அபாயமும் இதில் உண்டு.

ரேபிஸ் இறப்புகளில், 85 சதவீதம், தெற்காசிய நாடுகளில் நிகழ்கிறது. இதில், முதலிடம் இந்தியாவிற்கு தான். இவ்வாறு அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. காவல்காத்தல் போன்ற தேவைக்கு வளர்ப்பது வேறு. ஆனால் இன்றைக்கு நாய் வளர்த்தல் என்பதே ஒரு பேஷனாகி விட்டது. சமூக அந்தஸ்துக்காகவும் குழந்தைகள் கேட்கிறார்கள் என்பதற்காகவுமே பலர் நாய்க்குட்டிகளை  செல்லப்பிராணியாக்கி கொள்கிறார்கள்.

அத்தகையோருக்கே இந்த ஆபத்துகள் அதிகம். சொறி நாய், வெறி நாய் ஆகியவைகளால் தான் ரேபிஸ் எனும் நோய் பிரச்சனை என்று தவறாக விளங்கி விடக் கூடாது. புசுபுசுவென்று இருக்கும் அழகிய நாய்களால் கூட நமக்கும் நம் குழந்தைகளுக்கும் ஆபத்து அதிகமே. சுருக்கமாகச் சொல்வதென்றால் நாய் கடித்தால் மட்டும் ஆபத்தில்லை. நாய் வளர்த்தாலும் ஆபத்தே என்று மேற்கண்ட ஆய்வு எச்சரிக்கின்றது.

இது போன்ற ஆய்வுகள் செய்ய வசதியற்ற கால கட்டத்திலேயே நாயின் எச்சில் அசுத்தம் என்றும் அவசியத் தேவையின்றி நாயை செல்லப்பிராணியாக வளர்க்க கூடாது எனவும் இஸ்லாம் தடை விதித்துள்ளது. இதன் மூலம் மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதை மீண்டுமொரு முறை உலகத்தார்க்கு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

Source:unarvu (03/11/17)